ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் சாத்ரி கிராமத்தில் உள்ள ரைகா சமூக மக்கள் பல நூற்றாண்டுகளாக ஒட்டகங்களை மேய்த்து வருகிறார்கள். 2014-ல் ராஜஸ்தான் அரசால் மாநில விலங்காக அறிவிக்கப்பட்ட இந்த ஒட்டகம், ராஜஸ்தான் என்றதும் நினைவிற்கு வரும் பாலைவனத்தோடு நெருங்கிய தொடர்புடையது. மேய்ப்பர்களுக்க்கு இந்த ஒட்டகங்கள் இன்றியமையாதவை. தினசரி நீர்த்தேவை இல்லாமல் கடும் வெயிலைத் தாக்குப்பிடித்து, பாலையும் கம்பளியையும் நமக்கு வழங்கும் அற்புத விலங்குகள் இவை.

ஆனால் இன்றோ, ரைகா மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது. இன்றைய நவீன யூகம் அவர்கள் பின்பற்றும் புலம்பெயரும் நடைமுறைகளை அலட்சியப் போக்குடனும், சில சமயம் விரோத உணர்வுடனும் கடந்து செல்கிறது.

ஜோகராம்ஜி ரைகா அச்சமூகத்தில் மூத்த மேய்ப்பர். அவர் போபாஜி என்றழைக்கப்படும் மதகுருமாரும் கூட. மதகுருமாரின் பணி, ரைகா மக்கள் வணங்கும் கடவுள்களைத் தன்னுடலில் அழைத்து அவர்களோடு பேசி மக்களுக்குக் கருத்துரைப்பது. இது அவர்களின் நம்பிக்கை. அவர்களின் முதன்மையான கடவுளின் பெயர் பாபுஜி. போபாஜிகளைக் கடவுள்கள் ஆட்கொண்டவுடன் அவர்கள் தன்னிலை இழந்து ஆடுவர்.

Raikas of Rajasthan

ஜோகராம்ஜியின் தனிப்பட்ட வழிபாட்டு இடம்


நான் முதன்முதலில் ஜோகராம்ஜியை சந்தித்தபோது அவர் ஓப்பியம் எண்ணெய்யைத் தயார் செய்தபடி தன் சமூக மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். நாளொன்றுக்குப் பலமுறை அதைப் புகைப்பார், அல்லது அப்படியே உட்கொண்டுவிடுவார். அவர் மனைவி காலை சிற்றுண்டியை சமைத்துக்கொண்டிருந்தார்.

Raikas of Rajasthan

எண்ணெய் இவ்வாறுதான் தயாரிக்கப்படுகிறது - அடர்ந்த ஓப்பியம் உள்ளே செலுத்தப்பட்டு, சிறிது நேரம் கழித்து திரவமாகக் கீழே சொட்டும்.


ரைகா சமூக மக்கள் தங்களின் தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பலவற்றிற்குத் தங்களின் போபாஜியை நாடி வருவார்கள். அவருக்கும் நிலப் பிரச்னை குறித்து முடிவெடுக்கும் சமூகப் பொறுப்பு தரப்பட்டுள்ளது. மேலும் சமூகம் பொதுவில் கூடும்போது அவரே அதற்குத் தலைமை.

Raikas of Rajasthan

ரைகா சமூக மக்கள் தங்களின் போபாஜியைக் காண தினமும் வருகிறார்கள்


தன் குடும்பம் குறித்தும் ரைகா சமூகம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் ஜோகராம்ஜி பேசினார். “முறையான கல்வி இன்று அத்தியாவசியமாகிவிட்டது, என் மகள் ரேகா பள்ளிக்குச் செல்வதை நான் உறுதி செய்வேன். பள்ளிக்குச் சென்றால் பொதுமக்கள் மத்தியில் மரியாதை கூடுகிறது. நாங்கள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை, அதனால் மக்கள் எங்களை மதிப்பதில்லை. உலகத்தைப் பற்றிய அறிவு எங்களுக்கு இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது போக ரேகா ஒரு பெண். தன்னைத் தற்காத்துக்கொள்ள அவளுக்குக் கல்வி வேண்டும்”, என்றார்.

அதே நேரத்தில் தன் குடும்பத்தின் பாரம்பரிய அறிவையும் ரேகாவுக்கு ஜோகராம்ஜி அளிக்கத்தான் போகிறார். மற்ற சமூகங்களில் மறுக்கப்படும் பல சுதந்திரங்கள், கால்நடை மேய்க்கும் சமூகத்தில் வளரும் பெண்ணான ரேகாவுக்குக் கிடைத்துள்ளன. ஒட்டகத்தோடு மகிழ்ச்சியாய் விளையாடியபடி ரேகா இருக்கும் இப்புகைப்படத்தின் மூலம், அவர் விலங்குகளோடு மிகவும் சகஜமாகப் பழகுவதைக் காணலாம்.

Raikas of Rajasthan

போபாஜியின் மகளான ரேகாவுக்கு விலங்குகளோடு இருப்பதென்றால் கொள்ளை பிரியம்


ரைகாக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை தங்களின் விலங்குகளோடு வாழ்க்கையை நடத்துபவர்கள். ஒரு ஒட்டகத்தின் ஆயுள் ஐம்பது ஆண்டுகள்தான் என்றாலும், சில சமயங்களில் தங்களின் எஜமானரையும் தாண்டி அவை உயிர்வாழும்.  சில ரைகாக்களின் வாழ்க்கை, மனிதர்களை விட விலங்குகளால் அதிகம் சூழப்பட்டது.

Raikas of Rajasthan

கால்நடைகளோடு மேய்ச்சலுக்குக் கிளம்பும் மேய்ப்பர்


அனேகமாக ஒட்டகங்களின் பக்கவாட்டில் வடிவங்களை வெட்டும் கடைசி மக்களாக ரைகாக்களே இருப்பர். அவர்களுக்கும் ஒட்டகங்களுக்கும் இடையே இருக்கும் அந்த ஆழ்ந்த உறவு அதை சாத்தியமாக்குகிறது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒட்டகங்கள் துன்புறுத்தப்படுவது போன்ற தோற்றத்தை அளித்தாலும், சிறு சிறு முகபாவங்களாலும் கையசைவினாலும் ரைக்காக்கள் அவ்விலங்குகளைப் புரிந்துகொண்டு ஆழமான காயங்கள் எதுவும் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். ஒட்டக ரோமம் கம்பளி, விரிப்பு போன்றவை செய்யப் பயன்படுகின்றன, மேலும் ரோமங்களைக் கத்தரிப்பதன் மூலம் அவ்விலங்குகளின் உடல் குளிர்ந்து இதமாக இருக்கும்.

Raikas of Rajasthan

சாத்ரியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான ஒட்டங்கங்களின் ரோமங்கள் ரைகாக்களின் உதவியுடன் கத்தரிக்கப்படுகின்றன


அன்று மற்றொரு தேர்ந்த மேய்ப்பரான ஃபுயராம்ஜியுடன் மேய்ச்சலுக்குச் சென்றேன். ‘சாடியே’ என்று அழைக்கப்படும் அப்பணி பொதுவாக நாள் முழுவதையும் எடுத்துக்கொள்ளும்.


Raikas of Rajasthan

ஃபுயராம்ஜி ஒட்டகங்களை நாள் முழுவதும் மேய்ப்பார்


தன் தலைப்பாகைக்குள் தேனீர்ப் பொடியையும் உணவையும் அடக்கிக்கொண்டு ஃபுயராம்ஜி காலையில் கிளம்புவார். இருட்டுகிற நேரத்தில் வீடு திரும்புவார். ராஜஸ்தானின் கோடை வெயில் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தாலும், அக்கொளுத்தும் வெயிலில் மேய்ப்பதற்கு இருபது ஒட்டகங்கள் இருந்தாலும், அவர் பொறுமையுடன் என்னருகில் அமர்ந்து தேனீர் தயாரித்துக் கொடுத்தார்.

Raikas of Rajasthan

‘சாடியே’வின் இடையே இளைப்பாறியபடி ஒரு கோப்பைத் தேனீர்


முன்பு ரைகாக்கள் வருமானத்திற்கு ஆண் கன்றுகளை விற்றுப் பொருளீட்டினார்கள். இனியும் அது போதுமானதாக இல்லை. இப்பொழுது ஒட்டகத்திலிருந்து பெறப்படும் பொருட்களையும் விற்று தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள். ஆனால் அது எளிதானதாக இல்லை என்கிறார் ஃபுயராம்ஜி. ஒட்டகப் பால் ஊட்டச்சத்து மிகுந்து இருந்தாலும் அதன் சந்தை இந்தியாவில் இன்னும் விரிவடையவில்லை. அரசு பால்பண்ணைகள் பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. சரியான வியாபாரம் இல்லாமல் ரைகாக்களின் வாழ்வாதாரம் மெதுவாக அழிந்து வருகிறது. அதன் விளைவாக பலர் மாற்றுத் தொழில்களை நாடி நகர்கிறார்கள்.

2014-ல் ‘Camel Karma' என்ற நூலை எழுதிய கால்நடை மருத்துவரும் சமூக ஆர்வலருமான கோஹ்லர்-ரோல்லேஃப்சன், “அடுத்த தலைமுறை தங்களின் பாரம்பரியத்தைத் தொடர ஆர்வம் காட்டவே செய்கிறார்கள். ஆனால் அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒரு மேய்ப்பருக்குப் பெண் தேடுங்கள் பார்ப்போம், யாருமே பெண் கொடுப்பதில்லை. ரைகா சமூகத்தைச் சேர்ந்த பலர் இப்பொழுது கூலித் தொழிலாளிகள் ஆகிவிட்டனர்”, என்று பதிவு செய்கிறார்.

தன் வாழ்வியல் முறையைத் தன் வருங்கால சந்ததிகள் பின்பற்றப் போவதில்லை என்பது ஃபுயராம்ஜிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இன்னும் மேய்ப்பர்களுக்கு அனுமதி இருக்கும் சில மேய்ச்சல் நிலங்களில் நானும் அவரும் நடந்துகொண்டிருந்தபோது, ஒருகாலத்தில் ரைகாக்கள் எவ்வாறு சாத்ரியில் உள்ள காடுகளிலும் விளை நிலங்களிலும் சுதந்திரமாக உலாவினார்கள் என்றும், வழியில் சந்தித்த மனிதர்களோடு தோழமையுடன் உரையாடி நெடுநாளைய உறவை ஏற்படுத்திக்கொண்டார்கள் என்றும் விரக்தியுடன் கூறினார்.

Raikas of Rajasthan

ஒட்டகங்கள் மும்முரமாக மேய்ந்தபடி இருக்கின்றன


இருபது வருடங்களுக்கு முன்னால் மேய்ப்பர்களும் விவசாயிகளும் சமூக-பொருளார சங்கிலிகளால் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டிருந்தார்கள். மேய்ப்பர் தன் விலங்குகளை நெடுந்தூரம் அழைத்துச் செல்லும்போது அடிக்கடி விளை நிலங்களைக் கடந்து செல்ல நேரிடும். அப்பொழுது அவர்கள் விவசாயிகளுக்கு ஒட்டக உரத்தையும் கறந்த பாலையும் வழங்க, விவசாயிகள் பதிலுக்கு உணவை அளிப்பார்கள். பெரும்பாலும் மேய்ச்சல் வழி மாறுவதில்லையாதலால் இது நெடுநாளைய உறவாக மாறி, தலைமுறைகள் கடந்தும் இவ்வர்த்தகம் நடைபெறும். இப்போதோ, ஒட்டகங்களால் தங்களின் விளை நிலங்கள் நாசமாகிவிடுமோ என்று அஞ்சி பல விவசாயிகள் இவர்களை உள்ளே விடுவதில்லை.

Raikas of Rajasthan

ஒட்டகங்களுக்குக் காவலாய் நிற்கும் ஃபுயராம்ஜி


சில இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விலங்குரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இயற்றப்படும் புதிய சட்டங்களும் கொள்கைகளும் ரைகாக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களின் புலம்பெயரும் நடைமுறையையும் பாதித்துள்ளன. ராஜ்சாமந்த மாவட்டத்தில் உள்ள கும்பால்கர்க் தேசிய பூங்காவைப் போன்ற இடங்களில் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது அவர்களின் நூற்றாண்டு கால இடப்பெயர்வு முறையில் தலையிடுவதுபோலாகும்.

ஒருபுறம் இத்தகைய கட்டுப்பாட்டு விதிமுறைகள் நிலத்தையும் பொருட்களையும் ரைகாக்கள் அடைவதைக் கடினமாக்கியிருக்க, மறுபுறம் சில ரைகாக்கள் புஷ்கர் திருவிழாவில் பெண் ஒட்டகங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 2000-ம் ஆண்டிற்கு முன்னால் இவ்வாறு அவர்கள் செய்ததே இல்லை. இதற்கு மேலும் எங்கள் வாழ்க்கையோடு போராட நாங்கள் தயாராக இல்லை என்பதன் குறியீடே அது. இந்த விலங்குகள் இல்லாமல் அவர்களுடைய மந்தைகள் பெருக வாய்ப்பே இல்லை.

இதற்கு எதிர்வினையாக ஒட்டகங்களைக் காப்பாற்றியாக வேண்டுமே என்று சில ரைகாக்கள், பெண் ஒட்டகங்களை வெட்டத் தடை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தார்கள். இவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக மாநில அரசாங்கம் 2015 மார்ச்சில் ஆண் மற்றும் பெண் ஒட்டகங்கள் இரண்டையும் வெட்டத் தடை விதித்துவிட்டது. மிஞ்சியிருந்த ஒரு நிலையான வாழ்வாதாரமும் இதன் மூலம் பறிக்கப்பட்டுவிட்டது.

“இதுபோன்ற அதிரடித் தடையுத்தரவுகள் சமூகத்தின் நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்படுகின்றன”, சாத்ரியில் இயங்கும் ‘லோஹித் பசு-பாலக் சன்ஸ்தான்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயலாளரான ஹன்வந்த் சிங் ரத்தோர் இவ்வாறு விமர்சித்தார். “நம்முடைய சுற்றுச்சூழலின் சமநிலை தகர்க்கப்படுவதை ரைகாக்கள்தான் தெளிவுடன் உணர்கிறார்கள். அவர்களின் பரம்பரை அறிவு ஒவ்வொரு தலைமுறைக்கும் வெற்றிகரமாகக் கடத்தப்படுகிறது, இது அவற்றை விலைமதிப்பில்லாதவையாக ஆக்குகிறது. தங்களின் நிலத்தைப் பற்றி அவர்கள் நன்கறிந்தவர்கள், எவ்வாறு விலங்குகளைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ரைகாக்களில் குரலைக் கேட்கக்கூட அரசாங்கம் தயாராக இல்லை”, என்று வருந்தினார்.

Raikas of Rajasthan

தன் மந்தையுடன் போபாஜி


இப்பொழுது இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் கூட ரைகாக்கள் வனத்துறையால் மேலும் மேலும் மேய்ச்சல் நிலங்களை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். ரத்தோர் மேலும் தொடர்ந்தார், “ரைகாக்களின் மேய்ச்சல் உரிமைகளைப் பறிக்க ஆதிக்க சமூகங்கள் தீவிரமாக முயன்று வருகின்றன. ‘அவர்களின் ஒட்டகங்களால் எங்களின் எருமைகள் பயப்படுகின்றன’, என்று மேய்ச்சல் நிலங்களில் வனத்துறையினரைக் காவலுக்கு அழைக்கிறார்கள். இது தொடர்ந்தால் ஒட்டகங்கள் பட்டினியால் செத்துவிடும்”

இறுதியாக, “ரைகாக்களை சமூக விலக்கம் செய்ய வேண்டும்  என்று உயர்த்திக்கொண்ட சாதியினர் குரல் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தவேண்டும். எங்கள் அரசியல் பிரதிநிதிகளின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்லவிருக்கிறோம். இது தொடர்ந்தால் விரைவில் ரைகாக்களே இல்லாமல் போய்விடுவார்கள். பிறகு ஐந்தாண்டுகளில் ராஜஸ்தானில் ஒட்டகங்களே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது”, என்று எச்சரித்தார் ரத்தோர்.

ரைகா சமூக மக்களின் வாழ்க்கை அதன் விலங்குகளோடு பின்னிப் பிணைந்தது. அவ்விலங்குகளின் உணவு உரிமைக்கு ஏதேனும் ஆபத்து வருமாயின், அது இவர்களின் வாழ்க்கை முறையையும் சேர்த்தே பாதிக்கும். “ஒட்டகங்களை உயிருடன் வைத்திருக்க எங்களால் ஆனவற்றை செய்தே வருகிறோம்”, ஜோகராம்ஜி களைப்புடன் கூறினார். “ஆனால் எங்களுக்கு இவ்வுரிமையைக் கோரும் தகுதி உண்டு என்று யாருமே நினைக்காத போது, எங்களைப் பற்றிக் கவலைப்படாத போது, எங்களுக்குத் தோன்றுவதெல்லாம் இதுதான்: இனியும் நாங்கள் எதற்காகப் போராடிக்கொண்டிருக்க வேண்டும்?”

இக்கட்டுரை முழுமை பெற ஒத்துழைப்பு அளித்த ரைகா சமூக மக்களுக்கும், லோஹித் பசு-பாலக் சன்ஸ்தான் அமைப்பிற்கும், உதவி புகைப்படக் கலைஞர் ஹர்ஷ் வர்த்தனுக்கும் இக்கட்டுரையின் ஆசிரியர் தன் நன்றியை உரித்தாக்குகிறார்.


(தமிழில்: விஷ்ணு வரதராஜன்)

Sweta Daga

ಶ್ವೇತಾ ದಾಗಾ ಬೆಂಗಳೂರು ಮೂಲದ ಬರಹಗಾರರು ಮತ್ತು ಛಾಯಾಗ್ರಾಹಕರು ಮತ್ತು 2015ರ ಪರಿ ಫೆಲೋ. ಅವರು ಮಲ್ಟಿಮೀಡಿಯಾ ವೇದಿಕೆಗಳಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ ಮತ್ತು ಹವಾಮಾನ ಬದಲಾವಣೆ, ಲಿಂಗ ಮತ್ತು ಸಾಮಾಜಿಕ ಅಸಮಾನತೆಯ ಬಗ್ಗೆ ಬರೆಯುತ್ತಾರೆ.

Other stories by Sweta Daga