2024 பிப்ரவரியில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு இடையிலான ஷம்பு மற்றும் கனோரி எல்லையில் போராடிய விவசாயிகள் மீது அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள், கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடியடி நடத்தியது குறித்து விவசாயிகள் சீற்றமடைந்துள்ளனர். படிக்க: 'நான் ஷம்பு எல்லையில் சிறையில் அடைக்கப்பட்டதாக உணர்கிறேன்'
தலைநகருக்குள் நுழையும் விவசாயிகளுக்கு அரசு விதித்துள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஒரு பேச்சாளர் ஆவேசமாக அழைப்பு விடுத்தார்: "டில்லி ஹமாரி ஹை,. தேஷ் பர் வோஹி ராஜ் கரேகா, ஜோ கிசான் மஸ்தூர் கி பாத் கரேகா! [டெல்லி நமக்கு சொந்தமானது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக உழைப்பவர்கள் மட்டுமே நாட்டை ஆள முடியும்].”
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய மற்றும் தொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் 'கார்ப்பரேட், வகுப்புவாத, சர்வாதிகார ஆட்சிக்கு' எதிராக தற்போதைய அரசை தண்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
"2021 ஜனவரி 22-க்குப் பிறகு, விவசாய அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எந்த பேச்சுவார்த்தையும் இல்லாதபோது, பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படும்?" என்று ராகேஷ் திகைத் தனது உரையில் கேட்டார். இவர் பாரதிய கிசான் யூனியனின் (BKU) தேசிய செய்தித் தொடர்பாளரும், SKM தலைவரும் ஆவார்.
"2020-21 விவசாயிகள் போராட்டத்தின் முடிவில், நரேந்திர மோடி அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை C2 + 50 சதவீதத்தில் சட்ட உத்தரவாதம் வழங்கப்படும் என்று உறுதியளித்தது. அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தனர், அதுவும் செய்யப்படவில்லை," என்று அகில இந்திய விவசாய சங்கத்தின் (AIKS) பொதுச் செயலாளர் டாக்டர் விஜூ கிருஷ்ணன் கூறினார். விவசாய போராட்டங்கள் குறித்த பாரியின் முழுமையான செய்திகளைப் படியுங்கள்.
ஒரு வருடம் நீடித்த விவசாயிகளின் போராட்டங்களின் போது இறந்த 736-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பற்றியும், அவர்கள் குடும்பங்களுக்கு அரசு இன்னும் இழப்பீடு வழங்காதது, அவர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளும் கைவிடப்படாதது பற்றியும் கிருஷ்ணன் மேடையிலிருந்து பேசினார். "மின்சார சட்டத் திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும், ஆனால் அது செய்யப்படவில்லை", என்று மகாபஞ்சாயத்தில் பாரியிடம் பேசிய அவர் மேலும் கூறினார்.