மத்திய இந்தியாவில் உள்ள கர்கோன் மாநகரில், அது ஒரு வெயிலடிக்கும் ஏப்ரல் மாதப் பகல் பொழுது. மக்களின் அதிகாலை சலசலப்பைக் குலைத்தபடி வருகிறது நெருங்கி வரும் புல்டோசரின் உறுமல் சத்தம். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அந்த நகரின் பரபரப்பான, கூட்டம் மிகுந்த சாந்தினி சௌக் பகுதிக்குள் நுழைந்துகொண்டிருக்கின்றன அந்த புல்டோசர்கள். பதற்றமடைந்த மக்கள், தங்கள் வீடுகளில் இருந்தும், சிறிய கடைகளில் இருந்தும் வெளியே ஓடிவருகிறார்கள்.
சில நிமிடங்களில், ஒரு புல்டோசரின் முரட்டுத்தனமான இரும்புக் கரங்கள் தனது கடையையும், அதற்குள் இருந்த விலைமதிப்புள்ள பொருட்களையும் இடித்து நாசமாக்குவதை பீதியில் பார்க்கிறார் 35 வயது வாசிம் அகமது. “நான் சம்பாதித்த பணத்தையெல்லாம் இந்த மளிகைக் கடையில்தான் போட்டேன்,” என்றார் அவர்.
மாநில அரசின் உத்தரவின் பேரில், இந்த புல்டோசர்கள் ஏப்ரல் 11, 2022 அன்று இவரது சின்னஞ்சிறு கடையை மட்டுமல்ல, முஸ்லிம்கள் அதிகம் வாழும் கர்கோன் பகுதியில் உள்ள 50 கடைகள், வீடுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கின. ராம நவமி விழாவின்போது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்ட “கலவரக்காரர்கள்” மீது மத்தியப் பிரதேச மாநில அரசு மேற்கொண்ட ‘பழிவாங்கும் நீதி’ நடவடிக்கையே இந்த தனியார் சொத்தழிப்பு நடவடிக்கை.
ஆனால், வாசிம் கல் எறிந்தார் என்று அரசாங்கம் வாதிட முடியாது. ஏனென்றால், அவர் இரண்டு கைகளும் இல்லாதவர். கல் எடுத்து அடிப்பதெல்லாம் இருக்கட்டும். அவரால் அடுத்தவர் உதவியில்லாமல் தேநீர் கூட அருந்த முடியாது.
“அந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்கிறார் வாசிம்.
2005-ம் ஆண்டு நடந்த விபத்தில் இரண்டு கைகளையும் இழப்பதற்கு முன்னால் அவர் பெயிண்டராக இருந்தார். “ஒரு நாள் வேலையில் இருந்தபோது என் உடலில் மின்சாரம் பாய்ந்தது. என் உயிரைக் காப்பதற்காக டாக்டர்கள் எனது இரண்டு கைகளையும் துண்டித்துவிட்டனர். அந்தப் பெரும் இழப்பில் இருந்து மீண்டு வர (கடை மூலமாக) ஒரு வழியைக் கண்டுபிடித்தேன்,” என்று கூறும் அவரது குரலில், அந்த துன்பத்தில் வருந்தி காலத்தை வீணாக்கவில்லை என்ற பெருமை தெரிகிறது.
வாசிமின் கடையில், மளிகை, நோட்டு, பேப்பர் என தங்களுக்கு வேண்டியதைக் கூறிவிட்டு வாடிக்கையாளர்களே அவற்றை எடுத்துக்கொள்கிறார்கள். “அதற்கான பணத்தை அவர்களே என் பாக்கெட்டில் வைத்து விடுவார்கள். கடந்த 15 ஆண்டுகளாக இதுதான் என் வாழ்வாதாரம்,” என்கிறார் அவர்.
கர்கோன் சாந்தினி சௌக் பகுதியில் அன்று அதிகாலை 73 வயது முகமது ரஃபீக்குக்கு சொந்தமான நான்கு கடைகளில் மூன்று இடித்துத் தள்ளப்பட்டன. இதனால், அவருக்கு 25 லட்சம் நஷ்டம். “நான் கெஞ்சினேன். அவர்கள் காலில் விழுந்தேன்,” என்கிறார் ரஃபீக். “ஆவணங்களைக் காட்டுவதற்குக்கூட அவர்கள் (நகராட்சி அதிகாரிகள்) விடவில்லை. என் கடை முழுவதும் சட்டபூர்வமானது. அதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை. ஆனால், அந்த வாதமெல்லாம் எடுபடவில்லை.”
கலவரத்தின்போது ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடு செய்வதற்காக மாநில அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் இடிக்கப்பட்ட வாசிம், ரஃபீக் உள்ளிட்டோரின் கடைகள் நோட்டு, பேப்பர், சிப்ஸ், சிகரெட், சாக்லெட், குளிர் பானங்கள் போன்றவற்றை விற்றுவந்தன. இடிக்கப்பட்ட கட்டுமானங்கள் “சட்டவிரோதமானவை” என்று பிறகு மாவட்ட நிர்வாகம் கூறியது. ஆனால், “எந்த வீடுகளில் இருந்து கற்கள் வீசப்பட்டனவோ அவற்றை கற்குவியலாக மாற்றுவோம்” என்று மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறினார்.
புல்டோசர்கள் வருவதற்கு முன்பே, கலவரத்தின்போது முக்தியார் கான் போன்றவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் சஞ்சய் நகர் பகுதியில் இருக்கிறது அவரது வீடு. நகராட்சி துப்புரவுத் தொழிலாளியான அவர், கலவரம் வெடித்தபோது பணியில் இருந்தார். “என் நண்பரிடம் இருந்து அழைப்பு வந்தது. குடும்பத்தை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்படி அவர் கூறினார்,” என்கிறார் முக்தியார்.
அவரது வீடு, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் சஞ்சய் நகர் பகுதியில் இருப்பதால், நண்பர் கூறிய அறிவுரை உயிர் காக்கும் அறிவுரையானது. சரியான நேரத்தில் திரும்பி வந்தார் அவர். அதனால், அவரது குடும்பம், முஸ்லிம் பகுதி ஒன்றில் உள்ள அவரது சகோதரியின் வீட்டுக்கு தப்பிச் செல்ல முடிந்தது.
அங்கிருந்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அவருடைய வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகியிருந்தது. “எல்லாம் போய்விட்டது” என்றார் அவர்.
தன்னுடைய 44 ஆண்டுகால வாழ்க்கை முழுவதும் அந்தப் பகுதியில்தான் வாழ்ந்திருந்தார் முக்தியார். “எங்கள் (பெற்றோர்) குடும்பம் சிறிய குடிசையில் வாழ்ந்து வந்தது. 15 ஆண்டுகாலம் பணம் சேர்த்து 2016ல் எங்களுக்காக ஒரு வீடு கட்டினேன். வாழ்நாள் முழுவதும் அங்கேதான் வாழ்ந்தேன். எல்லோரிடமும் எனக்கு இணக்கமான உறவே இருந்து வந்தது,” என்றார் அவர்.
தன்னுடைய வீடு நாசமாகிவிட்ட நிலையில், அவர் தற்போது கர்கோன் பகுதியில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வாடகை தந்து வேறொரு வீட்டில் வசிக்கிறார். அவரது சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு இப்போது வாடகையாகப் போகிறது. பாத்திரங்கள், துணிமணிகள், அறைகலன்கள் எல்லாவற்றையும் அவர் புதிதாக வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காரணம் உள்ளே இருந்த பொருட்களோடு அவரது வீடு கொளுத்தப்பட்டு விட்டது.
“என் வாழ்க்கையை நாசம் செய்வதற்கு முன்பு அவர்கள் யோசிக்கவே இல்லை. கடந்த 4-5 ஆண்டுகளாகத்தான் இந்து – முஸ்லிம் பதற்றம் அதிகரித்துவிட்டது. இதற்கு முன்பு எப்போதும் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. இப்போதெல்லாம் நாங்கள் அச்சத்தின் விளிம்பிலேயே இருக்கிறோம்.”
முக்தியாருக்கு ரூ.1.76 லட்சம் இழப்பீடு கிடைக்கும். அவருக்கு ஏற்பட்ட இழப்பில் சிறு பகுதி இது. இந்தக் கட்டுரை வெளியாகும் வரையில் அந்தப் பணமும் அவருக்கு வந்து சேரவில்லை. அந்தப் பணம் விரைவில் வந்துவிடும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இல்லை.
“என் வீடு இடிக்கப்பட்டதால், எனக்கு இழப்பீடும், நீதியும் வேண்டும். கலவரக்காரர்கள் செய்ததை, இரண்டு நாட்கள் கழித்து அரசாங்கமே செய்தது,” என்றார் அவர்.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் பல பாஜக ஆளும் மாநிலங்கள் ‘புல்டோசர் நீதி’யின் மறுபெயராக மாறிவிட்டன. மத்தியப்பிரதேசம் மட்டுமில்லாமல், உத்தரப்பிரதேசம், தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் குற்றச்சாட்டுக்கு இலக்கான மக்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள் இடிக்கப்படும் நிகழ்வுகள் நடந்துள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் உண்மையில் குற்றம் செய்தவர்களாகவோ அப்பாவிகளாகவோ இருக்கலாம். ஆனால், பெரும்பாலான தருணங்களில் இடிக்கப்படும் வீடுகளும் கடைகளும் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை.
கர்கோன் நகரில் மாநில அரசு முஸ்லிம்களின் வீடுகளை மட்டுமே இடித்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.) இந்த செய்தியாளரிடம் தந்த ஓர் அறிக்கை. மாநில அரசின் இடிப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து இந்த அறிக்கையை அளித்துள்ளது அந்த அமைப்பு.
“கலவரத்தால் இரண்டு சமுதாயங்களுமே பாதிக்கப்பட்டிருந்தாலும், நிர்வாகம் இடித்துத் தள்ளிய எல்லா சொத்துக்களுமே முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. நோட்டீஸ் தரப்படவில்லை. பொருட்களை எடுத்துக்கொள்ள காலக்கெடு தரப்படவில்லை. மாவட்ட அதிகாரிகள் தலைமையிலான இடிப்புக் குழுக்கள் நேராக வந்து அப்படியே வீடுகளையும், கடைகளையும் இடித்து நாசமாக்கின” என்கிறது அறிக்கை.
*****
“வழக்கம்போல இதெல்லாம் ஒரு புரளியில் இருந்தே தொடங்கியது. 2022 ஏப்ரல் 10-ம் தேதி ராமநவமி கொண்டாட்டத்தின்போது, கர்கோன் தலாப் சௌக் அருகே இந்துக்களின் ஊர்வலம் ஒன்றை போலீஸ் தடுத்து நிறுத்திவிட்டது என ஒரு பேச்சு பரவியது. சமூக ஊடகங்கள் இதனை ஏற்றிவிட்டன. உடனடியாக, வன்முறைக் கும்பல் கூடியது. வன்முறை முழக்கங்களை எழுப்பியபடியே, குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்றது அந்தக் கும்பல்.
கிட்டத்தட்ட அதே நேரத்தில், அருகில் உள்ள மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களும் இந்தக் கோபம் கொண்ட கும்பலும் நேருக்கு நேர் வந்தனர். நிலைமை வன்முறையாக மாறியது. கற்கள் எறியப்பட்டன. மிக விரைவில் நகரின் பிற பகுதிகளுக்கும் வன்முறை பரவியது. அங்கே அதிதீவிர இந்துக் குழுக்கள் முஸ்லிம்கள் வீடுகளையும் கடைகளையும் இலக்கு வைத்துத் தாக்கின.
கிட்டத்தட்ட அதே நேரத்தில், சி.என்.என். நியூஸ்18 டிவியின் பிரைம் டைம் தொகுப்பாளர் அமன் சோப்ரா, கர்கோன் சம்பவம் பற்றி ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தினார். அதற்கு “இந்துக்கள் ராம நவமி கொண்டாடுகிறார்கள். ஆனால், ரஃபீக் அவர்கள் மீது கல்மழை பொழிகிறார்” என்று தலைப்பிட்டார் அவர். இது நிலைமையை மோசமாக்கிவிட்டது.
குறிப்பாக முகமது ரஃபீக்கை குறிவைத்து சோப்ரா இப்படி தலைப்பு வைத்தாரா அல்லது பொதுவான ஒரு முஸ்லிம் பெயரைப் பயன்படுத்தவேண்டும் என்று இப்படிச் செய்தாரா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சி, ரஃபீக் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மோசமான விளைவை ஏற்படுத்தியது. “அதன் பிறகு பல நாட்களுக்கு என்னால் தூங்க முடியவில்லை. இந்த வயதில் இந்த மன நெருக்கடியை என்னால் தாங்க முடியவில்லை,” என்கிறார் அவர்.
ரஃபீக்கின் கடைகள் இடிக்கப்பட்டு இப்போது ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. சோப்ரா நிகழ்ச்சியின் திரைக் காட்சி ஒன்றின் பிரின்ட் அவுட்டை இன்னும் வைத்திருக்கிறார் அவர். அது முதல் முறை புண்படுத்தியதைப் போலவே இன்னமும் புண்படுத்துகிறது அவரை.
சோப்ராவின் நிகழ்ச்சிக்குப் பிறகு சிறிது காலம் இந்துக்கள் அவரது கடையில் இருந்து குளிர் பானங்கள், பால் பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்தனர். தீவிர இந்துக் குழுக்கள், ஏற்கெனவே முஸ்லிம்கள் மீது பொருளாதார புறக்கணிப்பைக் கோரி வந்தார்கள். சோப்ராவின் நிகழ்ச்சி நிலைமையை இன்னும் மோசமாக்கியது. “நீயும் ஒரு பத்திரிகையாளர்தான். இதுதான் பத்திரிகையாளர் செய்யும் வேலையா?” என்று என்னிடம் கேட்டார் அவர்.
என்னிடம் பதில் இல்லை. என் சொந்த தொழில் குறித்த அவமானம்தான் ஏற்பட்டது. “உன்னை நான் சொல்லவில்லை. நீ நல்ல பிள்ளையாகத் தெரிகிறாய்,” என்று ஒரு புன்னகையோடு குறிப்பிட்ட அவர், தன் கடையில் இருந்து குளிர்பானம் ஒன்று தந்தார். “என்னிடம் இன்னும் ஒரு கடை இருக்கிறது. என் மகன்கள் செட்டில் ஆகிவிட்டார்கள். ஆனால், (பாதிக்கப்பட்ட) மற்றவர்களுக்கு அந்த சௌகர்யம் இல்லை. நிறைய பேருக்கு வாழ்க்கை, கைக்கும் வாய்க்கும் என்றுதான் போய்க்கொண்டிருக்கிறது.”
“மீண்டும் கடையைக் கட்டுவதற்கு வாசிமிடம் சேமிப்பு ஏதுமில்லை. கடை இடிக்கப்பட்ட பிறகு கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் கடை இல்லாமல், அவரால் ஏதும் சம்பாதிக்க முடியவில்லை. கர்கோன் மாநகராட்சி அவருக்கு உதவி செய்வதாக கூறியது. “அவர்கள் உதவி செய்வதாக கூறினார்கள். ஆனால், ஒரு பேச்சுக்கு சொன்னதோடு சரி.”
“இரண்டு கைகளும் இல்லாத ஒருவன் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது,” என்றார் அவர்.
“வாசிமின் நோட்டுப்புத்தகக் கடை அரசாங்கத்தால் இடிக்கப்பட்ட பிறகு, அதைப் போலவே சிறிய கடையை நடத்திவரும் அவரது அண்ணன் அவருக்கு உதவி செய்துவருகிறார். “என் இரண்டு குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துவிட்டேன். மூன்றாவது குழந்தைக்கு இரண்டு வயது. அவனும் அரசுப் பள்ளிக்குதான் செல்லவேண்டும். என் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்துக்கு உள்ளாகிவிட்டது. என் விதியோடு சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது,” என்கிறார் அவர்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்