“வருடத்துக்கு ஒரு முறையேனும் இப்படியொரு நாளை எப்படியேனும் நான் உருவாக்கிக் கொள்வேன்.”
ஸ்வப்னலி தத்தத்ரேயா ஜாதவ் டிசம்பர் 31, 2022 அன்று நடந்த நிகழ்வுகளை சுட்டிக் காட்டி பேசுகிறார். வெட் என்கிற மராத்தி படம் சமீபத்தில்தான் வெளியாகி இருக்கிறது. சில தெரிந்த முகங்களை கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் அந்த காதல் படத்துக்கு தேசிய கவனம் கிடைக்கவில்லை. ஆனால் ஸ்வப்னலி போன்ற வீட்டுப் பணியாளருக்கு, வருடத்தில் ஒருமுறையோ இருமுறையோ மட்டும் கிடைக்கும் விடுப்பு நாளில், அத்தகைய படம் பார்ப்பதுதான் விருப்பமாக இருக்கிறது..
“இது புத்தாண்டு. அதனால்தான். உணவு கூட வெளியே கோரேகாவோனில் ஓரிடத்தில் சாப்பிட்டோம்,” என்கிறார் அவர் செலவழித்த நேரத்தை சந்தோஷத்துடன் நினைவுகூர்ந்து. அவருக்கு 23 வயது.
வருடத்தின் மிச்ச நாட்கள் ஸ்வப்னலிக்கு கடுமையான வாழ்க்கை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல், பிற வீட்டு வேலைகள் செய்வதென மும்பையின் ஆறு வீடுகளில் நீண்ட நேரங்கள் பணிபுரிகிறார். ஆனால் வீடுகளுக்கு இடையே பயணிக்கும் 10-15 நிமிட ஆசுவாச நேரத்தில், அவர் செல்பேசியில் மராத்தி பாடல்களை கேட்கிறார். “இவற்றை கேட்டு கொஞ்சம் என்னால் பொழுது போக்கிக் கொள்ள முடிகிறது,” என்கிறார் அவர் அந்த தருணங்கள் கொடுக்கும் புன்னகை கொண்டு.























