கணேஷ் வதந்த்ரேவின் வயலில், வாடி இருக்கும் பருத்திச் செடியில் உள்ள பசுமையான பருத்திக் காய்களில் தென்படும் கருப்பு நிற வடுக்கள், ‘வெள்ளைத் தங்கமான’ பருத்தி குறித்து அறிவியலாளர்கள், மேலும் ஆய்வில் ஈடுபடவேண்டுமென்ற செய்தியை உணர்த்துகிறது: போய் புதிய எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடியுங்கள்.
இந்நிலையில், “அவைகள் தான் பூச்சித்தாக்குதல் துவங்கியதின் அறிகுறிகள்” என்று கூறினார் வதந்த்ரே. மேலும், இந்த அறிகுறி தென்பட்டதற்கு பின்னரே, புழுக்கள் பருத்திக் காய்களை துளையிடுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். வதந்த்ரே, வார்தா மாவட்டம் அம்கான் கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்து ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார்.
மேலும், “ஒருவேளை அதனை உடைத்து திறந்தால், இளஞ்சிவப்பு நிறமுடைய புழு காய்களை விழுங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்,” என பதட்டத்தோடும், கோபத்தோடும் கூறினார். அந்த காய்களை உடைத்து திறந்த போது, ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான நீளமுடைய இளஞ்சிவப்பு காய்ப்புழு, உறக்கத்தில் இருந்து சுருண்டபடி எழுந்தது. அப்போது அது எங்களுக்கு வணக்கம் சொல்வது போல் இருந்தது. இது பசுமையான பருத்திக்காய்கள் வெள்ளை நிற பருத்திப்பஞ்சு உருவாவதற்கு முன்னதாக அதனை உட்செரித்து, பயனற்றதாக ஆக்கி விடுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில், பருத்திக் காயொன்றில் முதல் முறையாக “ஒரு புழுவை” பார்த்ததாக 42 வயதுடைய வதந்த்ரே கூறினார். “அடுத்த ஒரு சில நாட்களிலேயே, அது ஆயிரக்கணக்கான முட்டைகளையிட்டு, லட்சக்கணக்கான புழுக்களாக பெருகியது,” என்றும் தெரிவித்தார்.
பருத்தி வெடிப்பதற்கு முன்புவரை, பருத்திக் காய்களுக்குள் இருக்கும் புழுக்களால், காய்களுக்குள் மறைமுகமாக ஏற்படும் சேதம் குறித்து விவசாயிகளுக்கு எதுவுமே தெரியாது. இது அறுவடையின் போது விவசாயிகளுக்கு திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், புழுவால் பாதிப்படைந்த பருத்திக்காய்கள் சந்தையில் மிகவும் குறைந்த விலைக்கே விற்பனையாகிறது.
வதந்த்ரேயின் குரல் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகளின் குரல். குறிப்பாக, கடந்த 2017-18 ஆம் ஆண்டு குளிர்காலத்தின் போது, அறுவடை உச்சத்தில் இருந்த மேற்கு விதர்பாவைச் சார்ந்த பருத்தி விவசாயிகளின் குரல். இந்தப் பகுதியில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்டக் காலத்தில் பருத்தி விதைக்கப்பட்டு, அக்டோபர் முதல் மார்ச் மாதத்திற்கு இடைப்பட்டக் காலத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இளஞ்சிவப்பு புழுக்களின் படைகளால், பல ஹெக்டேர் பருத்தி விவசாய நிலங்களைப் பாழாகியுள்ளன. அது கடந்த 30 வருடத்தில் பார்க்காத அளவிற்கு சேதத்தை விளைவித்துள்ளது. வதந்த்ரேயின் வயலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்படும் இளஞ்சிவப்பு புழுவின் பாதிப்பு, கருகிய காய்கள், வாடிய செடிகள் மற்றும் வடுக்கள் என தாக்கத்தை ஏற்படுத்தி, பஞ்சை கருக்கிக் கருப்பு நிறம் கொண்டதாக, குறைந்த அளவே வருமானம் தரக்கூடியதாக மாற்றுகிறது.
தங்களது பருத்தி பயிரை பாதுகாப்பதற்காக மகராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை, அதிக அளவிலான அபாயகரமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டிய சூழல் எழுந்தது. எனினும், இது இளஞ்சிவப்பு புழுக்களைக் கட்டுப்படுத்த உதவாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். (வாசிக்க அபாயகரமான பூச்சிகளும், உயிருக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளும்).
இதுகுறித்து கூறிய வதந்த்ரே, ”இதுதான் பூச்சிகளைக் அழிக்கக் கூடியதா. அப்படியென்றால், பி.டி-பருத்திப் பயிரின் பயன்தான் என்ன? எந்த பூச்சிக்கொல்லியும் பலனளிக்கவில்லை” என்றார்.










