“மிர்ச்சி, லெஹ்சுன், அத்ரக்.. சுரைக்காய் இலைகள், கரேலா… வெல்லம்.”
மிளகாய், பூண்டு, இஞ்சி, சுரைக்காய் ஆகியவற்றை கொண்ட உணவு வகைக்கான குறிப்பு கிடையாது இது. பன்னா புலிகள் சரணாலயத்துக்கருகே இருக்கும் சுங்குனா கிராமத்தில் விவசாயத்துக்கான நிலம் மற்றும் பூச்சிமருந்தை இப்படித்தான் இயற்கை விவசாயி குலாப்ரானி தயாரிக்கிறார்.
53 வயதாகும் அவர், இப்பட்டியலை முதலில் கேட்டதும் என்ன தோன்றியது என்பதை சிரித்தபடியே நினைவுகூருகிறார். “இவற்றை எங்கு பெறுவது என நான் யோசித்தேன்? பிறகு சுரைக்காய்கள் காட்டில் கிடைப்பது தெரிய வந்தது…” என்கிறார். வெல்லம் போன்ற பொருட்களை அவர் சந்தையில் வாங்க வேண்டியிருந்தது.
அண்டை வீட்டாருக்கு சந்தேகம் வரவில்லையா? பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி குலாப்ரானிக்கு கவலை இல்லை. இயற்கை வேளாண்மைக்கு கிராமத்தின் 500 பேர் நகர்ந்திருக்கும் நிலையில், அவர்தான் அதற்கு தொடக்கமாக இருந்தார் என்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது.
“சந்தையில் நாம் வாங்கும் உணவில் மருந்துகள் இருக்கின்றன. எல்லா வகை ரசாயனங்களும் அதில் கலக்கப்படுகின்றன. எனவேதான் அவற்றை ஏன் உண்ண வேண்டும் என நாங்கள் யோசித்தோம்,” என்கிறார் அவர் நான்கு வருடங்களுக்கு முன் நடந்த உரையாடல்களை நினைவுகூர்ந்து.
“இயற்கை உணவுகளுக்கு செல்வது நல்ல யோசனை என என் குடும்பம் கருதியது. இயற்கை உணவை உண்டால், ஆரோக்கியமும் பலனடையும் என நாங்கள் நினைத்தோம். இயற்கை உரங்களால், பூச்சிகள் அழிகின்றன. எங்களின் ஆரோக்கியம் தழைக்கிறது!” என்கிறார் அவர்.
















