பிகாரின் தர்பாங்கா மாவட்டத்திலுள்ள கணவரின் ஊரான மோகன் பகெராவில் இரண்டு வருடங்களுக்கு முன் ருக்சனா காதூன் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தார். அந்த மாதத்தில் குடும்பத்துக்கான வீடு கட்டி முடிக்கப்பட்டதால் ஆதார் அட்டைக்கும் விண்ணப்பித்திருந்தார். அது கிடைத்து விட்டது. குடும்ப அட்டைக்கு அதற்கு முன்பே இரண்டு முறை விண்ணப்பித்தார். ஆனால் கிடைக்கவில்லை.

2018ம் ஆகஸ்டு மாதத்தில் மூன்றாம் முறை. காத்திருப்புக்கு தயாராக இருந்தார்.

30 வயது ருக்சனாவும் அவரின் கணவரான 34 வயது முகமது வகிலும் கடுமையாக உழைத்து நன்றாக வாழ்ந்து வந்தனர். மேற்கு தில்லியின் படேல் நகரின் ஐந்து வீடுகளில் வீட்டு வேலை செய்தார் ருக்சனா. வகில் டெய்லராக பணிபுரிந்தார். இருவரும் சேர்ந்து மாதம் 27000 ரூபாய் சம்பாதித்தனர். ஆறு பேர் (12, 8, 2 வயதுகளில் மூன்று மகள்களும் பத்து வயதில் ஒரு மகனும்) கொண்ட குடும்பத்துக்கான  செலவுகள் போக 2000 ரூபாய் வகிலின் தாய்க்கு அனுப்பிவிட்டும் அவர்களால் ஓரளவுக்கு சேமிக்க முடிந்தது.

கடுமையான உழைப்புக்கு பலன் கிடைத்தது. மேற்கு தில்லியின் புதிய ரஞ்சீத் நகரில் வகில் 2020, மார்ச் 15ம் தேதி ஒரு தையல் கடை திறந்தார். அவர் சம்பாதித்துக் கொண்டிருந்த 12000 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்ட முடியுமென நம்பினார்.

ஒரு வாரம் கூட முடியவில்லை. தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.

ருக்சனா வேலை பார்த்த இடத்திலும் வேலைக்கு வர வேண்டாமென சொல்லி விட்டார்கள். ஊரடங்கு மாதங்களுக்கான ஊதியம் கிடைக்காது என்பதும் தெரிந்துவிட்டது. ஒரு வீட்டில் மட்டும் தொடர்ந்து வேலை பார்க்க முடிந்தது. ஐந்து வீடுகளில் வேலை பார்த்து வந்த 15000 ரூபாய் நின்று போய் வெறும் 2400 ரூபாய்தான் சம்பாதிக்க முடிந்தது. ஜூன் மாதத்தில் அந்த வேலையையும் அவர் இழந்தார். சில நாட்களில் இன்னொரு வீட்டில் வேலை கிடைத்தது. வீட்டை சுத்தப்படுத்தி சமையல் செய்து கொடுக்கும் வேலை. அந்த வீட்டுக்காரருக்கு கொரோனா பரப்புபவர்களை பற்றி பயம் இருந்தது. ருக்சனா மசூதிக்கு சென்றாரா எனக் கேட்டார். “நான் கவலைப்படவில்லை. எல்லாருக்கும் கொரோனாவை பற்றி பயம் இருக்கிறது. அதனால் அவரை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது,” என்றார் ருக்சனா.

When Rukhsana and her family couldn't pay rent for their room in West Delhi, the landlord asked them to leave
PHOTO • Chandni Khatoon
When Rukhsana and her family couldn't pay rent for their room in West Delhi, the landlord asked them to leave
PHOTO • Chandni Khatoon

ருக்சனா வசிக்கும் அறைக்கு வாடகை கொடுக்க முடியவில்லை என்றதும் அவர்களை காலி செய்யச் சொன்னார் உரிமையாளர்

ஜூன் மாதத்திலெல்லாம் குடும்ப சேமிப்பு கரைந்து கொண்டிருந்தது. ஓர் உறவினர் சொன்னதன் பேரில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பிகார் அரசு வழங்கிய 1000 ரூபாயை அவர்கள் பெற முடிந்தது.

“நிதிஷ் குமார் கொடுத்த நிவாரணத்தை என்னால் எடுக்க முடிந்தது. ஆனால் மோடி கொடுத்த பணத்தை எடுக்க முடியவில்லை,” என்கிறார் ருக்சனா. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்பட்ட 500 ரூபாயைத்தான் அவர் குறிப்பிடுகிறார். வங்கிக் கணக்கில் ஒரு பிழை இருப்பதாக வங்கி கூறியிருக்கிறது. “1000 ரூபாயில் என்ன செய்ய முடியும்? இரண்டு நாட்களுக்கு கூட நிற்கவில்லை,” என்கிறார் அவர்.

அரசு நடத்திய சர்வோதயா கன்யா வித்யாலயாவில் மார்ச் மாதம் தொடங்கிய உணவு விநியோகத்தால் ஓரளவு நிவாரணம் கிடைத்தது. காலை 11 மணிக்கும் மாலை 5 மணிக்கும் உணவு கிடைத்தது. “இரு வேளைகளுக்கும் அவர்கள் பருப்பு சாதம் அல்லது காராமணி சாதம் கொடுத்தார்கள். உப்புச்சப்பில்லாமல் நோயாளிகளுக்கு கொடுப்பது போன்ற சாப்பாடு. 200 பேர் நிற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. சீக்கிரம் சென்றுவிட்டால், உணவு கிடைக்கும்.” இல்லையெனில், சற்று தூரத்தில் வசிக்கும் தாயிடம் சென்று அரிசியும் பருப்பும் வாங்கிக் கொள்வார் ருக்சனா. தாயும் வீட்டு வேலைதான் பார்க்கிறார். (ருக்சனாவின் தந்தை அன்றாடக் கூலி தொழிலாளராக வேலை பார்த்தவர். காசநோய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.)

பள்ளியில் விநியோகிக்கப்பட்ட உணவு, குடும்பத்துக்கு போதவில்லை. “குழந்தைகள் பட்டினி கிடந்துவிடக் கூடாதென என் கணவரும் நானும் குறைவாகவே சாப்பிடுவோம். வேறு என்ன வழி எங்களுக்கு இருக்கிறது? எங்களுக்கென இங்கு குடும்ப அட்டை இல்லை. எங்களூரில் ஒரு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தோம். இன்னும் வந்து சேரவில்லை,” என்றார் ருக்சனா.

Rukhsana returned to Bihar in June with her four children, aged 12, 10, 8 and 2 (not in the picture)
PHOTO • Chandni Khatoon

பிகாருக்கு ஜூன் மாதத்தில் நான்கு குழந்தைகளுடன் ருக்சனா திரும்பினார்

மே மாத இறுதியில் நிறைய புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்புவதால், உணவு விநியோகம் நிறுத்தப்படுவதாக அரசு கூறியது. முன்பு ருக்சனா வேலை பார்த்த இடத்திலிருந்து கொஞ்சம் கோதுமையும் அரிசியும் பருப்பும் கொடுத்தார்கள். ”கிராமத்தில் வேலை இல்லையென்பதால்தான் தில்லியில் வசிக்க முடிவெடுத்தோம். இப்போது இங்கும் வாழ்வது கடினமாகிக் கொண்டிருக்கிறது,” என ஜூன் 11ம் தேதி தொலைபேசியில் என்னிடம் சொன்னார் ருக்சனா.

ஆகவே அந்த மாதத்தில் வகில் மட்டும் தில்லியில் இருப்பதெனவும் ருக்சனா மற்றும் குழந்தைகள் 1170 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தர்பங்காவின் கிராமத்துக்கு திரும்புவது எனவும் முடிவெடுத்தார்கள்.

மூன்று மாத வீட்டு வாடகையும் (15000 ரூபாய்) வகிலின் புதிய கடை வாடகையும் (16,500 ரூபாய்) பாக்கி இருந்தது. குடும்பம் வேண்டிக் கொண்டதன் பேரில் வீட்டு உரிமையாளர்கள் இரு மாத வாடகையை ரத்து செய்தனர். முன்பு வேலை பார்த்த வீடுகளில் கடன் வாங்கி, அறைக்கான ஒரு மாத வாடகையையும் கடை வாடகையையும் பிகாருக்கு கிளம்புவதற்கு முன் ருக்சனா கொடுத்தார்.

பிகாரில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய குடும்ப அட்டைக்கென ஓரளவுக்கான உணவேனும் கிடைக்குமென நம்பினார். 2013ம் ஆண்டின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் மானிய விலையில் உணவுப் பொருட்களை பெறலாம். ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்யிலும் கிலோ கோதுமை 2 ரூபாய்யிலும் பருப்பு ஒரு கிலோ ஒரு ரூபாய்யிலும் நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். முன்னுரிமை பிரிவில் இருக்கும் குடும்பங்கள் மாதத்துக்கு 25 கிலோ உணவுப் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம். பாதிக்கப்படும் நிலையில் இருக்கும் குடும்பங்கள், அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 35 கிலோ வரை உணவு தானியங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

2020ம் ஆண்டு மே மாதத்தில், ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ என்ற அறிவிப்பை (2021 மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்படுமென) மத்திய அரசு வெளியிட்டது. எங்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட குடும்ப அட்டையை இத்திட்டத்தின் மூலம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டால், ருக்சனாவின் நிலையில் இருக்கும் எவரும் நாட்டின் எந்த பகுதியில் இருந்துகொண்டும் நியாயவிலைக்கடையில் உணவுப் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம்.

குடும்பத்துக்கு பக்கத்து வீடுகளில் வசிப்போர் இச்செய்தியை கேட்டதும் ருக்சனாவுக்கும் வகிலுக்கும் தெரிவித்தனர். பிகாரில் கிடைக்காமலிருக்கும் குடும்ப அட்டையை பெறுவதில் இன்னும் அதிக சிக்கல்கள் ஏற்பட்டது.

“வரும் மாதங்களுக்கு நாங்கள் தயாராக வேண்டும். தில்லியில் வேலை கிடைக்குமா என தெரியவில்லை. இந்த புதிய முறையால் நாங்கள் குடும்ப அட்டையை கொண்டு தில்லியிலேயே வாழ்ந்து கொள்ள முடியும்,” என்கிறார் ருக்சனா. “இல்லையெனில் நாங்கள் பிகாருக்கு திரும்புவோம். வேலையில்லையென்றாலும் கிராமத்துக்கு செல்வோம். குறைந்தபட்சம் எங்கள் வயிறுகளை குடும்ப அட்டை கொண்டு நிரப்பிக் கொள்ளவாவது முடியும்.”

In March, Rukhsana's husband Mohammed Wakil had opened a tailoring shop in Delhi. Now, he is struggling to re-start work
PHOTO • Sanskriti Talwar
In March, Rukhsana's husband Mohammed Wakil had opened a tailoring shop in Delhi. Now, he is struggling to re-start work
PHOTO • Sanskriti Talwar

மார்ச் மாதத்தில் ருக்சனாவின் கணவர் முகமது வகில் தில்லியில் ஒரு தையல் கடை தொடங்கினார். அங்கு வேலையைத் தொடங்க முடியவில்லை


ஜுன்17ம் தேதி ருக்சனாவும் அவரின் குழந்தைகளும் தில்லியிலிருந்து கோவிட்19 சிறப்பு ரயிலில் கிளம்பினர். வகில் அங்கேயே தங்கிவிட்டார். மீண்டும் வேலை தொடங்க நம்பி காத்திருக்கிறார்.

நீட்டிக்கப்பட்ட ஊரடங்குகளாலும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நேர்ந்த வெள்ளத்தாலும் பிகாரில் நிலைமை மோசமாக இருந்தது. மோகன் பகெரா கிராமத்தில் வெள்ளம் இல்லையென்றாலும் குடும்ப அட்டை பற்றி விசாரிக்க செல்வது கஷ்டமாக இருந்தது. ஆனாலும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கு இடையே இரண்டு முறை ருக்சனா பத்து கிலோமீட்டர் தொலைவிலிருந்த பெனிபூர் நகர் பரிஷத்துக்கு சென்றார். நியாயவிலைக்கடை மூடப்பட்டிருந்தது.

செப்டம்பர் மாதத்தில் குடும்ப அட்டை பற்றி கேட்க மீண்டும் பெனிபூருக்கு சென்றார். குடும்ப அட்டை இன்னும் வரவில்லை எனக் கூறிய அதிகாரிகள் திரும்ப அவர் விண்ணப்பிக்க வேண்டுமெனவும் கூறியிருக்கின்றனர்.

“2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் என்னுடைய மாமியாருடன் பெனிப்பூருக்கு சென்று (மூன்றாம் முறை) குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தபோது, அதிகாரிகள் ஒரு ரசீது கொடுத்து, கிராமத்திலிருக்கும் எங்கள் வீட்டுக்கே குடும்ப அட்டை வந்து விடுமென கூறினார்கள். ஆனால் வரவேயில்லை,” என்கிறார் அவர். மோகன் பகெராவில் வீடு கட்டி முடித்திருந்த சமயம் அது. உள்ளூர் சுய உதவிக்குழுவில் 35000 ரூபாய் பெற்று வீடு கட்டி முடிக்கப்பட்டது.

குடும்ப அட்டைக்கு ருக்சனா விண்ணப்பித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு முயற்சியின்போதும் ரசீதுகள் கொடுக்கப்பட்டன. குடும்ப அட்டை மட்டும் வந்து சேரவேயில்லை. 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மூன்றாவது முறையாக (2020ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் ருக்சனா பிகார் சென்றிருந்தபோது) சென்றபோது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்களையும் கொடுத்திருந்தார். ஆனால் உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் தில்லியில் பெற்றவை. அதிலிருந்த முகவரிகளை தற்போது இருக்கும் கிராமத்தின் முகவரிக்கு மாற்றி கொடுக்க வேண்டும். அப்போதுதான் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.

'My husband would rather stay hungry than ask anyone for help,' says Rukhsana, who awaits her ration card in Mohan Bahera village
PHOTO • Rubi Begum

‘என் கணவர் பட்டினி கூட கிடப்பாரே தவிர, பிறரிடம் உதவி கேட்கமாட்டார்,’ என்கிறார் ருக்சனா

அக்டோபர் 6ம் தேதி அவர் என்னிடம் தொலைபேசியில் பேசுகையில், “இந்த வேலைகளை எல்லாம் செய்ய, பணம் (லஞ்சம்) தேவைப்படும். பிறகு என்ன வேண்டுமானாலும் உங்களுக்கு செய்து கொடுக்கப்படும்,” என்றார். தில்லியில் இருக்கும் தாயின் குடும்ப அட்டையிலும் தன் பெயர் இருப்பதால்தான் குடும்ப அட்டை கிடைக்காமல் இருக்கிறதோ என அவர் நினைக்கிறார். “அதை நீக்க வேண்டும். அப்போதுதான் எதாவது நடக்கும் என நினைக்கிறேன்.”

அதற்கு பல முறை நியாயவிலைக் கடை அலுவலகங்களுக்கு அலைய வேண்டும்.

ஆகஸ்டு மாதத்திலிருந்து தில்லியிலிருக்கும் வகிலுக்கு தையல் வேலைகள் வரத் தொடங்கியிருக்கின்றன. “ஒன்றிரண்டு வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் வருவார்கள். 200லிருந்து 250 ரூபாய் வரை கிடைக்கும். அவர்களை விட்டால் வாடிக்கையாளர்களே இருக்க மாட்டார்கள்,” என்கிறார் அவர். மாதந்தோறும் எப்படியேனும் 500 ரூபாயை அவர் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்.

மீண்டும் வாடகை கட்ட முடியாத நிலை ஏற்பட்டதும் அறை உரிமையாளர் வகிலை காலி செய்ய சொன்னார். செப்டம்பர் மாதத்தில் இன்னும் சிறிய தங்குமிடத்துக்கு அவர் சென்றார். கடைக்கான வாடகையும் இன்னும் கட்டவில்லை. கிராமத்திலிருந்து சுய உதவிக்குழுவிடம் ருக்சனா 30000 ரூபாய் கடன் கேட்டிருக்கிறார். வாடகை பாக்கி, தில்லியில் வேலை பார்த்த வீட்டுக்காரரிடம் வாங்கிய கடன் பாக்கி, காய்கறி கடைக்காரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம், இன்னும் பிற கடன்கள் எல்லாவற்றையும் அடைக்க வேண்டும். விண்ணப்பம் இன்னும் ஏற்கப்படவில்லை. தில்லியில் ருக்சனா வேலை செய்த வீட்டுக்காரரிடம் ஊரடங்கு நேரத்தில் வாங்கிய பணத்தை அவர் திரும்பக் கேட்டதால், கிராமத்தில் 10000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்.

பிகாரிலேயே கொஞ்ச நாட்களுக்கு இருப்பதென ருக்சனா முடிவெடுத்திருக்கிறார். மீண்டும் தில்லியில் வீட்டு வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆகவே குடும்ப அட்டைக்காக கிராமத்தில் அவர் காத்திருக்கிறார்.

“என் கணவர் பட்டினி கூட கிடப்பார். ஆனால் யாரிடமும் உதவி கேட்க மாட்டார்,” என்கிறார் அவர். “அரசுதான் எங்களுக்கு ஏதேனும் செய்து குடும்ப அட்டையை கொடுக்க வேண்டும்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Sanskriti Talwar

ಸಂಸ್ಕೃತಿ ತಲ್ವಾರ್ ನವದೆಹಲಿ ಮೂಲದ ಸ್ವತಂತ್ರ ಪತ್ರಕರ್ತರು ಮತ್ತು 2023ರ ಪರಿ ಎಂಎಂಎಫ್ ಫೆಲೋ.

Other stories by Sanskriti Talwar
Translator : Rajasangeethan

ರಾಜಸಂಗೀತನ್ ಚೆನ್ನೈ ಮೂಲದ ಬರಹಗಾರ. ಅವರು ಪ್ರಮುಖ ತಮಿಳು ಸುದ್ದಿ ವಾಹಿನಿಯಲ್ಲಿ ಪತ್ರಕರ್ತರಾಗಿ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಾರೆ.

Other stories by Rajasangeethan