திருப்பமும் வளைவும் கொண்ட லாலிபாப் வடிவத்திலான கத்கியேதியின் ரட-டட்-டட் சத்தம், பொம்மை விற்பவர்கள் பெங்களூருவின் தெருக்களுக்கு வந்துவிட்டார்கள் எனச் சுட்டுகிறது. அருகிலிருக்கும் குழந்தைகள் ஒவ்வொன்றும் அந்த பொம்மையை விரும்பியது. தெருக்களிலும் சிக்னல்களிலும் பரவலாகக் காணப்படுகிற சத்தம் தரும் பளபளப்பான பொம்மை, 2000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதிலிருந்து வியாபாரியால் நகரத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. "நாங்கள் செய்யும் பொம்மை அத்தனை தூரம் பயணிப்பதில் சந்தோஷம் கொள்கிறோம்," என்கிறார் பொம்மை செய்பவர் பெருமையோடு. "நாங்கள் செல்ல விரும்பினாலும் பயணிக்க முடியாது. ஆனால் எங்களின் பொம்மை பயணிக்கிறது. இது நல்ல அதிர்ஷ்டம்."
முர்ஷிதாபாத்தின் ரம்பரா கிராமத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருமே கத்கியேதி பொம்மை செய்கின்றனர். நெல்வயல்களின் களிமண்ணும் இன்னொரு கிராமத்திலிருந்து கொண்டு வரும் சிறு மூங்கில் குச்சிகளும் கத்கியேதி செய்ய பயன்படுத்தப்படுவதாக ரம்பராவில் வீட்டிலிருந்து பொம்மை தயாரிக்கும் தபன்குமார் தாஸ் சொல்கிறார். அவரிம் மொத்தக் குடும்பமும் தயாரிப்பில் ஈடுபடுகிறது. வண்ணங்கள், ஒயர்கள், வண்ணக் காகிதம், பழைய படச்சுருள்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். “ஒரு அங்குலம் அளவில் வெட்டப்பட்ட இரண்டு படச் சுருள்கள் மூங்கில் கண்ணில் செருகப்படும்,” என்கிறார் கொல்கத்தாவின் பராபஜாரிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் படச்சுருள்கள் வாங்கி வந்த தாஸ். அச்சுருள்கள் கத்கியேதி அசையவும் சத்தம் கொடுக்கவும் உதவுகின்றன.
”கொண்டு வந்து விற்கும் நாங்கள் அது என்னப் படச்சுருள் என்பதை கவனித்ததில்லை,” என விளக்குகிறார் ஒரு பொம்மை வியாபாரி. சுருள்களில் இடம்பெற்றிருக்கும் பிரபல திரைநட்சத்திரங்களை வாங்குவோரும் விற்போரும் கவனிப்பதில்லை. “எங்கள் வங்கத்தை சேர்ந்த ரஞ்சித் முல்லிக் இவர்,” என ஒரு கத்கியேதியைக் காட்டி சொல்கிறார் இன்னொரு பொம்மை வியாபாரி. “மேலும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன். பிரசென்ஜித், உத்தம் குமார், ரிதுபர்னா, சதாப்தி ராய்… இன்னும் பல நட்சத்திரங்கள் இதில் இடம்பெறுவதுண்டு.”
பொம்மை வியாபாரிகளில் பலர் விவசாயத் தொழிலாளர்கள். பொம்மைகள்தான் அவர்களுக்கான பிரதான வருமானத்தைக் கொடுக்கின்றன. ஊரில் முதுகொடிய வேலை பார்த்தாலும் போதிய வருமானம் கிடைக்காத விவசாய வேலையை விட, இவற்றை விற்கும் வேலையையே அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் பெங்களூரு போன்ற இடங்களுக்கு பயணிக்கின்றனர். அங்கேயே மாதக்கணக்கில் தங்குகின்றனர். பொம்மைகளை விற்கவென நாள்தோறும் 8-10 மணி நேரங்கள் நடக்கின்றனர். சிறுதொழில் என்றாலும் வருமானம் கொழிக்கும் தொழிலாக இருந்த இத்தொழிலை 2020ம் ஆண்டின் கோவிட் தொற்று கடுமையாக தாக்கியது. பொம்மை தயாரிப்பை ஊரடங்கு நிறுத்தியது. ஏனெனில் பொம்மை விற்பனைக்கு ரயில்தான் பிரதானப் போக்குவரத்து. பல பொம்மை வியாபாரிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை அடைந்தனர்.
படத்தில் இருப்பவர்கள்: கத்கியேதியின் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்
இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு: யஷஸ்வினி ரகுநந்தன்
படத்தொகுப்பு மற்றும் ஒலி வடிவமைப்பு: ஆர்த்தி பார்த்தசாரதி
That Cloud Never Left என்ற பெயரில் இப்படத்தின் பிரதி ராட்டர்டம், கஸ்ஸெல், ஷார்ஜா, பெசாரோ மற்றும் மும்பை ஆகிய இடங்களில் 2019ம் ஆண்டில் திரையிடப்பட்டு பிரான்ஸ் நாட்டின் FILAF படவிழாவில் தங்க விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பரிந்துரைகளையும் பெற்றிருக்கிறது.
தமிழில் : ராஜசங்கீதன்