ஷாபாய் கரத் ஒரு வருடமாக கொரோனா வைரஸ்ஸை விரட்டிக் கொண்டிருந்தார். ஒருநாள் வைரஸ் அவரை பிடித்துக் கொண்டது. சமூக சுகாதார செயற்பாட்டாளரான ஷாபாய், அவரது ஊரான சுல்தான்பூரில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கோவிட் 19 தொற்று சோதித்துக் கொண்டிருந்தார். மே மாத கடைசி வாரத்தில் அவரது பயம் உண்மையானது. கோவிட் அவரை தொற்றியிருந்தது.
38 வயது ஷாபாய் தொற்றுக்காலத்தில் வேலை செய்வதன் பிரச்சினைகளை அறிந்திருந்தார். ஆனால் அது ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை அவர் முன் ஊகித்திருக்கவில்லை. தொற்று உறுதியானவுடன் அவரின் 65 வயது தாய்க்கும் நோய் பரவியது. பிறகு உடன்பிறந்தார் மகன்களுக்கும் பரவியது. மொத்த குடும்பமும் நோயினால் கோபத்தில் இருக்கிறது.
ஷாபாய்க்கு உடல்நிலை சரியாக சில வாரங்கள் ஆயின. “என் உடன்பிறந்தார் மகன்களும் சரியாகி விட்டனர். என் தாயை மட்டும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டி வந்தது,” என்கிறார் ஷாபாய். ஒரு வாரம் அவர் ஆக்சிஜன் உதவியோடு இருந்தார். “என்னுடைய தாயின் சிகிச்சைக்கு 2.5 லட்ச ரூபாய் ஆனது. என்னுடைய 2.5 ஏக்கர் நிலத்தையும் சில நகைகளையும் நான் விற்றேன்.”
சுகாதார செயற்பாட்டாளர் பணி எப்போதுமே சுலபமாக இருந்ததில்லை. தொற்று இன்னும் அவரின் பணியை மோசமாக்கியது. “என்னை திட்டினார்கள். மிரட்டினார்கள். அறிகுறிகளை தொடக்கத்தில் சொல்லாமல் மறைத்தார்கள்,” என்கிறார் ஷாபாய். “என் வேலையை செய்ய முயன்றபோது என் கிராமத்திலிருந்து எதிர்மறையான எதிர்வினைகள் வந்தன.”
மகாராஷ்டிராவில் 70,000-க்கும் மேற்பட்ட சுகாதார செயற்பாட்டாளர்கள் இருக்கின்றனர். மார்ச் 2020-ல் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, அவர்கள்தான் முன்களத்தில் இருக்கின்றனர். வீடுகளுக்கு செல்வது மட்டுமின்றி, கிராமங்களில் நிலவும் தடுப்பூசிக்கான தயக்கத்தையும் அவர்கள்தான் கையாளுகிறார்கள்.
தன்னார்வலர்களென அடையாளப்படுத்தப்படும் சுகாதார செயற்பாட்டாளர்கள்தான் அரசின் சுகாதார திட்டங்கள் நாட்டிலுள்ள கிராமங்களில் அமலாவதற்கு உதவுபவர்கள். கர்ப்பிணி பெண்களுக்கு உதவுவது, மருத்துவமனையில் பிரசவம் பார்க்க ஊக்குவிப்பது, குழந்தைகளுக்கான தடுப்பு மருத்துவத்தை உறுதிபடுத்துவது, குடும்பக் கட்டுப்பாடை அறிவுறுத்துவது, முதலுதவி வழங்குவது, தரவுகளை நிர்வகிப்பது முதலியவை அவர்கள் செய்யும் வேலைகள் ஆகும்.
இவை எல்லாவற்றையும் 3300 ரூபாய் மாத வருமானத்துக்கு செய்கிறார்கள். ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் ஊக்கத்தொகை யும் கிடைக்கும். ஷாபாய் ஒரு மாதத்துக்கு 300லிருந்து 350 ரூபாய் வரை ஊக்கத் தொகை பெறுகிறார். நீண்ட நேரங்களுக்கு கடினமான வேலைகளை செய்தாலும் தொற்றுக் காலத்தில் சுகாதார செயற்பாட்டாளர்களுக்கு குறைவாகவே உதவி கிடைக்கிறது. “எங்களுக்கான ஊதியம் கூட சரியான நேரத்துக்கு கிடைக்காதபோது உதவி மட்டும் எப்படி கிடைக்கும்? கடைசியாக நாங்கள் ஊதியம் பெற்றது ஏப்ரல் மாதத்தில்தான்,” என்கிறார் ஷாபாய்.
அவர்களின் பாதுகாப்புக்கென கொடுக்கப்படும் ஒரே விஷயம் முகக்கவசம் மட்டும்தான். அதுவும் போதாத அளவுக்குதான். மார்ச் 2020லிருந்து வெறும் 22 ’ஒரு முறை பயன்பாட்டு’ முகக்கவசங்களும் ஐந்து N95 முகக்கவசங்களும்தான் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார் ஷாபாய். “வேலையில் இருக்கும் அபாயத்துக்கு எங்களுக்கு கிடைக்கும் ஊதியம் சரியானது என நினைக்கிறீர்களா?”
ஒவ்வொரு சுகாதார செயற்பாட்டாளரும் கேட்கும் கேள்வி இது.
குடும்பத்துக்கு தொற்று வந்துவிடக் கூடாது என்பதற்காக பல மாதங்களாக ஷோபா கனகே குளியலறையில் குளிக்காமல் கழிவறையில்தான் குளிக்கிறார். “என் மகளுக்கு எட்டு வயதாகிறது. அவள் அழுதாலும் பல மாதங்களாக நான் அணைக்க முடியவில்லை.. என் அருகே தூங்கவே அவள் விரும்புவாள். ஆனால் நான் அனுமதிக்க முடியவில்லை,” என்கிறார் 33 வயது ஷோபா. சுல்தான்பூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சவுசாலா கிராமத்தில் சுகாதார செயற்பாட்டாளராக இருக்கிறார்.
ஜூன் மாதத்துக்கு நடுவே சுகாதார செயற்பாட்டாளர்களுக்கென மகாராஷ்டிர சங்கங்கள் ஒரு வாரகால போராட்டம் நடத்தின. விளைவாக, அரசு அவர்களின் மதிப்பூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தியது. 1000 ரூபாய் அவர்களுக்கான ஊதியத்தில் உயர்வு. 500 ரூபாய் கோவிட்டுக்கான சலுகைத் தொகை
அவர்களின் தியாகங்கள் புறக்கணிக்கப்படுவதாக ஷோபா நம்புகிறார். “முதல்வர் எங்களை புகழ்கிறார். ஆனால் உண்மையான ஆதரவு எதையும் வழங்கவில்லை.” ஜூலை மாத தொடக்கத்தில் உத்தவ் தாக்கரே சுகாதார செயற்பாட்டாளர்களை பாராட்டி அவர்களை போராளிகள் என்றும் நாயகர்கள் என்றும் குறிப்பிட்டதாக செய்தி வெளியானது. மூன்றாம் அலை வருகையில் அதற்கெதிரான போரில் அவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் வெற்று வார்த்தைகள் ஷோபாவுக்கு போதவில்லை. “அவரின் பாராட்டை வைத்துக் கொண்டு நாங்கள் குடும்பம் நடத்த முடியாது.”
இத்தகைய வேலையை ஷாபாயும் ஷோபாவும் தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் பொருளாதார தேவை இருக்கிறது. ஆனால் வெவ்வேறு காரணங்கள்!
மராத்தா சமூகத்தை சேர்ந்த ஷாபாய்க்கு மணமுறிவு ஏற்பட்டது. தாய், இரு சகோதரர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களுடன் வாழ்கிறார். ”13 வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்யப்பட்டேன்,” என்கிறார் அவர். “அதற்கு பின் கிராமத்தில் ஏற்கப்படுவது அத்தனை சுலபமில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள். என் குடும்பத்துக்கு சுமையாக இருப்பதாக உணர்ந்தேன்.” சுயமரியாதைக்காக பொருளாதார சுதந்திரத்தை அவர் பெற்றார்.
இப்போது, கோவிட்டை குடும்பத்திலிருக்கும் பிறருக்கும் கொண்டு வந்துவிட்டதாக வருந்துகிறார். ”என் தவறை மன்னிக்க முடியாது,” என்கிறார் ஷாபாய். “அதை நான் சரி செய்ய வேண்டும். ஆனால் எப்படியென தெரியவில்லை. அவர்கள் என் மீது குற்றம் சுமத்துவதை நான் விரும்பவில்லை.” மேலும் அவரின் வேலை கிராமத்தில் விரும்பத்தகாத விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. குறிப்பாக ஆண்களின் மத்தியில். “யாரிடமாவது நான் பேசினால் அவர்களாக எதையாவது ஊகித்து கதை கட்டுகிறார்கள்,” என்கிறார் அவர். “என்னுடைய வேலையே அனைவரிடமும் பேசுவதுதான். நான் என்ன செய்வது?”
ஆண்களின் குரூர விமர்சனங்கள் அவரை பாதிப்பதில்லை என்கிறார் ஷோபா. “அவர்களை எப்படி கையாள வேண்டுமென எனக்கு தெரியும்.” அவருக்கு வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவருடைய வருமானம்தான் குடும்பத்துக்கு ஆதாரம். “எங்களுக்கென விவசாய நிலம் ஏதுமில்லை,” என்கிறார் ஷோபா. தலித் சமூகத்தை சேர்ந்தவர் அவர். “என் கணவர் விவசாயக் கூலியாக பணிபுரிகிறார். தினக்கூலியாக 300 ரூபாய் பெறுகிறார். வாரத்துக்கு 3-4 முறை வேலைக்கு செல்வார். கோவிட் வந்த பிறகு அதுவும் குறைந்துவிட்டது.”
கோவிட் தொற்று பரவிய ஒரு மாதத்தில் ஷோபாவின் குடும்பம், அழியவிருந்த உணவு தானியங்களையும் பருப்புகளையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றது. “பள்ளியின் சத்துணவுக்கென இருந்தவை. ஆனால் பள்ளி மூடப்பட்டுவிட்டதால், அவை கெட்டுப் போகத் தொடங்கின,” என்கிறார் அவர். எல்லாமும் கெட்டுப் போகும் முன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தேவைப்படுவோருக்கு அவற்றை அளித்தனர். “எங்களுக்கென அவற்றை சமைத்துக் கொண்டோம். என் மகளும் அதை சாப்பிட்டாள்.”
எனினும் பொருளாதார வலிமை கிடைப்பதற்கான வாய்ப்பில்லை என்பது ஷாபாய்க்கும் ஷோபாவுக்கும் புரிந்திருந்தது.
நல்ல ஊதியத்துக்கும் நிரந்தர பணி நியமனத்துக்கும் நீண்ட காலமாக சமூக செயற்பாட்டாளர்கள் கோரி வருகின்றனர். ஜூன் மாதத்துக்கு நடுவே சுகாதார செயற்பாட்டாளர்களுக்கென மகாராஷ்டிர சங்கங்கள் ஒரு வாரகால போராட்டம் நடத்தின. விளைவாக அரசு அவர்களின் மதிப்பூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தியது. ஜூலை 1-லிருந்து 1000 ரூபாய் ஊதிய உயர்வும் 500 ரூபாய் கோவிட்டுக்கான சலுகைத் தொகையும் அவர்களுக்கு உண்டு. மேலும் ஒவ்வொரு சுகாதார செயற்பாட்டாளருக்கும், தரவுகளை இணையத்தில் பதிவேற்றவென ஒரு ஸ்மார்ட்ஃபோன் அளிக்கப்படுவதாக மகாராஷ்டிராவின் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோபே அறிவித்திருக்கிறார்.
வாக்குறுதிகள் யாவும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்கிறார் சிஐடியுவின் மாநிலச் செயலாளரான ஷுபா ஷமீம். “சுகாதார செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பலன்கள் எப்போது கிடைக்கும் என்பதில் தெளிவில்லை,” என்கிறார் அவர். மே மாதத்திலிருந்து மதிப்பூதியம் அளிக்கப்படவில்லை. கடந்த வருடம் உறுதியளிக்கப்பட்ட கோவிட் சலுகைத் தொகையும் இன்னும் வரவில்லை என்கிறார் ஷமீம்
சுகாதார செயற்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தியபோது கிட்டத்தட்ட 250 ஒப்பந்த சுகாதார ஊழியர்கள் பீட் மாவட்டப் போராட்டத்தில் பங்கு பெற்றனர். வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டுமெனக் கோரினர்.
செவிலியர்களாகவும் வார்டு உதவியாளர்களாகவும் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் தொற்றுக்காலத்தில் அதிகரித்த நோயாளிகள் எண்ணிக்கை யை சமாளிக்கவென தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் பலர் ஒப்பந்தம் முடிந்ததும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததும் பணிகளை இழந்தனர். “’ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி’ எறிவதற்கும் இந்த கொள்கைக்கும் வித்தியாசமில்லை,” என்கிறார் 29 வயது பிரசாந்த் சதாரே. பீட் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கோவிட் கண்காணிப்பு மையத்தில் அவர் வார்டு ஊழியராக பணிபுரிந்தார். “இந்த வருட மே மாதத்தில் நான் பணியமர்த்தப்பட்டேன். இரண்டு மாதங்களில் என்னை வேலையை விட்டு அனுப்பிவிட்டனர்.”
பிரசாந்தின் பெற்றோர் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கின்றனர். வருமானம் ஈட்டுவதே அவர்களுக்கு போராட்டம். தினசரி 400 ரூபாய் கிடைக்கும் வேலை கிடைத்ததும் பெற்றொரின் சுமையை கொஞ்சம் குறைக்க முடியும் என பிரசாந்த் நம்பினார். “என்னுடைய உயிரை பற்றிக் கூட கவலைப்பட வில்லை. மருத்துவமனை நிரம்பி வழிந்தபோது என்னவெல்லாம் செய்யச் சொன்னார்களோ அவற்றையெல்லாம் நான் செய்தேன்,” என்கிறார் அவர். “கோவிட் வார்டுகளை சுத்தப்படுத்துவது தொடங்கி கோவிட் நோயாளிகளுக்கு உணவளிப்பது வரை எல்லாவற்றையும் நான் செய்தேன். மன அழுத்தம் பற்றி யாரேனும் யோசித்தார்களா?”. தற்போது அவர் ஒரு தனியார் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிகிறார். மாதவருமானமாக 5000 ரூபாய் பெறுகிறார்.
24 வயது லகு கார்கே அதே கோவிட் மையத்தில் வார்டு ஊழியராக இருக்கிறார். விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்பித்தார். 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்பதே வேலைக்கான தகுதி. அந்த வேலைக்கு முன், உள்ளூர் வங்கிக்காக பணம் வசூலிக்கும் சிறு வேலையை லகு செய்து கொண்டிருந்தார். “எங்களுக்கு மூன்று மாத ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. முடிந்ததும் ஒருநாள் இடைவெளியில் அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என சொன்னார்கள்,” என்கிறார் கார்கே. “நம் தொழிலாளர் சட்டங்களின்படி ஒரு வருடம் தொடர்ச்சியாக பணியிலிருக்கும் ஒருவரின் நியமனம் நிரந்தரமாக்கப்பட வேண்டும். அதனால்தான் இந்த ஒப்பந்தங்கள் சில மாதங்கள் கழித்து ஒருநாள் இடைவெளியில் புதுப்பிக்கப்படுகின்றன.”
பீட் நகரில் போராடும்போது ஒப்பந்த சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தும் கொள்கையின் பொறுப்பின்மையை சுட்டிக் காட்டி, பணிகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டுமென கோரினர். கோவிட் பற்றிய ஆலோசனைக்காக ஜூன் 18ம் தேதி மாவட்டத்துக்கு வந்த துணை முதல்வர் அஜித் பவார், பொறுப்பு அமைச்சர் தனஞ்செய் முந்தே மற்றும் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோபே ஆகியோரின் கவனத்தை ஈர்க்க அவர்கள் முயற்சித்தனர்.
“ஆனால் அவர்கள் எங்களை பொருட்படுத்தவில்லை,” என்கிறார் 29 வயது அங்கிதா பாட்டில். அன்றைய போராட்டத்தில் அவரும் இருந்தார். “ஐந்து நிமிடங்கள் மட்டும்தான் கேட்டோம். எங்களின் கோரிக்கைகளை ஒரு தாளில் எழுதினோம். ஆட்சியர் அலுவலகத்தில் அதை கொடுக்குமாறு எங்களை சொன்னபோது ஓர் ஊழியர் அதை பறித்துச் சென்றுவிட்டார்.” ஒரு அமைச்சர் மட்டும் அவரை கிளம்பச் சொன்னார். பிறர் அவர்களை பார்க்கக் கூட இல்லை என்கிறார் அவர்.
அவமதிக்கப்பட்டதால் கோபம் அடைந்து சில போராட்டக்காரர்கள் அமைச்சர்களின் வாகனங்களை மறிக்க முயன்றனர் . அவர்களை கலைக்க காவலர்கள் தடியடி நடத்தினர். “சுகாதார ஊழியர்களிடம் இப்படிதான் நடந்து கொள்வதா?” எனக் கேட்கிறார் அங்கிதா. “எங்கள் வாழ்க்கைகளின் பல மாதங்களை எந்த விடுப்புமின்றி கோவிட் நோயாளிகளுக்காக அர்ப்பணித்திருக்கிறோம். உயிர்களையும் எங்கள் குடும்பங்களையும் பணயம் வைத்திருக்கிறோம். எங்களுக்காக ஐந்து நிமிடங்கள் கூட செலவழிக்க மாட்டார்களா? மரியாதையுடன் நடத்தப்பட வேண்டுமென விரும்புகிறோம்.”
அங்கிதா கோவிட் மையத்தில் செவிலியராக பணிபுரிகிறார். 20,000 மாத வருமானம் பெறுகிறார். “இப்போது எனக்கு வேலை இருக்கிறது. நாளையே எனக்கு வேலை இல்லாமல் போகலாம்,” என்கிறார் அவர். “ஏற்கனவே மன பலவீனமும் அழுத்தமும் நிறைய இருக்கிறது. எங்களுக்கு நிலையான வேலை வேண்டும். இரண்டாம் அலை குறைந்ததும் எங்கள் நண்பர்களின் வேலைகள் பறிக்கப்பட்டதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அது எங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.”
முரண் என்னவெனில், ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவதற்கான ஒரே வாய்ப்பு மூன்றாம் அலை மட்டும்தான். ஆனால் அதையும் முழுமையாக நம்பியிருக்க முடியாது.
புலிட்சர் மைய த்தின் ஆதரவில் செய்தியாளர் பெறும் சுயாதீன இதழியல் மானியத்தில் எழுதப்படும் தொடரின் ஒரு கட்டுரை இது.
தமிழில் : ராஜசங்கீதன்