சென்னை-திருச்சி (NH-45) தேசிய நெடுஞ்சாலையின் வழியாக கொளக்காநத்தம் நகரை நோக்கிப் பயணிக்கையில் சாலையின் இருபுறமும் மல்லிகைத் தோட்டங்கள் பூத்துக் குலுங்குவது போன்ற பிரமை ஒரு கணம் ஏற்படுகிறது. பெரிய வெள்ளை மலர்கள், குறைந்த இலைகள் ஆகியவை அவற்றை இன்னமும் கூர்ந்து கவனிக்க வைக்கின்றன. அவை அறுவடைக்கு தயாராக இருக்கும் பருத்திச்செடிகள் என்பது புரிகிறது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் அறுவடைக்காலத்தின் இறுதிக்கட்டத்திற்கு மும்முரமாக தயாராகிறார்கள்.
திவ்யா பருத்தி வயலில் தன்னுடைய முறை வேலையை முடித்துவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்கிறார். தன்னுடைய துப்பட்டாவை இடது கைப்பட்டை பக்கமாக இழுத்துக் கட்டிக்கொண்டே, அந்த யுவதி என்னை நோக்கி மென்மையாகப் புன்னகை புரிகிறார். “அக்கா! நாம என் கிராமத்துக்குப் போலாமா? சிறுக்கான்பூர்ன்னு சொல்லுவாங்க.” என்று அன்போடு அழைக்கிறார். அவரின் வண்டியை நோக்கி அவர் முதலில் செல்ல, நாங்கள் பின் தொடர்கிறோம். அவருடன் பயணிக்கையில் மேலும், நீண்டுகொண்டே போகும் பருத்தி வயல்களைக் கண்ணுற்றோம்.
திவ்யா தன்னுடைய வண்டியை நிறுத்தியதும், மூன்றரை அடி உயரமே உள்ள அம்பிகாபதி எனும் இளம்பெண் எங்களை அன்போடு வரவேற்கிறார். “நாங்க நீச்சல் போட்டியில் தான் முதல்ல பாத்துக்கிட்டோம். அப்படியே நட்பு ஆகிட்டோம்.” என்று சொல்லிக்கொண்டே திவ்யா தான் வென்ற நீச்சல் கேடயங்கள், தடகள சாம்பியன்ஷிப்கள் ஆகியவற்றைக் கொண்டுவந்து காட்டுகிறார்
திவ்யா தன்னுடைய இடது கையில் ஒரு பகுதியை எட்டு வயதில் கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பொழுது ஏற்பட்ட விபத்தில் இழந்துவிட்டார். “என்னை எங்க அப்பா, அம்மா புத்தூருக்கு (எலும்பு முறிவுக்குக் கட்டுப்போடுவதற்குப் பெயர் பெற்ற இடம்) கட்டுப்போட தூக்கிட்டு போனாங்க. எலும்பு சிலது மோசமாகத் துண்டு, துண்டா உடைஞ்சதால எதுவும் பண்ண முடியலைன்னு கைவிரிச்சுட்டாங்க.” அப்பொழுது ஏற்பட்ட தொற்றுக்காயங்களால் தன்னுடைய முன்னங்கையின் சில அங்குலத்தை அவர் இழக்க நேரிட்டது. அந்தக் கையை மூடியிருந்த துப்பட்டாவை விலக்கியபடியே அவர் மேலும் பேசுகிறார்
திவ்யா இளம்பெண்ணாகத் தனக்கு ஏற்பட்ட இழப்பைக் கடந்து இயங்க ஆரம்பித்தார். அவருடைய குடும்பம் மூதாதையர் நிலத்தில் பருத்தி பயிரிடுகிறது. அதில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் போல அவர் ஓயாமல் உழைக்கிறார். “எங்க நிலத்திலே நாங்களே விதையை வேகமா விதைச்சு முடிச்சிட்டு, மத்தவங்க நிலத்தில கூலிக்கு வேலைப்பாக்க போவோம். ஒருநாளைக்கு எழுபது கிலோ பருத்தி பறிப்பேன். அவ்ளோதான் மத்தவங்களும் பறிப்பாங்க. சமயத்தில அவங்களவிடக் கூடவும் பறிப்பேன்.” என்று தன்னுடைய கையிலிருக்கும் இரண்டு டஜன் சான்றிதழ்களைக் கைகளால் இடமாற்றிக்கொண்டே வெற்றி பெருமிதத்தோடு சிரித்தபடி பேசுகிறார்.
:இதெல்லாம் நீச்சல், தடகளம் போட்டிங்களில மாநில, தேசிய அளவில ஜெயிச்ச பதக்கங்கள். இப்போ டெல்லியில் நடக்கப்போற சர்வதேச பாராலிம்பிக்ஸ் போட்டிக்குத் தடகளப்பிரிவில் தேர்வாகி இருக்கேன். இந்தப் பிள்ளை அம்பிகா நீச்சல் பிரிவில தேர்வாகி இருக்கா” என்றுவிட்டு அம்பிகாபதியை பேசுமாறு சைகை செய்கிறார். .
அம்பிகாபதி கூச்சத்தோடு குறைவாகவே பேசுகிறார். ஆனால், விளையாட்டில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பற்றிப் பேச்செடுத்தால் வார்த்தைகள் சரளமாகக் கொட்டுகின்றன. “பெருசா பெருமைப்படுறாப்ல எதோ பண்ணியிருக்கோம்னு சந்தோசமா இருக்கு. நான் ஆடு, மாடை மேய்ச்சலுக்குக் கூட்டிக்கிட்டு போவேன், பருத்தி வயலில் வேலை பாப்பேன். கிராமத்தை தாண்டி எங்கேயும் போனதில்லை.” என்கிற அம்பிகாபதி பிட்யூட்டரி சுரப்பிக் கோளாறினால் வளர்ச்சிக் குறைபாட்டுக்கு ஆளானார். இவருக்கு இப்பொழுது வயது 28. அவரின் குடும்பத்தில் வேறு யாருக்கும் இந்தக் குறைபாடு ஏற்படாத பொழுது தனக்கு மட்டும் ஏன் அப்படியானது என்று அவருக்குப் புரியவில்லை. அவரின் சகோதரர்கள் அரசுப்பணியில் இருக்க, இவர் மட்டும் பள்ளிக்கே அனுப்பப்படவில்லை.
"எல்லாரும் எங்க ஊரில் அவங்க வீட்டுக்கொல்லையில இருக்கக் குளத்தில நீந்திப் பழகுவோம். பெரம்பலூர் கலெக்டர் ஆபிசில் இருந்து மங்களமேடு கிராமத்தில போட்டிக்கு ஆளெடுக்க வந்தப்ப நான் கப்புன்னு வாய்ப்பை பிடிச்சுக்கிட்டேன். போட்டியில கலந்துக்கப் போனப்ப அவங்க கொடுத்த நீச்சல் உடுப்பை பார்த்ததும் அப்படியே வீட்டுக்கு ஓடிப்போயிடலாம்னு யோசிச்சேன்.” என்று வெட்கம் எட்டிப்பார்க்க பேசுகிறார் அம்பிகாபதி.
அம்பிகாபதி பெரம்பலூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் இணைந்து தையல் பயிற்சி பெற்றுள்ளார். “என்னைச் சுத்தி இருந்தவங்க எல்லாம் தையல் மிஷின் அளவுகூட இல்லைன்னு கேலி பண்றப்ப கஷ்டமா இருக்கும். இப்போ எனக்கும், மத்தவங்களுக்கும் நானே துணி தைக்கிறேன்.” என்று இயல்பாகச் சொல்கிறார்.
அம்பிகாவுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே ஊரில் இருக்கிறது. ஒவ்வொருமுறை வெற்றியோடு அவர் திரும்புகிற பொழுது எண்ணற்ற கட்டவுட்களுடன் அவர் ஊரின் ரசிகர்கள் (பெரும்பாலும் ஆண்பிள்ளைகள்) வரவேற்கிறார்கள்.
தமிழக அரசு உலக வங்கியின் உதவியுடன் நடத்தும் ‘புது வாழ்வு’ எனும் திட்டத்தின் மூலமாக இவர்களின் திறன் கண்டறியப்பட்டுப் பெரம்பலூர் மாவட்டம், தமிழகம் ஆகியவற்றின் சார்பாகப் போட்டிகளில் பங்குகொண்டு உள்ளார்கள்.
இப்பகுதி புது வாழ்வு திட்டத்தின் குழுத்தலைவரின் ஊக்குவிப்பில் திவ்யா பத்தாம் வகுப்பை முடித்துவிட்டார். தன்னுடைய தகுதி, விளையாட்டில் பெற்ற வெற்றிகள் மூலம் ஒரு வேலையைப் பெற்றுவிட முடியும் என்று நம்புகிறார். அம்பிகாபதிக்குப் பூஜ்யத்தில் இருந்து துவங்க வேண்டும். மத்திய அரசின் ‘கற்கும் பாரதம்’ திட்டத்தின் கீழ் கல்வி கற்கும் எண்ணத்தில் அவர் உள்ளார்.
“அதெல்லாம் ஒன்னும் பெரிய மலையெல்லாம் இல்லை. நான் சாத்திச்சுருவேன்.” என்று விரல் உயர்த்துகிறார் அம்பிகா. எங்களை ஏன் மாற்றுத்திறனாளிகள் அப்படின்னு சொல்றாங்கன்னு எங்களுக்குத் தெரியும். எங்க வழியில, எங்க வேகத்தில நல்லா நினைச்சதை செய்வோம்.” என்று அதனைத் திவ்யா வழிமொழிகிறார்.
டெல்லியில் மே மாதம் நிகழவிருக்கும் போட்டியில் வெல்வதற்குக் கடுமையாக உழைக்கிறார்கள். அதில் வென்றால் அயல்நாட்டுக்கு அவர்கள் பயணிக்க முடியும்.
"பருத்தி விதைக்கிறது, அறுவடை பண்றதுக்கு நடுவில இந்தப் போட்டிங்க வருது. வயித்துப் பொழப்பை விட்டுட்டு போட்டிக்கு போக முடியாது இல்ல?” என்று கேட்கிறார் திவ்யா. அவர்களின் கிராம வாழ்க்கை வேளாண்மை, பயிரிடுதல், அறுவடை ஆகியவற்றைச் சுற்றியே சுழல்கிறது.