”எனக்கு வாய்ப்பிருந்தால் மருத்துவமனைக்கு நான் செல்லவே மாட்டேன்.” தெளிவாகப் பேசுகிறார் அவர். “விலங்குகள் போல் அங்கு நாங்கள் நடத்தப்படுகிறோம். மருத்துவர்கள் எங்களை வந்து பார்க்கவே மாட்டார்கள். செவிலியர்களோ, ‘இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்! நாற்றம் பிடித்த இந்த மக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?” என்பார்கள்,” என்கிறார் வாரணாசி மாவட்டத்தின் அனேய் கிராமத்தில் வசிக்கும் சுடாமா பழங்குடி. ஐந்து குழந்தைகளை வீட்டிலேயே ஏன் பெற்றெடுத்தார் என்பதை விளக்கும் போதுதான் மேற்குறிப்பிட்டவாறு அவர் சொன்னார்.
கடந்த 19 வருடங்களில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் சுடாமா. 49 வயதாகும் அவர் இன்னும் மெனோபாஸ் கட்டத்தை எட்டவில்லை.
அவர் முசாகர் சேரியில் வசிக்கிறார். 57 குடும்பங்கள் அங்கு இருக்கின்றன. தாகூர்கள், பிராமணர்கள், குப்தாக்கள் முதலிய ஆதிக்க சாதிகளின் வீடுகள் இருக்கும் பராகவோன் ஒன்றியத்தின் கிராமத்தின் மறுமுனையில் அச்சேரி இருக்கிறது. சில இஸ்லாமியர் வீடுகளும் சமார், தர்கார், பசி போன்ற பட்டியல் சாதி வீடுகளும் கூட இருக்கின்றன. அச்சமூகத்தைப் பற்றி சொல்லப்படும் கற்பிதங்கள் உண்மை என்பது போன்ற தோற்றத்தில்தான் சேரி இருக்கிறது. அரைகுறை ஆடை, அழுக்குக் குழந்தைகள், ஈக்கள் பறக்கும் ஒல்லியான, உணவு ஒட்டிய முகங்கள், சுகாதாரமின்மை முதலியவைதான் அங்கு இருந்தது. ஆனால் சற்றே நெருங்கிப் பார்த்தால் யதார்த்தம் வேறாக இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் சாதியாக இருக்கும் முசாகர்கள் பூர்விகமாக விவசாயத்தைப் பாழாக்கும் எலிகளைப் பிடிக்கும் வேலை செய்திருந்தனர். காலவோட்டத்தில் அவர்களின் வேலை அவமதிக்கப்படும் வேலையாக மாறியது. அவர்கள் ‘எலி உண்ணுபவர்கள்’ என அறியப்பட்டனர். முசாகர் என்றால் அதுவே அர்த்தமும் கூட. பிற சமூகங்களால் புறக்கணிப்பையும் அவமதிப்பையும் அச்சமூகம் சந்தித்திருக்கிறது. அரசுகளும் முற்றிலும் அவர்களை புறக்கணித்துவிட்டது. முற்றான நிராகரிப்பில் அவர்கள் வாழ்கின்றனர். அருகாமையிலுள்ள பிகார் மாநிலத்தில் அவர்கள் மகாதலித் என சுட்டப்படுகின்றனர். மிகவும் ஏழ்மையானவர்கள், பட்டியல் சாதிகளாலேயே பேதம் பார்க்கப்படுபவர்கள்.








