ஷியாம்லால் காஷ்யப் சடலத்தை வைத்து அவரது குடும்பம் மிரட்டப்பட்டது.
அர்ரகோத்தே என்ற ஊரைச் சேர்ந்த 20 வயது கூலித் தொழிலாளியான அவர் 2023 மே மாதம் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது 20 வயது மனைவி மார்த்தா அப்போது கர்ப்பிணியாக இருந்தார்.
“அது ஒரு தற்கொலை. 15 கி.மீ. தொலைவில் உள்ள, அருகாமை மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பிணக்கூராய்வில் எந்த தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்கிறார் அவரது அண்ணி 30 வயது சுக்மிதி காஷ்யப். அர்ரகோத்தே கிராமத்தில், தரிசு நிலத்தின் ஓரத்தில் அமைந்துள்ள, மங்கலாக விளக்கு எரியும் குடிசைக்கு வெளியே அமர்ந்துள்ளார் சுக்மிதி.
அந்த அரசு மருத்துவமனையில் ஓரிரு உறவினர்கள் ஷியாம் லாலின் உடலை வாங்கிச் செல்வதற்காக காத்திருக்கிறார்கள். இந்த மரணம் தந்த அதிர்ச்சியில், துயரத்தில் இருந்து மீளாத, அவரது குடும்பத்தினர் ஊரில், அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில், அவர்கள் குடும்பம் இந்து மதத்துக்கு மாறினால்தான் ஊரில் ஷியாம்லாலுக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியும் என்று உள்ளூர்காரர்கள் சிலர் கூறினார்கள்.
சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர்கள், முதன்மையாக கூலி வேலை செய்தும், மூன்று ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம் செய்தும்தான் பிழைப்பை நடத்துகிறார்கள். நிலத்தில் விளையும் அரிசி, குடும்பம் சாப்பிடுவதற்குதான் செலவாகிறது. அவர்களுக்கு வந்துகொண்டிருந்த ஒரே வெளி வருமானம், ஷியாம் லால் முதுகு ஒடிய உழைத்துக் கிடைத்த கூலிதான். மாதம் சுமார் ரூ.3,000 சம்பாதித்து வந்தார் அவர்.
மோசமான வறுமையில் ஒரு குழந்தையை வளர்க்கும் சுமையை நினைத்து ஷியாம்லால் இப்படிச் செய்துகொண்டாரா என சந்தேகப்படும் சுக்மிதி “அவர் இறப்பதற்கு முன்பு எதுவும் எழுதிக்கூட வைக்கவில்லை,” என்கிறார்.
மாடியா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்தக் குடும்பம் கிறிஸ்துவ சமயத்தைப் பின்பற்றுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 சதவீதம் பேர் மட்டுமே கிறிஸ்துவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள பஸ்தர் வட்டாரத்தில் உள்ளனர்.
இந்த ஆண்டு மே மாதம் இரண்டாவது வாரத்தில் காணாமல் போனார் ஷியாம்லால் காஷ்யப். இதையடுத்து, பஸ்தரில் உள்ள காடுகளில் அவரை பரபரப்பாகத் தேடினார்கள். குடும்பத்தினர் இரவில் தூங்கவே இல்லை.
அடுத்தநாள் காலை இந்த தேடுதல் வேட்டை சோக முடிவை எட்டியது. அவர்களது வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்திலேயே ஷியாம்லாலின் உயிரற்ற உடல், ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. “நாங்கள் அதிர்ந்தோம், குழம்பினோம், தடுமாறினோம். எங்களால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை,” என்றார் சுக்மிதி.
அர்ரகோத்தே, சுமார் 2,500 பேர் வசிக்கும் ஒரு சிற்றூர். “இந்த மாதிரி நேரத்தில், நம் ஊர் மக்கள் நமக்கு உணர்வுபூர்வமாக ஆதரவு தரவேண்டும் என எதிர்பார்ப்போம்,” என்கிறார் சுக்மிதி.
ஆனால் நடந்தது வேறு. குடும்பத்தை சூழ்ந்துகொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். மிரட்டினார்கள். வலதுசாரித் தலைவர்கள் உசுப்பேற்றியதால், ஊரின் செல்வாக்கு மிக்க நபர்கள், ஷியாம்லால் குடும்பத்தின் இந்த பலவீனமான நேரத்தை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர். ஷியாம்லாலின் இறுதிச் சடங்கை ஊரில் நடத்துவதற்கு அவர்கள் ஒரு நிபந்தனை விதித்தனர். அந்தக் குடும்பம் கிறிஸ்துவ சமயத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி, இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்யவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
கிறிஸ்துவப் பாதிரியார் முன்னிலையில் உடலைப் புதைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
தங்கள் குடும்பம் கடந்த 40 ஆண்டுகளாக கிறிஸ்துவத்தை பின்பற்றுவதாக கூறுகிறார் சுக்மிதி. “அதுதான் இப்போது எங்கள் வாழ்க்கை முறை. தொடர்ச்சியாக நாங்கள் ஜெபிக்கிறோம். சோதனையான காலத்தை சமாளிக்க அதுவே எங்களுக்கு வலிமையைத் தருகிறது. இந்த நம்பிக்கையை எப்படி ஒரே நாளில் கைவிட முடியும்?” என்று கேட்கிறார் அவர்.
துயரத்தில் இருந்த குடும்பத்தை, வலதுசாரி ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள். இத்தனை ஆண்டு காலம் சடலங்களைப் புதைக்கிற, ஊர் இடுகாட்டை அவர்கள் குடும்பம் பயன்படுத்த முடியாது என்று கூறினர். “ஒரு குறிப்பிட்ட சமயத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்பதால்தான் நாங்கள் குறிவைக்கப்படுகிறோம். ஆனால், நீங்கள் விரும்புகிற சமயத்தை நீங்கள் பின்பற்றலாம். இதை நான் செய்திகளில் படித்துள்ளேன்,” என்றார் சுக்மிதி.
அதைவிட என்னவென்றால், “எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஷியாம்லாலைப் புதைக்கவும் அவர்கள் விடவில்லை. அவரது பாட்டியை நாங்கள் அங்கேதான் புதைத்துள்ளோம். இருவரின் கல்லறைகளும் அடுத்தடுத்து இருக்கட்டும் என்று நினைத்தோம். ஆனால், நாங்கள் மதம் மாற மறுத்தோம் என்பதால், வீட்டுத் தோட்டத்தில் ஷியாம்லால் உடலைப் புதைக்கவும் அவர்கள் விடவில்லை,” என்றார் சுக்மிதி.
மாடியா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஷியாம்லால் குடும்பம் கிறிஸ்துவ சமயத்தைப் பின்பற்றுகிறது. அவர் இறந்தபோது, ஊரின் செல்வாக்குமிக்க நபர்கள், அவரது உடலைப் புதைக்க ஒரு நிபந்தனை விதித்தனர். அந்தக் குடும்பம் இந்து சமயத்துக்கு மாறி, இந்து முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை
சத்தீஸ்கரில் கிறிஸ்துவர்களை இந்து மதக் குழுக்கள் பகைமையோடு நடத்துவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், குடும்பத்தில் சாவு நடக்கும் நேரத்தில் மக்களை நிர்பந்திப்பதும் மிரட்டுவதும் பதறவைக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது என்கிறார் ரத்னேஷ் பெஞ்சமின். பஸ்தரில் உள்ள சத்தீஸ்கர் கிறிஸ்டியன் ஃபோரம் என்ற அமைப்பின் துணைத் தலைவர் அவர்.
தங்கள் உறவுகளை பறிகொடுத்துத் தவிக்கும் குடும்பங்களை வலதுசாரி குழுக்கள் குறிவைக்கின்றன.கிறிஸ்துவ மதத்தை பின்பற்றாத பழங்குடியினர் அக்குடும்பங்களை துன்புறுத்துகின்றனர். கிறிஸ்துவத்தைப் பின்பற்றுகிறவர்கள் ஊர் எல்லைக்குள் சடலங்களைப் புதைக்க அனுமதி இல்லை என்று ஓர் ஊரில், கிராம சபைக் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
கடைசியில், ஷியாம்லாலின் உடல் ஊருக்குக் கொண்டு வரப்படவே இல்லை. அர்ரகோத்தே-வில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்டத் தலைமையிடமான ஜக்தல்பூர் கொண்டு செல்லப்பட்டு அங்கே புதைக்கப்பட்டது. “உடலை அடக்கம் செய்வது அதற்குரிய வேகத்தில் நடந்தால்தான், எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை மனம் புரிந்து ஏற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும்,” என்கிறார் சுக்மிதி.
ஷியாம்லாலின் இறுதிச் சடங்கு, ஓர் இயந்திரத்தனமான ஏற்பாடாக, விரைவாக நடந்துவிட்டது. “உரிய முறையில் அவருக்கு விடை கொடுக்கவில்லை என்று தோன்றியது,” என்கிறது அவரது குடும்பம்.
அவர்கள் இந்து மதத்துக்கு மாற மறுத்ததை அடுத்து ஊருக்குள் பதற்றம் நிலவியது. ஷியாம்லால் இறந்த பிறகு, சில நாட்களுக்கு ஊரே உணர்ச்சி விளிம்பில் இருந்தது. பெரும்பான்மைவாதக் கோரிக்கைளுக்கு முன்பாக, அமைதிக்கான தீர்வு அடிபணிய வேண்டியிருந்தது.
“கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய சூழ்நிலை இது. அதற்கு முன்பும்கூட கிறிஸ்துவர்களை இந்து சமயத்துக்கு மாற்ற பல்வேறு வழிகளில் வலதுசாரிகள் முயற்சி செய்தார்கள். ஆனால், பெரும்பாலும் மரணப் பொழுதுகளில் அதற்குரிய கண்ணியம் இருக்கும். இப்போது அதுவும் இல்லை என்பதும் துயரம்,” என்கிறார் பெஞ்சமின்.
*****
பஸ்தர் கனிம வளம் மிகுந்த பகுதி. ஆனால், இங்குள்ள மக்கள் மிகவும் ஏழ்மையில் வாழ்கிறவர்கள். இந்தியாவிலேயே மோசமான ஏழ்மை நிலவும் பகுதிகளில் ஒன்று இது. பெரிதும் பழங்குடிகளைக் கொண்ட மாநில மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள்.
1980களில் இருந்து இந்தப் பகுதி ஆயுத மோதலில் சிக்கித் தவிக்கிறது. மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் அல்லது ஆயுதம் தாங்கிய கொரில்லா படையினர், காடுகளைப் பாதுகாத்து பழங்குடிகளின் உரிமைக்காகப் போராடுவதாக கூறுகிறார்கள். இந்தக் காடுகள் மீது அரசுக்கும், பணக்காரத் தொழில் நிறுவனங்களுக்கும் ஒரு கண் இருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் ஆயுத மோதலில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. 15 ஆண்டு கால பாஜக ஆட்சிக்குப் பிறகு மாநிலத்தில் அதிகார மாற்றம் ஏற்பட்டது. அப்போது பஸ்தர் வட்டாரத்தில் உள்ள 12 தொகுதிகளில் 11 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பஸ்தர் மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கியது பஸ்தர் வட்டாரம்.
சத்தீஸ்கரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. மீண்டும் மாநிலத்தைக் கைப்பற்றவேண்டும் என்பதற்காக மக்களிடையே பிரிவினையை உருவாக்க களத்தில் முயற்சி செய்துகொண்டிருக்கின்றன வலதுசாரிக் குழுக்கள்.
கடந்த ஒன்றரை ஆண்டில், 70 கிறிஸ்துவர்களின் இறுதிச் சடங்குகளில் இந்துக்கள் தலையிட்டு, உடலைப் புதைக்க தடை ஏற்படுத்தப்பட்டதாக விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.), பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் பதிவு செய்துள்ளன என பஸ்தரில் உள்ள மூத்த வி.எச்.பி. தலைவர் ரவி பிரம்மச்சாரி கூறுகிறார். “கிறிஸ்துவ மிஷனரிகள் ஏழைகளை இரையாக்கிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு எழுத்தறிவு இல்லாமல் இருப்பதை ஆதாயமாக்கிக் கொள்கிறார்கள். நாங்கள் ‘கர்வாப்சி’ (வீடு திரும்பல்) செய்ய பாடுபடுகிறோம். இந்துக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் வேலை. எங்கள் மூலம் ‘விழிப்புணர்வு’ பெற்றவர்கள் தங்கள் ஊரில் பழங்குடி கிறிஸ்துவர்கள் இறுதிச் சடங்கு செய்ய விடமாட்டார்கள்,” என்கிறார் அவர்.
அர்ரகோத்தே கிராமத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது நகல்சர் என்ற ஊர். அங்கே பஜ்ரங் தள் உறுப்பினர்கள், ஒரு பழங்குடி கிறிஸ்துவக் குடும்பத்தை இன்னும் மோசமாக கொடுமைப்படுத்தினர்.
32 வயது பாண்டுராம் நாக்கின் பாட்டி அயாத்தி 2022 ஆகஸ்டில் உயிரிழந்தார். நோயுற்றிருந்த அவர் தன் 65 வயதில் அமைதியான முறையில் இறந்தார். ஆனால், அவரது இறுதிச் சடங்கு அமைதியாக நடக்கவில்லை.
“நாங்கள் அவரது உடலை கல்லறைக்கு கொண்டு சென்றபோது, எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு கும்பல், எங்களை சூழ்ந்துகொண்டு நெருக்கியது. அவர்களில் பஜ்ரங் தள் உறுப்பினர்களும் இருந்தனர். நாங்கள் நிலை தடுமாறினோம். கிட்டத்தட்ட எங்கள் பாட்டியின் சடலம் கீழே விழப்போனது. சடலத்தின் அடியில் இருந்த துணியைக்கூட அவர்கள் இழுத்தார்கள். நாங்கள் இந்து மதத்துக்கு மாற மறுத்தோம் என்பதுதான் இதற்கெல்லாம் காரணம்,” என்று நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார் நாக். துர்வா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் அவர்.
குடும்பம் உறுதியாக நின்றது. பெரும்பான்மை அழுத்தத்துக்கு அடிபணியக் கூடாது என்று நாக் சொல்லிவிட்டார். “எங்களுக்கு மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. நாங்கள் அதில் என்ன செய்கிறோம் என்பது எங்கள் விவகாரம். நாங்கள் பாட்டியின் உடலை அங்கே புதைக்க முடிவு செய்தோம். வேறு இடத்தில் அவரது உடலை நாங்கள் புதைத்திருக்க முடியாது.”
இறுதியாக பஜ்ரங் தள் உறுப்பினர்கள் பின் வாங்கினார்கள். பிறகு, எந்த இடையூறும் இல்லாமல் சடலம் புதைக்கப்பட்டது. ஆனாலும், மக்கள் கவனம் வேறெங்கோ இருந்தது. அயாத்திக்கு கண்ணியமாக விடைகொடுத்தபோதுகூட சிறிது நேரம் வெளியே பார்த்துக்கொண்டார்கள். “இறுதிச் சடங்கு நடக்கும்போது அமைதி வேண்டும் என்பது பெரிய எதிர்பார்ப்பா? அந்தப் போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றது உண்மைதான். ஆனால், இந்த சுற்றுச்சூழலில் எங்கள் பிள்ளைகள் வளர்வதை நாங்கள் விரும்பவில்லை. ஊர்த் தலைவர்கூட எங்கள் பக்கத்தில் நிற்கவில்லை,” என்று கூறுகிறார் அவர்.
*****
வலதுசாரி குழுக்கள் செய்வது பிடிக்காதவர்கள்கூட ஏதும் செய்யமுடியாத அளவுக்கு அச்சம் தலைதூக்கியிருக்கிறது.
ஜக்தல்பூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில், பஸ்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது அல்வா கிராமம். அங்கே, கோஷா என்பவரின் மனைவி வாரே சிறிது காலம் படுத்த படுக்கையாக இருந்து 2023 மே மாதம் உயிரிழந்தார். 60 வயது கோஷா, அவரது மகனான 23 வயது தத்துராம் போயம் ஆகியோர் தங்கள் சிறு குடிசையில், சடலத்துக்கு அருகே அமர்ந்திருந்தனர்.
திடீரென ஆண்கள் கூட்டம் ஒன்று அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து அவர்களை அடிக்கத் தொடங்கியது. “ஊரில் யாரும் இதைத் தடுக்கவில்லை. எங்கள் காலம் முழுவதும் இதே ஊரில்தான் வாழ்கிறோம். ஆனால், எங்களுக்காக நிற்க இங்கே ஒருவருக்கும் துணிவில்லை,” என்கிறார் தத்துராம்.
மாடியா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அவர்களது கிறிஸ்துவக் குடும்பம் இந்து மதத்துக்கு மாற மறுத்துவிட்டது. வீட்டுக்குள் நுழைந்த பஜ்ரங் தள உறுப்பினர்கள் அடங்கிய இந்துக்கள் கும்பல், வாரேவின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி வீட்டில் இருப்பது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை. கோஷாவும், தத்து ராமும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் கோஷா மயக்கமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்நோயாளியாக ஒருவாரம் இருந்தார்.
“வாழ்க்கையில் எப்போதும் இதுபோல நிர்கதியாக இருந்ததில்லை. என் மனைவி இறந்துவிட்டாள், என்னால், என் மகனோடு இருந்து துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை” என்கிறார் கோஷா.
2018-ம் ஆண்டில் இருந்து மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும், பஸ்தரில் உள்ள கிறிஸ்துவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். எனவே, பாஜக அல்லாத அரசு சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் என்ற பார்வையில் உண்மையில்லை என்கிறார் பெஞ்சமின்.
தத்துராம் கூட தனது தாயின் சடலத்தை ஜக்தல்பூர் கொண்டு சென்றே இறுதிச் சடங்கு செய்ய முடிந்தது. “ஒரு சரக்கு வேன் வாடகைக்கு எடுத்து சடலத்தை கொண்டு சென்றோம். அதற்கு ரூ.3,500 வாடகை கொடுத்தோம். எங்கள் குடும்பம் கூலித் தொழிலாளிகளின் குடும்பம். நல்ல வருவாய் வரும் காலத்தில் ஒரு மாதம் பாடுபட்டால்தான் இந்தப் பணத்தை நாங்கள் சம்பாதிக்க முடியும்.”
இந்த சம்பவத்தால் கலகலத்துப் போனதாகவும், ஆனால், இப்படி நடந்தது வியப்பளிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். “இந்த சம்பவம் திடீரென்று நடக்கவில்லை. கிறிஸ்துவ சமயத்தைப் பின்பற்றவேண்டும் என்றால் ஊரைவிட்டுப் போய்விடவேண்டும் என்று எங்களிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள்,” என்கிறார் அவர்.
பழங்குடி கிறிஸ்துவர்களை ஓரங்கட்டுவது நடந்துகொண்டே இருக்கிறது. “ஊர்ப் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு எங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல்தான் தண்ணீர் எடுக்கவேண்டி உள்ளது,” என்கிறார் கோஷா.
பஸ்தரின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற கொடுமைகள் நடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. 2022 டிசம்பரில் நாராயண்பூர் மாவட்டத்தில் 200 பழங்குடி கிறிஸ்துவர்கள் தங்கள் ஊர்களைவிட்டு விரட்டப்பட்டார்கள். இந்த சம்பவத்தை அடுத்து நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே முகாமிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். வலதுசாரிக் குழுக்களால் தூண்டப்பட்டவர்கள் தங்களுக்கு இழைக்கும் கொடுமையைக் கண்டித்து அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
2022 டிசம்பர் மாதத்தில் மட்டும் கிறிஸ்துவ சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட டஜன் கணக்கான தாக்குதல்களை ஆவணப்படுத்தி, போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
தங்கள் பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு திருமணத்துக்குத் தாங்கள் செல்லக்கூடாது என்று தடுத்தார்கள் என்கிறார் அர்ரகோத்தே கிராமத்தைச் சேர்ந்த சுக்மிதி. காரணம், திருமணம் நடப்பது ஒரு கிறிஸ்துவ குடும்பத்தில். “திருமண வீட்டுக்கு யாருமே செல்ல முடியவில்லை என்பதால், அவர்கள் திருமண விருந்துக்குத் தயாரித்த உணவை வெளியில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.”
“மனச்சான்று கொண்டிருக்கவும், ஒரு மதத்தில் நம்பிக்கை கொள்ளவும், பின்பற்றவும், பரப்பவும்” உரிமை இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 25 கூறுகிறது. ஆனால், பழங்குடி கிறிஸ்துவர்கள் பாதக நிலையையும், அச்சுறுத்தலையும் எதிர்கொள்கிறார்கள்.
“கிறிஸ்துவக் குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால், எங்களுக்கு முதலில் தோன்றுவது துக்கம் அல்ல. அச்சமும், ஏற்பாடுகள் குறித்த கவலையும்தான். என்ன மாதிரியான மரணம் இது?” என்கிறார் அவர்.
மொழிபெயர்ப்பாளர்: அ.தா.பாலசுப்ரமணியன்