170 பேர் கொண்ட PARI-ன் தனித்துவமான மொழிபெயர்ப்பாளர்கள் குழுவின் அற்புதமான சாதனைகளை இன்று நாம் கொண்டாடுகிறோம். குறைந்தபட்சம் 45 பேரேனும் ஒவ்வொரு மாதத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் குழு அது. அப்படி கொண்டாடுவதில் எங்களுக்கு நல்ல நண்பர்கள் இருக்கின்றனர். நல்ல உதாரணங்களை நாங்கள் பின்பற்றுக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 30ம் நாளை சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக அனுசரிக்கிறது.
இந்த நாளை பற்றிக் குறிப்பிடும் ஐநா, “நாடுகளை இணைப்பதிலும் உரையாடல்களை ஏற்படுத்துவதிலும் புரிதல் மற்றும் ஒத்துழைப்பை உருவாக்கி வளர்ச்சிக்குப் பங்களிக்கும் மொழி வல்லுநர்களுக்கு பாராட்டு தெரிவிக்க இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது,” என்றெல்லாம் குறிப்பிடுகிறது. எனவே இன்று நாங்கள் எங்களின் மொழிபெயர்ப்புக் குழுவுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். பிற செய்தித்தளம் எதிலும் எங்களுக்கு நிகராக மொழிபெயர்ப்புகள் இல்லை என்பதையும் பெருமையோடு உறுதியாகச் சொல்கிறோம்.
எங்களின் மொழிபெயர்ப்பாளர்களில் மருத்துவர்கள், இயற்பியலாளர்கள், மொழியியலாளர்கள், வீட்டில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், பொறியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் என பல வகையினர் இருக்கின்றனர். 84 வயது முதியவரும் இருக்கிறார். 22 வயதளவு இளையவரும் இருக்கிறார். சிலர் இந்தியாவுக்கு வெளியே வசிக்கின்றனர். பிறர் நாட்டின் தூரமான இடங்களில், இணையத் தொடர்பு வசதி குறைவாக இருக்கும் பகுதிகளில் வசிக்கின்றனர்.
PARI-ன் பெரியளவிலான மொழிபெயர்ப்புச் செயல்பாடு, எங்களின் அளவுக்குட்பட்டு இந்த நாட்டை ஒன்றாக்கவும் அதன் மொழிகளை சமமாக நடத்துவதற்கும் எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது. PARI-ல் இருக்கும் ஒவ்வொருக் கட்டுரையும் 13 மொழிகளில் கிடைக்கும். அல்லது விரைவிலேயே 13 மொழிபெயர்ப்புகளை அடையும். உதாரணமாக இந்தக் கட்டுரை 13 மொழிகளில் இருப்பதைப் பார்க்கலாம்: நம் விடுதலைகளுக்காக போராடும் பகத் சிங் ஜக்கியான். எங்களின் குழு அத்தகைய மொழிபெயர்ப்பை கிட்டத்தட்ட 6000 செய்திக் கட்டுரைகளுக்கு செய்திருக்கிறது. அதில் பலவை பல ஊடக வடிவங்களைக் கொண்டவை.



