கொரோனாவால் துர்கா சிலை செய்வதற்கு இதுவரை எவ்வித ஆர்டரும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன். ஆனால், நானாகவே சில சிலைகளை செய்து வைத்துள்ளேன். அவை விற்றுவிடும் என்று நம்புகிறேன் என வட கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குயவர்கள் மற்றும் சிலை தயாரிக்கும் ஸ்தபதிகள் உள்ள பகுதியான குமார்துளியில் உள்ள கிருஷ்ணா ஸ்டுடியோவைச் சேர்ந்த தப்பாஸ் பால் கூறுகிறார். உங்களுக்கு என்னை 8 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும், ஜீன் மாதத்தின் மத்திய நாட்களில் எனது ஸ்டுடியோவை சிலைகளின்றி பார்த்திருக்கிறீர்களா? என்று அவர் மேலும் கேட்கிறார்.
இந்த நேரத்தில் குமார்துளியில் உள்ள 450 ஸ்டுடியோக்களும் (உள்ளூர் கைவினைஞர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளனர்) மூங்கில் மற்றும் வைக்கோல்களை வைத்து சிலை தயாரிப்பதற்கான சட்டகத்தால் நிரம்பி வழியும். அதில் களிமண்ணை பூசி, சிலையை வடிவமைப்பார்கள். அக்டோபர் மாதத்தில் வரும் துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு முன்னர், அந்த சிலைகளுக்கு, அழகான வண்ணங்கள் பூசி, ஆபரணங்கள் அணிவித்து அலங்கரிப்பார்கள். (குமார்துளி வழியாக பயணம் என்பதை பார்க்கவும்).
ஒவ்வொரு ஆண்டும், இந்த தயாரிப்பு பணிகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் துவங்கும். ஆனால், இந்தாண்டு கோவிட் – 19 தொற்றுநோய், குமார்துளியில் அந்த அட்டவணையை தாமதப்படுத்திவிட்டது. எங்களுக்கு இந்தாண்டு மிகக்கொடுமையான ஆண்டு. எங்கள் இழப்பு ஏப்ரல் மாதம் முதலே துவங்கிவிட்டது. முதலில், ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடப்படும் பெங்காலி புத்தாண்டான போய்லா பாய்சாக்குக்கு விற்பனையாகும், வீட்டில் பயன்படுத்தக்கூடிய தெய்வங்களின் சிலைகளான அன்னபூர்ணா போன்ற சிலைகளே விற்பனைசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த காலனி முழுவதிலும், நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், 8 முதல் 10 சிலைகளே விற்பனையானது. முதலீடு அனைதையும் இழந்துவிட்டோம். தற்போது, துர்கா சிலைகளுக்காக இதுவரை எனக்கு ஒரு ஆர்டரும் வரவில்லை என்று கடந்த 20 ஆண்டுகளாக சிலைகள் செய்துவரும் மிரித்துயுன்ஜெய் மித்ரா கூறுகிறார்.
அவரைப்போலவே, 18ம் நூற்றாண்டில் இருந்து, சிலை வடிவமைப்பவர்கள், துர்கை அம்மனின் களிமண் சிலைகளை செய்துவருகிறார்கள். பெருநிலக்கிழார்களும், வணிகர்களும், ஆண்டுதோறும் நடைபெறும் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்காக அவற்றை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச்செல்வார்கள். பெரும்பாலான கைவினைஞர்கள், நடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்களின் கைவினைப்பொருட்களுக்கான தேவை அதிகரிக்கத்துவங்கியவுடன், அவர்கள் வடகொல்கத்தாவின் ஹீக்ளி நதிக்கரையில் உள்ள குமார்துளியிலே தங்கிவிட்டனர்.
நான் ஜீன் 18ம் தேதி குயவர்கள் தங்கும் பகுதியை அடைந்தபோது, கல்கத்தா மாநகராட்சி அம்பன் புயல் வீசியதால், மே 20ம் தேதி விழுந்த மரத்தை அகற்றிக்கொண்டிருந்தது. மற்றபடி, நகரமே அமைதியாக இருந்தது. பெரும்பாலான கலைக்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. திறக்கப்பட்டிருந்த சில கடைகளிலும், சிலைகள் செய்யப்படவில்லை. உடைந்த மற்றும் முடிக்கப்படாத தெய்வங்களில் சிலைகள் தெருக்களில் சிதறிக்கிடந்தன. இது கடந்த ஆண்டுகளின் ஜீன் மாதங்களை போல் இல்லாமல் இருந்தது. சிலைகளுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் விற்கும் கடைகள் திறந்திருந்தன. ஆனால், அவற்றிலும் வாடிக்கையாளர்கள் இல்லை.
குமார்துளியில் நான் சந்தித்த கைவினை கலைஞர்கள், 2019ம் ஆண்டு தங்களின் ஒட்டுமொத்த வியாபாரம் 40 கோடி ரூபாய் என்று கூறினர். அதில் அதிக தொகை துர்கா சிலைகளை விற்பதில் இருந்து கிடைக்கும் என்று கூறினர். அவர்கள் மற்ற தெய்வங்களின் சிலைகளையும் செய்வார்கள். அனிமேஷன் திரைப்படங்களுக்கு பயன்படும் மாதிர மண் பொம்மைகள் கூட சில நேரங்களில் செய்வார்கள். அதில் சிலர் மண் பானை மற்றும் பாத்திரங்களும் செய்வார்கள். அவர்கள் அனைவரும், இந்தாண்டு விற்பனை அதிகரிக்கும் என்று எண்ணியிருந்தனர். ஆனால், அது கோவிட் – 19 தொற்றுக்கு முன்னதான நிலை. தொற்று அனைத்தையும் முடக்கிவிட்டது.














