பிப்ரவரி 13, 2024 அன்று, பஞ்சாபைச் சேர்ந்த சமூகவியல் மாணவர் தவிந்தர் சிங் பங்கு, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க தனது நண்பர்களுடன் ஷம்பு எல்லைக்குச் சென்றார். பிற்பகல் 2 மணியளவில் அவர்கள் வந்தபோது, விரைவு அதிரடிப் படையும் (ஆர்.ஏ.எஃப்) மற்றும் ஹரியானா பக்க எல்லையில் காவல்துறையினரும் ஏற்கனவே தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.
தவிந்தரின் நண்பர் தரன்வீர் சிங் கூறுகையில், "நாங்கள் ஒரு குழுவாக அமைதியாக நின்று கொண்டிருந்தபோது ஒரு ரப்பர் குண்டு அவரது இடது கண்ணில் தாக்கியது. உடனே தவிந்தர் கீழே விழுந்தார். நாங்கள் அவரை அழைத்துச் செல்ல முயன்றபோது, போலீசார் எங்கள் மீது மூன்று அல்லது நான்கு கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்." இவை எல்லாமும் பிற்பகல் 3 மணியளவில், அவர்கள் போராட்டக் களத்திற்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள் நடந்துவிட்டன.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் பிப்ரவரி 13, 2024 அன்று டெல்லியை நோக்கி அமைதியான பேரணியைத் தொடங்கினர். பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு எல்லையில் அவர்களை போலீசார் மற்றும் ஆர்.ஏ.எஃப் படையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் அணிவகுத்துச் செல்ல முயன்றபோது, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகள் வீசப்பட்டன (இதையும் படியுங்கள்: 'நான் ஷம்பு எல்லையில் சிறைபிடிக்கப்பட்டதாக உணர்கிறேன்').
கண்ணீர் புகை குண்டுகளின் கடுமையான புகையை பொருட்படுத்தாமல், தவிந்தரின் நண்பர்கள் துரிதமாக செயல்பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தவரைத் தூக்கினர். 22 வயதான அந்த இளைஞரை சம்பவ இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆம்புலன்ஸில் பனூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரை சண்டிகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல பரிந்துரைத்தனர். அங்கு பிப்ரவரி 15 ஆம் தேதி அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு இடது கண்ணில் மீண்டும் பார்வை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
விவசாயியான தவிந்தரின் தந்தை மஞ்சித் சிங், தனது மகன் வெளிநாடு செல்லாமல், இங்கேயே தங்கி காவல்துறையில் சேர தயாராக இருந்ததாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.






















