”மறுமுறையும் பள்ளி சாப்பாடு போட்டால் நன்றாக இருக்கும்.”
தெலெங்கானாவின் செரிலிங்கம்பள்ளி மண்டலத்தில் இருக்கும் மண்டல் பரிஷத் ஆரம்பப் பள்ளியில் ஏழு வயது பசவராஜு படிக்கிறார். ரங்காரெட்டி மாவட்டத்தில் இருக்கும் இப்பள்ளி, மதிய உணவு குழந்தைகளுக்கு அளிக்கும் நாட்டின் 11.2 லட்ச பள்ளிகளில் ஒன்றாகும். பசவராஜின் பள்ளியில் படிக்கும் 10 வயது அம்பிகா, ஒரு தம்ளர் கஞ்சி மட்டும் அருந்திவிட்டு பள்ளிக்கு வருவார். அவரைப் போன்றோருக்கு மதிய உணவுதான் அந்த நாளின் முதல் உணவு.
இந்தியாவின் மதிய உணவுத் திட்டம், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சர்வ ஷிக்ஷ அபியானின் ஆதரவில் அரசு நடத்தும் கல்வி மையங்களிலும் படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக எல்லா வேலை நாட்களிலும் உணவளிக்கிறது. நிரம்பிய வயிறு கணக்குகளை சரியாகப் போடச் செய்யும் என்பதிலும் எழுத்துப் பிழைகளை சரி செய்ய வைக்கும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மதிய உணவின் பிரதான நோக்கம், குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு வருவதுதான். (இந்தியாவில் 15 கோடி குழந்தைகளும் இளையோரும் முறையான படிப்பிலிருந்து வெளியேறியிருப்பதாக ஒன்றியக் கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் கூறுகிறார்.)
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்திலுள்ள ஜோத்கத் கிராமத்தின் ராஜ்கியா பிரத்மிக் வித்யாலயா பள்ளிக்குச் சென்றோம். நாங்கள் சென்றபோது பத்து வயது தக்ஷ் பட்ட சில பிஸ்கட்டுகளை மட்டும் உண்டு பள்ளிக்கு வந்திருந்தார். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால், அசாம் மாநிலத்திலுள்ள நல்பாரி மாவட்டத்தில் எண்.858, நிஸ் ககாடா பள்ளிக்கு செல்வதற்கு முன் ஒரு ரொட்டியும் கட்டஞ்சாயாவும் மட்டும் சாப்பிட்டதாக சொல்கிறார் அலிஷா பேகம். அவரின் தந்தை தெருவோரம் கடை வைத்திருப்பவர். அம்மா வீட்டில் இருக்கிறார்.


































