ஆந்திரா மற்றும் தெலெங்கானாவின் மிளகாய் அறுவடை செய்யும் வேலைகளுக்கு அருகாமை மாநிலங்களான சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகியவற்றிலிருந்து இளையத் தொழிலாளர்கள் பலர் வருகின்றனர். ஊதியத்துக்காக அவர்கள் வரவில்லை. வருடம் முழுவதுக்குமான மிளகாய்களை வீட்டுக்குக் கொண்டு செல்ல வருகின்றனர். காரம் நிறைந்த காயைப் பெறும் ஆர்வம், சிறுவர்களும் சிறுமிகளும் தங்களின் பள்ளிப் படிப்பை விட்டுக் கூட வேலைக்கு வருமளவுக்கு இருக்கிறது. அன்றாடப் பயன்பாட்டுக்கான மிளகாயின் வருடத் தேவையை அவர்கள் அடைய இது ஒன்றே வழியாக இருக்கிறது.

குழந்தைகள் குறைவான மிளகாய்களையே எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் குடும்பத்தில் இருக்கும் வளர்ந்தவர்களுக்கு அது அன்றாட உணவுப் பொருளாக இருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் தொழிலாளர்களில் குழந்தைகள்தான் முன்னணியில் இருக்கின்றனர். பாதியளவுக்கேனும் எண்ணிக்கையில் அவர்கள் இருக்கின்றனர். அடுத்த அறுவடை வரைக்கும் தேவையான விலைமதிப்பற்ற மிளகாய்களை அவர்கள் பெற்று விடுகிறார்கள். 120 ரூபாய் நாட்கூலிக்கு பதிலாக மிளகாய்களைப் பெறவே அவர்கள் விரும்புகின்றனர். சில குடும்பங்கள் பாதி அல்லது ஒரு முழு குவிண்டால் மிளகாய்கள் கூட பெறுமளவுக்கு வேலை பார்க்கின்றனர். ஒரு கிலோ 100 ரூபாய் என்ற கணக்கில் பார்த்தால், ஒரு குவிண்டால் 10,000 ரூபாய் மதிப்பு பெறும்.

இது விலை உயர்ந்த வருமானம். குடும்பங்களின் பொருளாதாரத்துக்கு சரியாக இருக்கிறது. ஒரு வருடத்தில் ஒரு குடும்பம் 12-20 கிலோ மிளகாய்களை உட்கொள்ளும். மிச்சமுள்ளவை சந்தையில் விற்கப்பட்டு உபரி வருமானம் கிடைக்கிறது. ஒரு வருடத்துக்கான, நிலத்தில் நேரடியாக பறிக்கப்பட்ட, சிறந்த மிளகாய்கள் வீட்டிலிருப்பது உறுதிபடுத்தப்படுகிறது.

“எங்கள் கிராமத்திலிருந்து 20 பேர் வந்திருக்கிறோம். மூன்று வாரங்கள் இங்கு தங்குவோம்,” என்கிறார் குடுமுடா கிராமத்தைச் சேர்ந்த உமாஷங்கர் பொடியாமி. “இந்தக் குழுவில் இருக்கும் அனைவரும் பணத்துக்கு பதிலாக மிளகாய்கள் பெறவே விரும்புகிறார்கள்.”

PHOTO • Purusottam Thakur

உமாசங்கர் அவரின் குடும்பத்துக்கு மிளகாய்கள் பெற மல்காங்கிரியிலிருந்து வந்திருக்கிறார்

ஆந்திரா மற்றும் தெலெங்கானாவின் பச்சை மிளகாய் நிலங்களின் இரு பக்க சாலைகளிலும் பெரும் அளவுக்கான சிகப்பு மிளகாய்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மிளகாய்கள் அதிகமாகக் கிடைக்கும். அருகே இருக்கும் ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களின் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினர். அவர்கள் மிளகாய்களைப் பறித்து, வரிசைப்படுத்தி, அடுக்கி, நிறைத்து சந்தைக்கும் சில்லறை வர்த்தகம் அல்லது ஏற்றுமதிக்கும் கொண்டு செல்ல தயார்படுத்துவார்கள்.

தொழிலாளர்களில் பாதியளவு இருக்கும் துடிப்பு மிகுந்த குழந்தைகள் குவியல்களைச் சுற்றி ஓடி, மிளகாய்களை வரிசைப்படுத்தி, சணல் சாக்குகளில் கட்டுகின்றனர். உற்சாகத்தை தாண்டி அக்குழந்தைகளை அந்த நிலங்களுக்கு வறுமையே அனுப்புகிறது. அவர்களில் பெரும்பாலானோரின் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழ் வாழ்கின்றனர். அவர்களின் பகுதியில் நிலவும் வேலையின்மை, எல்லையைத் தாண்டி இந்தியாவின் முன்னணி மிளகாய் உற்பத்தி மாநிலங்களுக்கு அவர்களை செல்ல வைக்கிறது.

PHOTO • Purusottam Thakur

சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய  மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர் மிளகாய்களைச் சேகரிக்கின்றனர்

முக்கியமாக அவர்களின் காலை வேளை உள்ளிட்ட எல்லா உணவுகளிலும் தவறாமல் மிளகாய் இடம்பெறும். பிற உணவுப் பொருட்கள் இன்றி அவர்கள் தாக்குப்பிடிக்க அது உதவுகிறது. அவர்களின் பிற சுவையற்ற உணவுகளுக்கும் அது சுவை சேர்க்கிறது. அவர்களின் சடங்குகளிலும் மிளகாய் பயன்படுத்தப்படுவதால் அதற்கான தேவை மிகவும் அதிகம்.

14 வயது வெட்டி மோயேவும் சட்டீஸ்கர் எல்லையைத் தாண்டி ஆந்திராவின் மிளகாய் நிலங்களில் பணிபுரிய வந்தவர்களில் ஒருவர். சுக்மா மாவட்டத்தின் சேர்ந்த படேசிட்டி கிராமத்தைச் சேர்ந்த மோயேவின் தந்தை இரண்டு வருடங்களுக்கு முன் மலேரியா வந்து இறந்து போனார். எனவே அவர் பள்ளிப் படிப்பை நிறுத்தி வேலை பார்க்க வந்து விட்டார். சில நேரங்களில் கட்டுமான தளங்களிலும் அவர் பணிபுரிகிறார். அவரின் நிலத்தில் அறுவடை முடித்துவிட்டு, இங்கு மிளகாய் சேகரிக்க வந்துள்ளார்.

மோயே அவரின் கிராமத்திலிருந்து 35 தொழிலாளர்களுடன் வந்திருக்கிறார். அவர்கள் அனைவரும் பணத்துக்கு பதிலாக மிளகாய்கள் எடுத்துச் செல்லவே விரும்புகின்றனர். “மிளகாய் பறிப்பதற்கு ஒரு நாள் கூலி 120 ரூபாய்,” என்கிறார் மோயே. “மிளகாய்களாகப் பெற்றுக் கொண்டால், நாங்கள் பறிக்கும் ஒவ்வொரு 12 மிளகாய்களுக்கும் ஒரு மிளகாய் எங்களுக்குக் கிடைக்கும்.”

அறுவடைக்காலம் முடிந்த பிறகு இளையத் தொழிலாளர்கள் மிளகாய்களை எடுத்துக் கொண்டு தங்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கவும் வாழ்க்கையில் சுவை சேர்க்கவும் செல்கின்றனர். மிளகாய்கள் வீட்டுக்கு வருகின்றன என்றால் பள்ளியும் பிற விஷயங்களும் இரண்டாம் பட்சமாகி விடுகின்றன.

PHOTO • Purusottam Thakur

வருடத்துக்குத் தேவையான மிளகாய் மூட்டைகள் வீட்டுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன


தமிழில் : ராஜசங்கீதன்

Purusottam Thakur

ಪತ್ರಕರ್ತ ಹಾಗೂ ಸಾಕ್ಷ್ಯಚಿತ್ರ ನಿರ್ಮಾಪಕರಾದ ಪುರುಶೋತ್ತಮ ಠಾಕುರ್, 2015ರ 'ಪರಿ'ಯ (PARI) ಫೆಲೋ. ಪ್ರಸ್ತುತ ಇವರು ಅಜೀಂ ಪ್ರೇಂಜಿ ವಿಶ್ವವಿದ್ಯಾನಿಲಯದ ಉದ್ಯೋಗದಲ್ಲಿದ್ದು, ಸಾಮಾಜಿಕ ಬದಲಾವಣೆಗಾಗಿ ಕಥೆಗಳನ್ನು ಬರೆಯುತ್ತಿದ್ದಾರೆ.

Other stories by Purusottam Thakur
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan