ஹர்மன்தீப் சிங், பல வண்ணமயமான காற்றாடிகளை தன் மீது சுற்றிக் கொண்டு நிற்கிறார். அவருக்கு சற்று முன்னால், பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே உள்ள ஷம்பு எல்லையில், விவசாயிகள் டெல்லிக்கு முன்னேறிச் செல்வதைத் தடுக்க, காவல்துறையினர் பெரிய தடுப்புகளை நிறுவியுள்ளனர்.
அமிர்தசரஸிலிருந்து வரும் 17 வயதான இவர், போராடும் விவசாயிகளின் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், தான் வைத்திருக்கும் காற்றாடிகள் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசும் ட்ரோன்களை வீழ்த்துகிறார். “கண்ணீர் புகைக் குண்டுகளின் தாக்கத்தை சமாளிக்க, கண்களைச் சுற்றி பற்பசையை தேய்த்துக் கொள்கிறேன். நாங்கள் முன்னேறி சென்று, இந்த போராட்டத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்”, என்று கூறுகிறார்.
பஞ்சாபிலிருந்து பிப்ரவரி 13, 2024 அன்று, டெல்லிக்கு அமைதிப் பேரணியைத் தொடங்கிய ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களில் ஹர்மன்தீபும் ஒருவர். துணை ராணுவம், விரைவு அதிரடிப் படை (RAF) வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை ஷம்பு எல்லையில் இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விவசாயிகள் டெல்லியில் உள்ள தங்களது போராட்டக் களத்திற்கு செல்ல முடியாதபடி, சாலையில் இரும்பு ஆணிகள் மற்றும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
முதல் தடுப்பில், திரண்டிருக்கும் கூட்டத்தில் குர்ஜந்த் சிங் கல்சா, தங்களது ஐந்து முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றுகிறார். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உத்தரவாதம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன்கள் முழுமையாக தள்ளுபடி, லக்கிம்பூர் கேரி படுகொலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் மற்றும் 2020-2021 போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகியவைதாம் அந்தக் கோரிக்கைகள்.
























