முதலாளிக்கு நான் 25000 ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த கடனை அடைக்காமல் நான் குத்தகை விவசாயத்தை விட்டகல முடியாது,” என்கிறார் ரவீந்திர சிங் பார்ககி. “அதை கைவிட்டால், வாக்குறுதியை மீறியதாக ஆகிவிடும்.”

மத்தியப்பிரதேசத்தில் உள்ள முக்வரி கிராமத்தில் வசிக்கிறார் ரவீந்திரா. 20 வருடங்களாக குத்தகை விவசாயம் செய்து வருகிறார். குத்தகை விவசாயம் என்பது மத்தியப்பிரதேசத்தின் சிதி மற்றும் அருகாமை மாவட்டங்களில் அதிகமாக நடைமுறையில் இருக்கும் முறை. நிலவுடமையாளரும் குத்தகை விவசாயியும் செலவு மற்றும் அறுவடையை சமமாக பகிர்ந்துகொள்வதாக வாய்மொழியாக இம்முறையில் ஒப்புக் கொள்வார்கள்.

ரவீந்திராவும்  அவர் மனைவி மம்தாவும் எட்டு ஏக்கர் நிலத்தில் நெல், கோதுமை, கடுகு, பருப்பு முதலியவற்றை விளைவிக்கிறார்கள். மத்தியப்பிரதேசத்தின் வட்டார மொழியான பகெளி மொழியில் குத்தகை விவசாயத்தை அதியா என குறிப்பிடுகிறார்கள். அதியா என்றால் பாதிக்கு பாதி என அர்த்தம். ஆனால் ரவீந்திராவின் குடும்பத்துக்கு கிடைக்கும் பாதி என்கிற அளவு அவர்களுக்கு போதவில்லை.

இந்தியாவின் பல இடங்களில் இருக்கும் இத்தகைய அதிகாரப்பூர்வமற்ற ஒப்பந்தமுறையில், என்ன பயிரை விளைவிப்பது என்கிற முடிவு உள்ளிட்ட விவசாயம் தொடர்பான எல்லா முடிவுகளையும் நிலவுடமையாளரே எடுப்பார். பனியாலும் மழையாலும் விளைச்சல் பாதிக்கப்பட்டால், நிலவுடமையாளருக்கு அரசிடமிருந்தும் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தும் நஷ்ட ஈடு கிடைத்துவிடும். குத்தகை விவசாயிக்கு அதிலிருந்து நிவாரணம் எதுவும் கிடைக்காது.

PHOTO • Anil Kumar Tiwari

‘மொத்த குடும்பமும் நிலத்தில் வேலை பார்த்தும் போதுமான வருமானம் கிட்டுவதில்லை,’ என்கிறார் ரவீந்திரா. மனைவி மம்தாவும் மகன்கள் அனுஜ்ஜும் விவேக்கும் கோடைகாலத்தில் காய்ந்த மாங்காய்களை விற்கின்றனர்

இந்த முறை எப்போதுமே குத்தகை விவசாயியை பாதுகாப்பற்ற சூழலில் வைத்திருக்கிறது. கடனுதவி, காப்பீடு போன்ற பாதுகாப்புகளும் கிடையாது. குத்தகை விவசாயிகள் பெரும்பாலும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதுவும் நிலவுடமையாளர்களிடமிருந்தே வாங்கும் நிலை இருக்கிறது. வாங்கிய பணத்தையும் அடுத்த விளைச்சலுக்கு முதலீடு செய்கின்றனர்.

”என் மொத்த குடும்பம் வேலை பார்த்தும் போதுமான வருமானம் கிடைக்கவில்லை,” என்கிறார் 40 வயது ரவீந்திரா (மேலே உள்ள முகப்புப்படத்தில் இருப்பவர்). பிற்படுத்தப்பட்ட சமூகமான பர்காகி சமூகத்தை சேர்ந்தவர். அவருடைய மகன்களான 12 வயது விவேக் மற்றும் 10 வயது அனுஜ் ஆகியோர் நிலத்தில் இருக்கும் களைகளை அகற்ற உதவுகின்றனர். “நான் மட்டும் தனியாக விவசாயத்தை கையாள முடியாது,” என்கிறார் அவர். “போன வருடத்தில் பயிருக்கு 15000 ரூபாய் செலவழித்தேன். வெறும் 10000 ரூபாய்தான் திரும்பக் கிடைத்தது.” 2019 ஆண்டு குறுவை சாகுபடிக்கு நெல் விதைத்தனர். சம்பா பருவத்துக்கு அவரைப்பயிர் விதைத்தனர். வழக்கமாக அவர்களின் சொந்த பயன்பாட்டுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டு மிச்சத்தை விற்பார்கள். ஆனால் நெற்பயிரை வறட்சி அழித்தது. குளிர்காலம் அறுவை சாகுபடியை அழித்தது.

குடும்பத்துக்கென ஒரு மாமரம் இருக்கிறது. வீட்டுக்கு அருகேயே வளர்க்கிறார்கள். மம்தாவும் அவரின் மகன்களும் ஊறுகாய் தயாரிக்க பயன்படும் மாவடுகளை, மே தொடங்கி ஜூலை மாதம் வரையிலான கோடைகாலத்தின்போது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குச்வாஹி கிராமத்தின் சந்தைக்கு சென்று விற்று வருவார்கள். விவேக்கும் அனுஜ்ஜும் ஊர் முழுக்க சுற்றி மரத்திலிருந்து விழுந்த மாங்காய்களை சேகரித்து வருவார்கள். “இவற்றை கிலோவுக்கு ஐந்து ரூபாய் என விற்று கோடைகாலங்களில் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரை சம்பாதித்துக் கொள்கிறோம்,” என்கிறார் 38 வயது மம்தா. “இந்த வருடம் மாங்காய்களை விற்று வந்த பணம் எங்களுக்கு துணியெடுக்கவே போதுமானதாக இருக்கிறது,” என்கிறார் ரவீந்திரா.

என் பங்கு நிவாரணம் கேட்டேன். முதலாளகொடுக்கவில்லை,’ என்கிறார் ஜங்காலி

காணொளி: ’பயிர் அழிந்தால் நாங்கள் கடனில் வாழ வேண்டும்’

நடவுகாலங்களுக்கு இடையே மே மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை ரவீந்திரா நாட்கூலி வேலை பார்க்கிறார். “நாங்கள் (நிலமற்ற விவசாயிகள்) உடைந்த சுவர்களையும் கூரைகளையும் (முக்வரி கிராமத்து வீடுகளில்) சரிசெய்து பணமீட்டுகிறோம். 10000 ரூபாயிலிருந்து 12000 ரூபாய் வரை இந்த வேலையால் எங்களுக்கு இவ்வருடம் வருமானம் கிடைக்கும்,” என்கிறார் ரவீந்திரா. “இந்த பணத்தை கொண்டு முதலாளியிடம் வாங்கிய கடனை கட்டுவேன்,” என்கிறார் அவர். முந்தைய நடவின்போது நிலவுடமையாளர்தான் நீருக்கும் விதைகளுக்கும் மின்சாரத்துக்கும் பணம் கொடுத்திருந்தார்.

“பயிர்கள் அழிந்தால், எங்களுக்கு எதுவும் கிடைக்காது,” என்கிறார் 45 வயது ஜங்காலி சோந்தியா. முக்வரியை சேர்ந்த மற்றுமொரு குத்தகை விவசாயியான அவர் இந்த வருட பிப்ரவரி மாத பனியால் துவரை பயிரை இழந்திருந்தார். “அரசிடமிருந்து முதலாளிக்கு நிவாரணம் கிடைத்ததை கேள்விப்பட்டதும் என் பங்கை கேட்டேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை. நிலம் அவருக்கு உரிமை என்பதால் மொத்த நிவாரணமும் அவருக்குதான் சொந்தம் என முதலாளி கூறினார்.” கிடைத்த நிவாரணத் தொகை எவ்வளவு என்பது கூட ஜங்காலிக்கு தெரியாது. அவருடைய 6000 ரூபாய் நஷ்டத்தை சரிசெய்ய ஊரைச் சுற்றி கிடைத்த கூலி வேலைகளை செய்கிறார். அவருடைய இரண்டு மகன்கள் சிதி டவுனில் கட்டுமான வேலை பார்த்து பணம் அனுப்புகின்றனர்.

ஆனால் முக்வரி கிராமமிருக்கும் சிதி ஒன்றியத்தின் தாசில்தாரான லக்ஸ்மிகாந்த் மிஸ்ரா, விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதாக சொல்கிறார். “குத்தகை விவசாயிகளுக்கு அரசிடமிருந்து நிவாரணத் தொகை கிடைக்கிறது,” என்கிறார் அவர். “நிலவுடமையாளர்கள் அவர்களை குத்தகை விவசாயிகள் என அறிவித்தால் கிடைக்கும்.”

Ravendra (left), Jangaali (right) and other tenant farmers also work as a daily wage labourers between cropping cycles
PHOTO • Anil Kumar Tiwari
Ravendra (left), Jangaali (right) and other tenant farmers also work as a daily wage labourers between cropping cycles
PHOTO • Anil Kumar Tiwari

ரவீந்திரா (இடது), ஜங்காலி (வலது) மற்றும் இதர குத்தகை விவசாயிகள் அன்றாடக்கூலிகளாகவும் வேலை பார்க்கிறார்கள்

பயிர்கள் அழிந்தால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் மத்தியப்பிரதேச அரசின் 2014ம் ஆண்டு ரஜஸ்வ புஸ்தக் பரிபத்ரா 6-4 சுற்றறிக்கையை அவர் குறிப்பிடுகிறார். இதற்கு முதலில் நிலவுடமையாளர்கள் அழிவுக் கணக்கை தாசில்தாரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது குத்தகை விவசாயிகளையும் அவர்கள் அறிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என்கிறார் மிஷ்ரா. சுற்றறிக்கை இதை பற்றி எதையும் குறிப்பிடவில்லை என்றாலும் அதுவே நடைமுறை என்கிறார் அவர்.

”சிதி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 20000 குத்தகை விவசாயிகள் நிவாரணம் பெறுகின்றனர். ஆனால் ஒரு லட்சத்துக்கும் மேலான விவசாயிகளுக்கு அது கிடைப்பதில்லை,” என்கிறார் மிஷ்ரா. “வாய்மொழி ஒப்பந்தம் என்பதால் நிலவுடமையாளர்களை குத்தகை விவசாயிகளை குறிப்பிட கேட்டு வலியுறுத்த முடியாது. அவர்கள் அதை செய்ய கட்டாயப்படுத்தும் எந்த சட்ட நடைமுறையும் இல்லை.”

ஆனால், மத்தியப்பிரதேசத்தில் நிலவுடமையாளருக்கும் குத்தகை விவசாயிக்கும் நிவாரணம் கிடைக்கும் சட்டமுறை 2016 ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி பயிரழிவு நேரும்போது இரு தரப்புக்கும் அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் நிவாரணம் உண்டு. அந்த சட்டத்தில் குத்தகை ஒப்பந்ததுக்கான மாதிரி வடிவமும் இருக்கிறது.

சிதி மாவட்டத்தின் விவசாயிகளிடம் கேட்டபோது இச்சட்டம் இருப்பதே கூட அவர்களுக்கு தெரியவில்லை. தாசில்தாருக்கும் கூட தெரியவில்லை.

“விதைப்பதிலிருந்து அறுவடை செய்வது வரை எல்லா வேலைகளையும் நாங்கள் செய்கிறோம். ஆனால் பருவம் முடிகையில் மிகக் குறைவாக வருமானம் ஈட்டுகிறோம்,” என்கிறார் ஜங்காலி. இத்தனை நஷ்டத்துக்கும் பிறகு அவர் ஏன் குத்தகை விவசாயத்தை தொடர வேண்டும்? “விவசாயத்தால்தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது,” என்கிறார் அவர். “அது இல்லாமல் நாங்கள் பசியில் செத்துவிடுவோம். முதலாளியிடம் சண்டை போட்டுவிட்டு, நாங்கள் எங்கு செல்வது?”

தமிழில்: ராஜசங்கீதன்

Anil Kumar Tiwari

মধ্যপ্রদেশের সিধি-নিবাসী স্বতন্ত্র সাংবাদিক অনিল কুমার তিওয়ারি মূলত পরিবেশ তথা গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত খবরাখবর সংগ্রহ করেন।

Other stories by Anil Kumar Tiwari
Priyansh Verma

প্রিয়াংশ ভার্মা গুরগাঁও ভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড নিউ মিডিয়া থেকে সদ্য স্নাতক হয়েছেন।

Other stories by Priyansh Verma
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan