காணொளி: மாரியின் மசூதியும் தர்காவும்

மூன்று இளைஞர்கள் கட்டுமான தளத்தில் வேலை பார்த்து விட்டு மாரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். “15 வருடங்களுக்கு முன்னால் அது நடந்தது,” என அவர்களில் ஒருவர் நினைவுகூருகிறார். “எங்கள் கிராமத்தில் ஆளரவமற்ற ஒரு மசூதியை நாங்கள் ஒருமுறை கடந்தோம். அப்போது உள்ளே என்ன இருக்குமென பார்க்க ஆவல் தோன்றியது.”

தரையில் பாசி படர்ந்திருந்தது. புதர்கள் கட்டுமானத்தில் நிறைந்திருந்தன.

”உள்ளே நுழைந்ததும் எங்களின் மனநிலை மாறியது,” என்கிறார் 33 வயது தினக் கூலி தொழிலாளர். “நாங்கள் அனைவரும் உள்ளே செல்ல வேண்டுமென அல்லா விரும்பியிருக்கலாம்.”

அஜய் பஸ்வான், பகோரி பிந்த் மற்றும் கவுதம் பிரசாத் ஆகியோர் அதை சுத்தப்படுத்துவதென முடிவெடுத்தனர். “காட்டுச் செடிகளை வெட்டி, மசூதிக்கு நாங்கள் பெயிண்ட் அடித்தோம். மசூதிக்கு முன்னால் பெரிய மேடையை கட்டினோம்,” என்கிறார் அஜய். இரவு விளக்கை ஏற்றவும் அவர்கள் தொடங்கினார்கள்.

மூவரும் சேர்ந்து ஓர் ஒலி அமைப்பை நிறுவி, மசூதியின் உச்சியில் ஓர் ஒலி பெருக்கியை தொங்கவிட்டனர். “தொழுகைக்கான அழைப்பை ஒலிபரப்புவதென முடிவெடுத்தோம்,” என்கிறார் அஜய். விரைவில் எல்லா இஸ்லாமியர்களுக்குமான தொழுகை அமைப்பு அன்றாடம் ஐந்து முறை, பிகாரின் நாளந்தா மாவட்டத்தின் மாரி கிராமத்தில் ஒலிக்கத் தொடங்கியது.

PHOTO • Umesh Kumar Ray
PHOTO • Shreya Katyayini

அஜய் பஸ்வான் (இடது) பிற இரு நண்பர்களுடன் சேர்ந்து பிகாரின் நாளந்தா மாவட்ட மாரி கிராமத்தில் மசூதியை பார்த்துக் கொள்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தனர். ஊரில் என்ன விழாவாக இருந்தாலும், இந்துக்களின் விழாவாக இருந்தாலும், மசூதியையும் தர்காவையும் வணங்கிதான் பல நூற்றாண்டுகளாக தொடங்கப்படுகிறது என்கின்றனர் கிராமத்தின் மூத்தவர்கள் (வலது)

மாரி கிராமத்தில் இஸ்லாமியர்கள் கிடையாது. ஆனால் மசூதியையும் தர்காவையும் பராமரிக்கும் வேலையை இங்குள்ள அஜய், பகோரி மற்றும் கவுதம் ஆகிய மூன்று இந்துக்கள் பார்த்துக் கொள்கின்றனர்.

“எங்களின் நம்பிக்கை இந்த மசூதியுடனும் தர்காவுடனும் இணைந்திருக்கிறது. எனவே அதை நாங்கள் பாதுகாக்கிறோம்,” என்கிறார் ஜானகி பண்டிட். “65 வருடங்களுக்கு முன் திருமணமான போது, நானும் முதன்முறையாக மசூதியில் வணங்கி விட்டு, பிறகு எங்களின் (இந்து) தெய்வங்களை வணங்கினேன்,” என்கிறார் 82 வயதான அவர்.

வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் பூசப்பட்டிருக்கும் மசூதி, பிரதான சாலையிலிருந்து தென்படுகிறது. அதன் பூச்சு ஒவ்வொரு மழைக்காலத்திலும் மங்குகிறது. நான்கடி எல்லை சுவர்கள், மசூதி மற்றும் தர்காவின் வளாகத்தை சுற்றி இருக்கிறது. பெரிய, பழைய மரக் கதவு ஒன்றின் வழியாக நுழையும் ஒருவர், மசூதியின் முற்றத்தை அடைவார். அங்கு குரானின் இந்தி மொழிபெயர்ப்பும் பிரார்த்தனை முறையை விளக்கும் சச்சி நமாஸ் புத்தகமும் இருக்கும்.

”கிராமத்தை சேர்ந்த மணமகன் முதலில் மசூதியிலும் மஜாரிலும் தலை வணங்கி விட்டு பிறகுதான் இந்து தெய்வங்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்,” என்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியரான பண்டிட். வெளியிலிருந்து கிராமத்துக்குள் திருமண ஊர்வலம் வந்தால் கூட, “மணமகன் முதலில் மசூதிக்கு அழைத்து செல்லப்படுவார். அங்கு மரியாதை செலுத்திய பிறகு, அவரை நாங்கள் கோவிலுக்கு அழைத்து செல்வோம். இச்சடங்கை கட்டாயமாக செய்ய வேண்டும்.” உள்ளூர்வாசிகள் தர்காவில் பிரார்த்தனை செய்வார்கள். அவர்களின் வேண்டுதல் நிறைவேறினால், அங்கு வந்து ஒரு அங்கியை போடுவார்கள்.

PHOTO • Shreya Katyayini
PHOTO • Umesh Kumar Ray

மாரியின் மசூதி 15 வருடங்களுக்கு முன் அஜய் பஸ்வான், பகாரி பிந்த் மற்றும் கவுதம் பிரசாத் ஆகியோரால் புதுப்பிக்கப்பட்டது. புதர்களை அவர்கள் வெட்டி, மசூதிக்கு பூச்சடித்து, மேடை அமைத்து, இரவு விளக்கை ஏற்ற அவர்கள் தொடங்கினர். மசூதிக்குள்ளே குரானின் இந்தி மொழிபெயர்ப்பும் (வலது) பிரார்த்தனை செய்யும் முறையை விளக்கும் கையேடும் இருக்கிறது

PHOTO • Shreya Katyayini
PHOTO • Shreya Katyayini

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் அராபியாவிலிருந்து வந்த சூஃபி துறவி ஹஸ்ரத் இஸ்மாயிலின் புனிதக் கல்லறை (இடது) என சொல்லப்படுகிறது. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான ஜானகி பண்டிட் (வலது) சொல்கையில், ‘எங்களின் நம்பிக்கை இந்த மசூதி மற்றும் தர்காவுடன் இணைந்தது. எனவே அவற்றை பாதுகாக்கிறோம்,’ என்கிறார்

ஐம்பது வருடங்களுக்கு முன், மாரியில் சிறு எண்ணிக்கையில் இஸ்லாமியர் இருந்தனர். 1981ம் ஆண்டில் பிகார் ஷரிஃப்ஃபில் நடந்த மதக்கலவரத்தில் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். அந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் நடந்த கலவரத்தை ஒரு கள்ளுக்கடையில் ஏற்பட்ட தகராறு தொடங்கி வைத்தது. கிட்டத்தட்ட 80 பேர் உயிரிழந்தனர்.

மாரி பெரிய பாதிப்பை காணவில்லை என்றபோதும் அப்பகுதியில் உருவாகியிருந்த சூழல், இஸ்லாமியரை உலுக்கி போட்டிருந்தது. மெதுவாக அவர்கள் வெளியேறத் தொடங்கி, இஸ்லாமியர் அதிகம் வாழும் அருகாமை டவுன்களிலும் கிராமங்களிலும் குடியேறினர்.

அச்சமயத்தில் பிறந்திராத அஜய் சொல்கையில், “இஸ்லாமியர் அச்சமயத்தில் கிராமத்திலிருந்து கிளம்பியதாக மக்கள் சொல்வார்கள். ஏன் அவர்கள் கிளம்பினார்கள் என்பதை பற்றியோ எதுவும் நடந்ததா என்பதை பற்றியோ அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஏதோ ஒரு விஷயம் மோசமாக நடந்திருந்தது மட்டும் தெரிந்தது,” என அவர் ஒப்புக் கொள்கிறார் அவர்கள் மொத்தமாக வெளியேறியதை சுட்டிக் காட்டி.

முதலில் வாழ்ந்த ஷகாபுத்தீன் அன்சாரி ஒப்புக் கொள்கிறார்: “அந்தச் சம்பவம்தான் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டது.”

1981ம் ஆண்டில் மாரியிலிருந்து வெளியேறியவர்களில் அன்சாரிகளும் அடக்கம். “என் தந்தை முஸ்லிம் அன்சாரி, பீடி உருவாக்கும் வேலையை அச்சமயத்தில் செய்து வந்தார். கலவரம் உருவான அன்று, அவர் பிகார் ஷரிஃப்ஃபுக்கு பீடி பொருட்கள் கொண்டு வரச் சென்றிருந்தார். அவர் திரும்பி வந்ததும், மாரியின் இஸ்லாமிய குடும்பங்களிடம் தகவல் சொன்னார்,” என்கிறார் ஷகாபுத்தீன்.

PHOTO • Umesh Kumar Ray
PHOTO • Umesh Kumar Ray

அஜய் (இடது) மற்றும் ஷகாபுத்தீன் அன்சாரி (வலது) ஆகியோர் மாரியில். தபால்காரர் வேலை பெற ஓர் இந்து உதவியதை பற்றி ஷகாப்புத்தீன் அன்சாரி நினைவுகூருகிறார். இஸ்லாமியர்களை வெளியேறச் செய்த 1981ம் ஆண்டு கலவரங்களை நினைவுகூரும் ஷகாபுத்தீன், ‘நான் மாரியில் தபால்காரராக பணிபுரிந்ததால், அங்குள்ள ஓர் இந்து வீட்டில் வசிக்கத் தொடங்கினேன். ஆனால் என் தந்தையையும் தாயையும் பிகார் ஷரிஃப்ஃபுக்கு அனுப்பி விட்டேன். அந்த கலவரம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது,’ என்கிறார்

இருபது வயதுகளில் ஷகாப்புதீன்தான் கிராமத்தின் தபால்காரராக இருந்தார். அவரின் குடும்பம் வெளியேறிய பிறகு, பிகார் ஷரிஃப் டவுனில் அவர் காய்கறி கடை தொடங்கினார். திடீரென கிளம்பினாலும், “கிராமத்தில் பாரபட்சம் காண்பிக்கப்படவில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக அதிக காலத்துக்கு வாழ்ந்தோம். யாருக்கும் எவரிடத்திலும் பிரச்சினை இருக்கவில்லை.”

மாரியில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் பகை எப்போதும் இருந்ததில்லை என்பதை மீண்டும் அவர் வலியுறுத்தி சொல்கிறார். “மாரிக்கு நான் செல்லும்போது பல இந்து குடும்பங்கள், அவர்களின் வீடுகளில் சாப்பிட அழைப்பார்கள். என்னை சாப்பிட அழைக்காத ஒரு குடும்பமும் அங்கு கிடையாது,” என்கிறார் 62 வயதான அவர், மசூதியும் தர்காவும் பராமரிக்கப்படுவதில் சந்தோஷம் கொண்டு.

பென் ஒன்றியத்தில் இருக்கும் மாரி கிராமத்தின் மக்கள்தொகை 3,307 ( கணக்கெடுப்பு 2011 ). அவர்களில் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தலித்களும்தான். மசூதியை பார்த்துக் கொள்ளும் இளைஞரான அஜய் ஒரு தலித். பகோரி பிந்த் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். கவுதம் பிரசாத் ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்.

“கங்கா-யமுனை போன்ற ஒத்திசைவான பண்பாட்டுக்கு இது சிறந்த உதாரணம்,” என்கிறார் முகமது காலித் ஆலம் புட்டோ. கிராமத்தில் முன்பு வசித்த 60 வயதுக்காரரான அவர், பிகார் ஷரிஃப் டவுனுக்கு இடம்பெயர்ந்தோரில் ஒருவர் ஆவார். “மசூதி 200 வருடங்கள் தொன்மையானது. அங்கு இருக்கும் தர்கா இன்னும் பழமையானது,” என அவர் சுட்டிக் காட்டுகிறார்.

“அந்த தர்கா ஹஸ்ராத் இஸ்மாயிலுடையது. அராபியாவிலிருந்து மாரி கிராமத்துக்கு வந்த சூஃபி துறவி அவர். கிராமத்துக்கு அவர் வருவதற்கு முன் பலமுறை அந்த கிராமம், வெள்ளம் மற்றும் நெருப்பு போன்ற இயற்கை இடர்களால் அழிக்கப்பட்டதாக சொல்வார்கள். அவர் அங்கு வாழத் தொடங்கிய பிறகு, பேரிடர் எதுவும் நடக்கவில்லை. அவர் இறந்த பிறகு, அவரின் தர்கா கட்டப்பட்டு, கிராமத்தின் இந்துக்கள் அதை வழிபடத் தொடங்கினர்,” என்கிறார் அவர். “அந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.”

PHOTO • Umesh Kumar Ray
PHOTO • Shreya Katyayini

அஜய் (இடது) மற்றும் அவரது நண்பர்கள் தொழுகை அழைப்பு பாட ஒருவரை வாடகைக்கு அமர்த்தியிருக்கின்றனர். இருவரும் சேர்ந்து அவருக்கு மாதம் 8,000 ரூபாய் சம்பளத்தை தங்களின் தினக்கூலியிலிருந்து தருகின்றனர். வலது: ‘ஒத்திசைவான பண்பாட்டுக்கு இது சிறந்த உதாரணம்,’ என்கிறார் மாரியில் முன்பு வசித்த காலித் ஆலம் புட்டோ

மூன்று வருடங்களுக்கு முன் வந்த கோவிட் தொற்றுக்கு பிறகான ஊரடங்குகளுக்கு பிறகு, மாரியில் வேலை கிடைப்பது அஜய்க்கும் பகோரிக்கும் கவுதமுக்கும் கடினமாக இருந்தது. எனவே அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு சென்றனர். கவுதம், இஸ்லாம்பூரில் (35 கிலோமீட்டர் தொலைவில்) ஒரு பயிற்சி மையம் நடத்துகிறார். பகோரி, சென்னையில் மேஸ்திரியாக இருக்கிறார். அஜய், பிகார் ஷரிஃப்ஃபுக்கு சென்று விட்டார்.

மூவரும் கிளம்பி விட்டதால் மசூதியின் பராமரிப்பு தடைபட்டது. பிப்ரவரி 2024-ல் பேசுகையில் தொழுகை அழைப்பு மசூதியில் நின்று விட்டதாக அஜய் கூறினார். எனவே அவர் தொழுகைக்கு அழைப்பவர் ஒருவரை பணிக்கு அமர்த்தினார். “அவரின் வேலை ஒரு நாளில் ஐந்து முறை தொழுகை அழைப்பு பாட வேண்டும். நாங்கள் (மூவரும்) 8,000 ரூபாய் மாத ஊதியம் அவருக்குக் கொடுக்கிறோம். கிராமத்திலேயே தங்க ஒரு அறையும் கொடுத்திருக்கிறோம்,” என்கிறார் அவர்.

உயிருடன் இருக்கும் வரை மசூதியையும் தர்காவையும் பாதுகாக்க அஜய் முடிவெடுத்திருக்கிறார். “என் மரணத்துக்கு பிறகு யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் நான் உயிருடன் இருக்கும் வரை, யாரும் எதையும் (மசூதிக்கு ஆபத்து) செய்ய விட மாட்டேன்.”

இக்கட்டுரை, பிகாரில் விளிம்புநிலை மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்த தொழிற்சங்கவாதி ஒருவரின் நினைவில் வழங்கப்படும் மானியத்தின் ஆதரவில் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழில்: ராஜசங்கீதன்

Text : Umesh Kumar Ray

উমেশ কুমার রায় ২০২২এর পারি ফেলো। বিহার-নিবাসী এই স্বতন্ত্র সাংবাদিকটি প্রান্তবাসী সম্প্রদায়দের নিয়ে লেখালেখি করেন।

Other stories by Umesh Kumar Ray
Photos and Video : Shreya Katyayini

শ্রেয়া কাত্যায়নী একজন চলচ্চিত্র নির্মাতা এবং পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ার বরিষ্ঠ ভিডিও সম্পাদক। তিনি পারি’র জন্য ছবিও আঁকেন।

Other stories by শ্রেয়া কাত্যায়ণী
Editor : Priti David

প্রীতি ডেভিড পারি-র কার্যনির্বাহী সম্পাদক। তিনি জঙ্গল, আদিবাসী জীবন, এবং জীবিকাসন্ধান বিষয়ে লেখেন। প্রীতি পারি-র শিক্ষা বিভাগের পুরোভাগে আছেন, এবং নানা স্কুল-কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে শ্রেণিকক্ষ ও পাঠক্রমে গ্রামীণ জীবন ও সমস্যা তুলে আনার কাজ করেন।

Other stories by Priti David
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan