‘விராட் கோலி’ பெயர் பிரபலம். இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரருக்கு இங்கு துங்க்ரா சோட்டாவில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஒரு குளிர்கால காலையில் 10 மணிக்கு பிறகு ஒரு டஜனுக்கும் மேலான இளையோர் விளையாட்டில் மூழ்கியிருக்கின்றனர். பசிய சோள வயல்களுக்கு நடுவே உள்ள சதுர நிலத்துண்டு கிரிக்கெட் மைதானம் என்பது பார்த்ததும் உங்களுக்கு தெரியாது. ஆனால் பன்ஸ்வாரா மாவட்டத்தின் இந்த கிராமத்தை சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு க்ரீஸ் போடுவது தொடங்கி பவுண்டரி போடுவது வரை அந்த மைதானத்தின் எல்லா பகுதிகளும் தெரியும்.

கிரிக்கெட் ரசிகர்களிடம் எந்த வீரரை பிடிக்கும் எனக் கேட்பதுதான் உரையாடலை தொடங்குவதற்கான சிறந்த வழி என அனைவருக்கும் தெரியும். இங்கு விராட் கோலி என்கிற பெயரை கொண்டு உரையாடல் தொடங்கப்பட்டாலும் ரோகித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், முகமது சிராஜ் என அடுத்தடுத்து பெயர்கள் சொல்லப்படுகின்றன.

இறுதியாக 18 வயது ஷிவ்ராம் லபானா சொல்கையில், “எனக்கு ஸ்மிருதி மந்தானா பிடிக்கும்,” என்கிறார். இடது கை ஆட்டக்காரரான அவர், இந்திய டி20 பெண்கள் கிரிக்கெட்டின் முன்னாள் தலைவராக இருந்தவர். நாட்டின் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.

ஆனால் இடது கை ஆட்டக்காரராக அவரின் பெயர் மட்டும் மைதானத்தில் பேசப்படவில்லை.

பவுலர்களும் பேட்ஸ்மென்களாகவும் ஆக விரும்பும் சிறுவர்கள் பேச்சொலிக்கு நடுவே ஒற்றை சிறுமியாக அவர் மட்டும் தனித்து நிற்கிறார். ஒன்பது வயதாகும் ஹிடாஷி ராகுல் ஹர்கிஷி, வெள்ளை ஷூக்கள், முழங்கால் பேட்கள், தொடை மற்றும் தோளுக்கான பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றுடன் முழு கிரிக்கெட் உடை தரித்து நிற்கிறார்.

PHOTO • Swadesha Sharma
PHOTO • Priti David

ஹிடாஷி ஹர்கிஷி ஓர் ஒன்பது வயது கிரிக்கெட் வீரர். பிற கிரிக்கெட் ஆர்வலர்களுடன் அவர், ராஜஸ்தானின் பன்ஸ்வாராவிலுள்ள குஷால்கர் தாலுகாவின் இந்த பசிய சோள வயல்களுக்கு நடுவே உள்ள துண்டு மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுக்கிறார்

PHOTO • Swadesha Sharma

பேசுவதில் அதிக விருப்பம் இல்லாத ஹிடாஷி, க்ரீஸுக்குள் நின்று தன் விளையாட்டை காண்பிக்கவே அதிகம் விரும்புகிறார்

“மட்டை ஆட்டக்காரராவதுதான் என் விருப்பம். பேட்டிங் செய்வதுதான் எனக்கு பிடிக்கும்,” என்கிறார் அவர். “இந்தியாவுக்காக நான் விளையாட விரும்புகிறேன்,” என்கிறார் அவர். பேச்சில் நாட்டமில்லாத ஹிடாஷி, க்ரீஸில் நின்று கிரிக்கெட் விளையாடி காட்ட மட்டும் விரும்புகிறார்.  வீசப்படும் பந்துகளை அடித்து சுற்றி கட்டியிருக்கும் வலைக்கு தள்ளுகிறார்.

இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்கிற ஹிடாஷியின் விருப்பத்தை பயிற்சியாளரான தந்தையும் ஆதரிக்கிறார். அவரது அட்டவணையை விவரிக்கிறார்: “பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரம் தூங்குவேன். பிறகு நான்கு முதல் இரவு எட்டு மணி வரை பயிற்சி எடுப்பேன்.” வார இறுதிகளிலும் இன்றைப் போன்ற விடுமுறைகளிலும் அவர் காலை 7.30 மணி முதல் பகல் வரையும் கூட பயிற்சி எடுக்கிறார்.

“14 மாதங்களாக தொடர்ந்து நாங்கள் பயிற்சி எடுத்து வருகிறோம். அவளுடன் சேர்ந்து நானும் பயிற்சி எடுக்க வேண்டும்,” என்கிறார் அவரின் தந்தையான ராகுல் ஹர்கிஷி ஜனவரி 2024-ல் பாரியுடன் பேசும்போது. ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இருக்கும் துங்க்ரா படாவிலுள்ள வாகன கராஜின் உரிமையாளர் அவர். மகளின் திறமை மீது நம்பிக்கையும் பெருமையும் கொண்டிருக்கும் அவர், “நன்றாக விளையாடுவாள். தந்தையாக நான் கண்டிப்பாக இருக்கக் கூடாது. ஆனால் இருந்தாக வேண்டியிருக்கிறது,” என்கிறார்.

ஹிடாஷி விளையாடுவதை பாருங்கள்

'அவள் மிக நன்றாக விளையாடுவாள்,’ என்கிறார் தந்தை ராகுல் ஹர்கிஷி. முன்பு கிரிக்கெட் வீரராக இருந்த அவர், தற்போது ஹிடாஷியின் பயிற்சியாளராக இருக்கிறார்

ஆரோக்கியமான உணவுகளையும் அவரின் பெற்றோர் அவருக்கு உறுதிபடுத்துகின்றனர். “வாரத்துக்கு நான்கு முறை முட்டை எடுத்துக் கொள்கிறோம். கறியும் எடுத்துக் கொள்கிறோம்,” என்கிறார் ராகுல். “அன்றாடம் இரு தம்ளர் பாலும் வெள்ளறி, கேரட் போன்ற காய்கறிகளும் எடுத்துக் கொள்கிறாள்,” என்கிறார் ராகுல்.

இம்முயற்சிகளின் பலன் ஹிடாக்‌ஷியின் விளையாட்டில் வெளிப்படுகிறது. அவர் மாவட்ட அளவில் விளையாடிய துங்க்ரா சோட்டாவின் 18 வயது ஷிவாம் லபானா மற்றும் 15 வயது ஆசிஷ் லபானா ஆகியோருடன் பயிற்சி பெற்று வந்தார். இருவரும் பந்து வீடுபவர்கள். 4-5 வருடங்களாக டோர்னமண்ட்களில் பங்கேற்றிருக்கின்றனர். லபானா சமூகத்தை சேர்ந்தவர்கள் போட்டி போட்டு விளையாடும் லபானா ப்ரிமியர் லீக் (LPL) விளையாட்டுகளிலும் விளையாடி இருக்கின்றனர்.

“LPL பந்தயங்களின் நாங்கள் விளையாடும்போது ஆண்களாகதான் இருந்தோம். ராகுல் அண்ணன் (ஹிடாஷியின் தந்தை) எங்களுக்கு பயிற்சி கொடுக்க அப்போது இல்லை,” என்கிறார் ஷிவம். “ஒரு பந்தயத்தில் நான் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தேன்.”

இப்போது அவர்கள் ராகுல் உருவாக்கியிருக்கும் ஹிடாஷி க்ளப்புக்காகவும் விளையாடுகின்றனர். “நாங்கள் எங்கள் அணியில் அறிமுகமாக வேண்டுமென விரும்புகிறோம். எங்கள் சமூகத்தின் சிறுமிகள் எவரும் (கிரிக்கெட்) விளையாடுவதில்லை. எனவே இவள் விளையாடினால் நன்றாக இருக்கும்.”

PHOTO • Swadesha Sharma
PHOTO • Swadesha Sharma

ஹிடாஷி 18 வயது பவுலர் ஷிவாம் லபானாவுடனும் (இடது) விளையாடுவார். ஆசிஷ் லபானா (வலது) மாவட்ட அளவில் விளையாடியிருக்கிறார். ராகுல் மற்றும் ஹிடாஷியுடன் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்

PHOTO • Swadesha Sharma

ஹிடாஷி அன்றாடம் பள்ளி முடிந்தும் வார இறுதிகளில் காலையிலும் பயிற்சி பெறுகிறார்

அதிர்ஷ்டவசமாக, ஹிடாஷியின் பெற்றோர் வேறுவிதமான கனவுகளை கொண்டிருப்பதாக அணியில் இருக்கும் இளையவர் சொல்கிறார், “அவளை மேற்கொண்டு அனுப்ப அவர்கள் விரும்புகிறார்கள்.”

விளையாட்டுக்கு இருக்கும் புகழைத் தாண்டி, குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுக்கு கிரிக்கெட்டை லட்சியமாக்குவதில் தயக்கம் கொள்கிறார்கள். அணியின் 15 வயதாகும் சக வீரர் ஒருவரின் நிலையை ஷிவம் விளக்குகிறார். “மாநில அளவில் அவர் பல முறை விளையாடினார். தொடர வேண்டுமென விரும்பியவர் இப்போது விலகுவதை குறித்து யோசிக்கிறார். அவரின் குடும்பம் அநேகமாக அவரை கோட்டாவுக்கு அனுப்பும்.” பயிற்சி வகுப்புகளுக்கும் உயர்கல்விக்கும் பெயர் பெற்ற இடமான கோடா, கிரிக்கெட்டுடன் எந்த  வகையிலும் சம்பந்தப்படாத இடம்.

ஹிடாஷியின் தாயான ஷீலா ஹர்கிஷி, ஆரம்பப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்தி ஆசிரியையாக இருக்கிறார். அவரும் குடும்பத்தினரை போல கிரிக்கெட்டுக்கு பெரும் ரசிகை. “இந்திய அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரின் பெயரும் எனக்கு தெரியும். எல்லாரையும் என்னால் அடையாளம் காட்ட முடியும். ஆனாலும் எனக்கு ரோகித் ஷர்மாதான் அதிகம் பிடிக்கும்,” என்கிறார் அவர் புன்னகையோடு.

PHOTO • Swadesha Sharma
PHOTO • Priti David

ஹிடாஷியின் பெற்றோர் அவருக்கு பெரும் ஆதரவு. ராகுல் ஹர்கிஷி (இடது) கிரிக்கெட் விளையாட்டு விளையாடிய காலத்தை நினைவுகூருகிறார். ஆரம்பப் பள்ளி, மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தாதபோது ஷீலா ஹர்கிஷி (வலது) குடும்பத்தின் வாகன கராஜை பார்த்துக் கொள்கிறார்

ஆசிரியப் பணியைத் தாண்டி, அவர் வாகன கராஜையும் பார்த்துக் கொள்கிறார். “ராஜஸ்தானிலிருந்து எந்த ஆணும் பெண்ணும் தற்போது கிரிக்கெட் விளையாடவில்லை. எங்களின் மகளுக்காக ஒரு முயற்சி போட்டிருக்கிறோம். தொடந்து முயற்சி செய்வோம்.”

ஒன்பது வயதாகும் ஹிடாஷிக்கு இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது. அவரின் பெற்றோர், “அவளை கிரிக்கெட் வீரராக்க தேவையான எல்லாவற்றையும் செய்ய” உறுதி பூண்டிருக்கின்றனர்.

“எதிர்காலத்தில் என்ன நடக்குமென தெரியவில்லை,” என்கிறார் ராகுல். “ஆனால் ஒரு தந்தையாகவும் விளையாட்டு வீரராகவும், அவளை இந்திய அணிக்காக நாங்கள் விளையாட வைப்போமென உறுதியாக சொல்கிறேன்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Swadesha Sharma

Swadesha Sharma is a researcher and Content Editor at the People's Archive of Rural India. She also works with volunteers to curate resources for the PARI Library.

Other stories by Swadesha Sharma
Editor : Priti David

Priti David is the Executive Editor of PARI. She writes on forests, Adivasis and livelihoods. Priti also leads the Education section of PARI and works with schools and colleges to bring rural issues into the classroom and curriculum.

Other stories by Priti David
Translator : Rajasangeethan

Rajasangeethan is a Chennai based writer. He works with a leading Tamil news channel as a journalist.

Other stories by Rajasangeethan