2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெங்களூரில் திட்ட மேலாளர் பணி கிடைத்தபோது, ஓராண்டில் பொதுமுடக்கத்தினால் இந்த வேலை பறிபோகும் என ஏரப்பா பாவ்கி நினைத்திருக்கவில்லை. 2020 ஜூன் முதல் வடகிழக்கு கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் உள்ள தனது காம்தானா கிராமத்தில் மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலைசெய்து வருகிறார்.

“வேலையிழந்து ஒரு மாதம் கழித்து ஏப்ரலில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் பற்றி அறிந்தேன்,” எனும் அவர், “வருவாய் ஈட்டினால்தான் என் குடும்பம் உயிர் வாழ முடியும். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது எங்களிடம் பணமில்லை. பண்ணை உரிமையாளர்களும் வேலைக்கு அழைக்காததால் என் தாயும் வேலையின்றி இருந்தார்.”

கடின உழைப்பு, அதிகரிக்கும் கடன், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, வைராக்கியம் போன்றவற்றுடன், வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் முனைப்புடன் படித்து, அதன் மூலம் கிடைத்த வேலை பொதுமுடக்கத்தினால் கைநழுவிப் போனது.

ஏரப்பா 2017ஆகஸ்ட் மாதம் தனியார் கல்லூரியில் பி.டெக் முடித்தார். அதற்கு முன் 2013ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக்கில் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்திருந்தார். இரண்டு படிப்புகளையும் பிதார் நகரில் படித்தார். பட்டப்படிப்பில் சேர்வதற்கு முன் வேளாண் கருவிகளை உற்பத்தி செய்யும் புனேவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் தொழில்நுட்ப பயிற்சிபெறுபவராக பணியாற்றி மாதம் ரூ.12,000 வரை வருவாய் ஈட்டினார். “நான் நல்ல மாணவர் என்பதால் பெரிய பொறுப்புகள் கிடைக்கும், அதிலிருந்து நிறைய சம்பாதிக்கலாம் என நினைத்தேன். ஒரு நாள் என்னையும் பொறியாளர் என்று அழைப்பார்கள் என நினைத்திருந்தேன்,” என்கிறார் 27 வயதாகும் ஏரப்பா.

அவரை படிக்க வைக்க குடும்பத்தினர் பல கடன்களை பெற்றனர். “மூன்றாண்டிற்கு [பி.டெக் படிப்பிற்கு] ரூ.1.5 லட்சம் தேவைப்பட்டது,” என்கிறார் அவர். “உள்ளூர் சுய உதவிக் குழுவினரிடம் ரூ. 20,000, ரூ.30,000 வரை என் பெற்றோர் வாங்கித் தந்தனர்.” 2015 டிசம்பர் மாதம் ஐந்தாவது செமஸ்டர் படித்துக் கொண்டிருந்த போது அவரது 48 வயது தொழிலாளியான தந்தை மஞ்சள் காமாலையால் காலமானார். அவரது சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் ரூபாய் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் உறவினர்களிடம் பெற்றோம். “பட்டப் படிப்பை முடித்தபோது என் தோளில் அனைத்து பொறுப்புகளும் வந்துவிட்டன,” என்கிறார் ஏரப்பா.

பெங்களூரில் பிளாஸ்டிக் அச்சு வார்க்கும் இயந்திரங்களைச் செய்யும் சிறிய நிறுவனத்தில் அவருக்கு திட்ட மேலாளராக மாதம் ரூ.20,000 சம்பளத்தில் வேலை கிடைத்தபோது அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அது 2019 மார்ச் மாதம். “என் தாய்க்கு மாதந்தோறும் ரூ.8000- ரூ.10,000 வரை அனுப்பினேன். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு எல்லாம் மாறிவிட்டது,” என்கிறார் அவர்.

Earappa Bawge (left) with his mother Lalita and brother Rahul in Kamthana village (right) of Karnataka's Bidar district, where many sought work at MGNREGA sites during the lockdown
PHOTO • Courtesy: Earappa Bawge
Earappa Bawge (left) with his mother Lalita and brother Rahul in Kamthana village (right) of Karnataka's Bidar district, where many sought work at MGNREGA sites during the lockdown
PHOTO • Courtesy: Sharath Kumar Abhiman

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பலர் வேலை பார்க்கும் கம்தனா கிராமத்தின் ஏரப்பா பாகே (இடது) அவரின் தாய் லலிதா மற்றும் சகோதரர் ராகுல் (வலது) ஆகியோருடன்

ஏரப்பாவிற்கு தாய் லலிதாவிடமிருந்து தொடர் அழைப்புகள் வந்தன. தனது கிராமத்தில்தான் மகன் பாதுகாப்பாக இருப்பான் என அவர் கருதினார். “நான் மார்ச் 22ஆம் தேதி வரை வேலை செய்தேன். மாத இறுதி என்பதால் ஊர் திரும்புவதற்கு கூட என்னிடம் பணமில்லை. என் அத்தானிடம் ரூ.4,000 கடன் வாங்கினேன்,” என்கிறார் அவர். தனியார் கார் மூலம் அவர் வீடு திரும்பினார்.

பழங்குடியின கோண்டு சமூகத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட இக்குடும்பம் அடுத்த மாதம் தாயின் வருமானத்தையே சார்ந்திருந்தன. தினக்கூலியாக ரூ.100-150 பெற்றுக் கொண்டு நிலங்களில் புற்களை அகற்றும் வேலையை அவர் செய்து வந்தார். இதுபோன்ற பணிகளுக்கு அனுபவம் வாய்ந்த பெண்களைத் தான் பண்ணை உரிமையாளர்கள் அனுமதிப்பார்கள்.  என்னைப் போன்ற இளைஞர்களுக்கு கொடுக்க மாட்டார்கள் என்கிறார் ஏரப்பா. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான குடும்ப அட்டையில் பொருட்களைப் பெற்றனர். ஏரப்பாவிற்கு இரண்டு சகோதரர்கள் - 23 வயதாகும் ராகுல் கர்நாடகா அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தயாராகி வருகிறார். 19 வயது விலாஸ் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ராணுவத்தில் சேர தன்னை தயார் செய்து வருகிறார். குடும்பத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் சொந்த பயன்பாட்டிற்காக துவரை, பாசிப்பயறு, சோளம் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். குடும்பத்திற்குச் சொந்தமாக உள்ள எருமை மாட்டை ஏரப்பாவின் சகோதரர் கவனித்துக் கொள்கிறார். பால் விற்று மாதம் ரூ.5,000 வரை வருவாய் ஈட்டுகின்றனர்.

ஏரப்பா 33 நாட்கள் நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்துள்ளார் - பெரும்பாலானவை கால்வாய் சுத்தப்படுத்தும் பணி - இதிலிருந்து மொத்தமாக ரூ.9,000 கிடைத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் 2005ன்கீழ் இக்குடும்பத்திற்கு ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை அளிக்கப்பட்டது. இதன்படி ஜூலை மாதம் தலா 14 நாட்கள் அவரது இரு சகோதரர்களும், 35 நாட்கள் தாயாரும் வேலை செய்துள்ளனர். செப்டம்பர் மாதம் முதல் அவரது தாயார் வயல்களில் களையெடுக்கும் வேலைக்குச் சென்று தினக்கூலியாக ரூ.100-150 பெறுகிறார்.

பிதார் திரும்பிய சில நாட்களில் ஏரப்பா பணியாற்றிய தொழிற்சாலை மூன்று மாதங்களுக்கு மூடப்பட்டது. “எல்லோருக்கும் வேலை அளிக்க முடியாது என்று முதலாளி சொல்லிவிட்டார்,” என்கிறார் அவர் விரக்தியுடன். “பெங்களூரு, புனே, மும்பையில் வேலை செய்யும் எனது மூன்று நான்கு பொறியியல் நண்பர்களுக்கு தன்விவரக் குறிப்பை அனுப்பியுள்ளேன்,” என்கிறார் அவர். “நான் தொடர்ந்து வேலைவாய்ப்பு இணைய தளங்களை பார்த்து வருகிறேன். ஏதேனும் ஒரு வகையில் வேலை [மீண்டும்] கிடைக்கும் என நம்புகிறேன்.”

*****

இதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞரின் கனவுகளும் நொறுங்கிப்போனது. 25 வயதாகும் ஆதிஷ் மித்ரே 2019 செப்டம்பர் மாதம் எம்.பி.ஏ (பெங்களூரு ஆக்ஸ்ஃபோர்ட் பொறியியல் கல்லூரியில்) முடித்தார். அவரும் ஏரப்பாவுடன் காம்தானா கிராமத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் சில மாதங்களாக பணியாற்றுகிறார்.

 Atish Metre (right), who has completed his MBA coursework, also went to work at MGNREGA sites in Kamthana village in Karnataka
PHOTO • Courtesy: Earappa Bawge
 Atish Metre (right), who has completed his MBA coursework, also went to work at MGNREGA sites in Kamthana village in Karnataka
PHOTO • Courtesy: Atish Metre

ஆதிஷ் மித்ரே (வலது) எம்பிஏ படிப்பை அண்மையில் முடித்தார், கர்நாடகாவின் காம்தானா கிராமத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுகிறார்

இந்தாண்டு ஏப்ரல் மாதம் பெங்களூரு ஹெச்டிஎஃப்சி வங்கியில் விற்பனை பிரிவில் செய்து வந்த வேலையை பொதுமுடக்கத்தினால் இழக்க நேரிட்டது. “எங்களுக்கான இலக்கினை அடைய வேண்டுமானால், பலரையும் சந்திக்க வேண்டும். ஆனால், வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அனுமதியுமில்லை, பாதுகாப்பும் இல்லை. என் குழுவில் பெரும்பாலானோர் பணியிலிருந்து விலகி விட்டனர். எனக்கும் வேறு வழியில்லை,” என்கிறார் அவர்.

அவர் தனது 22 வயது இளம் மனைவி சத்யவதி லட்கேரியுடன் காம்தானா திரும்பிவிட்டார். பி.காம் பட்டதாரியான அவரும் ஆதிஷூடன் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றினார். ஆனால் அவரால் அத்தகைய கடினமான உடல் உழைப்பைத் தர முடியவில்லை. அகழிகள் தோண்டுவது, சிறு அணைகளை சுத்தம் செய்தல், ஏரிகளை தூர் வாருவது என நவம்பர் 21ஆம் தேதி வரை 100 நாட்கள் வேலை செய்து ஆதிஷ் ரூ.27,000 ஈட்டியுள்ளார்.

ஹோலியா பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஆதிஷ் குடும்பத்தில், அவரது இரண்டு மூத்த சகோதரர்களுக்கு ஏப்ரலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதற்காக அவரது தாய் உள்ளூர் மகளிர் சுய உதவிக் குழுவிடம் ரூ.75,000 கடன் வாங்கியுள்ளார்; வாரத் தவணையாக அதைச் செலுத்த வேண்டும். 2019 நவம்பர் மாதம் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக ஆதிஷ் ரூ.50,000 கடன் வாங்கியிருந்தார். அதற்கான மாத தவணை ரூ. 3,700 செலுத்த வேண்டும். பெங்களூரு நிறுவனத்தில் ஏசி டெக்னிஷீயனாக உள்ள குடும்பத்தின் மூத்த சகோதரரான பிரதீப்பையே முழு குடும்பமும் அதிகம் சார்ந்துள்ளது. பெற்றோரும் தொழிலாளர்கள். எட்டு உறுப்பினர்கள் கொண்ட இக்குடும்பத்தில் மற்றொரு சகோதரரும் உள்ளார்.

“ஊரடங்கிற்கு பின் ஏப்ரல் மாதம் சகோதரர் பிரதீப்பும் என்னுடன் காம்தானா திரும்பிவிட்டார். ஆகஸ்ட் மாதம் மீண்டும் பெங்களூரு சென்று பழைய நிறுவனத்தில் அவர் சேர்ந்துவிட்டார்,” என்கிறார் ஆதிஷ். “நானும் திங்கட்கிழமை [நவம்பர் 23]. பெங்களூரு செல்கிறேன்;  எந்தத் துறையிலும் வேலை செய்ய தயாராக இருக்கிறேன்.”

*****

ஆதிஷ், ஏரப்பாவைப் போன்றில்லாமல் பிரீதம் கெம்பி 2017ஆம் ஆண்டு பட்டம் முடித்த பிறகு காம்தானாவில் தங்கிவிட்டார். அவர் பகுதி நேர பணியாக குடிநீர் ஆலையில் தரநிலை பரிசோதகராக இருந்து மாதம் ரூ.6,000 சம்பாதித்தார். 2019 டிசம்பர் மாதம் பி.எட் முடித்தார். “பட்டம் பெற்றவுடன் குடும்பத்தை கவனிக்க வேண்டிய நிலையால் உடனடியாக வேலையை தொடங்கிவிட்டேன், ஊரைவிட்டு வெளியேச் செல்ல நான் விரும்பவில்லை,” என்கிறார் அவர். “என் அம்மாவுக்கு நான் தேவைப்படுவதால், இப்போதும் எந்த நகருக்கும் செல்ல விரும்பவில்லை.”

அவரது குடும்பமும் ஹோலியா எனும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தது - அவரது தாயார் துணி தைத்து சம்பாதித்து வருகிறார். ஆனால் தொடர்ந்து உழைத்தால் கண் பார்வையில் தொந்தரவும், கால் வலியும் ஏற்பட்டுள்ளது; அவரது சகோதரி பி.எட் படித்து வருகிறார், மூத்த சகோதரிகள் இருவரும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்; விவசாயம் செய்து வந்த தந்தை 2006ஆம் ஆண்டு காலமானார்.
Left: Pritam Kempe with his mother Laxmi Kempe and sister Pooja in Kamthana. Right: Mallamma Madankar of Taj Sultanpur village in Gulbarga district. Both put their career plans on hold and tried their hand at daily wage labour
PHOTO • Courtesy: Pritam Kempe
Left: Pritam Kempe with his mother Laxmi Kempe and sister Pooja in Kamthana. Right: Mallamma Madankar of Taj Sultanpur village in Gulbarga district. Both put their career plans on hold and tried their hand at daily wage labour
PHOTO • Courtesy: Mallamma Madankar

இடது: காம்தானாவில் தாய் லக்‌ஷ்மி கெம்பி, சகோதரி பூஜாவுடன் பிரீதம் கெம்பி. வலது: குல்பர்கா மாவட்டம் தாஜ் சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லம்மா மதன்கார். இருவருமே படிப்பு சார்ந்த பணித் திட்டங்களை ஒதுக்கிவிட்டு தினக்கூலியாக வேலை செய்கின்றனர்

மூத்த சகோதரியின் திருமணத்திற்காக பிப்ரவரி மாதம் தனியார் நிதி நிறுவனத்திடம் பிரீதம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடனை அடைக்க  மாதம் ரூ.5,500 செலுத்தி வந்தார். ஊரடங்கு காரணமாக அவர் மீண்டும் தாயின் நகைகளை கிராமத்தில் ஒருவரிடம் அடகு வைத்து வட்டி செலுத்தி வருகிறார்.

மே முதல் வாரத்திலிருந்து அவரும் ஏரப்பா, ஆதிஷூடன் நூறு நாள் வேலைத் திட்டத்தில் இணைந்துவிட்டார். “கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. மழை பெய்யும்போது அந்த வேலையும் இருக்காது,” என்று என்னிடம் அவர் முன்பு சொன்னார். நவம்பர் 21ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் வேலைசெய்து பிரீதம் ரூ.26,000 சம்பாதித்துள்ளார்.

“நான் வேலை செய்த குடிநீர் நிறுவனத்தில் வேலை அதிகம் இருக்காது,” என்கிறார் அவர். “ஒரு வாரத்திற்கு மூன்று-நான்கு முறை சில மணி நேரங்கள் அங்கு செல்வேன். அக்டோபர் மாதம் எனக்கு [ஒரு முறை] ரூ.5,000 கொடுத்தனர். சில மாதங்களுக்கு எனது சம்பளம் நிலுவையில் உள்ளது. இப்போதும் சம்பளம் முறையாக கிடைக்குமா என உறுதியாக தெரியாது. எனவே நான் பிதாரில் உள்ள தொழிற்பேட்டையில் வேலை தேடுகிறேன்.”

*****

ஏரப்பா, ஆதிஷ், பிரீதம் போன்று காம்தானா கிராமத்தில் பலரும் உள்ளனர் - 11,179 மக்கள் தொகை கொண்ட இங்கு பொதுமுடக்கத்தினால், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

“ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தொடக்கத்தில், பலரும் வேலையின்றி உணவிற்காகப் போராடினர்,” என்கிறார் லக்ஷ்மி பாவ்கி. இவர்கள் புத்தா பசவா அம்பேத்கர் இளைஞர் அணியை 2020 மார்ச் மாதம் அமைத்தனர். வெவ்வேறு வயதைச் சேர்ந்த சுமார் 600 உறுப்பினர்கள் இந்த அணியில் உள்ளனர். குடும்ப அட்டை இல்லாத அல்லது ரேஷன் கடைகள் அருகில் இல்லாத குடும்பங்களுக்கு உதவுவதற்காக பிதார் நகர மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ரேஷன் பொருட்களை விநியோகிக்கின்றனர். அங்கன்வாடிகள் மூலம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை அளிக்கின்றனர். இந்த அமைப்பு பல வகைகளில் உதவி வருகின்றது.

குல்பர்கா மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த செயற்பாட்டாளரான 28 வயதாகும் லக்ஷ்மி நூறுநாள் வேலைக்கு பதிவு செய்வது குறித்து பேசினார். “வேலைக்கான அட்டைகளை வேலையில்லாத இளைஞர்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல,” என்று சொல்லும் அவர், ஊராட்சி அளவில் உள்ள குளறுபடிகளே இதற்கு காரணம் என்கிறார். “எனினும் மாவட்டத்தின் உயர் அலுவலர்கள் வேலையை உறுதி செய்தனர்.”

At MGNREGA trenches in Kamthana. The village's young people are desperate for work where they can use their education
PHOTO • Courtesy: Sharath Kumar Abhiman
At MGNREGA trenches in Kamthana. The village's young people are desperate for work where they can use their education
PHOTO • Courtesy: Sharath Kumar Abhiman

கம்தானாவின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட வேலைகள். கிராமத்தின் இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலை பார்க்க விரும்புகிறார்கள்

2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் காம்தானாவில்  நூறு நாள் வேலைக்கான 494 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்கிறார் பிதார் தாலுக்கா ஊராட்சியின் உதவி இயக்குநர் ஷரத் குமார் அபிமான். “பெருநகரங்கள், நகரங்களில் இருந்து பிதாருக்கு பெருமளவில் பணியாளர்கள் புலம்பெயர்வதை மாவட்ட நிர்வாகம் உணர்ந்துள்ளது. எனவே அவர்களுக்கு வேலை அளிக்கும் அட்டையை வழங்கத் தொடங்கினோம், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிகளை ஒதுக்கினோம்,” என்று என்னிடம் தொலைப்பேசி மூலம் அபிமான் தெரிவித்தார்.

*****

குல்பர்கா மாவட்டம் காம்தானாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாஜ் சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதாகும் மல்லம்மா மதன்கார் 2017ஆம் ஆண்டு முதல் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுகிறார். மாணவியான அவர், ஏரிகளை தூர் வாருதல், பண்ணைக் குட்டைகள், வடிகால்கள், சாலைகள் அமைத்தல் போன்ற வேலைகளைச் செய்து வருகிறார். “நான் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பி 9 மணி வரை வேலை செய்வேன், பிறகு அங்கிருந்து என் கல்லூரிக்கு பேருந்து பிடித்து செல்வேன்,” என்கிறார் அவர்.

குல்பர்காவில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கல்லூரியில் 2018 மார்ச் மாதம் அவர் தனது சட்டப் படிப்பை முடித்து மாதம் ரூ.6,000 சம்பளத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஒன்பது மாத ஒப்பந்தப் பணியாளராக இருந்தார். “குல்பர்கா மாவட்ட நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரிடம் என் சட்ட பயிற்சியை தொடங்க விரும்பினேன், என் கல்லூரி பிராஜக்டுகளுக்கு உதவிய ஒருவரிடம் பேசியும் வைத்திருந்தேன். நீதிமன்றத்தில் இந்தாண்டு பணியைத் தொடங்க திட்டமிட்டுருந்தேன், ஆனால் தொடங்க முடியவில்லை [கோவிட்டினால்].”

மல்லமாவும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஹோலியா சமூகத்தவர் - ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதங்களில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்குத் திரும்பினார். “மழை, சமூக இடைவெளி போன்ற காரணங்களால் எங்கள் கிராம அலுவலர்கள் இந்தாண்டு நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்ய எங்களை அனுமதிக்கவில்லை, 14 நாட்கள் மட்டுமே வேலை செய்தேன்,” என்கிறார் அவர். “கோவிட் இல்லாவிட்டால், நீதிமன்றத்தில் என் பணியைத் தொடங்கியிருப்பேன்.”

ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மல்லம்மாவின் குடும்பம் கல்வி மூலம் முன்னேற கடினமாக உழைத்தது; ஒரு சகோதரி எம்.ஏ, பி.எட் பட்டம் பெற்றுள்ளார் (பெங்களூரு என்ஜிஓவில் சர்வேயராக பணியாற்றினார்), மற்றொருவர் சமூகப் பணியில் முதுநிலை பட்டம் பெற்றவர் (பிதாரில் என்ஜிஓவில் பணியாற்றினார்); சகோதரர் எம்.காம் பட்டம் பெற்றவர்.

62 வயதாகும் தாயார் பீம்பாய் அவர்களின் மூன்று ஏக்கர் நிலத்தில் சோளம், தானியங்கள், பிற பயிர்களை பயிரிட்டு வருகிறார். சொந்த பயன்பாட்டிற்கு உற்பத்திப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். குல்பர்கா மாவட்டம் ஜெவார்கி தாலுக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் அவர்களின் தந்தை ஆசிரியராக இருந்தவர். 2002ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்ற பிறகு அவர் காலமானார், அவரது மாத ஓய்வூதியம் ரூ.9,000 குடும்பத்திற்கு வருகிறது.

“பொதுமுடக்கத்தினால் என் சகோதரி வீடு திரும்பிவிட்டாள்,” என்கிறார் மல்லம்மா. “இப்போது எல்லோரும் வேலையிழந்துள்ளோம்.”

காம்தானா கிராமத்தில் அவரைப் போன்ற இளைஞர்கள் கல்விக்கு ஏற்ற வேலையைத் தேடுவது கடினமாக உள்ளது. “பொறுப்புகளைக் கையாளும் ஏதாவது ஒரு வேலையை விரும்புகிறேன்,” என்கிறார் ஏரப்பா. “என்னுடைய படிப்பு பயன்பட வேண்டுமென விரும்புகிறேன். நான் பொறியாளர், என் பட்டப் படிப்பிற்கு மதிப்பளிக்கும் வேலையை தேடுகிறேன்.”

ஆகஸ்ட் 27 முதல் நவம்பர் 21 வரை நடத்தப்பட்ட தொலைப்பேசி வழி நேர்காணல்கள் மூலம் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தமிழில்: சவிதா

Tamanna Naseer

ತಮನ್ನಾ ನಾಸೀರ್ ಬೆಂಗಳೂರು ಮೂಲದ ಫ್ರೀಲಾನ್ಸ್‌ ಪತ್ರಕರ್ತರು

Other stories by Tamanna Naseer
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha