குடும்பத்திற்கு உணவளிப்பதில் இனி பிரச்சனை இருக்காது என்றுதான் ருக்ஸனா காட்டூன் நினைத்தார். இரண்டு ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டு மூன்றாவது முயற்சியில்தான் அவருக்கு 2020 நவம்பர் மாதம் ரேஷன் அட்டை கிடைத்தது. திடீரென பெருந்தொற்று உருவாகி பல மாதங்களுக்கு  நிலைமையை மோசமாக்கிவிட்டது.

2013 தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (NFSA) பிரிவின் கீழ் ‘முன்னுரிமை குடும்பம்’ என்ற பிரிவில் தகுதிவாய்ந்த பயனாளிகளை மாநில அரசுகள் கண்டறிந்தன.

பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள புழுதியான நகராட்சி பகுதியுடன் அண்மையில் இணைக்கப்பட்ட கிராமத்தில் அச்சமயத்தில் அவர்கள் வசித்த  இடமே சொந்த வீட்டு முகவரியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ருக்ஸனா இறுதியாக ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்கான மானியத்தைப் பெற்றார்.

2021 ஆகஸ்ட் மாதம் அக்குடும்பம் டெல்லிக்குத் திரும்பியதும் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டபோதும் அவரது குடும்பத்திற்கு உணவு தானியங்கள் கிடைப்பதில் மீண்டும் தேக்கம் ஏற்பட்டது.

ஒன்றிய அரசின்  ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை (ONORC) திட்டத்தின் கீழ், NFSA  பயனாளிகள் ‘முன்னுரிமை குடும்பங்கள்,’ ‘ஏழைகளிலும் ஏழை’ என்ற பிரிவுகளின் கீழ் வகுக்கப்பட்டவர்களுக்கு எந்த நியாய விலை கடையிலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமைப் பெற்றுள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் உரிமம் பெற்ற கடைகள், ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் அங்கீகாரத்தைக் கொண்டு பொருட்களை விநியோகம் செய்கின்றன. ஆனால் அருகில் உள்ள மேற்கு டெல்லியின் ஷாதிபூர் மெயின் பஜார் பகுதி நியாய விலை கடைக்கு ருக்ஸனா மாதாந்திர ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு செல்லும் போதெல்லாம், மின் விற்பனை மையத்தின் (ePOS) இயந்திரம் பின்வருமாறு சொல்கிறது: ‘உங்கள் ரேஷன் அட்டை IMPDSல் காணவில்லை’.

PDS ன் கீழ் ஒன்றிய அரசால் மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் உணவு தானியங்கள் பொது விநியோக அமைப்பின் ஒருங்கிணைந்த மேலாண்மை ( IMPDS ) கீழ் 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதனால் ONORC திட்டத்தின் கீழ் நாட்டில் எந்த பகுதியிலும் புலம்பெயர்ந்தோர் தங்களுக்கான ஒதுக்கீட்டைப் பெறும் தகுதி பெற்றவர்கள்.

Rukhsana Khatoon and her eldest children Kapil and Chandni in their rented room in Shadipur Main Bazaar area of West Delhi.
PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

இடது: ருக்சானா கட்டூன் மற்றும் அவரது மூத்த குழந்தைகள் கபில் மற்றும் சாந்தினி ஆகியோர் மேற்கு டெல்லியின் ஷாதிபூர் மெயின் பஜார் பகுதியில் வாடகை அறையில் உள்ளனர். வலது: ருக்சானா தனது இளைய மகள் ஆசியாவை பிடித்துக் கொண்டிருக்கும் போது, ​​அவளது மூன்று வயது மகள் ஜம்ஜாம் தனது தொலைபேசியுடன் விளையாடுகிறாள்

டெல்லியில் வீட்டு வேலை செய்யும் ருக்ஸனா, கோவிட்-19 ஊரடங்கினால் பொருளாதார ரீதியாக முடங்கிப் போயுள்ள தனது குடும்பத்திற்கு ரேஷன் கார்டு வாங்கும் தீவிர முயற்சியில் இருப்பதாக 2020 அக்டோபரில் பாரி செய்தி வெளியிட்டது. இலவச உணவு விநியோக இயக்கங்களில் அவர் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் வேலையிழந்தார் அல்லது அவருக்கு பொது விநியோகத் திட்டத்தின்படி உணவு தானியங்களும் கிடைக்கவில்லை. அவர் தர்பங்காவிற்கு தனது பிள்ளைகளுடன் திரும்பினார்.

பாரியில் அவரைப் பற்றி வெளிவந்த சில வாரங்களில் பீகாரில் ருக்ஸனாவைச் சந்தித்த அலுவலர்கள் குடும்பத்தின் ஆதார் அட்டைகளை சரிபார்த்து ரேஷன் அட்டை வழங்கினர்.

“பீகாரில் ஒருவர் கட்டை விரல் கைரேகையை பதித்து [கைரேகை ஸ்கேனர் கொண்ட ePOS இயந்திரத்தின் மீது] தங்களுக்கான ரேஷனைப் பெற வேண்டும்,” என்கிறார் அவர். அவரால் செல்ல  முடியாவிட்டால் 11 வயது மகன் அல்லது 13 வயது மகள் சென்று வீட்டிற்கு உணவு தானியங்களைப் பெற்று வரலாம். “இப்போது எல்லாம் இணையவழி ஆகிவிட்டபோது, இங்கு (டெல்லியில்) ஏன் விவரங்களை பார்க்க முடியவில்லை?”

31 வயது ருக்ஸனா, அவரது கணவர் 35 வயது முகமது வகீல், அவர்களின் ஐந்து பிள்ளைகளுடன் 2021 ஆகஸ்ட் 25ஆம் தேதி ரயில் மூலம் டெல்லிக்குத் திரும்பினர். மேற்கு டெல்லியின் படேல் நகரில் நான்கு வீடுகளில் மாதம் ரூ.6000 சம்பாதிக்கும் வகையில் வீட்டு வேலை செய்யத் தொடங்கினார். வகீல், பீகாருக்குத் திரும்பும் முன்பே 2020 நவம்பரில் தனது தையல் கடையை மூடிவிட்டார். இறுதியாக 2022 மார்ச் மாதம் மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வடகிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகர் மார்க்கெட்டில் தையல் வேலைக்குச் சேர்ந்தார்.

2020 மார்ச்சில் கோவிட்-19 பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, இத்தம்பதி இணைந்து மாதம் ரூ.27,000 வரை சம்பாதித்தனர்.

Rukhasana’s husband, Mohammed Wakil, and their children outside their rented room.
PHOTO • Sanskriti Talwar
He works in the same room, tailoring clothes on his sewing machine
PHOTO • Sanskriti Talwar

இடது: ருக்சனாவின் கணவர் முகமது வக்கீல் மற்றும் அவர்களது குழந்தைகள் வாடகை அறைக்கு வெளியே. வலது: அவர் அதே அறையில் தனது தையல் இயந்திரத்தில் துணிகளை தைக்கிறார்

2021 செப்டம்பர் முதல் நியாய விலை கடைக்கு எத்தனை முறைச் சென்று வந்தோம் என்பதை ருக்ஸனா மறந்துவிட்டார்.

“பீகாரில் ரேஷன் அட்டை முடக்கப்பட்டுவிட்டதாக இங்குள்ள விநியோகஸ்தர் என்னிடம் சொன்னார், பீகார் சென்று ஆதார் அட்டை தொடர்புடைய அனைத்தையும் கொண்டு வந்து எனது ரேஷன் அட்டையில் இணைக்குமாறு கூறினார்,” என்றார் அவர். “என் மாமனார் பெனிப்பூரில் உள்ள ரேஷன் அலுவலகத்திற்கு சென்றபோது, எங்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் டெல்லியில் உள்ள ரேஷன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க கூறியுள்ளனர். பீகாரில் கேட்டால் டெல்லியில் சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். டெல்லியில் கேட்டால் பீகாரில் சரிபாருங்கள் என்கின்றனர்.”

*****

ருக்ஸனா தனது மோஹன் பஹேரா கிராமத்தில் வசிக்கவே விரும்புகிறார். 2009ஆம் ஆண்டு தர்பங்காவில் பெனிப்பூர் நகர் பரிஷத்தை உருவாக்கத்திற்கு 23 கிராமங்களுடன் அதுவும் இணைக்கப்பட்டது. “எங்கள் கிராமத்தில் நான் ஓய்வாக உணர்கிறேன். உணவு தயாரிப்பது, உண்பது, பிள்ளைகளை கவனித்துக் கொள்வது இவைதான் என் வேலை.” ஆனால் டெல்லியில் போட்டிப் போட்டுக் கொண்டு வேலை கொடுத்தவர்களின் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு நேரத்திற்கு வீடு திரும்பி தனது சொந்த குடும்பத்திற்கு அவர் சமைக்க வேண்டும்.

ஷாதிபூர் மெயின் பஜாரின் குடியிருப்புகளின், குறுகிய கட்டடங்களில் உள்ள சிறிய வீடுகள் முக்கிய மார்க்கெட் சாலையைச் சுற்றியே இருக்கும். அங்குள்ள நெருக்கடியான சிறிய வீட்டில் மாதம் ரூ.5000 வாடகைக்கு 2021 செப்டம்பர் முதல் ருக்ஸனா வசித்து வருகிறார். ஒருபுறம் சமையலறை நடைபாதை, எதிர்புறம் ஒற்றை படுக்கை, வகீலின் தையல் இயந்திரம், அதற்கிடையில் துணியை அளப்பதற்கான பெரிய மேசை உள்ளது. வீட்டில் நுழைவில் வலது ஓரத்தில் கழிப்பறை உள்ளது.

ருக்ஸனா அவரது மூன்று இளைய மகள்களான  9 வயது நஜ்மின், 3 வயது ஜம்ஜம், ஒரு வயது ஆசியா ஆகியோர் இரும்பு கட்டிலில் உறங்குகின்றனர். வகீல், 11 வயது கபில், 13 வயதாகும் மூத்த மகள் சாந்தினி ஆகியோர் தரையில் பருத்தி மெத்தை விரித்து உறங்குகின்றனர்.

“கிராமங்களில் மக்கள் இதுபோன்ற அறைகளில் கால்நடைகளை அடைப்பார்கள். நான் நகைப்பிற்காகச் சொல்லவில்லை. அவர்கள் தங்களின் கால்நடைகளை இதைவிட சிறப்பான அறைகளில் அடைப்பார்கள்,” என்கிறார் வகீல். “இங்கு மக்களே விலங்குகளைப் போல ஆகிவிடுகின்றனர்.”

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

குடும்பம் 2021 செப்டம்பர் முதல் சிறிய, நிரம்பிய அறையில் ரூ.5,000 மாதவாடகை செலுத்தி வசித்து வருகிறது

NFSAவின் கீழ், இந்தியாவின் 75 சதவீத கிராமத்தினரும், 50 சதவீத நகரத்தினரும் மானிய உணவு தானியங்களைப் பெறும் உரிமைப் பெற்றுள்ளனர். அரிசி கிலோ ரூ.3க்கும், கோதுமை கிலோ ரூ.2க்கும், தானியங்களை கிலோ ரூ.1க்கும் அதற்கென ஒதுக்கப்பட்ட கடைகளில்  வாங்கிக் கொள்ளலாம். ‘முன்னுரிமை குடும்பங்கள்’ என்று வகுக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கு மாதம் தலா 5 கிலோ உணவு தானியங்கள் அளிக்கப்படுகிறது. “ஏழைகளிலும் ஏழை” அல்லது மிகவும் ஆதரவற்ற குடும்பங்கள் என வகுக்கப்பட்டவர்களுக்கு அந்தியோதயா அன்னயோஜனா (AAY) திட்டத்தின் கீழ் மாதம் 35 கிலோ வரை உணவு தானியங்கள் அளிக்கப்படுகின்றன.

முன்னுரிமை குடும்பங்களுக்கான அட்டையில் ஆறு பேர் கொண்ட ருக்ஸனாவின் குடும்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் 3 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமையை மாதந்தோறும் பெறலாம்.

இந்த வகைகளுக்கான தகுதியானது பல்வேறு நுகர்வு மற்றும் வருமான அளவுகோல்களைப் பயன்படுத்தி மாநில அரசுகளால் உருவாக்கப்படுகிறது. உதாரணத்திற்கு டெல்லியில், ரூ.1 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் முன்னுரிமை குடும்பம் மற்றும் AAY வகைகளின் கீழ் இணைப்பதற்கு தகுதிப் பெற்றவர்கள் . சமூகம், தொழில், ஒவ்வொரு குடும்பத்தின் வீட்டு பாதிப்புகள் ஆகியவையே இவ்வகைப்படுத்தலுக்கு உரியது. இருப்பினும், வருமானத் தகுதியுடன், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள் அல்லது மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு கட்டிடம் அல்லது நிலம் அல்லது 2KW க்கு மேல் மின்சார இணைப்பு உள்ள குடும்பங்கள் இந்த வகைகளில் இருந்து விலக்கப்படுகின்றன. மற்றொரு திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு பெறும் குடும்பங்கள், அல்லது உறுப்பினர் வருமான வரி செலுத்துபவராக அல்லது அரசு ஊழியராக இருந்தால், இதற்கு தகுதியற்றவர்கள்.

விலக்கு அளவுகோலின்படி பீகாரில் தகுதிகள் தீர்மானிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் இயந்திர வாகனங்கள் (மூன்று அல்லது நான்கு சக்கரங்கள்) வைத்திருக்கும் குடும்பம் அல்லது மூன்று அல்லது அதற்கு மேல் பக்கா அறைகள் கொண்ட வீடு அல்லது 2.5 ஏக்கர் நிலம் அல்லது அதிக நீர்ப்பாசனம் உள்ள நிலம் வைத்துள்ளவர்கள் என்ற வழிகாட்டுதல்களின் படி மாநில அரசால் தகுதியற்றவர்கள் ஆகின்றனர். மாதம் ரூ.10,000க்கு மேல் வருமானம் ஈட்டும் உறுப்பினர் கொண்ட குடும்பம் அல்லது அரசு ஊழியர் கொண்ட குடும்பம் விலக்கப்படுகிறது.

2019ல் முன்னோடி திட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை 2020 மே மாதம், ஒன்றிய அரசு தேசிய அளவில் விரிவுப்படுத்தியது. அட்டைதாரர் ஆதார் எண்ணுடன் ஒருமுறை ‘இணைத்துவிட்டால்’ ரேஷன் அட்டையை எங்கு பதிவு செய்தாலும் இது  ‘புலம்பெயர்வை’ அனுமதிக்கிறது. இதனால் ருக்ஸனா போன்ற சூழலில் உள்ள யாரும் PDS உரிமையின் கீழ் உள்ள எந்த கடையிலும் பொருட்களை வாங்கலாம்.

2021 ஜூலையில் இத்திட்டத்தை டெல்லி அரசு நடைமுறைப்படுத்தியது.

*****

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

இடது: ருக்சனாவின் சகோதரி ரூபி கட்டூன். நடுவே: மேரா ரேஷன் செயலியில் ருக்சனாவின் குடும்பத்தின் ஆதார் விவரங்களை ‘உள்ளிடப்பட்டிருக்கிறது’ எனக் காட்டும் பதிவு. வலது: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்காக ருக்சானாவின் புலப்பெயர்வு நிலையை புதுப்பிக்க முயலும்போது தோன்றும் செய்தி

அன்றாடம் காலை 8 மணி முதல் மதியம் வரை ருக்ஸனா வீடுகளை சுத்தப்படுத்தி, துடைத்து, பாத்திரங்களை துலக்கிவிட்டு மீண்டும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை வேலைசெய்கிறார். ருக்ஸனாவிற்கு ஏன் டெல்லியில் ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என அவரது சகோதரி ருபியான்ட் 2021 டிசம்பர் 1ஆம் தேதி படேல் நகர உணவு வழங்கல் துறை வட்ட அலுவலகத்திடம் சென்று கேள்வி எழுப்பினார்.

‘மேரா ரேஷன்’ எனும் மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளனரா என்பதை சரிபார்த்துக் கொள்ளுமாறு எங்களை அறிவுறுத்தினர். அன்றைய தினம் அங்குள்ள அலுவலகத்தின் வலைத்தளம் வேலை செய்யவில்லை.

அன்று மதியம் ருக்ஸனாவின் ரேஷன் அட்டை விவரங்களையும் ஆதார் விவரங்களையும் செயலியில் ஏற்றினோம். ஒரு வயது குழந்தை ஆசியாவைத் தவிர மற்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளும் ‘இணைக்கப்பட்டுள்ளது’ என இருந்தது. ஆனால் ONORC பதிவேட்டில் ருக்ஸனாவின் புலப்பெயர்வு தகவல்களை பதிவேற்ற முயன்றபோது ஒரு செய்தி தோன்றியது : ‘தரவுகளை சேர்க்க முடியாது. பின்னர் முயற்சிக்கவும்.’

டிசம்பர் 7ஆம் தேதி மீண்டும் முயன்றபோதும் அதே செய்திதான் வந்தது.

IMPDS சர்வர் சிலசமயம் டெல்லியில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு செயல்பட தொடங்கும் நேரம் அவர்களின் சொந்த கிராமங்களில் விநியோகம் தொடங்குகிறது என்று PDS விநியோகஸ்தர் ஒருவர் சொன்னார். நவம்பர் 30 மாலைக்கு முன் டெல்லியின் பயனாளிகள் தங்களின் ஒதுக்கீட்டைப் பெற்றனர். டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து பீகாரில் அடுத்த சுற்று விநியோகம் தொடங்கும் என்று அவர் கூறினார்.

ருக்ஸனா நம்பிக்கையுடன் டிசம்பர் 5ஆம் தேதி ரேஷன் கடைக்கு சென்றார். அந்த இயந்திரம் பதிலளித்தது: ‘IMPDSல் ரேஷன் அட்டை இடம்பெறவில்லை’.

2021 செப்டம்பரிலிருந்து குடும்பத்தினருக்கு உணவளிக்க ருக்ஸனா, தான் வேலை செய்யும் வீடுகளின் முதலாளிகளையேச் சார்ந்துள்ளார். “ஒருவர் காய்கறி கொடுப்பார். சிலர் ரேஷன் கடையில் தாங்கள் வாங்கிய பொருட்களை எங்களுக்கு கொடுப்பார்கள்.”

PHOTO • Sanskriti Talwar
PHOTO • Sanskriti Talwar

இடதுபுறம்: ஷாதிபூர் மெயின் பஜாரில் உள்ள நியாய விலைக் கடையில் ருக்சானா கட்டூன். அவர் கடைக்கு எத்தனை முறை வந்தாரென்ற எண்ணிக்கையை மறந்துவிட்டார். வலது: நியாய விலைக் கடை வியாபாரி பாரத் பூஷன், ePOS இயந்திரத்தில் ருக்சானாவின் ஆதார் எண்ணை ஊட்டும்போது தனக்கு வரும் செய்தியைக் காட்டுகிறார்

“நீண்ட காலமாக நான் முயற்சித்து வருகிறேன்,” என்று சொல்லும்போதே ருக்ஸனாவின் எரிச்சல் வெளிப்படுகிறது. அவருடன் பீகாரிலிருந்து டெல்லி திரும்பிய மற்றவர்கள் 2021 ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்களுக்குள் மூன்று முறையாவது அவர்களின் ஒதுக்கீட்டைப் பெற்றிருப்பார்கள்.

டிசம்பர் 2020 முதல் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்குப் பதிலாக விநியோகிக்கப்பட்ட உலர் ரேஷன் கிட் பயனுள்ளதாக இருந்தது. அவர்களின் இரு மூத்த பிள்ளைகளான கபிலும், சாந்தினியும் படேல் நகர் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். ஒவ்வொரு பிள்ளையும் தலா 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் பெற்றனர். 2022 மார்ச் முதல் மீண்டும் மதிய உணவுத் திட்டம் தொடங்கியதால் அப்பொருட்களின் விநியோகம் நிறுத்தப்பட்டது என்கிறார் ருக்ஸனா.

*****

டெல்லி அரசின் ONORC உதவி எண்ணை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்து பலனில்லை. எப்போதும் நெட்வொர்க் 'நெருக்கடி' என்கிறது.

1991ஆம் ஆண்டு முதல் நியாய விலைக் கடை நடத்தி வரும் தர்பங்காவின் பெனிப்பூரில் உள்ள ரேஷன் வியாபாரி பர்வேஜ் ஆலமிடம் தொலைபேசியில் பேசியபோது, ருக்ஸனா மட்டும் தனியாக பாதிக்கப்படவில்லை என்றார். “டெல்லியில் ரேஷன் பொருட்களை பெற முடியவில்லை என்று அங்கிருந்து பல புலம்பெயர் தொழிலாளர்கள் என்னை அழைத்துக் கூறுகின்றனர்,” என்றார் அவர்.

தர்பங்காவின் மாவட்ட வழங்கல் அலுவலர் (DSO) அஜய் குமார் தொலைப்பேசி வழியாக பேசுகையில், தனது அலுவலகத்தில் வேலை ஒழுங்காக நடைபெறுகிறது என்றார். “டெல்லியில் உள்ள அலுவலர்கள்தான் சரியான காரணத்தைக் கூற வேண்டும். வேறு எந்த மாநிலத்தினரும் [டெல்லியைத் தவிர] இதுபோன்ற பிரச்னையை எழுப்பவில்லை,” என்றார்.

டெல்லியின் உணவு விநியோகத்துறையின் கூடுதல் ஆணையர் குல்தீப் சிங் பேசுகையில், டிசம்பரில் பீகாரிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் பெயரில் 43,000க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டன என்றார். “இது ஒருவருக்கு மட்டுமே நிகழ்ந்துள்ளது. பீகாரில் பயனாளியின் பெயர் நீக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியமுள்ளது,” என்றார்.

PHOTO • Sanskriti Talwar

பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்திலிருந்து டெல்லியில் வேலை தேடுவதற்காக ருகாசனும் வகீலும் குடிபெயர்ந்தனர்

மே 2020-ல், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு தழுவிய அளவில் ஒன்றிய அரசு அறிவித்தது. ரேஷன் கார்டு எங்கு பதிவு செய்யப்பட்டாலும், அது கார்டு உரிமையாளரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டவுடன் புலப்பெயர்வை இது அனுமதிக்கிறது

2022 பிப்ரவரி 24ஆம் தேதி குடும்பத்தில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்க ருக்ஸனா தனது குடும்பத்துடன் துர்பங்கா சென்றார். மீண்டும் வந்தவுடன் பிப்ரவரி 26ஆம் தேதி அவர் மோஹன் பஹிராவில் உள்ள நியாய விலை கடைக்கு தனது மகளை அனுப்பினார்.

அந்த மாதம் அவரது குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் வெற்றிகரமாக கிடைத்துவிட்டது.

எனினும் மார்ச் 21ஆம் தேதி டெல்லி புறப்படுவதற்கு  முன் ருக்ஸனா கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றபோது அவரது அட்டை நீக்கப்பட்டுவிட்டதாக வியாபாரி தெரிவித்தார். “உயர் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டுவிட்டது,” என அவரிடம் வியாபாரி தெரிவித்துள்ளார்.

“கடந்த மாதம் அது வேலை செய்தது. எப்படி ரத்தாகி இருக்கும்?” வியாபாரியிடம் ருக்ஸனா கேட்டார்.

மீண்டும் பேனிப்பூரில் உள்ள வட்டார ரேஷன் அலுவலகத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் அட்டைகளையும் எடுத்துச் செல்லுமாறு அவரிடம் வியாபாரி அறிவுறுத்தியுள்ளார். டெல்லிக்கும் ஆதார் அட்டைகளை எடுத்துச் சென்று முயற்சிக்குமாறு அவரிடம் வியாபாரி பரிந்துரைத்துள்ளார்.

மாவட்ட வழங்கல் அதிகாரி அஜய் குமார் பேசுகையில், இவ்வகையில் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட முடியாது. எனினும் அப்படி நீக்கப்பட்டுவிட்டால், ருக்ஸனாவின் குடும்பம் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.

டெல்லி திரும்பிய ருக்ஸனா விரைவில் முடியும் வேலை இல்லை என்பதால் அதை கைவிட்டுவிட்டார். “இனிமேல் எனக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கப்போவதில்லை.”

தமிழில்: சவிதா

Sanskriti Talwar

Sanskriti Talwar is an independent journalist based in New Delhi, and a PARI MMF Fellow for 2023.

Other stories by Sanskriti Talwar
Editor : Kavitha Iyer

Kavitha Iyer has been a journalist for 20 years. She is the author of ‘Landscapes Of Loss: The Story Of An Indian Drought’ (HarperCollins, 2021).

Other stories by Kavitha Iyer
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

Other stories by Savitha