மே 5ம் தேதி காலை கோவிட் நோய்க்கான முதல் தடுப்பூசி போட கிளம்பினார் மகேந்திர ஃபுடானே. 12 நாட்களுக்கு பிறகு அவர் திரும்பினார். “உற்சாகமான நாளாக இருந்திருக்க வேண்டும்,” என்கிறார் அவர். “ஆனால் ஒரு கொடும் கனவாக அது மாறிவிட்டது.”
தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக காவல்துறை அவரை சிறையில் அடைத்துவிட்டது.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் இருக்கும் நெக்னூர் கிராமத்தை சேர்ந்த 43 வயது மகேந்திரா தொடர் முயற்சிகளால் ஒருவழியாக தடுப்பூசிக்கான நேரத்தை பதிவு செய்துவிட்டார். “மே 5ம் தேதி காலை 9லிருந்து 11 மணி வரையிலான தடுப்பூசிக்கான என் நேரத்தை உறுதிபடுத்தி குறுந்தகவலும் வந்தது,” என்கிறார் அவர். அவருக்கும் 45 வயதுக்கும் குறைந்த குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் பதிவு செய்திருந்தார். “முதல் தடுப்பூசி பெற நாங்கள் விரும்பினோம். கோவிட்டின் இரண்டாம் அலை கொடூரமாக இருந்தது,” என்கிறார் மகேந்திரா.
நெக்னூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பீட் நகரத்தை குடும்பம் அடைந்ததும் அவர்களின் நம்பிக்கை நொறுக்கப்பட்டது. 18-44 வயதினருக்கான தடுப்பூசி போடுதல் தடுப்பூசி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்தது. “காவலர்கள் இருந்தனர்,” என்கிறார் மகேந்திரா. “எங்களுக்கு வந்த குறுந்தகவலை அவர்களிடம் காட்டினோம். ஆனால் அவர்கள் கடுமையாக எதிர்கொண்டனர்.”
வரிசையில் காத்திருந்தவர்களுக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது லத்தி அடியில் முடிந்து, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மகேந்திரா, அவரது மகன் பார்த், சகோதரர் நிதின் மற்றும் உறவினர் விவேக் ஆகியோர் அந்த ஆறு பேரில் அடக்கம்.
மையத்தில் இருந்த கான்ஸ்டபிள் அனுராதா கவ்ஹானேவால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அந்த ஆறு பேரும் வரிசையை இடையூறு செய்ததாகவும் காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் கொச்சையாக கான்ஸ்டபிள்களை பேசி அடித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டத்துக்கு விரோதமாக கூடுதல், கலவரம் செய்தல், அரசு ஊழியருக்கு துன்பம் கொடுத்தல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.





