வெள்ளி போல விளைந்து நிற்கும் பருத்தி வயல் முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதை வெறித்துப் பார்த்தபடியே நிற்கிறார் விஜய் மரோத்தார். விதர்பாவில் உள்ள அவரது பருத்திக்காடு ஒரே ஒரு கடும் மழையில் இப்படி நாசமாகிவிட்டது. “இந்தப் பயிருக்காக 1.25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். அதில் பெரும்பகுதி நஷ்டமாகிவிட்டது,” என்கிறார் அவர். இது நடந்தது 2022, செப்டம்பர் மாதம். விஜயின் முதல் போக சாகுபடி அது. தமது சிக்கல்களைப் பேசிப் பகிர்ந்துகொள்ள அவருக்கு அப்போது யாருமில்லை.
ஐந்து மாதங்களுக்கு முன்புதான் அவரது தந்தை கண்ஷியாம் மரோத்தர் தற்கொலை செய்துகொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அவரது தாய் திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் காலமானார். பருவநிலைக் கோளாறுகளால் அடுத்தடுத்த சாகுபடிகளில் ஏற்பட்ட சேதம், ஏறும் கடன் சுமை ஆகியவற்றால் விதர்பாவில் உள்ள பிற விவசாயிகளைப் போலவே அவரது பெற்றோருக்கும் கடுமையான மன உளைச்சலும், மன அழுத்தமும் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவி ஏதும் கிடைக்கவும் இல்லை.
ஆனால், தனது தந்தையைப் போல விஜய் உடைந்துபோக முடியாது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு தனது வயலில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் வேலையில் பரபரப்பாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் விஜய். சகதியாகிப்போன தனது நிலத்தில் தனது கால்சட்டையை மடித்துவிட்டுக்கொண்டு இறங்கி, ஒரு வாளியால் தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொண்டிருந்தார் அவர். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் இப்படி இடுப்பொடிய உழைத்தார். அவரது டி-சர்ட் வியர்வையில் நனைந்து கிடந்தது. “எனது நிலம் ஒரு சரிவில் இருக்கிறது. இதனால், கனமழை பெய்யும்போது நான் அதிகம் பாதிக்கப்படுகிறேன். சுற்றியிருக்கிற நிலங்களில் சேரும் தண்ணீர் என் நிலத்துக்குள் இறங்குகிறது. அதை வடிப்பது கடினமான பணி,” என்று விளக்குகிறார் அவர். இந்த அனுபவத்தில் பீதியடைந்திருக்கிறார் அவர்.
கூடுதல் மழை, நீடித்த வறட்சி, ஆலங்கட்டி மழை போன்ற கடுமையான காலநிலை நிகழ்வுகளால் வேளாண்மையில் ஏற்பட்ட பெரும் துயரங்கள் உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுத்தபோதுகூட இந்த சிக்கல்களை எதிர்கொள்ள அரசாங்கம் பெரிதாக ஏதும் செய்யவில்லை. (படிக்க: மனதை அலைகழிக்கும் விவசாய நெருக்கடி). மன அழுத்தம், மன நலக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநலச் சட்டம் 2017-ன் படி கிடைக்கவேண்டிய அல்லது அளிக்கப்படும் சேவைகள் குறித்த எந்த தகவலும் விஜய்க்கோ, உயிரோடு இருந்தபோது இது போன்ற உளவியல் சிக்கல்களோடு போராடிக் கொண்டிருந்த அவரது தந்தை கண்ஷியாமுக்கோ கிடைக்கவில்லை. மாவட்ட மன நலத் திட்டம் 1996ன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட எந்த ஒரு முகாமோ, வேறு மக்களைத் தேடிச் சென்று செயல்படுத்தும் திட்டங்களோ அவர்களது கண்களில் பட்டதில்லை.
‘பிரேர்னா பிரகல்ப் விவசாயிகள் ஆலோசனை சுகாதார சேவைத் திட்டம்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை 2014 நவம்பரில் கொண்டு வந்தது மகாராஷ்டிர மாநில அரசு. மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் யவத்மல் வட்டத்தில் இயங்கும் ‘இந்திராபாய் சீதாராம் தேஷ்முக் பகுதேசிய சன்ஸ்தா’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்தன. அரசாங்கம் - தனியார் (சமூக நல அமைப்பு) கூட்டாக இணைந்து ஊரகப் பகுதிகளில் நிலவும் சிகிச்சைப் போதாமைகளை நிறைவு செய்யும் வகையில் இது திட்டமிடப்பட்டது. 2022ல் விஜய் தனது தந்தையை இழந்தபோது அதிகம் பேசப்பட்ட இந்த பிரேர்னா திட்டம் பிசுபிசுத்துப்போயிருந்தது.









