"கொயி சர்கார் நஹி சாங்கி ஆம் லோகன் லாயி " [எந்த அரசாலும் மக்களுக்கு நல்லதல்ல], என்று 70 வயதான குர்மீத் கவுர் கூறுகிறார். லூதியானாவின் பாஸியன் கிராமத்திலிருந்து ஜக்ராவோனில் நடைபெறும் கிசான்-மஜ்தூர் மகாபஞ்சாயத்தில் (விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் மெகா கிராம கூட்டம்) கலந்து கொள்ள வந்த பெண்கள் குழுவுடன் அவர் ஒரு கொட்டகையில் அமர்ந்திருக்கிறார்.
"[பிரதமர்] மோடி, வேலைவாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. [இப்போது ] எஹ்னா தா கொயி ஹக் நஹி சாடி எதி ஆ கி வோதான் மங்கன் தா [இங்கு வந்து வாக்கு கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை]," என்கிறார் அவர். பாரதிய கிசான் யூனியன் (BKU ஏக்தா) டகவுண்டாவுடன் தொடர்புடைய குர்மீத் கவுர், 2019 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு வாக்களித்ததாக பாரியிடம் கூறுகிறார்.
ஜக்ராவோனின் புதிய தானிய சந்தையில் மே 21 அன்று நடைபெற்ற மகாபஞ்சாயத்தில், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அங்கன்வாடி தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மருத்துவ பயிற்சியாளர் சங்கங்கள் என மாநிலம் முழுவதிலுமிருந்து 50,000 பேர் தங்கள் பலத்தைக் காட்டவும், பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) எதிரான போராட்டத்தைக் குறிக்கவும் இங்கு கூடினர். 'பாஜக ஹராவ், கார்ப்பரேட் பஜாவோ, தேஷ் பச்சாவ் (பாஜகவை தோற்கடிப்போம். கார்ப்பரேட்டுகளை விரட்டுவோம், நாட்டைக் காப்போம்)’ என்று மேடையில் பதாகை வைக்கப்பட்டு இருந்தது.
"நாங்கள் பஞ்சாபில் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்," என்று மகாபஞ்சாயத்தில் கலந்து கொண்ட BKU லகோவால் பிரிவுத் தலைவர் ஹரிந்தர் சிங் லகோவால் கூறுகிறார்.
2024 ஜூன் 1, அன்று பஞ்சாப் தேர்தலைச் சந்திக்கிறது. நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தை அம்மாநிலத்தில் தொடங்க உள்ளார். அங்கு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு கண்டுகொள்ளவில்லை என்று எதிர்த்து வருகின்றனர்: சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உத்தரவாதம், கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்தல், லக்கிம்பூர் கெரி படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 2020-2021 போராட்டத்தில் மரணமடைந்த தியாகிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வாசிக்க: விவசாய போராட்டங்கள் குறித்த பாரியின் முழு செய்தி தொகுப்பு


![‘அவர்களுக்கு [பாஜக] உரிமை கிடையாது…’](/_next/image?url=https%3A%2F%2Fproduction.ruralindiaonline.org%2Fuploads%2F01_IMG_2898_AA_They_BJP_do_not_have_the_right_2e5d4d3c08.jpg&w=1080&q=75)









