பிர்சிங் பகுதி 1 தீவு திட்டு கிராமத்தில் இனிய காலை நேரம் வசந்த கால வருகையை கூறுகிறது. ஆனால் 30 வயதாகும் ஷாஹித் காதுனால் இதை அனுபவிக்க முடியவில்லை. அவருக்கு காய்ச்சல். மருத்துவரை பார்க்க தீவு திட்டில் உள்ள ரிவரின் ஆரம்ப சுகாதார மையத்திற்கு (PHC) வெளியே காத்திருக்கிறார்.
அசாமில் உள்ள 2251 வசிப்பிடங்களில் பிர்சிங்கும் ஒன்று, இது பிரம்மபுத்திரா நதி கரையோரமுள்ள தீவு திட்டுகளில் அமைந்துள்ளன. மற்ற தீவு திட்டுகளைப் போன்று வண்டல் மண் படிவங்களால் இது உருவாகவில்லை. அது ஃபகிர்கஞ்ச் நகரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கால போக்க்கில் ஆற்றின் நீரோட்டத்தில் இந்த பகுதி பிரிக்கப்பட்டது. இதன் விளைவாக மற்ற தீவு திட்டுகள் போல் அடித்துச் செல்லப்பட்டு அழியாமல் பல ஆண்டுகளாக அப்படியே உள்ளது.
பிர்சிங் தீவு திட்டில் மூன்று கிராமங்கள் உள்ளன- பிர்சிங் பகுதி 1 (மக்கள்தொகை 5548), பிர்சிங் பகுதி 2 (மக்கள் தொகை 2386), பிர்சிங் பகுதி 3 (மக்கள் தொகை 3117) 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி.
PHCல் காத்திருக்கும் நேரம் ஷாஹிதாவும், பிற நோயாளிகளும் அரட்டை அடிக்கின்றனர். 18 அறை கொண்ட சுகாதார மையத்தின் தகர கூரையில் 2017 ஜனவரி மாதம் பொருத்தப்பட்ட சோலார் தகடுகள் குறித்து அப்போது பேசப்பட்டது. அசாம் எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் பொருத்தப்பட்ட 20 தகடுகள், 16 பேட்டரிகள் மூலம் 5 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
பல தசாப்தங்களாக இருளில் மூழ்கியிருந்த சுகாதார மையங்களின் தரத்தை சூரிய சக்தி உயர்த்தியுள்ளது. “இப்போது PHCல் மின்சாரமும், குழாய் தண்ணீர் வசதியும் உள்ளது," எனும் ஷாஹிதா, சோலார் தகடுகளை சுட்டிக் காட்டுகிறார். “இப்போது இங்கு கர்ப்பிணிகளும் பரிசோதனைக்கு வருகின்றனர், பிரசவமும் நடைபெறுகிறது.“
பூலோக ரீதியாக தனித்துவிடப்பட்டுள்ள பிர்சிங் போன்ற பகுதியில் வசித்தாலும் ஷாஹிதா மருத்துவமனை பிரசவங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளார். அவர் சொல்கிறார், “ மருத்துவச்சி, அக்கம்பக்கத்தினர் உதவியோடு எனக்கு பிரசவங்கள் [வீட்டில் இரண்டு பிள்ளைகள்] நடைபெற்றது. இரண்டு முறையும் நான் மிகவும் பயந்தேன், வேறு வழியில்லை, எல்லாம் சரியாக நடக்கும் என அவர்கள் நம்பிக்கையூட்டினர்…“
PHCக்கு சூரிய சக்தி கிடைப்பதற்கு முன், கர்ப்பிணிகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் ஆற்றை கடந்து துப்ரி நகரில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். இரவிலும், படகு சேவையில்லாத பகல் பொழுதுகளிலும் படகு வாடகை மிக அதிகம்- ரூ.2000 முதல் ரூ.3000 வரை செலவாகும். இதுவும் மருத்துவ செலவுடன் சேரும்.
பிர்சிங் PHC மதிய நேரத்தில் மூடப்படும் போது அவசர மருத்துவ உதவிக்கு துப்ரிக்கு தான் மக்கள் செல்ல வேண்டும். சூரிய மின்சக்தியின் வருகைக்கு பிறகு சுகாதார மையத்திற்கு புத்துயிர் கிடைத்துள்ளது. “2017 ஜனவரி மாதம் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டன, பிப்ரவரியிலிருந்து மார்ச் மாதத்திற்குள் 18 பிரசவங்கள் பார்த்துவிட்டோம்,” என்கிறார் மருத்துவர் ஜவஹர்லால் சர்கார். 2014 ஃபகிர்கஞ்ச் துணை மண்டல மருத்துவ அதிகாரியாக (தொற்றுநோய்) பணியாற்றி ஓய்வுப் பெற்ற பிறகு அவர் இந்த PHCக்கு தலைமை வகிக்கிறார். “தீவு திட்டில் நம்மிடம் 10 ஆஷா பணியாளர்கள் [அங்கீகரிக்கப்பட்ட சமூக நல செயற்பாட்டாளர்கள்] உள்ளனர். கர்ப்பிணிகள் அனைவரையும் பிரசவத்திற்கு மருத்துவமனை கொண்டு வர வேண்டியது அவர்களின் பொறுப்பு.”
டாக்டர் சர்காரை அணுகிய பிறகு தனது வீட்டிற்கு மார்க்கெட் வழியாகச் சென்ற ஷாஹிதாவுடன் நானும் நடந்தேன். பகல் பொழுதில் மார்க்கெட் வெறிச்சோடியுள்ளது. சில டீக்கடைகளும், மருந்து கடைகளும் மட்டுமே திறந்துள்ளன. கடை உரிமையாளர்கள் பகலில் துப்ரியில் ரிக்ஷா இழுத்தல், வியாபாரம், மூங்கில் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டு திரும்புவதால் பெரும்பாலும் மாலையில் கடை திறக்கப்படுகின்றன. ஷாஹிதாவின் கணவர் ஷாஜமால் ஷேக் துப்ரி நகரில் ரிக்ஷா இழுக்கிறார். மார்க்கெட்டில் அவருக்கு சிறிய மளிகை கடையும் உள்ளது.
பிர்சிங்கில் ஷாஹிதா போன்று பலரும் தங்கள் வீடுகளில் சோலார் தகடுகளை பொருத்தியுள்ளனர். ரூ.3600க்கு அரசு வழங்கும் மானிய விலையிலான ஒரு சோலார் தகடு, பாட்டரியை சிலர் வாங்கியுள்ளனர். இவற்றைக் கொண்டு 1.5 வாட் திறன் கொண்ட இரண்டு CFL/LED பல்புகளுக்கு மின்சக்தி அளிக்கலாம். சில குடும்பங்கள் மார்க்கெட்டிலிருந்து ரூ.20,000க்கு சோலார் அமைப்பை வாங்கியுள்ளன. இதைக் கொண்டு ஒரே நேரத்தில் நான்கு பல்புகள், ஒரு தொலைக்காட்சி அல்லது மின்விசிறியை இயங்க வைக்க முடியும். "சில வழிகளில் [துப்ரியில்] கிடைக்கும் வருமானம் சோலார் தகடுகள் போன்ற தேவைகளுக்கு செலவிட உதவுகிறது," என்கிறார் மார்க்கெட்டில் சிறிய உணவகம் நடத்தி வரும் தாராசந்த் அலி.
பிர்சிங்கில் குறைந்தது 50 சதவிகித வீடுகளில் சோலார் சக்தி பயன்பாடு இருக்கக்கூடும் என்று மதிப்பிடுகிறார் ஊராட்சி உறுப்பினரான 62 வயது அஸ்மத் அலி. “பிள்ளைகளால் இப்போது இரவிலும் படிக்க முடிகிறது,” என்றார். “முன்பெல்லாம் மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே இருக்கும்.”
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிர்சிங்கில் உள்ள கஸ்தூரிபா காந்தி பலிகா வித்யாலயாவில் 4 கிலோவாட் சக்தி கொண்ட சோலார் அமைப்பை அசாம் எரிசக்தி மேம்பாட்டு முகமை (AEDA) நிறுவியது. இந்த AEDA, புதிய, புதுப்பிக்கதக்க எரிசக்தி அமைச்சகத்தின் மாநில நோடல் முகமை ஆகும். இந்த புதிய சோலார் தகடுகள் உடையாமல் அல்லது சேதப்படுத்தாமல் இருந்தால் 25 ஆண்டுகள் வரை நிலைக்கும் என்று AEDA அதிகாரி தெரிவித்தார். பேட்டரிகளுக்கு மட்டும் சில பராமரிப்பு தேவை. தேவைப்பட்டால் அதற்குரிய நபரை துப்ரி நகரிலிருந்து வரவழைக்கலாம்.
தீவு திட்டில் உள்ள ஒற்றை ஏடிஎம் சேவை மையத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்குகிறது. அதுவும் சோலார் சக்தியில் இயங்குகிறது. துப்ரியிலிருந்து தினமும் காலையில் கொஞ்சம் பணத்துடன் வரும் அவ்வங்கியின் வணிக மேம்பாட்டு அதிகாரி முகமது அஹமது அலி மதியம் திரும்புகிறார். "சோலார் சக்தியில் பண பரிவர்த்தனைகள் தினமும் சிறப்பாக நடைபெறுகிறது," என்றார்.
ஆனால் தீவு திட்டில் வசிக்கும் ஷாஹிதா, தாராசந்த் போன்றோருக்கு 2014ஆம் ஆண்டு PHC தொடங்கப்பட்டதே பெரிய கனவு நிஜமானது போன்று இருந்தது. காரணம், தீவு திட்டுகளில் அரசு ஊழியர்கள் பொதுவாக பணி செய்வார்களா என்று அவர்கள் சந்தேகப்பட்டனர். PHC மருத்துவரிடம் பிர்சிங் மக்களுக்கு உடல் தொந்தரவுகளை விளக்கிக் கூற தெரிவதில்லை என்கிறார் ஷாஹிதா. 2014ஆம் ஆண்டு முதல் அரசின் கோரிக்கையை ஏற்று தீவு திட்டு PHCல் பணியாற்ற டாக்டர் சர்கார் வந்த பிறகு மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்தன. அவர் PHCக்கு ஊழியர்கள் தினமும் வருதை உறுதி செய்ததோடு, அடிப்படை தேவைகள், மருந்துகள், பாதுகாப்பான பிரசவங்களையும் உறுதி செய்ய முயல்கிறார்.
டாக்டர் சர்கார் இரண்டு ஆண்டுகள் துப்ரி நகர சுகாதார துறையிடம் முறையிட்டு PHCக்கு சோலார் தகடுகள் நிறுவச் செய்தார். இதைகொண்டு அங்கு குழாய் நீர், மின்சார விநியோகம் கிடைத்தது. “தினமும் இந்த மையத்திற்கு 65 நோளாளிகள் சராசரியாக வருகின்றனர்,” என்கிறார் PHCல் சுகாதார பணியாளராக வேலை செய்யும் சாமிமதுல் கோப்ரா கதுன். “காய்ச்சல், தோல்நோய்கள், வயிற்று தொந்தரவுகள் இங்கு பொதுவான தொந்தரவுகள்.”
PHCல் மருந்தாளர், துணை செவிலியர் மருத்துவச்சி (ANM), லேப் டெக்னிஷியன் ஆகிய பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் துப்ரியிலிருந்து மோட்டார் பொருத்திய மேற்கூரையற்ற நாட்டு படகில் தினமும் காலை 8.45 மணிக்கு வருகின்றனர். புறநோயாளிகள் பிரிவு மதியம் 1 மணி வரை செயல்படுகிறது.
“தனித்துவிடப்பட்ட தீவு திட்டுகளில் வேலை செய்வதை மக்கள் தவிர்க்கின்றனர்,” என்கிறார் டாக்டர் சர்கார். “பணி ஓய்விற்கு பிறகு இங்கு வேலை செய்ய கூறியபோது, அதை ஆசியாக நினைத்து ஏற்று உண்மையான தேவை உள்ளோருக்கு சேவையை தொடர்கிறேன். தீவு திட்டுகளில் சுகாதாரத் துறையின் தேவை மிகவும் அவசியம், குறிப்பாக பிரசவ வசதிகளை நாம் இன்னும் மேம்படுத்த வேண்டும்.”
தீவு திட்டில் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) மிக அதிகமாக 2.8 உள்ளதாக அசாம் மனித வளர்ச்சி அறிக்கை 2014 கூறுகிறது. இங்கு பால்ய விவாகங்கள் அதிகம் நடைபெறுகின்றன- 25.3 சதவிகித பெண்கள் 15-19 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். மாநிலத்தின் இடஞ்சார்ந்த பன்முகத்தன்மை பகுதிகளில் (தீவு திட்டுகள், தேயிலை தோட்டங்கள், மலை மற்றும் எல்லைப் பகுதிகளும் இதில் அடங்கும்) இதுவே அதிகம். அதிகபட்சமாக துப்ரி மாவட்டத்தில் 15-19 வயது பிரிவு பெண்களில் திருமணமானவர்கள் 29.2 சதவிகிதம் ஆகும்.
பிர்சிங் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டி உள்ளது, இப்போதைக்கு தீவு திட்டில் பெரும்பாலான வீடுகளில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இருள் சூழாது. இன்னும் பல வீடுகளில் வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.40க்கு வாங்கி விளக்கேற்றி வருகின்றனர். அவர்களுக்கும் விடியட்டும்.
தமிழில்: சவிதா