வாழ்நாள் முழுவதும் விலங்குகளை பராமரிக்க வேண்டும். இதுவே ரெய்காக் களாக எங்களின் வேலை: நாங்கள் விலங்குகளுக்கு சேவையாற்றுகிறோம்.

என் பெயர் சீதா தேவி. எனக்கு 40 வயதாகிறது. விலங்குகளை பராமரிப்பதில் எங்கள் சமூகத்திற்கு என வரலாறு உள்ளது. குறிப்பாக ஒட்டகங்களுடன் இப்போது செம்மறியாடுகள், ஆடுகள், பசுக்கள், எருமைகளும் சேர்ந்துள்ளன. ராஜஸ்தானின் பாலி மாவட்டம் ஜெய்தரன் வட்டார குர்கி கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எங்கள் தரமாக்ரி கிராமம்.

எனக்கு ஹரி ராம் தேவாசியுடன்[46] திருமணமாகி இரண்டு மகன்கள்- சவாய் ராம் தேவாசி, ஜம்தா ராம் தேவாசி ஆகியோர் உள்ளனர். ஆச்சு தேவி, சஞ்சு தேவி அவர்களின் மனைவிகள். ஆச்சு, சவாய் தம்பதிக்கு 10 மாத மகன் இருக்கிறான். 64 வயதாகும் என் அம்மா ஷாயாரி தேவியும் எங்களுடன் வசிக்கிறார்.

காலை 6 மணிக்கு என் மருமகள்கள் அல்லது நான் ஆட்டுப்பால் தேநீர் ஒரு கோப்பை தயாரித்து அன்றைய நாளை தொடங்குகிறோம். சமைத்துவிட்டு பாடாவிற்கு [விலங்குகளுக்கான கொட்டகை] செல்கிறோம். அங்கு எங்கள் ஆடுகள், செம்மறியாடுகள் உள்ளன. அங்கு மண் தரையை கூட்டி சுத்தம் செய்து, கால்நடைகளின் புலுக்கைகளை சேகரித்து உரத்தேவைக்கு பயன்படுத்துவோம்.

எங்கள் வீட்டின் பின்புறமுள்ள பாடாவில் செம்மறியாடுகள், ஆடுகள் என 60 கால்நடைகள் உள்ளன. அதற்குள் ஒரு சிறிய பிரிவினை உள்ளது. அங்கு நாங்கள் ஆட்டுக்குட்டிகளை வைத்திருக்கிறோம். பாடாவின் ஒரு முனையில் உலர் தீவனத்தை சேமித்து வைக்கிறோம் - இது பெரும்பாலும் உலர்ந்த பயறுச் செடிகள். செம்மறியாடு, ஆடுகள் தவிர, எங்களிடம் இரண்டு பசு மாடுகள் உள்ளன. அவற்றுக்கு வீட்டின் முன் வாசல் அருகே தனி கொட்டகை உள்ளது.

Left: Sita Devi spreads the daali around for the animals.
PHOTO • Geetakshi Dixit
Sita's young nephew milks the goat while her daughter-in-law, Sanju and niece, Renu hold it
PHOTO • Geetakshi Dixit

இடது: கால்நடைகளுக்கு டாலியை பரப்பிவிடும் சீதா தேவி. வலது: சீதாவின் இளம் மருமகன் ஆட்டுக்கு பால் கறக்கும்போது அவளது மருமகள் சஞ்சுவும் ஒன்று விட்ட மகள் ரேணுவும் அதை பிடித்துக் கொள்கிறார்கள்

மளிகை பொருட்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள் மற்றும் பிற வசதிகளுக்கு நாங்கள் குர்கி கிராமத்திற்கு செல்ல வேண்டும் -. முன்பெல்லாம் எங்கள் மந்தைகளுடன் ஜம்னா ஜி (யமுனா நதி) வரை சென்று வழியில் முகாமிட்டுக் கொள்வோம். இப்போது மந்தைகள் சிறிதாகிவிட்டன. இவ்வளவு தூரம் பயணம் செய்வது லாபகரமாக இல்லை. எங்களுக்கும் வயதாகிவிட்டது. அதனால் கால்நடைகளை வெகு தொலைவில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லாமல் பார்த்துக் கொள்கிறோம்.

பாடாவை நான் சுத்தம் செய்யும் போது, என் மருமகள் சஞ்சு குட்டிகளை தாய் ஆடுகளிடம் பால் குடிக்க வைக்கிறாள். ஆட்டுக்குட்டிகள் பால் குடிக்கும் போது யாராவது பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தாய் ஆடுகள் குட்டிகளுக்கு பால் கொடுக்காமல் ஓடிவிடும். என் கணவர் அல்லது நான் அவளுக்கு உதவுகிறோம் அல்லது குட்டிகள் பால் குடிக்க உதவுகிறோம். எங்களுடன் அவையும் சவுகரியமாக இருக்கின்றன.

என் கணவர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார். நாங்கள் அருகில் உள்ள வயலை குத்தகைக்கு எடுத்துள்ளோம்.  மரங்களையும் வாங்கியுள்ளோம், அங்குதான் எங்கள் மந்தைகள் மேய்ச்சலுக்கு செல்கிறது. என் கணவரும் மரங்களில் இருந்து கிளைகளை வெட்டி விலங்குகள் சாப்பிடுவதற்கு தருகிறார். அவை வன்னி மர (ப்ரோசோபிஸ் சினேரியா) இலைகளை சாப்பிட விரும்புகிறார்கள்.

குட்டிகள் மந்தையுடன் வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என்பதால் அதை கவனித்து தடுக்க வேண்டும். பாடாவிற்கு உள்ளேயும் வெளியேயும் விலங்குகளை வழிநடத்த நாங்கள் விதவிதமான ஒலியெழுப்புகிறோம். சில சமயங்களில் குட்டி தன் தாயைப் பின்தொடர்ந்து வெளியே சென்றால், அதை கவனித்து உள்ளே கொண்டு வருகிறோம். எங்களில் ஒருவர் பாடாவின் வாசலில் நின்று கைகளை அசைத்து, மீண்டும் பாடாவிற்குள் விலங்குகள் நுழைவதைத் தடுக்க ஒலி எழுப்புகிறோம். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, விலங்குகள் பிரதான வாயிலை விட்டு வெளியேறத் தயாராகின்றன.

Left: Hari Ram Dewasi herds the animals out of the baada while a reluctant sheep tries to return to it
PHOTO • Geetakshi Dixit
Right: Sita Devi and her mother Shayari Devi sweep their baada to collect the animal excreta after the herd has left for the field
PHOTO • Geetakshi Dixit

இடது: பாடாவிலிருந்து ஹரி ராம் தேவாசி கால்நடைகளை வெளியேற்றும் போது அடங்காத செம்மறியாடு ஒன்று வெளியேச் செல்ல மறுக்கிறது. வலது: கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்ற பிறகு சீதா தேவி, அவரது தாய் ஷாயாரி தேவி ஆகியோர் பாடாவை கூட்டி ஆட்டுப் புலுக்கைகளை சேகரிக்கின்றனர்

புதிதாக குட்டி போட்ட ஆடுகள், உடல்நலம் குன்றியவை, குட்டிகள் ஆகியவை மேய்ச்சலுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. நான் மீண்டும் ஒருமுறை புலுக்கைகளை சேகரித்து, வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய நிலத்திற்கு எடுத்துச் செல்கிறேன். இது மதிப்புமிக்க உரம் என்பதால் மொத்தமாக விற்கும் வரை அங்கே சேகரிக்கிறோம். ஆண்டுக்கு இரண்டு லாரி அளவிற்கான புலுக்கைகளை விற்கிறோம். ஒரு லாரி சுமைக்கு 8,000 முதல் 10,000 ரூபாய் வரை கிடைக்கும்.

செம்மறியாடுகளை சுமார் 12,000 முதல் 15,000[ரூபாய்] வரை  விற்பது எங்களின் முதன்மை வருவாய் ஆதாரமாக உள்ளது. குட்டிகள், கன்றுகளை விற்பதில் 6000 [ரூபாய்] கிடைக்கிறது. உடனடியாக பணம் தேவைப்படும்போது அவற்றை நாங்கள் விற்கிறோம். வியாபாரிகள் அவற்றை டெல்லி வரை எடுத்துச் சென்று மொத்த விற்பனை செய்யும் பெரிய சந்தைகளில் விற்கின்றனர்.

செம்மறியாட்டு ரோமங்களும் எங்கள் வருமானத்திற்கு முக்கியமானது. ஆனால் கம்பளியின் விலை சில இடங்களில் கிலோவிற்கு இரண்டு ரூபாய் சரிந்துள்ளதால், இப்போது அதை வாங்குவதற்கு நிறைய பேர் வருவதில்லை.

புலுக்கைகளை கொட்டிவிட்டுத் திரும்பியவுடன், பசியோடு காத்திருக்கும் குட்டிகளை காண பாடாவுக்கு செல்கிறேன். நான் விலங்குகளுக்கு வெளியிலிருந்து டாலி (பச்சைக் கிளை) பறித்து வருகிறேன். குளிர்காலத்தில், சில நாட்களில் நீம்டாவும் (வேம்பு, அசாடிராக்டா இண்டிகா), மற்ற நாட்களில் நரியிலந்தையும் (பெர், ஜிசிபஸ் னும்முலேரியா) தருகிறேன். பிறகு நான் வயலுக்குச் சென்று விறகு சேமிக்கிறேன்.

Left: Sheep and goats from Sita Devi’s herd waiting to go out to graze.
PHOTO • Geetakshi Dixit
Right: When Sita Devi takes the daali inside the baada, all the animals crowd around her
PHOTO • Geetakshi Dixit

இடது: சீதா தேவியின் மந்தை ஆடுகளும், செம்மறியாடுகளும் மேய்வதற்கு வெளியேற காத்திருக்கின்றன. வலது: தழைகளை சீதா தேவி பாடாவிற்குள் எடுத்துச் சென்றதும் அனைத்து கால்நடைகளும் அவரை சூழ்கின்றன

என் கணவர் அல்லது மகன்கள் டாலி[மரக்கிளைகள்] வெட்டி கொண்டு வருவார்கள். சில சமயங்களில் நானே வெட்டி எடுத்து வருவேன். வீட்டிற்கு வெளியே செல்லும் வேலைகளை ஆண்கள் பார்த்துக் கொள்வார்கள். மரங்களை வாங்குவது, விளைநிலங்களை குத்தகைக்கு பிடிப்பது, உர விலையை நிர்ணயிக்க பேசுவது, மருந்துகளை பெறுவது போன்ற அனைத்து வேலைகளையும் அவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்கின்றனர். வயலில் மந்தை மேயும் போது மரக் கிளைகள் வெட்டி கொடுப்பது, ஏதேனும் கால்நடைக்கு காயப்பட்டால் கவனித்துக் கொள்வதும் அவர்களின் வேலை.

ஏதேனும் கால்நடைக்கு உடல்நலம் குன்றினால் நான் கவனித்துக் கொள்வேன். பசுக்களுக்கு வைக்கோலும், சமையலறை காய்கறி கழிவுகளையும் உணவாக நான் கொடுக்கிறேன். இந்த வேலையில் என் அம்மாவும் இணைந்து கொள்வாள். கிராமத்திற்கு சென்று கடையில் மளிகைப் பொருட்களை வாங்கி வரவும் அவர் உதவுகிறார்.

கால்நடைகளுக்கு உணவளித்தப் பிறகு, நாங்கள் அமர்ந்து பெரும்பாலும் பஜ்ரா [கம்பு] ஏதாவது ஒரு வடிவத்தில், அல்லது கோதுமை (ரேஷன் கடையில் இருந்து) பாசிப் பருப்பு அல்லது வேறு பருப்பு அல்லது ஒரு பருவகால காய்கறி, மற்றும் பக்ரி கே தூத் கா தஹி [ஆட்டு பால் தயிர்] சாப்பிடுகிறோம். எங்களிடம் இரண்டு பிகா நிலங்கள் உள்ளன. அதில் நாங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பச்சை பயறு மற்றும் கம்பு பயிரிட்டு கொள்கிறோம்.

குர்கியைச் சேர்ந்த பிற பெண்களைப் போன்று நானும் நூறு நாள் வேலை திட்டத்திற்கு செல்கிறேன். இதிலிருந்து வாரம் இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும். அதைக் கொண்டு வீட்டுச் செலவுகளை சமாளித்துக் கொள்கிறோம்.

Left: Sita Devi gives bajra to the lambs and kids in her baada
PHOTO • Geetakshi Dixit
Right: Sita Devi walks towards the NREGA site with the other women in her hamlet
PHOTO • Geetakshi Dixit

இடது: பாடாவில் இருக்கும் குட்டிகளுக்கு கம்பு கொடுக்கும் சீதா தேவி. வலது: தனது கிராமத்தின் மற்ற பெண்களைப் போன்று MNREGA இடத்திற்கு நடந்துச் செல்லும் சீதா தேவி

துணி துவைப்பது, பாத்திரங்கள் துலக்குவது போன்ற மற்ற வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுக்க இதுவே நேரம். அருகாமை வீட்டுப் பெண்கள் அடிக்கடி இங்கு வந்து அமர்ந்து ஒன்றாக வேலை செய்வார்கள். குளிர்காலங்களில் நாங்கள் கீச்சியா, ராபோடி[மோரில் சமைத்த சோள மாவைப் பயன்படுத்தி செய்யப்பட்ட தட்டையான வட்டமான நொறுக்கு] செய்வோம்.

இந்த [ஆயர்] வேலையை செய்வதற்கு தேவையான திறன்கள் இளம் தலைமுறையினரிடம் இல்லை. நான் சிறு பிள்ளைகளை நன்றாக படிக்கும்படி கூறுகிறேன். இறுதியாக, நாங்கள் கால்நடைகளை விற்க வேண்டியிருக்கும், அவர்கள் வேலை தேட வேண்டியிருக்கும். இப்போது காலம் மாறி வருகிறது.

மாலையில் அனைவருக்கும் நான் சமைக்கிறேன். எங்கள் கால்நடைகள் வீடு திரும்புவதற்காக காத்திருக்கிறேன். சூரியன் மறைந்த பிறகு, எங்கள் மந்தை பாடாவிற்கு திரும்புகின்றன. குட்டிகளுக்கு அன்றைய நாளில் கடைசியாக பால் கொடுக்கிறேன். ஆடுகளுக்கு தீவனங்கள் அளிக்கிறேன். அன்றைய நாள் எனக்கு முடிகிறது.

தமிழில்: சவிதா

Student Reporter : Geetakshi Dixit

ಗೀತಾಕ್ಷಿ ದೀಕ್ಷಿತ್ ಅವರು ಬೆಂಗಳೂರು ಅಜೀಮ್ ಪ್ರೇಮ್ ಜೀ ಯುನಿವರ್ಸಿಟಿಯ ಎಮ್ ಎ ಡೆವಲಪ್ಮೆಂಟ್ ವಿದ್ಯಾರ್ಥಿ. ಅವರ ಜನಸಾಮಾನ್ಯರು ಮತ್ತು ಪಶುಪಾಲನಾ ಸಮುದಾಯದ ಜನರ ಬದುಕಿನ ಕುರಿತಾದ ಕುತೂಹಲದ ಪ್ರತಿಫಲ ಈ ವರದಿಯಾಗಿದ್ದು ಇದು ಅವರ ಪದವಿಯ ಅಂತಿಮ ವರ್ಷದ ಸಂಶೋಧನಾ ವರದಿಯ ಭಾಗವೂ ಹೌದು.

Other stories by Geetakshi Dixit
Editor : Riya Behl

ರಿಯಾ ಬೆಹ್ಲ್‌ ಅವರು ಲಿಂಗತ್ವ ಮತ್ತು ಶಿಕ್ಷಣದ ಕುರಿತಾಗಿ ಬರೆಯುವ ಮಲ್ಟಿಮೀಡಿಯಾ ಪತ್ರಕರ್ತರು. ಈ ಹಿಂದೆ ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ (ಪರಿ) ಹಿರಿಯ ಸಹಾಯಕ ಸಂಪಾದಕರಾಗಿದ್ದ ರಿಯಾ, ಪರಿಯ ಕೆಲಸಗಳನ್ನು ತರಗತಿಗಳಿಗೆ ತಲುಪಿಸುವ ನಿಟ್ಟಿನಲ್ಲಿ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳು ಮತ್ತು ಶಿಕ್ಷಣ ತಜ್ಞರೊಂದಿಗೆ ನಿಕಟವಾಗಿ ಕೆಲಸ ಮಾಡಿದ್ದರು.

Other stories by Riya Behl
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha