"இது அனைத்தும் ஒற்றை நூலில் தொடங்கி ஒற்றை நூலிலேயே முடிவடைகிறது," என்று மெல்லிய புன்னகையுடன் ரேகா பென் வாகேலா கூறுகிறார். அவர் குஜராத்தின் மோட்டா டிம்ப்லா கிராமத்தில் உள்ள தனது வீட்டுக் கைத்தறியில் அமர்ந்து ஒற்றை இகட் பட்டோலுவை நெய்கிறார். "ஆரம்பத்தில் பாபினில் ஒற்றை நூலை சுற்றி விட்டு, இறுதியில், சாயமிடப்பட்ட நூலை பாபின் மீது மாற்றுவோம்," என்று ரேகா பென், நெசவு நூலுக்கான பாபின்கள் தயாராவதற்கு முந்தைய படோலா தயாரிப்பின் பல செயல்முறைகளை விளக்குகிறார். பின்னர் தறியில் திரிக்கப்பட்ட நூல் பொருத்தப்படுகிறது.
ரேகா பென் வசிக்கும் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள வான்கர்வாஸ் கிராமத்தில் பலர் புகழ்பெற்ற பட்டுப் புடவைகளான பட்டோலு தயாரிப்புடன் தொடர்பான ஏதாவது ஒரு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்று, 40 வயதாகும் ரேகா பென், லிம்ப்டி தாலுகாவில், ஒற்றை மற்றும் இரட்டை இகட் படோலாவை நெசவு செய்யும் ஒரே தலித் பெண் படோலா தயாரிப்பாளர் ஆவார். (படிக்க: ரேகா பென் வாழ்க்கையின் குறுக்கு செங்குத்து இழைகள்).
சுரேந்திரநகரில் இருந்து தயாரிக்கப்படும் படோலாக்கள் 'ஸலவாடி' படோலா என்று அழைக்கப்படுகின்றன. இது படானில் தயாரிக்கப்படும் படோலாக்களை விட மலிவானது. ஆரம்பத்தில், இவை, அதன் ஒற்றை இகட் படோலாவுக்கு பெயர் பெற்றன. தற்போது ஜலவாட்டில் உள்ள வான்கர்கள் (நெசவாளர்கள்) இரட்டை இகட் படோலாவையும் நெசவு செய்கிறார்கள். "ஒற்றை இகட்டில், வடிவமைப்பு குறுக்கு இழையில் மட்டுமே இருக்கும். இரட்டை இகட்டில், செங்குத்து இழை மற்றும் குறுக்கு இழை இரண்டிலும் உள்ளன,” என்று ரேகா பென், இரண்டு வகையான படோலாவிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார்.
வடிவமைப்பை பொறுத்துதான், செயல்முறை நுட்பமாகிறது. ரேகா பென் அதை இன்னொரு முறை விளக்க முயற்சிக்கிறார். “ஒரு இகட் படோலுவில் 3500 செங்குத்து இழை நூல்களும் 13750 குறுக்கு இழை நூல்களும் உள்ளன. இரட்டை இகட் படோலுவில் 2220 செங்குத்து இழை நூல்களும் மற்றும் 9870 குறுக்கு இழை நூல்களும் உள்ளன,” என்று அவர் பாபினை குறுக்கு இழை நூலால் ஷட்டிலுக்குள் செலுத்துகிறார்.



























