கொண்ட்ரா சம்மையா.. கடன்கள் ஏற்படுத்திய மன உளைச்சலால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார்…” என்கிறது முதல் தகவல் அறிக்கை
சம்மய்யாவும் அவரின் மனைவி கொண்ட்ரா சகரிகாவும் ஆறு ஏக்கர் நிலத்தில் பிடி பருத்தி விதைத்திருக்கும் நரஸ்பூர் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தரிகோபுள்ளா காவல்நிலையத்தில் 2017ம் ஆண்டின் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
உறவினர்களிடம் வெவ்வேறு வட்டிகளுக்கு அவர்கள் வாங்கியிருந்த கடன் 5 லட்சத்தை தொட்டது. ஒரு ஏக்கருக்கும் சற்று அதிகமாக நிலம் வைத்திருந்தனர் சம்மய்யாவும் சகரிகாவும். மிச்ச நிலத்தை உறவினர்களிடம் இருந்து குத்தகைக்கு எடுத்திருந்தனர். “ஒவ்வொரு பருவமும் தொடங்குவதற்கு முன்பும் விவசாயி கடன் வாங்குவதுதான் கடனுக்கான முக்கிய காரணம்,” என்கிறார் சகரிகா. பஞ்சமும் அவர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொண்டு வந்தது.
சொந்த நிலத்தில் விவசாயம் பார்ப்பதற்கு முன் அவர்கள் பருத்தி நிலங்களில் விவசாயக் கூலிகளாக வேலை பார்த்தனர். 2011ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு கொஞ்ச காலம் ஹைதராபாத்தில் வாழ்ந்தனர். அங்கு சம்மய்யா ஓட்டுநராக பணிபுரிந்தார். சம்மய்யா தந்தையின் உடல்நலம் குன்றத் தொடங்கியதும் 2013ம் ஆண்டில் தெலெங்கானாவின் அவர்கள் நரசப்புவுக்கு திரும்பினர்.
தற்கொலை செய்து கொண்டபோது சம்மய்யாவுக்கு வயது 29. சகரிகாவுக்கு வெறும் 23தான். அவர்களின் குழந்தைகள் ஸ்னேகிதா மற்றும் சாத்விக் ஆகியோருக்கு முறையே 5 மற்றும் 3 வயது ஆகியிருந்தன. “என் கணவருடன் கழித்த நேரங்களை ஒவ்வொரு நாளும் குழந்தைகள் நினைத்து பார்க்கிறார்கள்,” என்கிறார் அவர். “என் கணவர் இறந்த பிறகு வந்த முதல் வருடம் மிகவும் கடினமாக இருந்தது. சொந்தக்காரர்கள் விசேஷங்களுக்கு கூப்பிட மாட்டார்கள். என்னுடைய கஷ்டத்தை இப்போது அவர்கள் பார்த்துவிட்டதால், கூப்பிடத் தொடங்கியிருக்கிறார்கள்….”
கணவர் இறந்த சில மாதங்கள் கழித்து 2018ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நிலத்தில் விளைந்திருந்த பருத்தியை உள்ளூர்காரர் ஒருவரிடம் 7 குவிண்டால் சகரிகாவால் விற்க முடிந்தது. செலவு போக 12000 ரூபாய் வரை சம்பாதித்தார். உடனடி செலவுகளுக்கு அப்பணத்தை பயன்படுத்தினார். அடுத்த விதைப்புக்கு அவர் பருத்தியை முயன்றார். வருமானம் இல்லாததால் அதற்கு பிறகு நிறுத்திவிட்டார். அந்த நிலம் பயனில்லாமல் கிடக்கிறது. மீண்டும் வேலை தொடங்க வேண்டுமெனில் நிலத்தை சமன்படுத்தி விதைப்புக்கு தயார் செய்யும் வேலைகளை செய்ய வேண்டும் என்கிறார். நிலத்தின் குத்தகையும் புதுப்பிக்கப்படவில்லை.
கணவர் மரணமடைந்த சில வாரங்களுக்கு பிறகு, கணவரின் பெயரிலுள்ள நிலத்தை தன் பெயருக்கு மாற்ற மண்டல வருவாய்த் துறை அலுவலகத்துக்கு அவர் சென்றார். அவரின் மாமியாரும் கணவரின் தம்பியும் எதிர்த்தனர். 2020ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு ஏக்கர் நிலத்துக்கு பெயரை மாற்றிவிட்டார்.
கணவரின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டில்தான் குழந்தைகளுடன் அவர் இருக்கிறார். வாடகை கொடுக்க வேண்டியதில்லை என்றாலும் மாதாந்திர செலவுகளை தன்னுடைய வருமானத்தில் பார்த்துக் கொள்கிறார். அவருடைய மாமனார் 2014ம் ஆண்டு இறந்து போனார். மாமியார் கொண்ட்ரா அஞ்சம்மா ஹைதராபாத்தில் வீட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் மாமாக்கள் (மாமனாரின் சகோதரர்கள்) வேறொரு கிராமத்தில் வசித்தாலும் சகரிகாவுக்கும் சம்மய்யாவுக்கும் குத்தகைக்கு விட்ட ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கியிருப்பதாக சொல்கிறார். இந்த வருட அக்டோபர் மாதத்தில் வீட்டை விட்டுவிட்டு செல்லுமாறு கூறியிருக்கின்றனர். “இங்கு விவசாயம் பார்க்கத் தொடங்கிவிட்டதால், அவர்கள் தங்குவதற்கு ஓர் இடம் வேண்டும்,” என்கிறார் அவர். “தீபாவளிக்குள் காலி செய்ய சொல்லி இருக்கிறார்கள். இன்னும் இடம் கிடைக்கவில்லை. கிராமங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம். என்ன செய்வதென எனக்கு தெரியவில்லை.”
சகரிகாவின் பெற்றோர் நரஸ்பூரில் வசிக்கின்றனர். அவரின் தாய் ஷத்தர்லா கனக லஷ்மி சுகாதார பணியாளராக வேலை பார்க்கிறார். 60 வயது தந்தை ஷத்தர்லால் எல்லயா பல வருடங்களுக்கு முன்பே உடல்நலக்குறைவால் சுமை ஏற்றி இறக்கும் வேலையை நிறுத்திவிட்டார்.
சம்மய்யாவின் மரணத்துக்கு பிறகு ஊரக வேலைவாய்ப்பு ஊதியம் மற்றும் விவசாயக் கூலி முதலியவற்றை வைத்து சரிகட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார் சகரிகா. “என்னுடைய கணவர் உயிருடன் இருந்தபோதும் கூட நான் வேலை பார்த்தேன். வெளியே நான் செல்ல வேண்டியதில்லை என்றும் குழந்தைகளை நானே வளர்க்க வேண்டியிருக்கும் நான் நினைத்து பார்க்கவில்லை,” என்கிறார் அவர். “நான் சார்ந்திருக்கவென எவரும் இல்லயென்பதை இப்போது புரிந்து கொண்டேன். அந்த புரிதல் மிகவும் கடினமாக இருக்கிறது,” என்கிறார் தலித் சமூகத்தை சேர்ந்த சகரிகா.
கடந்த வருடம் உடல்நலம் குன்றியதால் நிலத்தில் வேலை செய்வதை நிறுத்திவிட்டார். ஏப்ரல், மே மாதங்களில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைகள் சிலவற்றை செய்தார். இந்த வருட ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மீண்டும் நிலத்தில் வேலை பார்த்தார். மார்ச் மாத ஊரடங்குக்கு பிறகு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்தமாக 30 நாட்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைகள் கிடைத்தது. 1500 ரூபாய் மட்டும் ஊதியமாக கிடைத்தது. ஆகஸ்ட் மாதத்திலிருந்துதான் தொடர்ந்து அவர் வேலை பார்க்கிறார்.
”உடல்நலம் சரியில்லை. அதனால்தான்,” என்கிறார் அவர். “ஒரு நாள் முழுக்க குனிந்திருக்க வேண்டிய வேலை. மருத்துவர்கள் குனிந்து செய்யும் வேலை செய்யக்கூடாது என சொல்லியிருக்கிறார்கள். எனவே நிறுத்திவிட்டேன்.” கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் சகரிகாவுக்கு ரத்த உறைவு ஏற்பட்டது. ஏப்ரல் 2014ல் சத்விக் பிறந்தபோது ஏற்பட்ட தடத்தில் உறைவு ஏற்பட்டிருந்தது.
கடந்த ஆறுமாதங்களாக சகரிகாவுக்கு ரத்த உறைவு கொடுக்கும் வலியுடன் காய்ச்சலும் உடல்நலக் குறைவும் தொடர்ந்து ஏற்படுகிறது. பல நாட்களுக்கு படுத்த படுக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. 25 கிலோமீட்டர் தொலைவில் ஜங்காவோன் டவுனில் இருக்கும் மருத்துவரால் ஏன் குணப்படுத்த முடியவில்லை என அவருக்கு தெரியவில்லை.
இன்னும் அவர்தான் வீட்டுவேலைகள் செய்ய வேண்டும். காலை 5 மணிக்கே எழுந்து வேலைகள் தொடங்கிவிடுவார். பிறகு ஸ்னேகிதாவை எழுப்பிவிடுவார். இருவரும் வேலைக்கு செல்ல தயாராவார்கள். சகரிகாவின் பெற்றோர் வீட்டுக்கு சாத்விக்கை அனுப்பிவிடுவார். 9 மணிக்கு வேலைக்கு சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்புவார்கள்.
சம்மய்யா இறந்தபிறகு பல விஷயங்களை கற்றுக் கொண்டதாக சகரிகா சொல்கிறார். “என்னை பற்றி தவறான விஷயங்களை மக்கள் சொல்கையில் நான் தளர்ந்து போய்விடுவதில்லை. என் குழந்தைகளுக்காக நான் வாழ வேண்டுமென எனக்கு தெரியும். அவர்கள் படிப்பதற்கு நான் வேலை செய்வேன்.”
கணவரால் வாங்கப்பட்ட கடன்கள் எதையும் அவரால் கட்டமுடியவில்லை. சிறு அளவு கூட அடைக்க முடியவில்லை. 2020ம் ஆண்டில் சகோதரியிடம் (கணவருடன் அதே கிராமத்திலுள்ள இரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்ப்பவர்) வாங்கிய 62000 ரூபாய் மொத்த கடன்களில் 50000 ரூபாய் வரை அடைத்துவிட்டார். (NSS 70th Round அறிக்கையின்படி தெலெங்கானாவின் கடன்பட்ட விவசாயக் குடும்பங்களின் அளவு தேசிய அளவான 51.9 சதவிகிதத்தையும் தாண்டி 89.1 சதவிகிதத்தில் இருக்கிறது.)
விதவை பென்சனாக மாதத்துக்கு 2000 ரூபாய் சகரிகா பெறுகிறார். மேலும் அரசு திட்டங்களுக்கான படிவங்களை மக்கள் நிரப்ப உதவுவது, காவல்நிலைய பரிசோதனைகளுக்கு உடன் செல்வது போன்ற உதவிகளுக்காக ஆந்திரா மற்றும் தெலெங்கானாவை சேர்ந்த ரைது ஸ்வராஜ்யா வேதிகா என்கிற விவசாய உரிமை கூட்டமைப்பிலிருந்து ஒரு 2000 ரூபாய் சன்மானமும் பெற்றிருக்கிறார்.
இறந்துபோன விவசாயியின் குடும்பத்தினருக்கு தெலெங்கானா அரசால் அளிக்கப்படும் 6 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை.
“தொடக்கத்தில் அவர்கள் (மண்டல வருவாய் அலுவலக அதிகாரிகள்) எனக்கு பணம் கிடைக்கும் என்றார்கள். பிறகு அலுவலகத்துக்கு அடிக்கடி வர சொன்னார்கள். இறுதியாக (2018 டிசம்பரில்) கிராமத்தில் இருந்த ஒருவருடன் என் கணவர் சண்டை போட்டது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக சொன்னார்கள். அதனால் விவசாயத் தற்கொலை இல்லையாம். வழக்கை முடித்துவிட்டார்கள்,” என நினைவுகூருகிறார் சகரிகா.
முதல் தகவல் அறிக்கையில் எந்த சண்டை பற்றிய குறிப்பும் இல்லை. சண்டை ஏதும் நடக்கவில்லை என உறுதியாக கூறுகிறார் சகரிகா. தற்கொலைக்கு பிறகு எந்த அதிகாரியும் வழக்கின் தன்மையை ஆராய வீட்டுக்கு கூட வரவில்லை என்கிறார் சகரிகா. ஒவ்வொரு முறை மண்டல அலுவலகத்துக்கு செல்லும்போதும் வழக்கு மூடப்பட்டதற்கு விதவிதமான காரணங்களை சொல்கின்றனர்.
2019 ஆண்டின் நவம்பர் மாதத்திலும் வழக்கு மூடப்பட்ட காரணத்தை அவர் தேடிக் கொண்டிருந்தபோது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ( Right to Information ) கீழ் நஷ்ட ஈடு குறித்த தகவல் கேட்டிருக்கிறார். அதற்கு ரைது ஸ்வராஜ்யா வேதிகா அமைப்பு உதவியிருக்கிறது. மாவட்ட வருவாய்த்துறை அலுவலகத்துக்கு அவரின் விண்ணப்பம் 2020ம் ஆண்டின் பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. பதில் ஏதும் வரவில்லை.மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகளும் மூடப்பட்ட பிறகு குழந்தைகளை பற்றிய கவலை அவருக்கு வந்துவிட்டது. ஸ்நேகிதா படித்த ஹாஸ்டலுடனான பள்ளியிலிருந்து அனுப்பப்பட்டுவிட்டார். சாத்விக் ஊருக்குள் இருக்கும் ஓர் அரசு பள்ளியில் படிக்கிறார். ஊரடங்குக்கு பின் வீட்டில்தான் இருக்கிறார். “குழந்தைகள் எப்போதும் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒழுங்கீனம் அதிகமாகிறது,” என்கிறார் சகரிகா. பத்தாம் வகுப்பு வரை படித்தவர் அவர்.
“கிட்டத்தட்ட எல்லா பொருட்களின் விலையும் (ஊரடங்கினால்) உயர்ந்துவிட்டது. பால் பாக்கெட் முதலில் 10 ரூபாயாக இருந்தது. இப்போது 12 ரூபாய் ஆகிவிட்டது. காய்கறிகள் வாங்குவது கடினமாக இருக்கிறது. இப்போது நாங்கள் சோறும் ஊறுகாயும் மட்டும்தான் சாப்பிடுகிறோம். மாலையில் குழந்தைகள் கேட்டால் உணவு கொடுக்கிறேன். ‘எங்களுக்கு பசிக்கிறது’ என சொன்னால் மட்டும்தான் அதுவும். இல்லையெனில் நாங்கள் தூங்கிவிடுவோம்.”
2020ம் ஆண்டின் ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை தொலைபேசியில் எடுத்த நேர்காணல்களை அடிப்படையாக கொண்ட கட்டுரை இது.
ஹைதராபாத்தை சேர்ந்த ரைது ஸ்வராஜ்யா வேதிகாவின் லஷ்மி பிரியங்கா பொல்லாவரம் மற்றும் முதுகலை பட்டதாரியான வினீத் ரெட்டி ஆகியோர் கட்டுரைக்கு செய்த உதவிகளுக்கு செய்தியாளர் நன்றி தெரிவித்து கொள்கிறார்.
தமிழில்: ராஜசங்கீதன்