உயர்நாகரிகம், வேகம் மற்றும் காமம்.
சொகுசு பயணம், பட்ஜெட் பயணம் அல்லது முடிவிலா பயணம்!
மீம்கள், ட்ரெண்டாகும் நடனங்கள், நகைச்சுவை அல்லது கொடூரமான ஃபில்டர்கள்.
இவைதாம் இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் உள்ளடக்கமாக இருக்கிறது. ஆனால் பாரியில் இவை எதுவும் கிடையாது. எனினும் சமூக ஊடக உலகத்துக்குள் எங்களுக்கான ஒரு வாசகர் பரப்பை உருவாக்கி வைத்திருக்கிறோம். எப்படி? அனைவருக்கும் தெரிந்தும் அதிகம் பயன்படுத்தப்படாத உத்தி: உண்மைகளுடன் கூடிய அற்புதமான கதை சொல்லல்.
வருடம் முடியும் தருணத்தில், எங்களின் பணிக்கு வினையாற்றிய வாசகப்பரப்பின் பன்மைத்துவத்தை பகிர விரும்புகிறோம் (இந்தக் காணொளியை பாருங்கள்).
The temporary 'chairwomen' of Banswara கட்டுரை குறித்த பதிவை லட்சக்கணக்கான வாசகர்கள் பாராட்டினர். ஆண்கள் மற்றும் மூத்தவர்களுக்கு முன் நாற்காலிகளிலோ உயரமான இடங்களிலோ அமராத ராஜஸ்தான் பெண்களை குறித்த நிலஞ்சனா நண்டியின் கட்டுரை அது. அக்கட்டுரை பற்றிய இன்ஸ்டாக்ராம் ரீலுக்கு கிட்டத்தட்டஏழு லட்சம் பார்வைகள் கிட்டின. அதே வகையான அனுபவத்தை பெற்ற பெண்களிடமிருந்து நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களும் வந்தன. சிலர், இத்தகைய விஷயங்களை பொருட்படுத்தாமல் செல்லும் நிலையை ஒப்புக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் இத்தகைய சூழலை கனவு கூட காண முடியவில்லை என குறிப்பிட்டிருந்தனர். மலிகா குமார் என்கிற வாசகரின் பின்னூட்டம், “உன்னிப்பான கவனத்தில்தான் இத்தகைய விஷயங்கள் புலப்படும்,” என இருந்தது. அன்றாட மக்களின் வாழ்க்கைகளை எழுதுபவர்களுக்கு கிடைத்த பெரும் பாராட்டு அது.








