டெல்லி நகரத்திற்கு வெளியே லால் குயானில் உள்ள புல் பெலாத் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் ‘தள்ளுவண்டி சிறுவன்’ அல்லது ‘சில்லி சிப்ஸ் சிறுவனை’ தெரிந்து வைத்துள்ளனர். இந்தப் பகுதியில் இளம் தள்ளுவண்டி வியாபாரி இவன்தான்.

குடிசை பகுதியில் உள்ள குறுகிய பாதை வழியாக அவன் செல்வதை நான் பார்த்துவிட்டேன். திறந்தவெளி சாக்கடையின் ஓரத்தில் காலியாக இருக்கும் இடத்தில் தனது தள்ளுவண்டியை நிறுத்துகிறான். வண்டி நகராமல் இருப்பதற்காக சக்கரத்தின் அடியில் கற்களை வைத்துவிட்டு அறைக்குள் செல்கிறான். இன்னும் கொஞ்ச நேரத்தில் தனது தள்ளுவண்டியில் வைத்து உருளைக்கிழங்கு சிப்ஸையும் மோமோஸையும் விற்கப்போகும் 14 வயதான அர்ஜூன் சிங்கிற்கு இது தினசரி வழக்கம்.

கூச்ச சுபாவம் கொண்ட, ஆனால் சுறுசுறுப்பான இந்த சிறுவன்  கணவரை இழந்த தன் அம்மாவோடு வாழ்ந்து வருகிறான். அந்த சிறிய அறையின் உள்ளே எந்த மரச் சாமான்களும் இல்லை. அவர்களது வீட்டின் சுவற்றில் கண்ணாடி ஒன்று உள்ளது. அதன் மூலையில் இதய வடிவில் பழுப்பு நிற டேப் ஒட்டப்பட்டுள்ளது. அதில் லட்சுமி+அர்ஜூன் என எழுதப்பட்டுள்ளது. “இதை நான்தான் எழுதினேன். எங்கள் வீட்டிற்கு வரும் யாரும் எங்கள் உலகத்தை இதில் பார்ப்பார்கள்” என்கிறான் அர்ஜூன்.

இது தனிமையான, கடுமையான உலகம்.

ஜூலை 14, 2013 அன்று, இந்திராகாந்தி தேசிய கலை மையத்தில் உள்ள சாக்கடை குழியை சுத்தம் செய்யும் போது ராஜேஸ்வர் சிங் இறந்து போனார். 2011-ம் ஆண்டிலிருந்து அவர் அங்கு பணியாற்றி வருகிறார். விஷ வாயு தாக்கப்பட்டு இறந்த மூவரில் இவரும் ஒருவர். அசோக் குமார் மற்றும் சதிஷ் சிங் ஆகியோர் மற்ற இருவர். மூவருமே அரசாங்கம் நடத்தும் நிகழ்த்து கலை மையத்தின் ஒப்பந்த பணியாளர்கள். அதுமட்டுமல்ல, இறந்த மூவருமே வால்மீகி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் அனைவரும் தங்கள் குடும்பத்தோடு திரிலோகபுரியில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வந்தவர்கள். (கணவர் இறந்த பிறகு, திருமணமான தனது மகள் மினு வசிக்கும் லால் குயானுக்கு அர்ஜூனை அழைத்து சென்று விட்டார் லட்சுமி).

வீடியோ பார்க்க: ‘எனக்கு பணம் வேண்டாம். தயவுசெய்து எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவுங்கள்’ என்கிறார் லட்சுமி

அன்றிலிருந்து, அசோக்குமார் மற்றும் சதிஷ் சிங்கின் குடும்பத்தினர் மீருட்டில் உள்ள வீட்டிற்கு வந்துவிட்டனர். 2014 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, இதுபோன்ற மனிததன்மையற்ற அபாயகரமான பணிகளை செய்யும் போது இறக்கும் துப்புரவு பணியாளர் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும் பத்து லட்சம் இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை. ராஜேஸ்வர் சிங் இறந்து நான்கு வருடங்களுக்கு பிறகும், 4 லட்ச ரூபாய் மட்டுமே லட்சுமிக்கு கிடைத்துள்ளது. இவரது கணவர் முழுநேர பணியாளர் அல்ல, ஒப்பந்த ஊழியர் மட்டுமே என கூறி இன்னும் முழு தொகை வழங்கப்படவில்லை.

30 வயதை கடந்த லட்சுமியும் ஒருகாலத்தில் பெருக்குவது, குப்பையை அகற்றுவது மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை அதே தேசிய கலை மையத்தில் துப்புரவு பணியாளராக இருந்துள்ளார். லட்சுமியும் அவரது கணவரும் மாதத்திற்கு ரூ.3500 சம்பளமாக பெற்றனர். 2011-ம் ஆண்டில் அவர்களது மகள் மினு திருமணம் ஆன பிறகு, வேலை செய்ய விருப்பமின்றி எங்கும் போகாமல் இருந்தார் லட்சுமி. தற்போது தனது கணவர் இறந்த பிறகு, துப்புரவு அல்லது மலம் அள்ளுவதை ஒரு வேலையாக கூட அவர் கருதுவதில்லை.

“நாங்கள் பட்டியல் சாதியை சேர்ந்த வால்மீகி சமூகத்தினர். உத்தரபிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள சஞ்சுலி கிராமத்தில்தான் என் சிறு வயதை கழித்தேன். என் தந்தை ரோஷன்லால் விவசாய தொழிலாளியாக இருந்தார். என் அம்மா ராம்காளி பெருக்குவது, சுத்தப்படுத்துவது, குப்பையை அகற்றுவது, சாணத்தை அள்ளுவது என கிராமத்தில் துப்புறவு வேலை செய்தார்” என விளக்கம் தருகிறார் லட்சுமி. அப்போதெல்லாம் கிராமத்தில் கழிவறைகளே கிடையாது. சமர் சாதியைச் சேர்ந்தவர்கள் இறந்த விலங்குகளை தூக்கிச் செல்வார்கள் என சொல்கிறார் லட்சுமி.

லட்சுமிக்கு 13 அல்லது 14 வயதில் திருமணம் நடந்தது. அப்போது ராஜேஸ்வருக்கு 17 அல்லது 18 வயது இருக்கலாம். அவருக்கு ஹர்யானாவில் உள்ள ரோதக் சொந்த ஊராக இருந்தாலும், டெல்லியிலிருந்து கழிவறை மற்றும் சாக்கடை குழி சுத்தம் செய்யும் வேலைகளை செய்து வந்தார். அவரது குடும்பத்தில் ஒவ்வொருவரும் துப்புரவு பணியாளர்களே. இதுகுறித்து லட்சுமி கூறுகையில், “எனது மாமியார் போலீஸ் தலைமையகத்தில் துப்புரவு பணியாளராக இருந்தார். அவர் இறந்த பிறகு அந்த வேலைக்கு நான் கடுமையாக முயற்சி செய்தேன். இப்போது விதிகள் மாறிவிட்டது என கூறி அதிகாரிகள் எனக்கு வேலை தர மறுத்துவிட்டனர். இதற்கு முன்பு நேரு ஸ்டேடியத்திலும் நிர்மல் பவனிலும் எனது கனவர் துப்புரவாளராக இருந்தார். ஆரம்ப நாட்களில் அவர் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு செல்லும்போது, ஒரு மாதத்திற்கு 400 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கும். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாதவர், எங்களுக்கும் எந்த கவலையும் தராதவர்”.

a boy with his family getting his pushcart ready
PHOTO • Bhasha Singh

லட்சுமியின் மகன் அர்ஜூன் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தள்ளுவண்டியில் ஸ்னாக்ஸ் விற்று வருகிறார்.

லால் குயானில் உள்ள அவர்களது வீட்டின் சுவற்றில் கண்ணாடி ஒன்று உள்ளது. அதன் மூலையில் இதய வடிவில் பழுப்பு நிற டேப் ஒட்டப்பட்டுள்ளது. அதில் லட்சுமி+அர்ஜூன் என எழுதப்பட்டுள்ளது. “இதை நான்தான் எழுதினேன். எங்கள் வீட்டிற்கு வரும் யாரும் எங்கள் உலகத்தை இதில் பார்ப்பார்கள்” என்கிறார் அர்ஜூன். இது தனிமையான வித்தியாசமான உலகம்.

ராஜேஸ்வர் இறக்கும்போது அவர்களது மகன் அர்ஜூனுக்கு பத்து வயது கூட ஆகவில்லை. “என் அப்பா மிகவும் அழகானவர். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். எனது கண் புருவங்கள் அவருக்கு இருப்பதைப் போலவே உள்ளது. அவரைப் போலவே நானும் குறைவான உயரம். அவருக்கு வெண்டைக்காய் பிடிக்கும், எனக்கும் தான். அவர் சமையல் செய்ய விரும்புவார், நானும் இப்போது கட்டாய தேவைக்காக சமைக்கிறேன். அவர் அன்பானவர். என்னை சிண்டூ-ன்னு கூப்பிடுவார்” என தன் நினைவுகளை பகிர்கிறான் அர்ஜூன்.

தன் அப்பா அடிக்கடி பாடும் – ‘என்னை அவ்வுளவு எளிதில் நீ மறந்து விட முடியாது’ - பாடலை நன்றாக நியாபகம் வைத்துள்ளான் அர்ஜூன். “இனி யாரையும் நான் அப்பா என கூப்பிட முடியாது என்பதுதான் இப்போது எனக்கு மிகப்பெரிய பிரச்சனை. என் அப்பா இறக்கும்போது எனக்கு பத்து வயது கூட ஆகவில்லை. என் அம்மா கவலையில் எப்போதும் அழுதுகொண்டே இருப்பார். யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. உறவினர்கள் அனைவரும் எங்களை கைவிட்டு விட்டனர். நான் வேகமாக வளர வேண்டும். அப்போதுதான் என் அம்மாவிற்கு நல்ல வசதியை ஏற்படுத்தி கொடுக்க முடியும்” என்கிறான் அர்ஜூன்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மணி 3 இருக்கும். தனது பொருட்களோடு அர்ஜூன் கிளம்ப வேண்டிய நேரமிது. சாக்குகளில் இருந்து உருளைக்கிழங்கை எடுத்து ஒவ்வொன்றாக வெட்டுகிறான். சிப்ஸை கழுவிய பிறகு அதில் மசாலாவை சேர்க்கிறான். இதையெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் சமையல் நிபுணர் போல் நம்மிடம் விவரிக்கிறான். பிறகு மோமோஸ் தயார் செய்ய தொடங்குகிறான். இறுதியில், கேஸ் சிலிண்டர், அடுப்பு, பாத்திரம், தட்டு, சட்னி அனைத்தையும் தள்ளுவண்டியில் எடுத்து வைத்து கிளம்ப தயாராகிறான். சோளத்தை அடுக்கிவைக்க அவனது அம்மா உதவுகிறார்.

தினமும் பள்ளி முடிந்து வந்ததும் ஸ்னாக்ஸை விற்பனை செய்கிறான் அர்ஜூன். நன்றாக வியாபாரம் ஆகும் நாட்களில் 100 முதல் 150 ரூபாய் வரை லாபம் இடைக்கிறது. சில நாட்களில் 50 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கிறது. ஒரு சிலர், ஒரு தட்டு ஸ்னாக்ஸின் விலையான 10-15 ரூபாயை கூட கடன் சொல்லி வாங்குகிறார்கள். பொதுவாக வார இறுதி நாட்களிலும் திருவிழா காலங்களிலும் விற்பனை அதிகமாக இருக்கும்.

இது நிச்சியமற்ற வாழ்க்கை. அரசாங்க மூலம் கிடைக்கும்  கணவரை இழந்தவருக்கான உதவிதொகையான 2000 ரூபாய் மட்டுமே இதர வருமானம் என்பதால் இதை தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. அருகிலுள்ள மக்கள், குறிப்பாக ஆண்கள் எங்கள் சிறு வளர்ச்சியை கண்டு பொறாமை அடைகிறார்கள். சாலையோர சாப்பாடு கடையால் தான் இந்த இடம் குப்பையாகிறது என எங்களை குறை கூறுகிறார்கள் என்கிறார் லட்சுமி. “தனியாக இருக்கும் ஒரு பெண், அதுவும் குறிப்பாக வால்மீகி சாதியைச் சேர்ந்த பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதை இந்த ஆண்கள் விரும்புவதில்லை. எப்போது தள்ளுவண்டியை அப்புறபடுத்தலாம் என அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் அருகில் வசிக்கும் மெருனிஸா கதும்.

a boy besides his mother
PHOTO • Bhasha Singh

லட்சுமி (மஞ்சள் புடவையில்), அவரது மகள் மினு மற்றும் அர்ஜூன். “என்னால் இனிமேல் யாரையும் அப்பா என கூப்பிட முடியாது என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய பிரச்சனை” என்கிறான் அர்ஜூன்.

தங்களது எதிர்காலத்திற்காக சிறு சிறு கனவுகளை லட்சுமியும் அர்ஜூனும் கொண்டுள்ளனர். அவித்த முட்டைகளை விற்பது, சிறு கடை அமைத்து தினசரி தேவைப்படும் பொருட்களை விற்று வருமானத்தை பெருக்குவது. ஆனால் இந்த சிறு கனவை நிறைவேற்றவும் முதலீடு தேவைப்படுகிறது. இழப்பீடாக கிடைக்கும் 10 லட்சம் முதலீட்டிற்கு போதுமானதாக இருக்கும். கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்க பாடுபடும் சஃபாய் கர்மாச்சாரி அண்டோலன் அமைப்பு, இழைப்பீடு தொகையை பெற போராடி வரும் லட்சுமிக்கு உதவி வருகிறது. ஆனால் ராஜேஸ்வர் சிங் முழுநேர பணியாளர் அல்ல, ஒப்பந்த தொழிலாளர் மட்டுமே என்பதை காரணம்காட்டி முழுதொகையை கொடுக்காமல் தவிர்த்து வருகிறது அந்நிறுவனம்.

துக்ளாபாத்தில் உள்ள அரசாங்க பள்ளியான சர்வோதயா பால வித்யாலயாவில் அண்டோலன் உதவியோடு ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ளார் அர்ஜூன். பள்ளியில் சேர்வதற்கு தேவைப்படும் முகவரி சான்று அவர்களிடம் இல்லை. அர்ஜூன் படித்த முந்தைய பள்ளியில் மாற்று சான்றிதழ் வழங்கவும் தாமதித்தனர். தற்போது அர்ஜூன் மறுபடியும் பள்ளியில் சேர்ந்திருப்பதால், அவர் பெரிதாக கனவு காணலாம். வங்கி மேலாளராகவும் சமையல் நிபுணராகவும் ஆவதே அவனது கனவு.

முழு இழப்பீடு பெறும்வரை நான் ஓயமாட்டேன் என்கிறார் லட்சுமி. கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிக்க உறுதியோடு இருக்கிறார். “என் கனவரை நான் இழந்தது போல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்ககூடாது. இதை சொல்வதற்கு எங்கு வேண்டுமானாலும் செல்ல நான் தயாராக இருக்கிறேன். சமீபத்தில் பீம் யாத்ராவில் சேர்ந்துள்ளேன் ( சாக்கடை குழியில் இறக்கும் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பல பிரச்சனைகளுக்கு எதிராக போராடுவதற்காக 2015-16 ஆண்டு நாடெங்கும் சென்ற பேருந்து பயணம்) ஆனால் அரசாங்கம் கேட்க தயாராக இல்லை. எங்கள் மக்கள் யாராவது இறந்தால், இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. ஏனென்றால், எங்கள் நெற்றியில் எங்கள் சாதி எழுதப்பட்டுள்ளது. மலம் அள்ளும் தொழிலும் எங்கள் சாதியும் இணைத்து பேசப்படும் வரை, இந்த நரகத்திலிருந்து நாங்கள் வெளியேற முடியாது” என்கிறார் லட்சுமி..

“இதுபோன்று பலர் இறந்தாலும் அரசாங்கம் எதுவும் செய்யாமல் இருப்பதை நினைத்தும் போது எனக்கு மிகுந்த கோபம் வரும். சாக்கடை குழியை சுத்தம் செய்வதற்கு நம் நாட்டில் எந்த தொழில்நுட்பமும் இல்லையா? அரசாங்கத்தின் தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் ஆராவாரம் எங்கும் கேட்கிறது. ஆனால் சாக்கடையை சுத்தம் செய்ய இன்றும் மனிதர்கள் சென்றால், எப்படி தூய்மையான நாடாக இருக்க முடியும்?” என லட்சுமி கேட்கிறார்.

தமிழில்: வி கோபி மாவடிராஜா

Bhasha Singh

ಭಾಷಾ ಸಿಂಗ್ ಸ್ವತಂತ್ರ ಪತ್ರಕರ್ತೆ ಮತ್ತು ಬರಹಗಾರರು ಮತ್ತು 2017 ಪರಿ ಫೆಲೋ. ಮ್ಯಾನುಯಲ್ ಸ್ಕ್ಯಾವೆಂಜಿಂಗ್ ಕುರಿತ ಅವರ ಪುಸ್ತಕವಾದ 'ಅದೃಶ್ಯ ಭಾರತ್', (ಹಿಂದಿ) ಅನ್ನು 2012ರಲ್ಲಿ (ಇಂಗ್ಲಿಷಿನಲ್ಲಿ 'ಅನ್‌ಸೀನ್' 2014) ಪೆಂಗ್ವಿನ್ ಪ್ರಕಟಿಸಿತು. ಅವರ ಪತ್ರಿಕೋದ್ಯಮವು ಉತ್ತರ ಭಾರತದ ಕೃಷಿ ಸಂಕಟ, ಪರಮಾಣು ಸ್ಥಾವರಗಳ ರಾಜಕೀಯ ಮತ್ತು ನೈಜ ವಾಸ್ತವತೆಗಳು ಮತ್ತು ದಲಿತ, ಲಿಂಗ ಮತ್ತು ಅಲ್ಪಸಂಖ್ಯಾತರ ಹಕ್ಕುಗಳ ಮೇಲೆ ಕೇಂದ್ರೀಕೃತಗೊಂಡಿದೆ.

Other stories by Bhasha Singh
Translator : V. Gopi Mavadiraja

V. Gopi Mavadiraja is a full time translator and freelance journalist, with special interest in stories and sports journalism.

Other stories by V. Gopi Mavadiraja