லிம்ப்டி நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் செல்லும் சாலை ஒன்று 10-12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மோடா டிம்ப்லா கிராமத்துக்கு அழைத்து செல்கிறது. கிராமத்தின் முனையில், தலித் நெசவாளர் சமூகங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வங்கர்வாஸ் என்கிற இடம் பிருக்கிறது. கட்-கட்… கட்-கட் , என தாளகதியில் இயங்கும் தறிக்கட்டைகளின் சத்தம், சில குடிசைகளும் பழைய பாணி ஓட்டு வீடுகளும் இருக்கும் குறுகிய சந்துகளுக்குள் எதிரொலிக்கிறது. அவ்வப்போது எழும் ஒன்றிரண்டு மனிதக் குரல்கள், தறியின் தாளத்தை குலைக்கிறது. கவனமாக கேளுங்கள், உழைப்பின் சத்தம் கூட உங்களுக்கு கேட்கும். இன்னும் கூர்ந்து கேளுங்கள், நுட்பமான வடிவத்தை நெய்வதிலுள்ள துயரத்தையும் ரேகா பென் வகேலாவின் வாழ்க்கைக் கதைக்கான முத்தாய்ப்பாக நீங்கள் கேட்க முடியும்.

“எட்டாம் வகுப்புக்கு மூன்று மாதங்கள்தான் சென்றேன். லிம்ப்டியிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். முதல் பள்ளித் தேர்வுக்கு பிறகு வீட்டுக்கு வர வேண்டும். அப்போதுதான் நான் மேலே படிக்கப் போவதில்லை என என் அம்மா கூறினார். என் அண்ணன் கோபால் பாய்க்கு உதவி தேவைப்பட்டது. பணம் ஈட்ட வேண்டி, அவர் கல்லூரி படிப்பு முடியும் முன்பே படிப்பை நிறுத்தி விட்டார். என் இரு சகோதரர்களின் படிப்புக்கு செலவு செய்யுமளவுக்கு எங்களின் குடும்பத்துக்கு பணம் இருந்ததில்லை. அப்படிதான் நான் படோலா வேலையைத் தொடங்கினேன்.” ரேகா பென்னின் வார்த்தைகள் வெளிப்படையாகவும் கூர்மையானவையாகவும் இருந்தன. வறுமை தரும் பண்புகள் அவை. 40 வயதுகளில் இருக்கும் அவர், குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்திலுள்ள மோடா டிம்ப்லாவின் திறன் வாய்ந்த நெசவாளர் ஆவார்.

“மது, சூதாட்டம், பான் பாக்கு, புகையிலை போன்ற பழக்கங்களை கொண்டவர் என் கணவர்,” எனத் தொடங்குகிறார் அவர், திருமணத்துக்கு பின்னான அவரது வாழ்க்கையின் கதையை. சந்தோஷமற்ற வாழ்க்கை. கணவரை விட்டு, சொந்த வீட்டுக்கு அடிக்கடி செல்லும் நிலை என்றாலும் மீண்டும் கணவரிடம் சென்று சேரவே அழுத்தங்கள் கொடுக்கப்படும். பரிதாபகரமான நிலைதான். எனினும் அவர் தாக்குப்பிடித்தார். “அவர் நல்லவர் இல்லை,” என இப்போது சொல்கிறார் அவர்.

“சில நேரங்களில் என்னை போட்டு அடிப்பார். கர்ப்ப காலத்தில் கூட அடித்திருக்கிறார்,” என்கிறார் அவர். காயங்கள் இன்னும் காயாமல் இருப்பதை அவரது குரலில் உணரலாம். “பெண் குழந்தை பிறந்த பிறகுதான் அவரின் கள்ளத்தொடர்பு எனக்கு தெரிய வந்தது. அப்படியே ஒரு வருடம் ஓடியது. அப்போதுதான் கோபால் பாய் விபத்தில் இறந்து (2010-ல்) போனார். அவரின் படோலா வேலை எல்லாம் முடங்கியிருந்தது. கோபால் பாய், மூலப்பொருள் கொடுத்த வணிகருக்கு கடன் அடைக்க வேண்டியிருந்தது. எனவே நான் (பெற்றோர் வீட்டில்) தங்கியிருந்து அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவரின் வேலை செய்தேன். அதற்கு பிறகு என் கணவர் வந்து என்னை அழைத்து சென்றேர்,” என்கிறார் அவர்.

இன்னும் சில வருடங்களுக்கு தொடர்ந்து தான் சந்தோஷமாக இருப்பதாக, குழந்தையைப் பார்த்துக் கொண்டு, தன்னைத் தானே அவர் ஏமாற்றிக் கொண்டார். ”இறுதியில், என் மகளுக்கு வயது நான்கரை ஆனபோது, சித்ரவதையை சகிக்கும் தன்மையை இழந்து நான் கிளம்பி விட்டேன்,” என்கிறார் ரேகா பென். பள்ளிப்படிப்பை நிறுத்திய பிறகு கற்றுக் கொண்ட படோலா நெய்யும் திறன் அவருக்கு உதவியது. வறுமை கொடுத்த கூர் முனைகளை சரிப்படுத்த அது உதவியது. புது வாழ்க்கையையும் அவருக்கு உருவாக்கி தந்தது. வலிமையான வாழ்க்கை.

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

ரேகா பென் பதின்வயதுகளிலிருந்து படோலா நெய்து வருகிறார். இன்று தன் 40 வயதுகளில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் தனக்கென ஓர் இடத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். இரட்டை மற்றும் ஒற்றை இகாட் படோலாவை லிம்ப்டி மாவட்டத்தில் நெய்யும் ஒரே பெண் அவர்தான்

லிம்ப்டி கிராமங்களிலேயே படோலா நெய்யும் ஒரே பெண் ரேகா பென் என்ற பெருமையை அடைவதற்கு முன்பே, நெய்யப்பட்ட நூல்களை நேர்த்தியுடன் ஒழுங்கமைக்கும் வல்லுநராக அவர் இருந்தார்.

“தொடக்கத்தில் நான், டாண்டி வேலைக்காக எதிரில் உள்ள வீட்டுக்கு செல்வேன். ஒரு மாதத்தில் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் ரேகா பென். அனுபவத்தில் முதிர்ந்திருக்கும் தாடையை தேய்த்துக் கொண்டு, தோளை தறியில் வைத்து சட்டகத்தை சரி செய்கிறார். செங்குத்தான நூல்களையும் குறுக்கு வெட்டு நூல்களையும் கவனமாக அவர் ஒழுங்கமைக்கிறார்.

சட்டகத்தில் இருக்கும் காலியான உருளையை எடுத்து இன்னொன்றை வைக்கிறார். தறியின் இரு மிதிகளை அவர் மிதித்ததும் தேவையான இழையை அது தூக்கிக் கொடுத்து சட்டகம் ஊடுபாவ அனுமதிக்கிறது. ஒரு கை, குறுக்குவெட்டு நூலை கட்டுப்படுத்தும் நெம்புகோலை இழுக்க, இன்னொரு கை வேகமாக அடிக்கட்டையை இழுத்து குறுக்குவெட்டு நூலை சரியான இடத்துக்கு செலுத்துகிறது. ரேகா பென், ஒற்றை ஆளாக படோலு வை நெய்கிறார். கண்களை தறியில் வைத்து, அவரது மனம் வடிவத்தை முன் யூகிக்கிறது. தன் வாழ்க்கை மற்றும் கலை ஆகியவற்றை பற்றி ஒரே பாணியில் பேசுகிறார்.

பாரம்பரியமாக, குறைந்தபட்சம் இரண்டு பேர் படோலு நெசவில் ஈடுபடுவார்கள். “ டண்டி வேலை பார்க்க ஒருவர். உதவியாளர் இடப்பக்கம் அமர்வார். நெசவாளர் வலப்பக்கம்,” என்கிறார் அவர். டண்டி வேலை என்பது, செய்யப்படும் படோலு வகை சார்ந்து, நிறமாக்கப்பட்ட நூல்களை குறுக்கோடும் இழைகளிலோ செங்குத்து இழைகளிலோ ஒழுங்கமைப்பது ஆகும்.

ஒரு துணியை நெய்ய செலுத்தப்படும் உழைப்பு மற்றும் காலத்தை அவதானித்தால் நெசவு கொண்டிருக்கும் நுட்பம் புரியும். திறன் மற்றும் நுட்பம் கொண்டு, சுலபமாக எல்லாவற்றையும் ரேகா பென் செய்து விடுகிறார். நுட்பங்கள் மிகுந்த மொத்த நெசவு வேலையும் அவரின் விரல் நுனிகளில் ஒரு மாயக்கனவு போல் இயங்கி கண்முன் விரியும்.

“ஒரு இகாட்டில், குறுக்கு இழையில்தான் வடிவம் இருக்கும். இரட்டை இகாட்டி, குறுக்கு மற்றும் செங்குத்து இழைகளில் வடிவம் இருக்கும்.” படோலா வின் விதங்களை அவர் விவரிக்கிறார்.

இரு வகைகளையும் வடிவமைப்புதான் வேறுபடுத்துகிறது. ஜலவாடை சேர்ந்த படோலா , ஒற்றை இகாட் வகையை சேர்ந்தது. பெங்களூருவின் பட்டில் செய்யப்படும் வகை அது. படானில் செய்யப்படுபவை இரட்டை இகாட் வகை. அசாம், டாகா, இன்னும் இங்குள்ளவர்கள் இங்கிலாந்திலிருந்து கூட இதற்கான அடர் பட்டு வகை வருவதாக சொல்கிறார்கள்.

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

படோலு நெய்ய செலுத்தப்படும் உழைப்பு மற்றும் காலத்தை அவதானித்தால் நெசவு கொண்டிருக்கும் நுட்பம் புரியும். திறன் மற்றும் நுட்பம் கொண்டு, சுலபமாக எல்லாவற்றையும் ரேகா பென் செய்து விடுகிறார். ஒரு மாயக்கனவு போல

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

பாரம்பரியமாக, குறைந்தபட்சம் இரண்டு பேர் படோலு நெசவில் ஈடுபடுவார்கள். உதவியாளர் இடப்பக்கம் அமர்வார். நெசவாளர் வலப்பக்கம். கால்கள் மிதிகளிலும் ஒரு கை நெம்புகோலிலும் இன்னொன்று அடிக்கட்டையிலும் கொண்டு ரேகா பென் மொத்த நெசவையும் ஒருவராக செய்து விடுகிறார்

கட்டுதல் மற்றும் நிறமூட்டுதல் முறைக்கு இகாட் எனப் பெயர். தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட நாட்டில் பல பகுதியின் நெசவாளர்கள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். எனினும் குஜராத்தின் படோலா வின் தனித்துவம், அதன் நுட்பமான தெளிவான வடிவங்களும் பட்டின் பிரகாசமான வண்ணங்களும்தான். முழுமையாக முடியும் பொருட்கள் விலை உயர்ந்தவையாகவும் அரச பாரம்பரிய வரலாற்றைக் கொண்டதாகவும் இருக்கும்.

படி படோலே பாட், ஃபாடே பான் ஃபீடே நஹி . படோலாவின் வடிவமைப்பு, பிரபல குஜராத்தி பழமொழி சொல்வது போல, நூல் பிரிந்தாலும் வண்ணம் மங்காது. படோலா வடிவத்தில் என்ன செய்யப்படுகிறது என்பது இன்னொரு கட்டுரைக்கான பொருள்.

கணவர் வீட்டை விட்டு வந்த பிறகு ரேகா பென்னுக்கு வாழ்க்கை எளிதாகிவிட்டது. நெசவை விட்டு நீண்ட காலம் ஆகியிருந்தது. மீண்டும் அதை செய்வது கஷ்டமாக இருந்தது. “இரண்டு, மூன்று பேருடன் பேசி பார்த்தேன். ஆனால் யாரும் என் வேலையில் நம்பிக்கை கொள்ளவில்லை,” என்கிறார் அவர். “ஜெயந்தி பாயோ சோமாசாரோ குறித்த விலைக்கு ஆறு புடவைகளை நெய்யக் கொடுத்தனர். நான்கு வருடங்களுக்கு பிறகு நெய்ததால், செழுமை கிடைக்கவில்லை. என்னுடைய வேலை முழுமையுறாமல் இருப்பதை பார்த்து விட்டு, பிறகு எந்த வேலையும் அவர் எனக்குக் கொடுக்கவில்லை. எப்போதும் ஏதோவொரு காரணம் சொல்லிக் கொண்டே இருந்தார்,” என்கிறார் ரேகா பென் பெருமூச்சுடன் நெய்தபடி. அதனால் அவர் நெய்து கொண்டிருக்கும் துணியின் ஒழுங்கமைவு குலையுமா என யோசித்தேன்.

நாட்கள் ஓடின. ‘கேட்கலாமா வேண்டாமா’ எனவொரு ஊசலாட்டம். வறுமையின் நிழல்கள் அடர்ந்தன. வேலைக்காக மன்றாடுவது கூட ரேகா பென்னுக்கு பொருட்டு இல்லை. ஆனால் கை நீட்டி கடன் வாங்க சுயமரியாதை தடுத்தது. “நான் மனுபாய் ராதோடுடன் பேசினேன். என் அத்தை மகன். கொஞ்சம் வேலை கொடுத்தார். சற்று முன்னேற்றம் இருந்தது. என் வேலை அவருக்கு பிடித்தது. ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நான் சம்பளத்துக்கு நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்தேன். ஒற்றை இகாட்தான் அது. ஒரு படோலா புடவைக்கு 700 ரூபாய் கிடைக்கும்,” என நினைவுகூருகிறார் ரேகா பென். “நானும் என் மைத்துனியும் (கோபால் பாயின் மனைவி) ஒன்றாக வேலை செய்தபோது, ஒரு புடவை நெய்ய மூன்று நாட்கள் ஆனது.” தனியாக ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட பத்து மணி நேரத்துக்கும் அதிகமான உழைப்பு. இன்னும் பல மணி நேரங்கள் பிற வேலைகளில் செலவாகின.

தொடர் போராட்டதினூடான வாழ்க்கை எனினும் அது அவருக்கு தைரியத்தை கொடுத்தது. ஆழமாக மூச்சு விட்டபடி, “பொருளாதாரத்தை மேம்படுத்த சொந்தக் காலில் நின்று வேலை பார்ப்பது சரியாக இருக்குமென நினைத்தேன். மூலப்பொருட்களை நான் வாங்கினேன். தறியை வெளியிலிருந்து தயார் செய்தேன். தறி தயாரானதும் இழைகளை வாங்கி வந்து நெய்யத் தொடங்கினேன்.

“ஆர்டர்களுக்காக நெய்யத் தொடங்கவில்லை,” என பெருமை புன்னகையை உதிர்க்கிறார். “என் சொந்த படோலா வை நான் நெய்தேன். அவற்றை வீட்டிலிருந்து விற்கவும் செய்தேன். மெல்ல உற்பத்தியை பெருக்கினேன்.” பாதிக்கப்படும் தன்மையிலிருந்து சுதந்திரத்துக்கு நகர்ந்தது பெரும் சாதனைதான். ஒரே ஒரு கவலைதான். இரட்டை இகாட் நெய்வதற்கு தெரியவில்லை என்றுதான் அவருக்கு ஒரு வருத்தம்.

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

படோலா வடிவங்களால் வகைப்படுத்தப்படுகிறது. முன்பே நிறமூட்டப்பட்ட நூலை சார்ந்து வடிவம் அமையும். ஒற்றை இகாடில் (இடப்பக்கத்தில் ரேகா பென் நெசவு செய்வதை போன்றது) குறுக்கு நூலில் வடிவம் இருக்கும். இரட்டை இகாடில் (வலது) செங்குத்து நூல் மற்றும் குறுக்கு நூல் ஆகிய இரண்டிலும் வடிவம் இருக்கும்

“இறுதியாக நான் என் பெரியப்பாவிடம் ஒன்றரை மாதங்களுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டேன்,” என்கிறார். அவரின் மகள் 4ம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தார். கணவர் வீட்டாருடன் தொடர்பில் இல்லை. பொருளாதாரச் சுமை அதிகம். ஆனாலும் ரேகா பென் உறுதியாக இருந்தார். “என்னுடைய எல்லா சேமிப்பையும் பட்டு நூல் வாங்க செலவு செய்தேன். பதினாறு படோலாவுக்கான வடிவங்களை நூலில் சொந்தமாக நானே செய்தேன்,” என்கிறார் அவர்.

“இந்த வேலை செய்ய குறைந்தது மூன்று பேர் தேவை. ஆனால் நான் தனி ஆள். குழப்பமாக இருந்தது. பிறகு எல்லாவற்றையும் செய்ய நான் மட்டும்தான் இருக்கிறேனென எனக்கு நானே கூறிக் கொண்டேன்.” எனினும் அவ்வப்போது உதவி தேவைப்படும்போது அக்கம்பக்கத்தார் உதவி செய்வதுண்டு. இரண்டு கழிகளுக்கு இடையே இழைகளை விரித்து தெருவில் கட்டி கஞ்சி போட்டு வலுவூட்டவும் பிறகு நூல்களை உருளையில் உருட்டி தறியில் பொருத்தவும் பிறகு அதை ஊடிழையாக சரியான ஒழுங்கமைவில் வைக்கவும் தறியை நெசவுக்கு தயார் செய்யவும் அவ்வப்போது அவருக்கு உதவி கிட்டுவதுண்டு.

நூலுக்கு கஞ்சி பூசுவது நுட்பமான விஷயம். கவனமின்றி அதிக மாவை நூலில் சேர்த்துவிட்டால், அது எலிகளையும் பல்லிகளையும் தறி நோக்கி ஈர்த்துவிடும்.

”இரட்டை இகாட் சுலபமில்லை. நான் தவறுகள் செய்தேன். குறுக்கு நூல் மற்றும் செங்குத்து நூல் ஒழுங்கமைவுகளில் தவறு செய்தேன். வெளியிலிருந்து ஆட்களை வரவைத்து கூட கற்றுக் கொண்டேன். ஒருமுறை அழைத்தால் யாரும் வர மாட்டார்கள். மீண்டும் மீண்டும் சென்று நான்கைந்து முறை அழைக்க வேண்டும். பிறகுதான் எல்லாம் சரியானது!” அவரின் புன்னகை, நிச்சயமற்ற திருப்தியும், அச்சமும் குழப்பமும் தைரியமும் தொடர் முயற்சியும் கொண்ட கலவையாக இருந்தது. ‘பிறகுதான் எல்லாம் சரியானது’ என்பதன் அர்த்தம் குறுக்கு நூல் எல்லாம் சரியாக செங்குத்து நூலோடு ஒழுங்கமைந்து, சிக்கலற்ற வடிவங்களை துணியில் உருவாக்கியது என்பதுதான்.

நுணுக்கமான இரட்டை இகாட் படோலா ஒருமுறை படானிலிருந்து வந்தது. “படானிலிருந்த நெசவாளர்கள், இங்கிலாந்திலிருந்து பட்டு வரவழைப்பார்கள். எங்களுக்கு பெங்களூருவிலிருந்து வரும். பல வணிகர்கள் தம் படோலா வை ராஜ்கோட் அல்லது சுரேந்திர நகரிலிருந்து வாங்கி, அவற்றில் படான் முத்திரை போட்டுக் கொள்வார்கள்,” என்கிறார் 58 வயது விக்ரம் பர்மார். அதே கிராமத்தை சேர்ந்த நெசவாளரான அவர், தன் அனுபவத்திலிருந்து பேசுகிறார்.

“நம்மிடமிருந்து ஐம்பது, அறுபது, எழுபது ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவதை, அவர்கள் அதிக விலைக்கு விற்பார்கள். அவர்களும் நெய்வார்கள். ஆனால் இதை மலிவாக அவர்கள் பார்க்கிறார்கள்,” என்கிறார் விக்ரம். ஜலவாடின் படோலா மீது படான் முத்திரை குத்தப்பட்டு பெரிய நகரங்களில் லட்சக்கணக்கான ரூபாயில் விற்கப்படுவதாக அந்த கிராமத்தின் பல நெசவாளர்கள் கூறுகின்றனர். பல நாட்களாக இப்படி நடந்து வருகிறது.

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

ரேகா பென் அண்ணி ஜமானா பெண் மற்றும் அண்ணன் ஜெய்சுக் வகேலா ஆகியோருடன் மஞ்சள் நூலை ஹைட்ரோகுளோரைடு மற்றும் சாயம் கொண்டு அலசுகிறார்கள். நெசவுக்கு முன் நூல் தயாரிக்கும் பல கட்டங்களில் முதன்மையான கட்டம் இது

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

புதிதாய் நிறமூட்டப்பட்ட நூல்களில் கஞ்சி பூச தெருவில் இரு கழிகளுக்கு இடையே விரிக்கிறார். அக்கம்பக்கத்தாரும் அவருக்கு உதவி தேவைப்படும்போது வந்து உதவுகின்றனர்

40 வருடங்களுக்கு முன், ரேகா பென்னுக்கும் முந்தைய தலைமுறையை சேர்ந்த 70 வயது ஹமீர் பாய், லிம்ப்டி தாலுகாவுக்கு படோலா நெசவை கொண்டு வந்தார்.

“பாயவதாரிலிருந்து ராஜ்கோட்டுக்கு என்னை அர்ஜன் பாய் கூட்டி சென்றார்,” என நினைவுகூருகிறார் ஹமீர் பாய் கடாரியா கிராமத்தை நோக்கிய தன் பயணத்தை. “ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஆலைகள் மாறிக் கொண்டிருந்தேன். ஒருமுறை உரிமையாளர் ‘என்ன சாதி’ என என்னிடம் கேட்டார். ‘வங்கார்’ என பதில் சொன்னேன். அவ்வளவுதான். ‘நாளையிலிருந்து நீ வராதே. உன்னிடம் தண்ணீர் கூட நான் வாங்கிக் குடிக்க விரும்பவில்லை,’ என்றார். அதற்குப் பிறகு மோகன் பாய் மக்வானா ஒருமுறை படோலா செய்ய கற்றுக் கொள்கிறாயா எனக் கேட்டார். ஐந்து ரூபாய் தினக்கூலியில் வேலை செய்யத் தொடங்கினேன். ஆறு மாதங்கள் வடிவமைக்கவும் அடுத்த ஆறு மாதங்களுக்கு நெய்யவும் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர். அதற்கு பிறகு கடாரியாவுக்கு திரும்பி நெசவை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கையளித்தார்.

“கடந்த ஐம்பது வருடங்களாக நெய்து வருகிறேன்,” என்கிறார் இன்னொரு நெசவாளரான புஞ்ச பாய் வகேலா. “நெசவை தொடங்கும்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. கதரில்தான் முதலில் நெய்தேன். பிறகுதான் படோலா . அப்போதிருந்து, நான் இந்த வேலை செய்து வருகிறேன். எல்லாமே ஒற்றை இகாட்தான். ஏழு, எட்டு ஆயிரம் விலை கொண்டவை. கணவனும் மனைவியுமாக,” மனைவி ஜாசு பென்னை சுட்டிக் காட்டி, “சுரேந்திர நகர் பிரவீன் பாய்க்கு வேலை செய்தோம். இப்போது கடந்த ஆறேழு மாதங்களாக ரேகா பென்னுக்கு வேலை செய்கிறோம்,” என்கிறார்.

“தறியருகே அவரின் பக்கம் (நூல் அமைவுக்கு உதவிக்கொண்டே) நாம் அமர்ந்தால், நாளொன்றுக்கு 200 ரூபாய் கிடைக்கும். வடிவம் சார்ந்த சிறு வேலைகள் செய்தால், 60,70 ரூபாய் கிடைக்கும். என் மகள் உர்மிளா, நூல் சாயமடிக்க ரேகா பென்னின் வீட்டுக்கு செல்வாள். தினக்கூலியாக 200 ரூபாய் அவளுக்குக் கிடைக்கும். எல்லாம் சேர்ந்து எங்களால் பிழைப்பை ஓட்ட முடிகிறது,” என்கிறார் ஜாசு பென்.

“இந்த தறியெல்லாம் ரேகா பென்னுக்கு சொந்தமானது,’ என்கிறார் தேக்கு சட்டகத்தை தட்டியபடி புஞ்சா பாய். தறியின் விலை மட்டுமே 35-40,000 ரூபாய். “எங்களிடம் உழைப்பு மட்டும்தான் இருக்கிறது. எல்லாமும் சேர்த்து, மாதத்துக்கு ஒரு பன்னிரெண்டாயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறோம்,” என்கிறார் புஞ்சா பாய், தன்னுடைய வறுமையை வெளிக்காட்டாமல்.

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

ஜாசு பென் வகேலாவும் அவரின் கணவர் புஞ்சா பாய் வகேலாவும் ரேகா பென்னுக்கு வேலை பார்க்கின்றனர். தறி கட்டவும், அருகே அமர்ந்து வடிவம் ஒழுங்கமைக்கவும் உதவி, நெசவும் செய்து வருமானம் ஈட்டுகின்றனர். வடிவம் சார்ந்த சிறு வேலைகளும் செய்கின்றனர்

PHOTO • Umesh Solanki
PHOTO • Umesh Solanki

ஹமீர் பாய் கர்ஷான் பாய் கோஹில் (70) மற்றும் அவரது மனைவி ஹன்சா பென் கோஹில் (65) ஆகியோர்தான் லிம்படி தாலுகாவுக்கு படோலா நெசவை அறிமுகப்படுத்தியவர்கள். இன்று இங்கிருந்து படோலா (வலது) படான் முத்திரையுடன் உலகம் முழுக்க சென்று லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்படுகிறது

தொழில் வளர்ந்ததும் கொஞ்ச நெசவு வேலைகளை புஞ்சா பாய்க்கு ரேகா பென் கொடுத்தார். “அதிகாலை ஐந்து மணிக்கு எழுவேன்,” என்கிறார் அவர். “இரசு 11 மணிக்கு தூங்கச் செல்வேன். எல்லா நேரமும் நான் வேலை பார்க்கிறேன். வீட்டு வேலைகளும் நான்தான் பார்க்க வேண்டும். வெளியில் அக்கம்பக்கத்தாருடன் பழக வேண்டிய வேலையையும் நான்தான் செய்ய வேண்டும். மொத்த தொழிலையுமே நான்தான் தனி ஆளாகப் பார்க்க வேண்டும்.” தறிக்கட்டையை குறுக்கு நூலோடு சேர்த்து சட்டகத்துக்குள் இழுத்து, சட்டகத்தை வலதிலிருந்து இடதுக்கு இழுக்கிறார் ரேகா பென்.

வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்துக்கும் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கத்துக்கு நகரும் சட்டகம் மற்றும் செங்குத்து இழையையும் குறுக்கு இழையையும் ஒழுங்கமைக்கும் ரேகா பென்னின் கை ஆகியவற்றினூடாக கச்சிதமான படோலா வடிவம் எழுந்து வருவதை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் கபீர் பாடிக் கொண்டிருந்தார்:

‘नाचे ताना नाचे बाना नाचे कूँच पुराना
करघै बैठा कबीर नाचे चूहा काट्या ताना'

குறுக்கு செங்குத்து இழைகளாட
உடன் சேர்ந்து ஆடுகிறது பழைய கூஞ்ச்*
தறியில் கபீர் ஆட
எலி நூலை அறுக்கிறது

*நூலை சுத்தப்படுத்த உதவும் மென்மையான பஞ்சு

கட்டுரையாளர், ஜெய்சுக் வகேலாவின் உதவிக்கு நன்றி தெரிவிக்கிறார்.

தமிழில் : ராஜசங்கீதன்

Umesh Solanki

Umesh Solanki is an Ahmedabad-based photographer, reporter, documentary filmmaker, novelist and poet. He has three published collections of poetry, one novel-in-verse, a novel and a collection of creative non-fiction to his credit.

Other stories by Umesh Solanki
Editor : Pratishtha Pandya

Pratishtha Pandya is a Senior Editor at PARI where she leads PARI's creative writing section. She is also a member of the PARIBhasha team and translates and edits stories in Gujarati. Pratishtha is a published poet working in Gujarati and English.

Other stories by Pratishtha Pandya
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan