பந்தரிநாத்தும், கௌசல்யா ஷேல்கேவும் அவர்களது மகன் ரஞ்சித்திற்கு மூன்று ஆண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு பெண் தேடி,ஒருவழியாக வரும் பிப்ரவரி மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து 52 வயதுடைய பந்தரிநாத் கூறுகையில் “நிராகரிக்கப்படுகின்ற அவமானத்தை வார்த்தைகளால் வருணிக்க முடியாது, எங்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே, விவசாயத்தைத் தாண்டி (மணமகனுக்கு) வருமானத்திற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?” என்பதாகத் தான் இருந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒஸ்மானாபாத் மாவட்டத்திலுள்ள கமஸ்வாதி கிராமத்தில், 26 வயதுடைய ரஞ்சித், அவரது குடும்பத்திற்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் சோயா பீன், பருப்பு மற்றும் கம்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகிறார். பந்தரிநாத், அந்தக் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் மாதம் 10,000 ரூபாய் சம்பளத்தில் எழுத்தராக பணிபுரிகிறார். இதேவேளையில், ரஞ்சித்தும் வேறு வேலைகளுக்கு முயற்சி செய்துள்ளார், ஆனால் அது தோல்வியில் முடியவே- விவசாயம் அவரது வருமானத்திற்கான ஒரே ஆதாரமாக மாறியுள்ளது.
விவசாயத் தொழிலாளரான கௌசல்யா கூறுகையில்,“ஒருவரும் அவர்களது மகள் ஒரு விவசாயியைத் திருமணம் செய்துகொள்வதை விரும்பவில்லை. குறிப்பாக, விவசாயிகள் அவ்வாறு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர். அவர்கள் தனியார் கடன்கொடுப்பவர்களிடம் இருந்து மிக அதிக வட்டிக்கு கடன் பெற்று, அளவுக்கதிகமாக வரதட்சணைக் கொடுத்து வேலையில் உள்ள யாரோ ஒருவருக்கு கட்டிக்கொடுக்கிறார்கள். ஆனால், விவசாயக் குடும்பத்தில் கட்டிக் கொடுக்க மாட்டார்கள்.” என்றார்.
ஒரு காலகட்டத்தில் மரத்வாடா பகுதியில் விவசாயிகளையே மாப்பிள்ளைகளாகத் தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால்,அதன் பிறகு விவசாயத்தில் ஏற்பட்ட நிச்சயமற்றத்தன்மையின் காரணமாக இந்த நிலைமை மாறிவிட்டது. அதிகரித்து வரும் இடுபொருட்கள் செலவு, நிலையற்ற சந்தை விலை, மாறிவரும் வானிலை மற்றும் கிராமப்புற கடன் அமைப்புகள் சிதைவு, இன்னபிற காரணிகளின் காரணமாக மரத்வாடாவைச் சேர்ந்த விவசாயிகள் பலர் மிகுந்த கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.







