பெங்களூருவின் பெரிய குப்பமான தேவாரா ஜீவனஹல்லியில் பால்புதுமையருக்கான உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏப்ரல் 19, 2024 அன்று ஏற்படுத்த மனோகர் எலாவர்த்தி முடிவெடுத்தார். எலாவர்த்தி, பாலின சிறுபான்மையினர் உறுப்பினர்களுக்கான அமைப்பான சங்கமாவின் நிறுவனர். அவர் LGBTQIA+ (பெண் தன்பாலீர்ப்பு, ஆண் தன்பாலீர்ப்பு, இருபாலீர்ப்பு, மாற்றுப் பாலினம், பால்புதுமையர், ஊடுபால், அல்பாலீர்ப்பு மற்றும் இச்சொல் அடையாளப்படுத்தாத பிற எல்லா அடையாளங்களுக்குமான + முத்திரை) பிரச்சினைகளை, வாழ்வாதாரப் பிரச்சினை, வேலையின்மை மற்றும் மதச்சார்பின்மை போன்றவற்றுடன் சேர்த்து குப்பவாசிகளுடன் கலந்துரையாடுவதென முடிவெடுத்திருந்தார். உரையாடலை வழிநடத்த, மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான பாலின சிறுபான்மையினர் அமைப்பினருடன் அவர் இணைந்து கொண்டார்.

அந்த நாள்தான் மக்களவை தேர்தல் தொடங்கிய நாளும் கூட. கர்நாடகாவின் பெங்களூரு ஒரு வாரத்தில் தேர்தல்களை சந்திக்கவிருந்தது.

எலாவர்த்தி பிரசாரத்தை தொடங்கியதும் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் காவி உடை தரித்திருந்த 10 பேர், அவரையும் என்னையும் (பிரசாரத்தை பதிவு செய்ய போயிருந்த பத்திரிகையாளர்) டிஜெ ஹல்லி என அழைக்கப்பட்டும் தேவாரா ஜீவனஹல்லியின் குறுகிய தெருக்களுக்குள் சுற்றி வளைத்தனர். இங்குள்ள வாக்காளர்கள் பலரும் கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். பலரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள்.

“நீ காங்கிரஸ் கட்சி ஏஜெண்ட்!” என ஒரு பாஜக உறுப்பினர் கூச்சலிட, சுற்றி இருந்தவர்களும் எதிர்க்கோஷங்களை எழுப்பினர். பாலின சிறுபான்மையினருக்கான அமைப்பினர் வைத்திருந்த பிரசுரங்களை “சட்டவிரோதமானவை” என்றனர் பாஜகவினர்.

PHOTO • Sweta Daga
PHOTO • Sweta Daga

இடது: உள்ளூர் பாஜக கட்சி அலுவலகத்தின் துணைத் தலைவர் (இடது) மற்றும் பாலின சிறுபான்மையினர் உரிமைகள் அமைப்பான சங்கமாவின் நிறுவனர் மனோகர் எலாவர்த்தியும் (வலது). வலது: மணிமாறன் ராஜு (சிவப்பு, வெள்ளை கட்டம் போட்ட சட்டை) தலைமையிலான பாஜக ஊழியர்கள், பிற தன்னார்வலர்களை அழைக்க முயலும் மனோகரை (தாடியுடன் இருக்கும் நீலச்சட்டைக்காரர்) முறைத்துக் கொண்டிருக்கின்றனர்

எந்த ஒரு சமூக அமைப்பும் ஆளுங்கட்சியை விமர்சிக்கும் பிரசுரங்களை விநியோகிக்க சட்டப்பூர்வமாக அனுமதி இருக்கிறது. எனினும், ஒரு கட்சி சார்ந்த விமர்சனப் பிரசுரங்களை இன்னொரு கட்சி அனுமதிக்க தடை விதித்திருக்கிறது தேர்தல் நடத்தை விதிகள்.

இதை பாஜக ஊழியர்களுக்கு விளக்க மனோகர் முயற்சித்தார். திடீரென அவர்களின் கவனம் என் பக்கம் திரும்பியது. என்னை கேள்வி கேட்கத் தொடங்கி, என் கேமராவை ஆஃப் செய்யும்படி கூறினார்கள்.

நான் பத்திரிகையாளர் என தெரிந்ததும், அவர்களின் ஆக்ரோஷம் சற்று குறைந்தது. விளைவாக நானும் மனோகரும் பிற தன்னார்வலர்களை நோக்கி நடந்து செல்ல முடிந்தது. உள்ளூர் பாஜகவின் துணைத் தலைவரான மணிமாறன் ராஜுவும் அந்தக் குழுவில் இருந்தார்.

ஆனால் சூழல் சட்டென மாறி, எங்களை இரு மடங்கு பாஜக ஊழியர்கள் சுற்றி வளைத்தனர். தேர்தல் அதிகாரிகளும் காவலர்களும் இருந்த ஒரு காரும் வந்து சேர்ந்தது.

பிரசாரம் தொடங்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே, மனோகரையும் தன்னார்வலர்களையும் என்னையும் தேவாரா ஜீவனஹல்லி காவல் நிலையத்துக்கு போகச் சொன்னார்கள்.

PHOTO • Sweta Daga

தேர்தல் ஆணைய அலுவலர் எம்.எஸ்.உமேஷுடன் (மஞ்சள் சட்டை) மனோகர். உடன் பாஜக ஊழியர்களும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களும் தன்னார்வலர்களை குற்றஞ்சாட்டும் காவலர்களும்

*****

2014ம் ஆண்டிலிருந்து மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில் இருக்கிறது. 2024ம் ஆண்டு தேர்தலில் மூன்றாவது முறையாக வென்று ஆட்சியமைக்கக் கோருகிறது. இப்பகுதி, வடக்கு பெங்களூரு மக்களவை தொகுதியில் இருக்கிறது. பாஜகவின் ஷோபா கராந்த்லஜேவும் காங்கிரஸின் எம்.வி.ராஜீவ் கெளடாவும் இத்தொகுதியில் போட்டி போடுகின்றனர்.

பாலின சிறுபான்மையினர் அமைப்பின் பிரசுரங்களில் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வும் வேலையின்மையும் சகிப்புத்தன்மை நாட்டில் அதிகரித்திருப்பதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது.

“அக்கட்சியின் பிரதிநிதிகள் மதம், சாதி மற்றும் மொழி ஆகியவை பற்றி பேசி நம்மை பிரிக்கிறார்கள். சமாதானம் நிலவும் கர்நாடகாவில் வெறுப்பு பரப்ப அவர்களை நாம் அனுமதிக்கலாமா?” என பிரசுரம் கேட்கிறது.

“ஜனநாயகம் ஆபத்தில் இருக்கும்போது, ஒரு சமூகத்தை மட்டும் பாதுகாக்க முயற்சிப்பதில் அர்த்தமில்லை. ஜனநாயகத்தைதான் காக்க வேண்டும்,” என்கிறார் மனோகர். “பாலின சிறுபான்மையினர் உரிமைகளுக்கு காங்கிரஸ் சிறந்த கட்சியாக நாங்கள் கருதவில்லை. எனினும் தற்போதைய ஆட்சியால் நம் அரசியல் சாசனத்துக்கும் மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகம் அழிந்துவிட்டால், எல்லா விளிம்புநிலை சமூகங்களும் அழிந்துவிடும்,” என்கிறார் அவர், குப்பத்தின் குறுகிய தெருக்களில் நம்முடன் நடந்தபடி.

“கர்நாடகாவின் வரலாற்றிலேயே LGBTQIA+ மக்களின் பெரும் கூட்டமைப்பு, தேர்தலுக்காக வந்திருப்பது இதுவே முதன்முறை,” என்கிறா பால்புதுமையர் அறிஞரான சித்தார்த் கணேஷ்.  பாலின சிறுபான்மையினர் உரிமை அமைப்பில் கோலார், நகர்ப்புற பெங்களூரு, கிராமப்புற பெங்களூரு, சிக்பல்லாபூர், ராமாநகர், தும்கூர், சித்ரதுர்கா, விஜயநகரா, பல்லாரி, கொப்பால், ராய்ச்சூர், யாதகிரி, கலபுராகி, பிதார், பிஜாப்பூர், பெலாகவி, தார்வட், கடாக், ஷிமோகா, சிக்காமகளூரு, ஹஸ்ஸன், சமாரஜ்நகர் போன்ற கர்நாடகாவின் பல மாவட்டங்களை சேர்ந்த பால்புதுமையர் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இருக்கின்றனர்.

“பால்புதுமையர் சமூகத்தினர், பாலின சிறுபான்மையினர் உரிமையின் கீழ் ஒன்று திரண்டு, பிரசாரத்துக்கான முயற்சிகளை முன்னெடுத்திருப்பது, எல்லா சிறுபான்மையினருக்குமான சமத்துவமும் நீதியும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் கட்டம் ஆகும்,” என்கிறார் சித்தார்த். பாலின சிறுபான்மை மற்றும் பாலியல் தொழிலாளர் கூட்டமைப்பிலும் அவர் உறுப்பினராக இருக்கிறார்.

*****

PHOTO • Sweta Daga
PHOTO • Sweta Daga

இடது: மனோகர் (நீலச்சட்டை மற்றும் கருப்புப் பை) தேர்தல் ஆணைய காவலர், சையது முனியாஸ் (காக்கி சட்டை) மற்றும் எம்.எஸ்.உமேஷுடன். சுற்றி பாஜக ஊழியர்கள். வலது: தன்னார்வலர்களை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்கிறார் சையது முனியாஸ்

ஆவேசமான பாஜக ஊழியர்களால் சுற்றி வளைக்கப்பட்ட எங்கள் குழுவுடன் பேசிய தேர்தல் ஆணைய அலுவலர் சையது முனியாஸ், “சட்டம் மீறப்பட்டிருக்கிறது,” என்றார். பாஜக அளித்த புகாரை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையை சேர்ந்த முனியாஸ் விசாரித்துக் கொண்டிருந்தார். புகாரை பார்க்கலாமா எனக் கேட்டதற்கு, வாய்மொழி புகார் என பதில் கூறினார்.

“தன்னார்வலர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகார் என்ன?” என நான் கேட்டேன். “சட்டத்தை மீறியதால், அவர்கள் அனுப்பப்பட்டு விட்டனர்,” என்றார் முனியாஸ், பிரசுர விநியோகம் குறித்து. சூழலின் தீவிரத்தை சரிசெய்ய, அதுதான் சரியான வழியென தன்னார்வலர்களும் கலைந்து செல்ல ஒப்புக் கொண்டனர்.

காவல் நிலையத்துக்கு நாங்கள் நடந்து செல்கையில், மோட்டார் பைக்குகளில் எங்களை இடிப்பது போல் காவி அணிந்திருந்தவர்கள் வந்து, “செத்துப் போ”, “பாகிஸ்தானுக்கு செல்” மற்றும் “நீங்கள் இந்தியர்கள் இல்லை,” எனக் கத்தி வேகமாக கடந்து சென்றனர்.

காவல் நிலையத்தில் கிட்டத்தட்ட 20 பேர் எங்களுக்காக காத்திருந்தனர். பாலின சிறுபான்மை உரிமை தன்னார்வலர்களும் நானும் உள்ளே சென்றதும் அவர்கள் எங்களை சுற்றி வளைத்துக் கொண்டனர். கட்சி ஊழியர்களான அவர்கள் என் செல்பேசியையும் கேமராவையும் பறித்துக் கொண்டனர். சிலர் என்னை நோக்கி வர முயல, மற்றவர்கள் அவர்களை தடுத்தனர். பிறகு என்னை வெளியேற்றும்படி அவர்கள் கூறினர். காவல் ஆய்வாளர், தன்னார்வலர்களுடன் பேசத் தொடங்கினார்.

காவல்நிலையத்தில் அரை மணி நேரம் வைத்திருந்த பிறகு, குழுவினரை விடுவித்தனர். எழுத்துப்பூர்வ புகார் பதிவு செய்யப்படவில்லை. தன்னார்வலர்களும் செல்லும்படி சொல்லப்பட்டது. இத்தகைய சம்பவங்கள் நடக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா என்கிற கேள்விகளுக்கு எல்லாம் வாய்ப்பு இருக்கவில்லை. அவர்களின் பிரசாரம் முடக்கப்பட்டது.

PHOTO • Sweta Daga
PHOTO • Sweta Daga

இடது: தன்னார்வலர்களை நோக்கி கத்திய பைக்காரர்களுடன் பேசும் முனியாஸ். வலது: தன்னார்வலர்களை காவல் நிலையத்துக்கு முனியாஸ் அழைத்து செல்கிறார்

PHOTO • Sweta Daga
PHOTO • Sweta Daga

இடது: தன்னார்வலர்களுக்காக பாஜக ஊழியர்கள் காவல் நிலையத்தில் காத்திருக்கின்றனர். வலது: பிரசுரங்களும் பிரசாரமும் சட்டப்பூர்வமானவைதான் என தன்னார்வலர்கள் காவலர்களிடம் சொல்கின்றனர்

“நூற்றாண்டுகாலமாக குற்றத்தன்மை கொண்டவர்களாக அரசால் சித்தரிக்கப்பட்ட நிலையில், அரசின் புறக்கணிப்பையும் வன்முறையையும் அகற்றுவதற்கான இந்த அமைப்பின் வழியாக, அரசியலில் பால்புதுமையரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை நோக்கி இந்த அமைப்பு இயங்குகிறது,” என்கிறார் பெங்களூருனின் பால்புதுமையர் செயற்பாடுகளை ஆய்வு செய்யும் அறிஞரான சித்தார்த்.

நான் விரும்பிய கட்டுரையை உருவாக்க முடியவில்லை எனினும் இச்சம்பவத்தை சொல்ல வேண்டியது கட்டாயம்.

“நான் என்ன சொல்வது?” என்கிறார் பாஜகவின் மணிமாறன் ராஜு, கட்சி ஊழியர்களின் செயல்பாட்டை குறித்து கேட்ட கேள்விக்கு. “என்ன சொல்வதென தெரியவில்லை. இது முடிந்ததும் அவர்களிடம் நான் பேசுகிறேன். அவர்கள் அப்படி செய்திருக்க (கேமராவை பறிக்க முயன்றிருக்க) கூடாது.”

தேர்தல் நடைமுறை முடிய ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், பலமுறை தேர்தல் ஆணையம் தலையிடும்படி நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கோரப்படுவது மட்டுமின்றி, பல குடிமக்கள் அச்சுறுத்தலையும் மிரட்டலையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

தன்னார்வலர்களும் நானும் காயங்களின்றி கிளம்பினோம். ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது: ஜனநாயக உரிமையை செயல்படுத்துவதற்காக எத்தனை பேர் இன்னும் மிரட்டப்படுவார்கள்?

தமிழில்: ராஜசங்கீதன்

Sweta Daga

Sweta Daga is a Bengaluru-based writer and photographer, and a 2015 PARI fellow. She works across multimedia platforms and writes on climate change, gender and social inequality.

Other stories by Sweta Daga
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan