அருகே இருக்கும் சுகாதார உதவியை பெறக் கூட அணையின் நீர்த்தேக்கத்தில் இரண்டு மணி நேரம் படகில் பயணிக்க வேண்டும். இல்லையெனில் அரைகுறையாக போடப்பட்ட சாலையில் ஓர் உயர்மலையை ஏறி கடக்க வேண்டும்.

பிரபா கோலோரி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார். குழந்தை பெறும் காலத்தை நெருங்கியிருந்தார்.

பிற்பகல் 2 மணிக்கு கொடாகுடா கிராமத்தை அடைந்தபோது குழந்தை பிறக்கும் வாய்ப்பில்லை என எண்ணி பிரபாவின் அண்டைவீட்டார் அவரது வீட்டை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.

35 வயது பிரபா மூன்று மாதங்களிலேயே மகனை இழந்தவர். ஆறு வயதில் ஒரு மகள் அவருக்கு இருக்கிறார்.  இருவரையும் வீட்டில் வைத்தே உள்ளூர் வைத்தியச்சிகளின் உதவியுடன் எந்த பிரச்சினையும் இல்லாமல் பெற்றெடுத்தார். இம்முறை வைத்தியச்சிகள் தயங்கினர். குழந்தை பிறப்பு சிக்கலாக இருக்கும் என்பதை அவர்கள் கணித்திருந்தனர்.

அன்று மதியம் நான் இருந்த கிராமத்தில் ஒரு கட்டுரைக்கான செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தபோதுதான் தொலைபேசி அழைப்பு வந்தது. நண்பர் ஒருவரது மோட்டார் பைக்கை (எனக்கு சொந்தமான ஸ்கூட்டி மலைச்சாலைகளை தாங்காது) எடுத்துக் கொண்டு கொடாகுடாவுக்கு சென்றேன். ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள குக்கிராமம் அது. மொத்தமாக 60 பேர் மட்டுமே வசிக்கும் ஊர்.

அத்தனை சுலபமாக அடைந்திட முடியாத இடத்தில் ஊர் இருப்பது ஒரு புறம் இருந்தாலும் மத்திய இந்தியாவில் இருக்கும் பழங்குடி பகுதிகளை போலவே சித்ரகொண்டா ஒன்றியத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த கிராமமும் நக்சலைட் போராளிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான மோதல்களை கண்டிருக்கிறது. சாலைகளும் பிற கட்டமைப்புகளும் இங்கு மிக மோசமாகவே இருக்கின்றன.

To help Praba Golori (left) with a very difficult childbirth, the nearest viable option was the sub-divisional hospital 40 kilometres away in Chitrakonda – but boats across the reservoir stop plying after dusk
PHOTO • Jayanti Buruda
To help Praba Golori (left) with a very difficult childbirth, the nearest viable option was the sub-divisional hospital 40 kilometres away in Chitrakonda – but boats across the reservoir stop plying after dusk
PHOTO • Jayanti Buruda

பிரபா கொலோரியின் (இடது) சிக்கலான பிரசவத்துக்கான உதவிக்கு 40 கிமீ தொலைவில் இருக்கும் சித்ராகொண்டாவுக்கு செல்ல வேண்டும். ஆனால் இரவு கவிந்த பிறகு படகுகள் செல்லாது

கொடாகுடாவில் வசிக்கும் பரோஜா பழங்குடியினத்தை சேர்ந்த குடும்பங்கள் மஞ்சள், இஞ்சி, பருப்பு மற்றும் நெல்வகைகளை பிரதானமாக அவர்களின் உணவுக்காக விளைவிக்கின்றனர். அங்கு வருகை தருவோருக்கு விற்கவென பிற சில பயிர்களும் விளைவிக்கின்றனர்.

ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஜொதாம்போ பஞ்சாயத்தின் சுகாதார நிலையத்துக்கும் அவ்வப்போதுதான் மருத்துவர்கள் வருவார்கள். ஊரடங்கு காரணத்தால் சுகாதார நிலையமும் மூடப்பட்டுவிட்டது. பிரபாவின் குழந்தை பிறக்கும் தேதி ஆகஸ்ட் 2020-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமூக சுகாதார மையம் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ல குடுமுலுகுமா கிராமத்தில் இருக்கிறது. இச்சமயத்தில் பிரபாவுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். சமூக சுகாதார மையத்தில் அதற்கு வசதி கிடையாது.

எனவே அருகே இருக்கும் ஒரே வாய்ப்பு 40 கிலோமீட்டர் தொலைவில் சித்ராகொண்டாவில் இருக்கும் மருத்துவமனைதான். ஆனால் சித்ராகொண்டா நீர்த்தேக்கத்தை கடக்க இரவு கவிந்தபிறகு எந்த படகும் வராது. மலைகளின் வழியே செல்ல வேண்டுமானால் ஒரு மோட்டார் பைக் தேவைப்படும். அல்லது கடுமை நிறைந்த ஒரு நெடிய நடை தேவைப்படும். ஒன்பது மாத கர்ப்பிணியால் முடியாத சாத்தியங்களே இருந்தன.

மல்காங்கிரியிலுள்ள எனக்கு தெரிந்த ஆட்களை கொண்டு உதவி பெற முயற்சி செய்தேன். மோசமான சாலைகளில் அவசர ஊர்தி அனுப்புவது கஷ்டம் என்றார்கள். மாவட்ட மருத்துவமனையில் அவசர ஊர்தியாக படகு அனுப்பும் சேவையும் இருக்கிறது. ஆனால் ஊரடங்கு காலம் என்பதால் அதுவும் இல்லை.

பிறகு உள்ளூரில் இருந்த ஒரு சமூக சுகாதார அலுவலரிடம் பேசி நிலவரத்தை புரிய வைத்து தனியார் வேன் வருவதற்கான ஏற்பாடை என்னால் செய்ய முடிந்தது. கட்டணம் 1200 ரூபாய். ஆனாலும் அவர் அடுத்த நாள் காலைதான் வர முடியும்.

The state's motor launch service is infrequent, with unscheduled suspension of services. A privately-run boat too stops plying by evening. So in an emergency, transportation remains a huge problem
PHOTO • Jayanti Buruda

அரசின் மோட்டார் சேவை நம்ப முடிவதில்லை. சொல்லாமல் கொள்ளாமல் சேவைகள் ரத்து செய்யப்படும். தனியாரால் செலுத்தப்படும் ஒரு படகும் மாலை ஆனதும் சேவையை முடித்துக் கொள்ளும். எனவே ஒரு நெருக்கடி நேரத்தில் போக்குவரத்து என்பது மிகப் பெரிய பிரச்சினை.

நாங்கள் கிளம்பினோம். மலையில் ஏறிக் கொண்டிருந்தபோது வேன் பழுதடைந்தது. பிறகு, விறகுகள் எடுக்க வந்த எல்லை பாதுகாப்பு படையின் டிராக்டரை பார்த்து உதவி கேட்டோம். அவர்கள் எங்களை அவர்களின் முகாம் இருக்கும் மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். ஹண்டல்குடாவில் இருந்த அலுவலர்கள் சித்ராகொண்டா மருத்துவமனைக்கு பிரபாவை கொண்டு செல்வதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்தனர்.

மருத்துவமனை ஊழியர்கள் 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மல்கங்கிரி மாவட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென கூறினர். அங்கு செல்வதற்கான வாகனத்தை ஏற்பாடு செய்ய உதவினர்.

மாவட்ட மருத்துவமனையை நாங்கள் பிற்பகலில் அடைந்தோம். கொடாகுடாவுக்கு நான் சென்று ஒருநாள் கழிந்திருந்தது.

அங்கு, மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் பிரசவத்தை தூண்ட முயன்று தோற்றனர். பிரபா மூன்று நாள் துயரத்தை அனுபவித்தார். இறுதியில் அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென எங்களிடம் கூறினர்.

ஆகஸ்ட் 15ம் தேதி பிற்பகலில் பிரபாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆரோக்கியமான மூன்று கிலோ எடை கொண்டிருந்தது குழந்தை. ஆனால் குழந்தையின் நிலையில் சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மலம் வெளியேறுவதற்கான திறப்பு குழந்தையிடம் இல்லை. உடனடி அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. மல்கங்கிரி மாவட்ட மருத்துவமனையில் இத்தகைய அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதி கிடையாது.

150 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கொராபுட்டின் புதிய நவீன மருத்துவமனையான சஹீத் லஷ்மண் நாயக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

Kusama Naria (left), nearly nine months pregnant, walks the plank to the boat (right, in red saree) for Chitrakonda to get corrections made in her Aadhaar card
PHOTO • Jayanti Buruda
Kusama Naria (left), nearly nine months pregnant, walks the plank to the boat (right, in red saree) for Chitrakonda to get corrections made in her Aadhaar card
PHOTO • Jayanti Buruda

ஒன்பது மாத கர்ப்பிணியான குசாமா நாரியா (இடது) சித்ராகொண்டாவுக்கு சென்று தன் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய படகேறுகிறார் (வலதில் உள்ள சிவப்புப் புடவை).

குழந்தையின் தந்தையான போடு கொலோரி கடும் அச்சத்தில் இருந்தார். தாய் மயக்கத்தில் இருந்தார்.  சமூக சுகாதார ஊழியரும் (கொடாகுடா கிராமத்துக்கு வேனுடன் வந்தவர்) நானும் குழந்தையை கொராபுட்டுக்கு கொண்டு சென்றோம். ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 6 மணி ஆகிவிட்டது.

மூன்று கிலோமீட்டர் கடந்ததும் நாங்கள் சென்ற மருத்துவமனை அவசர ஊர்தி பழுதடைந்தது. இரண்டாவதாக நாங்கள் ஏற்பாடு செய்ய முடிந்த வாகனம் அடுத்த 30 கிலோமீட்டரில் பழுதடைந்தது. கடுமையான மழையில் அடர்ந்த காட்டுக்குள் அடுத்த வாகனம் வருவதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். இறுதியில் நாங்கள் ஊரடங்கில் இருந்த கொராபுட்டை நள்ளிரவை தாண்டி அடைந்தோம்

அங்கு குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏழு நாட்களுக்கு மருத்துவர்கள் வைத்து கவனித்தனர். இவற்றுக்கிடையில் பிரபாவை (போடுவுடன்) ஒரு வாரம் கழித்து தன் குழந்தையை முதன்முறையாக பார்க்க கொராபுட்டுக்கு ஒரு பேருந்தில் வரவைத்தோம். பிறகு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் திறனும் தங்களிடம் இல்லையென மருத்துவர்கள் கூறினர்.

குழந்தையை இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அந்த மருத்துவமனை 700 கிலோமீட்டர் தொலைவில் பெர்காம்பூரில் இருந்த எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகும். மீண்டும் ஓர் அவசர ஊர்திக்கு காத்திருந்த நாங்கள் இன்னொரு நீண்ட பயணத்துக்கு தயாராகிக் கொண்டோம்.

அரசு மையம் ஒன்றிலிருந்து அவசர ஊர்தி வந்தது. ஆனால் பதற்றம் நிறைந்த பகுதி என்பதால் 500 ரூபாய் நாங்கள் கொடுக்க வேண்டியிருந்தது. (என்னுடைய நண்பர்களும் நானும் இச்செலவுகளை செய்தோம். மொத்தமாக 3000-4000 ரூபாய் நாங்கள் செலவழித்திருந்தோம்). பெர்காம்பூர் மருத்துவமனையை அடைய எங்களுக்கு 12 மணி நேரங்கள் ஆனது.

People of Tentapali returning from Chitrakonda after a two-hour water journey; this jeep then takes them a further six kilometres to their hamlet. It's a recent shared service; in the past, they would have to walk this distance
PHOTO • Jayanti Buruda

டெண்டாபலி மக்கள் இரண்டு மணி நேர நீர்வழிப் பயணத்துக்கு பிறகு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். பிறகு ஒரு ஜீப் அவர்களை ஏற்றிக் கொண்டு ஆறு கிமீ தொலைவில் இருக்கும் கிராமத்துக்கு கொண்டு சென்று விடும். இச்சேவையும் சமீபத்தில் வந்ததுதான். இதற்கு முன் இந்த தூரத்தை அவர்கள் நடந்தே கடக்க வேண்டும்

அந்த நேரத்திலெல்லாம் வேனிலும் ட்ராக்டரிலும் பல அவசர ஊர்திகளிலும் பேருந்திலும் நாங்கள் பல மருத்துவமனைகளுக்கு சென்றுவிட்டோம். சித்ரகொண்டா, மல்கங்கிரி, கொராபுட், பெர்காம்பூர் என கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர்கள் பயணித்துவிட்டோம்.

அறுவை சிகிச்சை அபாயகரமானது என எங்களுக்கு சொல்லப்பட்டது. குழந்தையின் நுரையீரலும் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலமாக எடுக்க வேண்டியிருந்தது. கழிவுகளை வெளியேற்ற வயிற்றில் ஒரு திறப்பு உருவாக்கப்பட்டது. இரண்டாவது அறுவை சிகிச்சை வழக்கமான இடத்தில் திறப்பு உருவாக்க செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்கு குழந்தை எட்டு கிலோ எடை அடைய வேண்டும்.

குடும்பத்தை கடைசியாக தொடர்பு கொண்டு கேட்டபோது எட்டு மாதம் ஆகியும் குழந்தை இன்னும் அந்த எடையை அடையவில்லை. இரண்டாம் அறுவை சிகிச்சை இன்னும் நடக்கவில்லை.

பல இடர்களை தாண்டி பிறந்த குழந்தைக்கு ஒரு மாதம் கழித்து நடத்தப்பட்ட பெயர் வைக்கும் விழாவுக்கு நான் அழைக்கப்பட்டேன். குழந்தைக்கு மிருத்யுஞ்சய் என பெயர் சூட்டினேன். சாவை வென்றவன் என அர்த்தம். அது ஆகஸ்ட் 15, 2020. இந்தியாவின் சுதந்திர தினம். அவனும் நள்ளிரவு போராட்டத்தையும் பிரச்சினைகளையும் சந்தித்து தாண்டி தாயை போலவே வெற்றியை பெற்றான்.

*****

பிரபாவுக்கு நேர்ந்தவை மிகவும் சிரமமான அனுபவம் என்றாலும் மல்கங்கிரி மாவட்டத்தில் சுகாதார வசதிகளும் கட்டமைப்பும் குறைவாக உள்ள பழங்குடி கிராமங்களில் வசிக்கும் பெண்களும் இதே சூழலில்தான் உழலுகிறார்கள்.

பட்டியல் பழங்குடியினங்கள், குறிப்பாக பரோஜா மற்றும் கோயா ஆகியவை மல்கங்கிரியின் 1055 கிராமங்களின் மக்கள்தொகையில் 57% வகிக்கிறது. இச்சமூகங்கள் மற்றும் பகுதிகளின் கலாசாரம், பாரம்பரியம், இயற்கை வளம் முதலியவை பல இடங்களில் கொண்டாடப்பட்டாலும் அம்மக்களின் சுகாதாரம் பெரிதும் பொருட்படுத்தாமலேயே இருக்கிறது. மலைகள், காட்டுப் பகுதிகள், நீர்நிலைகள் நிறைந்த பூகோளப்பகுதியில் பல வருட மோதலும் அரசின் புறக்கணிப்பும் உயிர் காக்கும் சேவைகளை இந்த கிராமங்களில் குறைவாக்கி வைத்திருக்கின்றன.

People of Tentapali returning from Chitrakonda after a two-hour water journey; this jeep then takes them a further six kilometres to their hamlet. It's a recent shared service; in the past, they would have to walk this distance
PHOTO • Jayanti Buruda

பெண்களான எங்களுக்கு இதயமும் வலியும் இருக்கிறது என்பதை ஆண்கள் உணர்வதில்லை. குழந்தைகள் பெற்றுத் தர மட்டும் பிறந்தவர்களென நினைக்கிறார்கள்

மல்கங்கிரி மாவட்டத்தில் குறைந்தது 150 கிராமங்களில் இணைப்பு சாலைகள் கிடையாது (மொத்த ஒடிசாவிலும் இணைப்பு சாலைகள் இல்லாத கிராமங்கள் 1242 என பஞ்சாயத்து ராஜ் அமைச்சரான பிரதாப் ஜெனா பிப்ரவரி 18, 2020ல் சட்டசபையில் கூறினார்).

கொடாகுடாவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் டெண்டாபலி கிராமத்துக்கும் சாலை கிடையாது. “எங்களின் வாழ்க்கையை சுற்றி நீர் நிறைந்திருக்கிறது. எனவே நாங்கள் செத்தாலும் வாழ்ந்தாலும் யார் பொருட்படுத்தப் போகிறார்கள்?” எனக் கேட்கிறார் 70 வருடங்களாக டெண்டாபலியில் வாழும் கமலா கில்லோ. “எங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்த நீரை பார்த்தே கழித்துவிட்டோம். பெண்களுக்கும் இளம்பெண்களுக்கும் இது இன்னும் துயர்தான்.”

பிற கிராமங்களுக்கு செல்ல நேர்கையில் நீர்த்தேக்க பகுதியிலிருக்கும் ஜொதாம்போ பஞ்சாயத்தின் டெண்டாபலி, கொடாகுடா மற்றும் பிற மூன்று கிராமங்களை சேர்ந்தோர் மோட்டார் படகில் பயணிக்கின்றனர். 90 நிமிடங்கள் தொடங்கி நான்கு மணி நேரம் வரை ஆகும் பயணங்கள். 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சித்ராகொண்டாவின் சுகாதார வசதிகள் பெற படகு மட்டுமே வழி. 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சமூக சுகாதார மையத்துக்கு செல்ல இங்கிருந்து மக்கள் முதலில் படகில் செல்வார்கள். பிறகு பேருந்திலோ ஜீப்பிலோ செல்வார்கள்.

நீர்வளத்துறை அறிமுகப்படுத்திய மோட்டார் படகு சேவையை நம்ப முடியாது. ஏனெனில் காரணமின்றி அவ்வப்போது முன்னறிவிப்பின்றி அது ரத்து செய்யப்படும். மேலும் இந்த படகுகள் ஒரே ஒரு முறை மட்டுமே ஒரு நாளில் அக்கரைக்கான சேவை வழங்குகிறது. இக்கரைக்கு வர ஒரே ஒரு சேவை. தனியாரால் நடத்தப்படும் படகு சேவையில் ஒருவருக்கான டிக்கட் விலை 20 ரூபாய். அரசு நடத்தும் சேவையை விட பத்து மடங்கு அதிகம். அதுவும் மாலைக்கு மேல் செயல்படாது. ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் போக்குவரத்து கிடைப்பது பெரும் பிரச்சினைதான்.

“ஆதார் எடுப்பதென்றாலும் மருத்துவரை அணுக வேண்டுமென்றாலும் இத்தகைய போக்குவரத்தைதான் நாங்கள் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் பல பெண்கள் பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர்,” என்கிறார் மூன்று குழந்தைகளுக்கு தாயான 20 வயது குசுமா நரியா.

Samari Khillo of Tentapali hamlet says: 'We depend more on daima than the medical [services]. For us, they are doctor and god’
PHOTO • Jayanti Buruda
Samari Khillo of Tentapali hamlet says: 'We depend more on daima than the medical [services]. For us, they are doctor and god’
PHOTO • Jayanti Buruda

டெண்டாபலியின் சமாரி கில்லோ, ‘மருத்துவ சேவைகளை விட நாங்கள் வைத்தியச்சிகளையே சார்ந்திருக்கிறோம். எங்களுக்கு அவர்கள்தான் மருத்துவரும் கடவுளும்’ என்கிறார்

மேலும் அவர் சொல்கையில் தற்போது சமூக சுகாதார அலுவலர் இந்த குக்கிராமங்களுக்கு வருவதாக குறிப்பிடுகிறார். ஆனாலும் இங்கிருக்கும் சுகாதார அலுவலர்களுக்கு அதிக அனுபவம் இல்லை. தகவலும் தெரிவதில்லை. மாதத்துக்கு ஒருமுறையோ இருமுறையோ கிராமத்துக்கு வந்து இரும்புச்சத்து மாத்திரைகளும் பிற மாத்திரைகளும் உலர் உணவு வகைகளையும் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு பற்றிய ஆவணங்கள் ஒழுங்குப்படுத்தப்படவில்லை. எப்போதேனும் கடினமான பிரசவம் நேரும் பட்சத்தில், கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

இந்த கிராமங்களில் எந்த வித கூட்டங்களும் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுவதில்லை. சுகாதார பிரச்சினைகள் பற்றிய உரையாடல்கள் பெண்களிடமும் பதின்வயது பெண்களிடமும் நடப்பதில்லை. சமூக சுகாதார அலுவலரின் சந்திப்புகள் பள்ளிகளில் நடைபெற வேண்டும். ஆனால் கொடகுடாவில் பள்ளி கிடையாது (டெண்டாபலியில் பள்ளி இருந்தாலும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக வருவதில்லை). அங்கன்வாடி கட்டடமும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.

அப்பகுதியை சேர்ந்த ஜமுனா கரா சொல்கையில், ஜொதாம்போ பஞ்சாயத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் அடிப்படையான சிறு மருத்துவ உதவிகளை மட்டுமே செய்ய முடியும் என்றும் பிரசவம் அல்லது சிக்கலான நிலைகளை கையாள்வதற்கான வசதிகள் அங்கு கிடையாது என்றும் கூறுகிறார். அதனால்தான் அவரும் அவரை போன்ற பிற அலுவலர்களும் சித்ராகொண்டா சமூக சுகாதார மையத்தை விரும்புகிறார்கள். “ஆனால் அது தூரத்தில் இருக்கிறது. சாலையின் வழியாக செல்வது சாத்தியப்படாது. படகில் செல்வது ஆபத்து. அரசின் படகு சேவை எல்லா நேரங்களிலும் செயல்படுவதில்லை. ஆகவேதான் பல வருடங்களாக நாங்கள் உள்ளூர் வைத்தியச்சிகளை சார்ந்திருக்கிறோம்.”

டெண்டாபலி கிராமத்தை சேர்ந்த பரோஜா பழங்குடியான சமரி கில்லோ இதை உறுதிபடுத்துகிறார்: “நாங்கள் மருத்துவச் சேவையை விட வைத்தியச்சிகளையே சார்ந்திருக்கிறோம். என் மூன்று குழந்தைகளும் வைத்தியச்சிகளின் உதவியில் பிறந்தவர்கள்தான். எங்கள் கிராமத்தில் மூன்று வைத்தியச்சிகள் இருக்கின்றனர்.”

இங்கிருக்கும் 15 கிராமங்களில் இருக்கும் பெண்கள் வைத்தியச்சிகளையே சார்ந்திருக்கிறார்கள். “மருத்துவ மையங்களுக்கு செல்லாமலே நாங்கள் தாயாக காரணமாக இருக்கும் அவர்கள் எங்களுக்கு கிடைத்த வரம்,” என்கிறார் சமரி. “அவர்கள்தான் எங்களுக்கு மருத்துவரும் கடவுளும். பெண்களாக இருப்பதால் எங்களின் துயரத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எங்களுக்கும் இதயம் இருக்கிறது, வலி உண்டு என்பதை ஆண்கள்தான் புரிந்து கொள்வதே இல்லை. குழந்தை பெற்றுப் போட மட்டுமே நாங்கள் பிறந்திருப்பதாக நினைக்கிறார்கள்.”

Gorama Nayak, Kamala Khillo, and Darama Pangi (l to r), all veteran daima (traditional birth attendants); people of around 15 hamlets here depend on them
PHOTO • Jayanti Buruda

கொரமா நாயக், கமலா கில்லோ மற்றும் தரமா பங்கி (இடமிருந்து வலம்) ஆகியோர் அனுபவம் வாய்ந்த வைத்தியச்சிகள். 15 கிராமத்து மக்கள் இவர்களை சார்ந்திருக்கின்றனர்

கர்ப்பம் ஆக முடியாத பெண்களுக்கு மருத்துவ மூலிகைகளை வைத்தியச்சிகள் கொடுக்கின்றனர். அவை பயன்படவில்லை எனில், கணவர்கள் மறுமணம் செய்து கொள்கிறார்கள்.

13 வயதில் திருமணமாக 20 வயதுக்குள் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துவிட்ட குசுமா நரியா மாதவிடாய் பற்றி எதுவும் தனக்கு தெரியாது எனக் கூறுகிறார். கருத்தடை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. “குழந்தையாக இருந்தான். எதுவும் தெரிந்திருக்கவில்லை,” என்கிறார் அவர். “மாதவிடாய் நேர்ந்தபோது துணியை பயன்படுத்துமாறு தாய் கூறினார். பிறகு நான் வளர்ந்தவளாகி விட்டேனென சொல்லி உடனே திருமணம் செய்து கொடுத்துவிட்டார். கலவி பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. முதல் பிரசவத்தின்போது, என்னை மருத்துவமனையில் விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார். பெண் குழந்தை என்பதால் அது இறந்தாலும் பரவாயில்லை என சென்றுவிட்டார். ஆனால் என் மகள் உயிர் வாழ்ந்தாள்.”

அடுத்து பிறந்த இரண்டுமே ஆண் குழந்தைகள். “சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டாம் குழந்தை பெற்றெடுக்க நான் மறுத்தபோது என்னை அடித்தார்கள். ஏனெனில் அனைவரும் ஆண் குழந்தை எதிர்பார்த்திருந்தார்கள். எனக்கும் என் கணவருக்கும் கருத்தடை முறை பற்றிய எதுவும் தெரிந்திருக்கவில்லை. முன்பே தெரிந்திருந்தால் நான் கஷ்டம் அனுபவித்திருக்க மாட்டேன். எதிர்த்திருந்தால் வீட்டை விட்டு என்னை விரட்டியிருப்பார்கள்.”

குசுமாவின் வீட்டிலிருந்து பிரபாவின் வீடு அதிக தொலைவில் இல்லை. அவர் என்னிடம் பேசுகையில், “நான் உயிருடன் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அப்போது நேர்ந்த எல்லாவற்றையும் எப்படி பொறுத்துக் கொண்டேன் என தெரியவில்லை. கடுமையான வலியில் இருந்தேன். நான் படும் துயரை கண்டு என் சகோதரன் அழுது கொண்டிருந்தான். பிறகு பல மருத்துவமனைகளுக்கான பயணம், அதன் பின் இந்த குழந்தை, இதையும் பல நாட்களாக பார்க்க முடியாமலென பல துயரங்களை அனுபவித்தேன். எப்படி அவற்றை தாண்ட முடிந்தது என தெரியவில்லை. இது போன்ற துயரங்கள் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாதென கடவுளை பிரார்த்திக்கிறேன். ஆனால் நாங்கள் அனைவரும் மலைவாழ் பெண்கள். எங்கள் அனைவருக்கும் ஒரே வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது.”

மிருத்யுஞ்சய்யை பெற்றெடுக்க பிரபாவுக்கு நேர்ந்த அனுபவமும் இங்குள்ள கிராமத்து பெண்கள் பலரின் கதைகளும் இந்த பழங்குடி இந்தியப் பகுதியில் வசிக்கும் பெண்கள் எப்படி குழந்தைகள் பெற்றெடுக்கிறார்கள் என்பதும் நம்ப முடியாத விஷயங்களாக இருக்கின்றன. ஆனாலும் யாரேனும் மல்கங்கிரியில் என்ன நடக்கிறது என்பதை பற்றி கவலைப்படுகிறார்களா என்ன?

பாரி மற்றும் கவுண்ட்டர்மீடியா அறக்கட்டளையின் கிராமப்புற பதின்வயது மற்றும் இளம்பெண்கள் பற்றிய தேசிய அளவிலான செய்தி சேகரிப்பு திட்டம் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை ஆதரவில் நடத்தப்படும் முன்னெடுப்பு. விளிம்புநிலை மக்கள் குழுக்களில் வாழ்வோரின் அனுபவங்களை கொண்டு அவற்றின் சூழலை ஆராய்வதற்கான முன்னெடுப்பு.

இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்ய விருப்பமா? [email protected] மற்றும் [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்.

தமிழில் : ராஜசங்கீதன்

Jayanti Buruda

ಒಡಿಶಾದ ಮಲ್ಕಲ್‌ಗಿರಿಯ ಸೆರ್ಪಲ್ಲಿ ಗ್ರಾಮದವರಾದ ಜಯಂತಿ ಬುರುಡಾ ಕಳಿಂಗ ಟಿವಿಯ ಪೂರ್ಣಕಾಲಿಕ ಜಿಲ್ಲಾ ವರದಿಗಾರರು. ಅವರು ಗ್ರಾಮೀಣ ಪ್ರದೇಶದ ವರದಿಗಳಿಗೆ ಹೆಚ್ಚು ಪ್ರಾಶಸ್ತ್ಯ ನೀಡುತ್ತಾರೆ. ಜೀವನೋಪಾಯ, ಸಂಸ್ಕೃತಿ ಮತ್ತು ಆರೋಗ್ಯ ಶಿಕ್ಷಣದ ಮೇಲೆ ಅವರ ವರದಿಗಳು ಕೇಂದ್ರಿಕೃತವಾಗಿರುತ್ತವೆ.

Other stories by Jayanti Buruda
Illustration : Labani Jangi

ಲಬಾನಿ ಜಂಗಿ 2020ರ ಪರಿ ಫೆಲೋ ಆಗಿದ್ದು, ಅವರು ಪಶ್ಚಿಮ ಬಂಗಾಳದ ನಾಡಿಯಾ ಜಿಲ್ಲೆ ಮೂಲದ ಅಭಿಜಾತ ಚಿತ್ರಕಲಾವಿದರು. ಅವರು ಕೋಲ್ಕತ್ತಾದ ಸಾಮಾಜಿಕ ವಿಜ್ಞಾನಗಳ ಅಧ್ಯಯನ ಕೇಂದ್ರದಲ್ಲಿ ಕಾರ್ಮಿಕ ವಲಸೆಯ ಕುರಿತು ಸಂಶೋಧನಾ ಅಧ್ಯಯನ ಮಾಡುತ್ತಿದ್ದಾರೆ.

Other stories by Labani Jangi
Editor : Pratishtha Pandya

ಪ್ರತಿಷ್ಠಾ ಪಾಂಡ್ಯ ಅವರು ಪರಿಯ ಹಿರಿಯ ಸಂಪಾದಕರು, ಇಲ್ಲಿ ಅವರು ಪರಿಯ ಸೃಜನಶೀಲ ಬರವಣಿಗೆ ವಿಭಾಗವನ್ನು ಮುನ್ನಡೆಸುತ್ತಾರೆ. ಅವರು ಪರಿಭಾಷಾ ತಂಡದ ಸದಸ್ಯರೂ ಹೌದು ಮತ್ತು ಗುಜರಾತಿ ಭಾಷೆಯಲ್ಲಿ ಲೇಖನಗಳನ್ನು ಅನುವಾದಿಸುತ್ತಾರೆ ಮತ್ತು ಸಂಪಾದಿಸುತ್ತಾರೆ. ಪ್ರತಿಷ್ಠಾ ಗುಜರಾತಿ ಮತ್ತು ಇಂಗ್ಲಿಷ್ ಭಾಷೆಗಳಲ್ಲಿ ಕೆಲಸ ಮಾಡುವ ಕವಿಯಾಗಿಯೂ ಗುರುತಿಸಿಕೊಂಡಿದ್ದು ಅವರ ಹಲವು ಕವಿತೆಗಳು ಮಾಧ್ಯಮಗಳಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿವೆ.

Other stories by Pratishtha Pandya
Series Editor : Sharmila Joshi

ಶರ್ಮಿಳಾ ಜೋಶಿಯವರು ಪೀಪಲ್ಸ್ ಆರ್ಕೈವ್ ಆಫ್ ರೂರಲ್ ಇಂಡಿಯಾದ ಮಾಜಿ ಕಾರ್ಯನಿರ್ವಾಹಕ ಸಂಪಾದಕಿ ಮತ್ತು ಬರಹಗಾರ್ತಿ ಮತ್ತು ಸಾಂದರ್ಭಿಕ ಶಿಕ್ಷಕಿ.

Other stories by Sharmila Joshi
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan