ஒரு கயிற்றுக்கட்டில் மீது அலங்கோலமாக அமர்ந்துகொண்டு தனது காயங்களைக் காட்டுகிறார் சுதிர் கோசரே - அவரது வலது காலில் ஓர் ஆழமான காயம்; வலது தொடையில் சுமார் ஐந்து சென்டிமீட்டர் நீளமுள்ள வெட்டு; அவரது வலது முன்கையில் ஒரு நீளமான, வெறித்தனமாக கிழிக்கப்பட்ட காயம் எல்லாவற்றிலும் தையல் போட வேண்டியிருந்தது. இது தவிர உடல் முழுவதும் சிராய்ப்புகள்.
போதிய அளவு விளக்குகள் எரியாத, பூச்சு வேலை செய்யப்படாத அந்த வீட்டின் இரண்டு அறைகளில் ஒன்றில் அவர் அமர்ந்திருக்கிறார். அவர் மொத்தமாக ஆடிப்போயிருக்கிறார்; நல்ல வலி என்பதால் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவரது மனைவி, தாய், சகோதரன் ஆகியோர் அவருக்கு அருகில் இருக்கிறார்கள். வெளியே மழை கொட்டுகிறது. நீண்ட காலம் பெய்யாமல் எரிச்சலூட்டிய பிறகு, ஒரு வழியாக இந்தப் பகுதியில் இப்போது மழை வெளுக்கிறது.
நிலமற்ற விவசாயத் தொழிலாளியான சுதிர், 2023 ஜூலை 2 அன்று மாலை ஒரு வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஒரு பருத்த, ஆவேசம் கொண்ட காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு, உயிர் பிழைத்தார். லோஹர்-காடி (காடி லோஹார் என்றும் குறிப்பிடப்படும் சமூகம் இம்மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது) சாதியைச் சேர்ந்த அவருக்கு 30 வயது. ஒல்லியான, உறுதியான தேகம் கொண்டவர். நல்வாய்ப்பாக தனது முகத்திலும், நெஞ்சிலும் காயம்படவில்லை என்கிறார் அவர்.
சந்திரபூர் மாவட்ட சாவ்லி வட்டத்தில் உள்ள வட்டாரக் காடுகளுக்குள் புதைந்து கிடக்கும், பெரிதாக அறியப்படாத கவடி என்ற சிற்றூரில் ஜூலை 8 அன்று மாலையில் அவரை சந்தித்தது பாரி. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தார் அவர்.
காட்டுப் பன்றியிடம் மாட்டிக் கொண்டு காப்பாற்றச் சொல்லி குரல் கொடுத்தபோது, வயலில் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த மற்றொரு தொழிலாளி தன்னுடைய பாதுகாப்பையும் பார்க்காமல் ஓடிவந்து பன்றியின் மீது கற்களை எறிந்ததை நினைவுகூர்ந்தார் அவர்.
அது பெண் பன்றியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அவர் கீழே விழுந்தவுடன் அந்தப் பன்றி தனது மருப்பினால், (வாயில் இருந்து வெளியே வரும் நீண்ட பல்) அவரைத் தாக்கியது. இருட்டிக்கொண்டு வந்த வானத்தை அண்ணாந்து பார்த்தபடி கீழே விழுந்த அவருக்கு மரண பயம் வந்தது. “அது பின்னால் போய், வேகமாக ஓடிவந்து என் மீது மோதி, அதன் நீண்ட மருப்பை என் மீது குத்தியது,” என்கிறார் சுதிர். அவரது துணைவி தர்ஷனா நம்ப முடியாமல் முணுமுணுக்கிறார். தனது கணவர் சாவில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பி வந்திருக்கிறார் என்பது அவருக்குத் தெரிகிறது.
அவருக்கு பலத்த காயத்தை ஏற்படுத்திவிட்டு அருகில் உள்ள புதருக்குள் ஓடி ஒளிந்தது அந்த விலங்கு.


















