ஒவ்வொரு கிராமத்திலுமே மருந்தை தெளித்தபின் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். “நோயாளிகளின் ரத்தப் பரிசோதனை முடிவுகள் நச்சுக்கிருமிகள் அவர்களுக்கு நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாக காண்பித்தது“ என்று டாக்டர் பராக் மனாப்பே கூறினார். அவர் இளநிலை மருத்துவர். நிகில் மற்றும் மற்றவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார். பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொள்ளும்போது ஏற்பட்டதைப் போன்ற பாதிப்புதான் இருக்கும். ஆனால், இதற்கு சிகிச்சையளிப்பது கடினம். அதில் நஞ்சை அகற்றுவதற்கு வயிற்றை கழுவும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பூச்சிக்கொல்லி மருந்துகளை சுவாசிக்கும்போது அது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.
விவசாயிகளை சோதித்ததில் இரண்டு விதமான நோய்த்தாக்கங்களை இரண்டு விதமான மருந்துகள் ஏற்படுத்தியதாக தெரிகிறது. மருந்து பவுடராக இருந்த ஒரு பூச்சிக்கொல்லி, பயன்படுத்தியவர்களுக்கு பார்வை கோளாறுகளை ஏற்படுத்தியது. தண்ணீராக இருந்த பூச்சிக்கொல்லி, பயன்படுத்தியவர்களுக்கு நரம்பியல் கோளாறுகளை ஏற்படுத்தியிருந்தது.
இவற்றில் ப்ரபெனோபாஸ் (ஆர்கனோபாஸ்பேட் ), சைபர்மெத்ரீன் (செயற்கை பைரீதராய்டு) மற்றும் டையாபென்தியூரான் ஆகியவை இருந்தன. பல்வேறு பயிர்களிலும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்த அவை அறிவுறுத்தப்பட்டிருந்தன. அவற்றைக் கலந்தால் ஒருவரை கொல்லக்கூடிய அளவிற்கான விஷமாகும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
* * * * *
தெம்பி கிராமத்தில் உள்ள சோயமின் வீட்டில், பிரவீனின் உடல்நிலை சிறிது சிறிதாக நலிவடைந்து வந்தது. முதலில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. பின்னர் வாந்தி மற்றும் குமட்டல் தொடர்ந்து மயக்கம் ஏற்பட்டது. 24 மணி நேரத்திற்குள்ளாகவே அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு, மூன்று மணி நேரத்தில் பந்தர்கோடாவில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையை அடைவதற்குள் இறந்துவிட்டார். எல்லாமும் இரண்டு நாட்களில் நடந்து முடிந்துவிட்டது.
மருந்துகளை தெளிக்கும்போது பிரவீன் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் விஷத்தை கடுமையாக சுவாசித்தால் இறந்துவிட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட யாருமே மருந்து தெளிக்கும்போது கையுறை, முகக்கவசம், உடலை பாதுகாக்கும் உடை ஆகிய எதையுமே அணியவில்லை.
“நாம்தேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அனைத்து மருந்தையும் தெளித்து முடித்துவிட வேண்டும் என்று நான் அவரிடம் கூறியிருந்தேன்“ என்று பாவ்ராவ் கூறினார். அவர் பகுதி மற்றும் கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகளைப்போலவே, சோயமும் இந்த ஆண்டு நிறையப் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்ததை ஜுலை மாதத்தில் இருந்து பார்த்திருந்தார். அதுவே அவரையும் பலமுறை அவற்றை பயன்படுத்த தூண்டியது.
அவற்றை தெளித்த பின் பிரவீன் தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரித்தார். ஆனால் மருத்துவரிடம் செல்ல மறுத்துவிட்டார். “அது சூட்டால் ஏற்பட்டது என்று நாங்கள் நினைத்தோம். இங்கு கடும் வெயில் இருந்ததுடன், கிராமத்தில் பெரும்பாலானோருக்கு காய்ச்சலும் இருந்தது“ என்று பாவ்ராவ் நினைவு கூறுகிறார். பிரவீனின் உடல்நிலை மோசமடைந்த அடுத்த நாள் மாலை நாம்தேவும், அவரது தாய் பேபிபாயும் அவரை அடுத்த கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்தவர்தான் இவருக்கு அவசரசிகிச்சை தேவைப்படுகிறது என்று எச்சரித்து, 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்தர்கோட் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தார்.
அவர்கள் அந்த மருத்துவமனையை இரவு 7 மணிக்கு அடைந்தனர் என்று பேபிபாய் கூறினார். ஆனால், அவர் இரவு 10 மணிக்கே இறந்துவிட்டார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை அவரது மரணம் ஆர்கானோபாஸ்பேட் விஷத்தால் ஏற்பட்டது என்று தெரிவித்தது.
தமிழில்: பிரியதர்சினி. R.