சில பாரம்பர்ய 'பனாரசி பான்' பீடா ஒரிஸ்ஸாவின் கோவிந்தப்பூரை சேர்ந்த குஜ்ஜரி மொஹாண்ட்டியுடையவெற்றிலை கொடிக்கால் தோட்டத்தில் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. "நானே எங்கள் வெற்றிலையை வாரணாசியின் பனாரஸில் விற்றிருக்கிறேன்," என மொஹாண்ட்டியின் மகன் சனாதன் கூறுகிறார். "எங்கள் வெற்றிலை அதன் உயர் தரத்தினால் அதிக மதிப்புள்ளது," என்று பக்கத்துக்கு தோட்டத்தினரும் இதனையே வலியுறுத்துகின்றனர். மேலும் வெற்றிலை, பானுக்கு மட்டுமல்ல ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு மருந்தாக, அதாவது நல்ல ஜீரண சக்திக்கும், அதன்மருத்துவ குணம் வாய்ந்த எண்ணை, நோய் எதிர்ப்பு சக்திக்கு மருந்தாகவும்ருதப்படுகிறது.
வெற்றிலை கொடிக்கால் சுமார் 4300 சதுர அடிகள் கொண்ட ஒரு ஏக்கரின் பத்தில் ஒரு பங்குள்ள சிறிய பரப்பளவை கொண்டுள்ளது. பல வரிசை மூங்கில் மற்றும் இதர கம்புகள் 8அடி உயரத்தில் வெற்றிலைக் கொடியை தாங்கி நிற்கின்றன. மற்ற கொடிகளைக் கொண்ட மூங்கில் இந்த தோட்டத்திற்கு வேலியாக அமைகின்றது. சவுக்காலும் தென்னம் ஓலைகளாலும் வேயப்பட்ட கூரை மேலே மூடப்பட்டு உள்ளது. சவுக்கினால் அளிக்கப்படும் பாதுகாப்பு, நிழலை தருவதோடு தேவைப்படும் கொஞ்சம் சூரிய ஒளி கிடைக்கவும் வழி செய்கிறது. ஒவ்வொரு வரிசையும் சிறு இடைவெளி கொண்டு அமையப் பெற்றதால் பக்க வாட்டில் நடந்து தான் அடுத்த வரிசைக்கு செல்ல முடியும். இந்த அழகிய அமைப்பு ஒரு குளிர்சாதன அறையில் இருக்கும் அனுபவத்தை அளிக்கிறது.
வெற்றிலைத் தோட்ட வேலை கடினமானது இல்லை, ஆனால் திறமையுடன் செய்யவேண்டும் என சொல்லிக்கொண்டே 70 வயதை தாண்டிய குஜ்ஜரி மொஹாண்டி இதனை சுலபமாக கையாளுகிறார். வெற்றிலைப் பயிருக்கு அடிக்கடி நீர் பாசனம் ஆனால் குறைவாக தேவை . சில காலங்களுக்கு தினசரி மேற்பார்வை அவசியம் என அருகில் இருப்பவர் கூறுகிறார். சில நுணுக்கமான சாகுபடி வேலைகளுக்கு இரண்டு மடங்கு நாள் கூலி, அதாவது 200 ரூபாய் கொடுக்க வேண்டும். பாஸ்கோ(Posco) வின் மின் மற்றும் எ ஃ கு திட்டத்தின் வரையறைக்குள் சுமார் 1800 வெற்றிலை தோட்டங்கள் உள்ளன. (இங்குள்ள விவசாயிகள் 2500 என சொல்கின்றனர்). பாஸ்கோவின் 52000 கோடி மின் திட்டம் செயலாக்கப்படுமானால் இந்த வெற்றிலை தோட்டங்கள் அழிவை சந்திக்கும். இந்த வெற்றிலைத் தோட்டங்கள் வனப்பகுதியை சேர்ந்தவை என அரசு உறுதி பட கூறுகிறது. ஆனால் 80 வருடங்களுக்கு மேல் இந்த நிலங்களில் பயிர் செய்த இக்கிராமவாசிகள் வன உரிமை சட்டம் 2006 ன் கீழ் தங்கள் உரிமையைக் கோருகின்றனர் .
மிக அதிகமான வெற்றிலை தோட்டங்கள் உள்ள தின்கியா மற்றும் கோவிந்த்பூர் வெற்றிலைத் தோட்ட விவசாயிகள் இந்த நில ஆக்கிரமிப்பை எதிர்க்கின்றனர். இங்கு வெற்றிலை தோட்டத்தில் போதுமான வேலை இருப்பதால் எவரும் வேறு வேலை தேடி செல்வதில்லை என்கிறார் குஜ்ஜரியின் மகன் சனாதன். வெற்றிலைகளை 50 எண்ணிக்கை கொண்ட கடா என்றழைக்கப்படும் கட்டுகளாக அடுக்கி வைத்துக்கொண்டே மொஹாண்ட்டி, சனாதன் இருவரும் நம்மிடம் வருடத்திற்கு ஏழு முதல் எட்டு லட்சம் வெற்றிலைகள், சில சமயம் பத்து லட்சம் வரை பத்தில் ஒரு பங்கு ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்வதாக இவர்கள் கூறுகிறார்கள். 2000 தோட்டத்திலிருந்து கிடைக்கும் மிகப் பெரிய அளவில் உள்ள இந்த வெற்றிலைகளில் பெரும்பாலானவை ஒரிஸ்ஸாவுக்கு வெளியே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மாநிலத்தில் உள்ள எண்ணற்ற மற்ற வெற்றிலை தோட்டங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அளவு சற்றும் குறைந்தது அல்ல. வெற்றிலைகள் இங்கிருந்து ஒரு சமயம் பனாரசுக்கே முற்றிலும் சென்றது என்ற நிலைமை மாறி இப்போது மும்பை, தாக்கா கராச்சி போன்ற இடங்களுக்கும் செல்கின்றது. மாநிலத்தின் சமீபத்திய பொருளாதார கணக்கெடுப்பின்படி வேளாண் மற்றும் வன விளைபொருள்கள் ஒரிஸ்ஸாவின் ஏற்றுமதியில் 0.01 சதம் மட்டுமே ஆகும். (கனிம மற்றும் உலோக பொருள்கள் 80 சதத்துக்கு மேல் உள்ளன).
ஒடிஷா என்றால் விவசாயிகளின் பூமி என பொருள் கொண்ட இந்த மாநிலத்தில் இது விந்தை தானே. மாநிலத்தின் ஒட்டு மொத்த உள் நாட்டு உற்பத்தியில் வேளாண் பொருள்கள் 18 சதத்துக்கும் குறைவாகவே இருந்தாலும் 60 சதத்துக்கும் மேல் இதனையே வாழ்வாதாரமாய் நம்பி உள்ளனர். ஒரிஸ்ஸா மாநிலத்தின் கடலோர சமுதாய மக்களின் மூலம் கிடைக்கும் கடல் மீன்கள் ஏற்றுமதியும் பாரதீப் துறைமுகத்தின் காரணமாய் நலிவடைந்துள்ளது. ஜடாதரில் தொடங்க உள்ள பாஸ்கோவின் மின் திட்டம் இதனை மேலும் படுகுழியில் தள்ளிவிடும்.
ரஞ்சன் ஸ்வைன் எனும் மற்றோரு வெற்றிலை விவசாயி, வருடத்தின் முதல் மூன்று காலாண்டிலும் தலா இரண்டு லட்சம் வெற்றிலைகளும் கடைசி காலாண்டில் 1.2 லட்சம் இலைகளும் கிடைக்கும் என்கிறார். கடைசி மூன்று மாதங்களில் குளிர் காலம் என்பதால் குறைந்த அளவு கிடைக்கும் . ஆனால் கூடுதல் தரமுள்ள வெற்றிலை கிடைப்பதால் இரண்டு மடங்கு விலை கிடைத்துவிடும் என்கிறார்.
ஒடிஷா கிராம ஸ்வராஜ் அபியான் (ஒரிஸ்ஸா கிராமத்தின் சுய ஆட்சி அமைப்பு ) எனும் அமைப்பை சேர்ந்த ஜெகதீஷ் பிரதான் என்பவர், ஆயிரம் வெற்றிலைகளுக்கு சராசரி 450 ரூபாய் என்ற விலையில் முதல் ஆறு லட்சம் இலைகளுக்கு ரூ 2.7 லட்சமும், குளிர் மாதங்களில் வெற்றிலைக்கு தலா ஒரு ரூபாய் என்ற வீதம் ரூ 1.2 லட்சமும் ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ 3.9 லட்சம் கிடைக்கும் என்கிறார்.
செலவுகளைப் பற்றி குறிப்பிடுகையில், பிரதான் , 4000- 5000 சதுர அடியில் ஒரு வருடத்தில் 540 வேலை நாட்கள் செலவிடப்பட்டு வேலையாட்கள் கூலி சுமார் ரூ 1.5 லட்சம் ஆகிறது என்கிறார். இவர்களுக்குக் கொடுக்கப்படும் கூலி ரூ 200, புவனேஸ்வரில் ஒரு கட்டிட தொழிலாளியின் கூலியை விட அதிகமானது. ஆனால் வெற்றிலைக் கொடிகளை தூக்கி கட்டுகின்ற வேலைகளுக்கு தினம் ரூ 500 வரையும், உரங்கள் இடுவதற்கு ரூ 400 வரையும் கூலி கொடுக்கப்படுகிறது. வேலி கட்டும் மற்றும் மண் அணைக்கும் வேலைகளுக்கு நாளொன்றுக்கு ரூ 350 வழங்கப்படுகிறது. இந்த வேலைகள் ஆண்டின் சில நாட்களே இருந்தாலும், நிலமற்ற தொழிலாளிகள் கூட பாஸ்கோ திட்டத்தில் எந்த ஆர்வமும் காட்ட வில்லை.
சராசரியாக வெற்றிலை தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும் ஊதியம், மாநிலத்தின் குறைந்த பட்ச ஊதியத் தொகையான ரூ 125 ஐப்போல் இரு மடங்காகும். அதுவும் உணவோடு வழங்கப்படுகிறது. இவைகளோடு, இயற்கை உரம் (புண்ணாக்கு) , மரக் கம்புகள் , மூங்கில் குச்சிகள், ஒயர் கயிறு, பம்புசெட் பராமரிப்பு போன்ற இதர செலவுகளுக்கு ரூ 50000 ஆகும். வியாபாரிகள் தங்கள் வாகனத்தைக்கொண்டு தோட்டத்திலேயே எடுத்துச் செல்வதால் போக்குவரத்து செலவு கிடையாது. (நமது கிராமங்களில் குடும்பத்தினர் செய்யும் தோட்ட வேலைகளுக்கான ஊதியத்தை கணக்கில் எடுத்து கொள்வதில்லை). ஆக மொத்தம் ஒரு தோட்டத்திற்கு ரூ 2 லட்சம் செலவு போக ரூ 1.5 முதல் 2 லட்சம் வரை மீதம் இருக்கும்.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தோட்டங்கள் உள்ளன. சநாதனுக்கு நான்கு தோட்டங்கள் உள்ளன. 1999-ம் வருடத்தில் வீசிய கடும் புயலில் விளைந்த சேதத்தைத் தவிர இங்கு பலரும் வங்கி கடன்கள் உதவி இல்லாமலேயே தோட்டத்தை நிர்வாகம் செய்ய முடிகிறது..
வெற்றிலை தோட்டங்களைத் தவிர தம்மிடம் இருக்கும் தன் 3 ஏக்கர் நிலத்தில், சனாதனிடம் 70 வகையான மரங்கள், செடிகள், பழ வகை மரங்கள், மூலிகை செடிகள் இருந்தன. இவைகளும் போதுமான வருவாயை ஈட்டித் தந்தன. மேலும் இவரிடம் இருந்த சிறிய துண்டு நிலத்தில் ஒரு போக நெல் பயிர் செய்து குடும்ப உபயோகத்திற்கு வைத்துக்கொண்டார்கள் .
ஏக்கரின் பத்தில் ஒரு பங்கு நிலத்தில் பயிராகும் வெற்றிலை தோட்டத்துக்கு அரசு அளிக்கின்ற இழப்பீட்டுத் தொகை ரூ 1.15 லட்சத்தை நாங்கள் ஏற்று கொண்டால் எவ்வளவு இழப்போம் என்று நினைத்துப் பாருங்கள் என சநாதனைப் போன்றே பல ஆயிரம் சாகுபடியாளர்களும் எண்ணுகின்றனர். அதுவும் 30 ஆண்டுகள் உயிரோட்டத்தை தன்னுள் கொண்ட இந்த வெற்றிலை தோட்டங்கள் மட்டும் இல்லை என்றால் எங்களுக்கு யார் மீன்கள், இறால்கள், காற்று, வளமான நிலங்கள், இப்படிப்பட்ட தட்ப வெப்ப சீதோஷ்ண நிலையை கொடுக்க முடியும்?
"நான் எனது நான்கு குழந்தைகளைப் படிக்க வைக்க கடந்த ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் செலவழித்துள்ளேன். ஏறத்தாழ இதே தொகையில் ஒரு வீட்டையும் கட்டி கொண்டு இருக்கிறேன். எங்களுக்கு இவர்கள் கொடுக்கும் இழப்பீடு தேவையில்லை. இப்போது இருக்கும் வாழ்வாதாரமே எங்களுக்குத் தேவை."
அவர்கள் வேலை வாய்ப்பை பற்றி பேசும்போது நாங்கள் என்ன முட்டாள்கள் என நினைத்தார்களா என குஜ்ஜரி வினவுகிறார். "இப்போது எல்லாமே இயந்திர மயமாகிவிட்டது. கைப்பேசி உபயோகத்தில் உள்ள இக்காலத்தில் யார் அஞ்சல் அலுவலகம் சென்று 5 ரூபாய் தபால் தலை பயன் படுத்துகிறார்கள்?"
இந்த கட்டுரையின் ஒரு
பதிப்பு
முதலில் ஜூலை 14, 2011 தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் வெளியிடப்பட்டது.
தமிழில்: சுப்ரமணியன் சுந்தரராமன்