“நான் கட்டும் ஒவ்வொரு குடிசையும் குறைந்தது 70 வருடங்களாவது இருக்கும்.”
விஷ்ணு போசாலே, கொல்ஹாப்பூர் மாவட்டத்தின் ஜாம்பாலி கிராமத்தில் வசிப்பவர். பாரம்பரியமாக குடிசை கட்டி வருபவர்.
மர சட்டகம் மற்றும் ஓலை கொண்டு குடிசை கட்டும் திறனை தந்தையான காலம் சென்ற குண்டுவிடமிருந்து 68 வயதான அவர் கற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட 10 குடிசைகள் கட்டியிருக்கிறார். 10 குடிசைகள் கட்ட உதவி செய்திருக்கிறார். “நாங்கள் (வழக்கமாக) கோடையில்தான் கட்டுவோம். காரணம், அப்போதுதான் அதிக வேலைகள் வயலில் இருக்காது,” என நினைவுகூரும் அவர், “குடிசை கட்டுவதில் மக்கள் உற்சாகம் கொள்வார்கள்,” என்கிறார்.
1960களின் காலக்கட்டத்தை நினைவுகூருகிறார் விஷ்ணு. ஜாம்பாலியில் அப்போது நூறுக்கும் சற்று அதிகமாகத்தான் குடிசைகள் இருந்தன. நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர் என்றும் அக்கம்பக்கத்தில் கிடைத்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் அவர் கூறுகிறார். “குடிசை கட்ட ஒரு ரூபாய் கூட நாங்கள் செலவழிக்கவில்லை. யாரிடமும் அந்த வசதியும் கிடையாது,” என்னும் அவர் மேலும், “மூன்று மாதங்கள் வரை காத்திருக்கக் கூட மக்கள் தயாராக இருந்தனர். சரியான பொருட்கள் இருக்கும்போது மட்டுமே அவர்கள் கட்டத் தொடங்கினர்,” என்கிறார்.
நூற்றாண்டின் இறுதியில் செங்கல், சிமெண்ட் மற்றும் தகரம் போன்றவை மரக் கட்டை மற்றும் ஓலையிலான குடிசைகளுக்கு பதிலாக இக்கிராமத்துக்கு வந்தன. இங்கு 4.963 பேர் வசிக்கின்றனர் (கணக்கெடுப்பு 2011). முதன்முதலாக குடிசைகள், உள்ளூர் குயவர்கள் செய்த கூரை ஓடுகளிடம்தான் தோல்வியுற்றன. பிறகு இயந்திரங்கள் உருவாக்கிய ஓடுகள் வந்தன. அவை இன்னும் அதிக உறுதியும் ஆயுளும் கொண்டிருந்தன.
ஓடுகளுக்கு குறைந்த பராமரிப்புதான் தேவை. ஓடு போடுவதும் எளிது. வேகமானதும் கூட. குடிசைக்கு ஓலை போடுவதற்கு கடும் உழைப்பு தேவை. இறுதியில், சிமெண்ட்டும் செங்கற்களும் கொண்ட கல் வீடுகள்தான் குடிசைகளுக்கு மொத்தமாக முடிவு கட்டின. குடிசை கட்டுமானம் கடும் சரிவை கண்டது. ஜாம்பாலியின் மக்கள் குடிசைகளை கைவிடத் தொடங்கினர். தற்போது விரல் விட்டுமளவுக்கான குடிசைகளே எஞ்சியிருக்கின்றன.
”கிராமத்தில் குடிசையைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. சில வருடங்களில், பாரம்பரியக் குடிசைகளையும் நாங்கள் இழந்து விடுவோம். யாரும் அவற்றை பராமரிக்க மாட்டார்கள்,” என்கிறார் விஷ்ணு.





























