பாரியிலுள்ள நாங்கள் இன்று மீண்டும் உலக மொழிபெயர்ப்பு நாளையும் உலகெங்கும் இருக்கும் செய்தித்தளங்களிலேயே சிறந்த எங்களின் மொழிபெயர்ப்புக் குழுவையும் ஒருங்கே கொண்டாடுகிறோம். எனக்குத் தெரிந்தவரை, உலகிலேயே பன்மொழி செய்தித்தளமாக விளங்குவது பாரிதான் எனக் கருதுகிறேன். இதில் தவறு இருப்பதாக யாரேனும் கருதி தங்களின் தரவை அளித்தாலும் நான் சந்தோஷப்படுவேன். 14 மொழிகளில் பாரியின் கட்டுரைகள் பிரசுரமாக உதவும் 170 மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்ட அற்புதமானக் குழுவுக்கு நன்றிகள். சில ஊடக நிறுவனங்கள் 40 மொழிகளில் கூட பிரசுரிக்கின்றன. ஆனால் அங்கு வலுவான படிநிலை இருக்கிறது. சில மொழிகள் பிறவற்றைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே சமத்துவத்தை அங்கு எட்ட முடிகிறது.
மேலும் நாங்கள் ஒவ்வொரு இந்திய மொழியும் உங்களின் மொழி என்கிற கொள்கையுடன் பிரசுரிக்கிறோம். எல்லா மொழிகளையும் இக்கொள்கை சமத்துவமாக பாவிக்க வைக்கிறது.ஒரு மொழியில் ஒரு கட்டுரை பிரசுரமாகும்போது அது மற்ற 14 மொழிகளிலும் பிரசுரிக்கப்பட வேண்டுமென்பது எங்களின் தீர்மானகரமான முடிவு. இந்த வருடத்தில் சட்டீஸ்கரி மொழியும் பாரிக் குடும்பத்துடன் இணைந்திருக்கிறது. அடுத்ததாக போஜ்புரி மொழி இணையவிருக்கிறது.
இந்திய மொழிகளை உயர்த்துவது மொத்த சமூகத்துக்கும் அவசியம் என நாங்கள் நம்புகிறோம்.ஒவ்வொரு மூன்று நான்கு கிலோமீட்டர்களுக்கும் நீரின் ருசி மாறுபடுவது போல, ஒவ்வொரு 12-15 கிலோமீட்டர்களுக்கும் மொழி வித்தியாசப்படும் என்கிற சொல்லாடல் பிரயோகம் நாட்டின் மொழிப் பன்முகத்தன்மையை உணர்த்துவிதமாக உருவானதுதான்.
ஆனால் அதைக் கொண்டு மட்டும் நாம் இனி மனநிறைவு கொள்ள முடியாது. கிட்டத்தட்ட 800 மொழிகள் உயிர்ப்புடன் இருக்கும் இந்த நாட்டில் கடந்த 50 வருடங்களில் மட்டும் 225 மொழிகள் அழிந்திருக்கின்றன என மக்களின் மொழிகளுக்கான கணக்கெடுப்பு சொல்லும் சூழலில் நாம் நிச்சயமாக மனநிறைவு கொள்ள முடியாது. உலகில் பேசப்படும் மொழிகளில் 90 - 95 சதவிகித மொழிகள் இந்த நூற்றாண்டின் இறுதியில் அழிந்துவிடும் அல்லது அழியும் கட்டத்தை எட்டியிருக்கும் என ஐநா சபை சொல்லும் நிலையில் மனநிறைவுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. உலகத்தில் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு பழங்குடி மொழி அழியும் நிலையில் நிச்சயமாக மனநிறைவுக்கு கொள்ள முடியாது.


