யானைகளின் காலடித் தடங்களைத் தேடி, குன்றுகளையும் வயல்களையும் சுற்றி நடந்து கொண்டிருக்கிறோம்.
மென்மையான மண்ணில் ஆழமாகப் பதிந்த யானைகளின் பெரும் காலடித் தடங்கள் எங்கும் தென்படுகின்றன. பழைய காலடித்தடங்களின் சுவடுகள் மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கின்றன. சாவகாசமாக நடந்து, வயிறு நிறைய உணவை உண்டுவிட்டு, லத்திகளைப் போட்டு விட்டுச் சென்ற யானைகளின் புதிய தடங்களும் தென்படுகின்றன. இந்தப் பயணத்தின் மிச்சமாக யானைகள் உடைத்துத் தூக்கி வீசிய கல் தூண்கள், மின் வேலிகள், மரங்கள், பண்ணை வாயில்கள் எனச் சிதைவுகள் எங்கும் தென்படுகின்றன.
யானைகள் தொடர்பான எல்லாவற்றையும் படம் பிடிக்கிறோம். யானைகளின் கால் தடப் புகைப்படமொன்றை என் ஆசிரியருக்கு அனுப்புகிறேன். `அருகில் யானை இருந்ததா?`, என நம்பிக்கையோடு விசாரித்து மறுமொழி அனுப்புகிறார். அவரது நம்பிக்கை நாசமாகப் போகட்டும் எனப் பிரார்த்திக் கொள்கிறேன்.
ஏனெனில், நாங்கள் தேடிப் போன யானைகள், உங்கள் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து வாழைப்பழம் பெற்றுக் கொள்ளும் கோவில் யானைகளல்ல. பசி வெறியுடன் திரிந்து கொண்டிருக்கும் காட்டு யானைகள். சிக்கினால் சிதைந்து விடுவீர்கள் எனக் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கங்கனஹள்ளி கிராம மக்கள் எச்சரித்து இருந்தார்கள்
2021 ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி உற்பத்தியாளர்களைச் சந்திக்க நான் மேற்கொண்ட பயணம், எதிர்பாராத விதமாக, என்னைக் காட்டு யானைகளின் வழியில் கொண்டு போய் நிறுத்தியது. ராகி உற்பத்தியின் பொருளாதாரத்தைப் பற்றிய உரையாடல்கள் இருக்கும் என எண்ணியே அங்கு சென்றேன்.. கொஞ்சம் இருந்தது. ஆனால் அதைத் தாண்டி, அனைத்து ராகி உற்பத்தியாளர்களும், பெரும்பாலும் யானைகளின் தொந்தரவைப் பற்றியே பேசினார்கள். அடிப்படை உணவுத் தேவையைத் தாண்டி ராகியை உற்பத்தி செய்யாமல் இருப்பதற்கு யானைகளே காரணம் எனச் சொன்னார்கள். சூழல் மாற்றம், பருவம் தவறிப் பெய்த மழை, குறைந்த சந்தை விலை என – சந்திக்கக் கூடாத எல்லா பிரச்சினைகளையும் சந்தித்த சோகத்தில் அவர்கள் இருந்தார்கள். அனைத்துக்கும் மேலான பெரும் பிரச்சினையாக அவர்கள் பயிர்களைச் சூறையாடும் காட்டு யானைகள் அவர்களின் நம்பிக்கையைச் சிதைத்து விட்டிருப்பதை உணர முடிந்தது.
`காட்டு யானைகள் புத்திசாலிகள். மின்வேலிகளை மின்சாரம் தாக்காமல் வளைத்துத் தாண்டிவிடும் யுத்தியைக் கற்றுக் கொண்டுவிட்டன. மரங்களை உபயோகித்து மின்வேலிகளை ஷார்ட் சர்க்யூட் செய்யும் தந்திரம் அறிந்தவை. அவை எப்போதுமே ஒரு கூட்டமாகத் தான் வரும்`, என்கிறார் ஆனந்தராமு ரெட்டி. ஆனந்தா என அழைக்கப்படும் அவர் தேன்கனிக்கோட்டை தாலூக்காவில் உள்ள வத்ரா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த உழவர். அவர் எங்களை மேலகிரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லை வரை அழைத்துச் சென்றார். மேலகிரி, காவிரி வடக்கு வனவிலங்குச் சரணாலயத்தின் ஒரு பகுதியாகும்.


















