"காற்றாலைகளை, சூரிய ஆற்றல் பண்ணைகளும் எங்களின் ஒரான்களை அழித்துக் கொண்டிருக்கின்றன," என்கிறார் சன்வதா கிராமத்தில் வசிக்கும் சுமேரியா சிங் பாட்டி. விவசாயியும் மேய்ப்பருமான அவரது வீடு ஜெய்சால்மர் மாவட்டத்தின் தெக்ராய் புனிதத் தோப்புக்கு அருகே இருக்கிறது.
புனிதத் தோப்புகள் ஒரான்கள் என அழைக்கப்படுகின்றன. எல்லா மக்களும் பயன்படுத்தக் கூடிய பொதுச்சொத்து அது. ஒவ்வொரு ஓரானிலும் அருகே உள்ள கிராமவாசிகள் வழிபடும் ஒரு தெய்வம் இருக்கும். சுற்றி இருக்கும் நிலம், வசிப்பவர்களால் பாதிக்கப்படாமல் வைத்திருக்கப்படும். மரங்கள் வெட்டப்படக் கூடாது. தானாக உதிர்ந்த சுள்ளிகளைத்தான் விறகுகளாக பயன்படுத்த எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த கட்டுமானமும் வரக் கூடாது. நீர்நிலைகள் யாவும் புனிதமானவை.
ஆனால் சுமேர் சிங் சொல்கையில், "அவர்கள் (புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனங்கள்) நூற்றாண்டு கால மரங்களை வெட்டி விடடார்கள். புதர்களையும் புற்களையும் பிடுங்கி விட்டார்கள். யாராலும் அவர்களை தடுக்க முடியவில்லை," என்கிறார்.
சுமேர் சிங்கின் கோபம் ஜெய்சால்மரின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசிப்பவர்களிடமும் வெளிப்படுகிறது. அவர்களின் ஒரான்களையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (RE) நிறுவனங்கள் எடுத்துக் கொண்டன. கடந்த 15 வருடங்களில், இம்மாவட்டத்தத்தின் ஆயிரக்கணக்கான நிலம், மாவட்டத்திலிருந்து மின்சாரத்தை வெளியே கொண்டு செல்லும் உயர் மின்சார தடங்களைக் கொண்ட காற்றாலைகளுக்கும் வேலி அடைக்கப்பட்ட சூரியப் பண்ணைகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமும் இயற்கை சூழலை பாதித்திருக்கிறது. காட்டை சார்ந்து வாழ்வோரின் வாழ்க்கைகளை அழித்துக் கொண்டிருக்கிறது.
"மேய்ச்சலுக்கு இடமே இல்லை. புல் ஏற்கனவே (மார்ச்சில்) போய்விட்டது. எங்கள் விலங்குகளுக்கு இப்போது வன்னி மற்றும் கடம்பு மர இலைகளைத்தான் சாப்பிட வேண்டி இருக்கிறது. போதுமான உணவு அவற்றுக்கு கிடைப்பதில்லை. எனவே அவை பாலும் குறைவாகத்தான் கொடுக்கின்றன. 5 லிட்டரிலிருந்து 2 லிட்டராக ஒரு நாளுக்கு குறைந்துவிட்டது," என்கிறார் மேய்ப்பரான ஜோரா ராம்.
பாதி வறண்ட புல்வெளி ஒரான்கள் சமூகத்தின் நலனுக்கு பயன்படுபவை. அவை தீவனம் கொடுக்கும். மேய்சசலுக்கு பயன்படும். நீர், உணவு, விறகுகள் போன்றவற்றை சுற்றி வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவை தரும்.





























