மொட மொடாண்டு ஊடாலே
முட்டு சிக்கிய டாங் ஊடாலே
[பதறிப் பதறித் தேடுனா லாபமில்ல
சிந்திச்சு நடைபோடு. தங்கம் கிடைக்கும்]
நீலகிரி மலைகளின் காடுகளில் ஒரு காலத்தில் வசித்த அலு குரும்பர் பழங்குடி மக்கள் சரியான துணையை கண்டறிய விருப்பமான வழியை இந்த பழமொழி சொல்வதாக நினைக்கிறாகள். பக்குவமாய் நிதானமாய் இருப்பதைக் குறித்த இந்தப் பழமொழி ரவி விஸ்வநாதனின் வாழ்க்கைக்கும் பொருந்தியிருக்கிறது. நிதானமாகத் தொடங்கிய அவரது கல்விப் பயணத்தின் விதை, இப்போது கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறப்போகும் அளவுக்கு விருட்சமாகியிருக்கிறது. அலு குரும்பர் சமூகப் பின்னணியில் இருந்து இந்த பட்டம் பெறுவது மட்டுமல்ல. அலு குரும்பர் மொழியின் இலக்கணம் மற்றும் வடிவத்தை முதன்முதலாக ஆவணப்படுத்துவரும் இவர்தான். 33 வயதாகும் விஸ்வா (தன்னை அப்படி அழைப்பதை விஸ்வா விரும்புகிறார்) தனக்கு சரியான மனைவியை தேடிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி நகருக்கு அருகிலுள்ள அலு குரும்பர் பகுதியான பணகுடியில் தான் வளர்ந்திருக்கிறார் விஸ்வா. காலை 7 மணிக்கு வேலைக்குப் புறப்பட, மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரவேனு அரசுப்பள்ளிக்கு படிக்கச் சென்றிருக்கிறார்கள் குழந்தைகள்.
கதைக்கு இங்குதான் திருப்பம் கிடைக்கிறது. பெற்றோர் தங்கள் கூலி வேலைகளுக்குச் சென்றதும், அருகிலிருக்கும் காடுகளுக்குச் சென்று நேரம் செலவழிப்பது, தங்கள் வீடுகளுக்கு முன்பாக இருக்கும் தார் ரோடுகளில் விளையாடுவதென நேரம் கடத்துகிறார்கள் குழந்தைகள். “எங்கள் சமூகத்தில், கல்வி முதன்மையான விஷயமாக இருந்ததில்லை. என்னைப் போலவே பள்ளிக்குச் செல்லும் வயதில் 20 பேர் இருந்தார்கள். பள்ளியை அடையும்போது மிகக் குறைவானவர்கள் மட்டுமே பாடம் படிக்க வந்திருப்போம்” என்கிறார் விஸ்வா. பழங்குடிக் குழந்தைகள் தங்கள் மொழியில் பேசுவார்கள். ஆனால், மாநிலத்தின் மொழியான தமிழைத்தான் ஆசிரியர்களால் பேச முடியும். அது அந்தக் குழந்தைகளுக்கு பயன்படவில்லை.
புரியாத மொழி, கல்வியின் பயனை விளக்காத வீட்டுப் பெரியவர்கள், தன்னைப் போலவே விளையாட்டாக இருக்கும் தன் வயதுச் சிறுவர்கள் போன்ற விஷயங்களால் விஸ்வாவும் பள்ளிக்குப் போவதை பலமுறை தவிர்த்திருக்கிறார். அருகிலிருக்கும் எஸ்டேட்டில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்திருக்கிறார்கள் விஸ்வாவின் அப்பாவும் அம்மாவும். தேயிலைகளை பறிப்பது அவரது அம்மாவின் வேலை. விஸ்வாவின் அப்பா, மழை நீரை விலக்கி வழிவிடுவதும், ட்ரக்குகளில் இருந்து 50 கிலோ உர மூட்டைகளை இறக்கி வைக்கும் வேலையைச் செய்து வந்திருக்கிறார். ஆண்டுக்கு இரண்டு முறை, காடுகளில் தேன் சேகரிக்க மற்ற அலு குரும்பர்களோடு செல்வது விஸ்வாவின் அப்பாவுக்கு வழக்கம். காடுகளிலிருந்து மூலிகைச் செடிகளைச் சேமிப்பதுடன், 1800களின் தொடக்கத்தில் நீலகிரியை அபகரித்த பிரிட்டீஷார் ஆக்கிரமிப்புக்கு முன்பாக, தேன் சேகரிப்பும் இச்சமூகத்தின் வாழ்வாதாரமாக இருந்திருக்கிறது. பிரிட்டீஷாரின் வருகைக்குப் பிறகு காடுகளை அழித்து தேயிலை வளர்ப்பதையும், காடுகளில் இருந்து பழங்குடிகளை வெளியில் அனுப்புவதையும், குடியிருப்புகளை அமைப்பதையும் செய்தனர்.
தொடக்க கல்வியே இப்படியென்றால், தொடக்கக் கல்விக்குப் பிறகு மிகுந்த சவால்களை எதிர்கொண்டிருக்கிறார் விஸ்வா. அவரது தந்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வேலை செய்ய முடியாமல் போகவே, குடும்பப் பொறுப்பு விஸ்வா மீது விழுந்திருக்கிறது. பள்ளிக்கு செல்வது குறைந்து தினக்கூலியாக குடும்ப வருமானத்திற்காக உழைத்திருக்கிறார். விஸ்வாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தபோது விஸ்வாவுக்கு 16 வயது. அவருடைய மருத்துவ செலவுகளுக்காக வாங்கிய 30,000 ரூபாய் கடனுக்கும் விஸ்வா பொறுப்பாகியிருக்கிறார். விஸ்வா பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி, ஓட்டுநர் உரிமம் வாங்கி, அவரது அம்மா பணிபுரியும் அதே எஸ்டேட்டில் மாதம் 900 ரூபாய் சம்பளத்திற்கு ட்ரக் ஓட்டுநராகச் சென்றிருக்கிறார்.
கடனை அடைத்து, மறுபடியும் பள்ளிக்குச் செல்லத் தொடங்குவதற்காக, விஸ்வாவும் அவரது அம்மாவும் தங்கள் நிலத்தை குத்தகைக்குக் கொடுத்ததுடன், வார விடுமுறையில்லாமல் மூன்று வருடங்கள் வேலை செய்திருக்கிறார்கள். “எனது பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்றதில்லை. ஆனால் என்னுடைய ஆர்வம் அவர்களுக்குப் புரிந்தது. நான் படிக்க வேண்டும் என விரும்பினார்கள். எந்தவழியும் இல்லாமல் படிப்பதை நிறுத்தினேன். ஆனால் மீண்டும் படிப்பேன் என நம்பினேன்” என்கிறார் விஸ்வா.
தனது வகுப்பினரை விட கொஞ்சம் வயது அதிகமாக இருந்தாலும் மீண்டும் தொடங்கிய விஸ்வா, தனது 21ம் வயதில் பத்தாம் வகுப்புச் சான்றிதழை வெற்றிகரமாக வாங்கியிருக்கிறார்.
பத்தாம் வகுப்புக்குப் பிறகு எந்த இடைநிற்றலும் இல்லாமல் கல்வியைத் தொடர்ந்திருக்கிறார் விஸ்வா. உயர்நிலைப் பள்ளிக்கல்வியை கோத்தகிரியில் முடித்தவுடன், கோயம்புத்தூரில் உள்ள கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்திருக்கிறார் விஸ்வா. 70 கிலோமீட்டர் தள்ளியிருந்த அதே கல்லூரியில், தமிழ் இலக்கியத்திலும், மொழியியலிலும் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மாநில அரசிடமும், அரசு சாரா நிறுவனங்களிலும், யூஜிசியிலும் கல்வி உதவித்தொகை பெற்று படித்திருக்கிறார்.
தமிழ் இலக்கியம் பயிலும்போது, தோடர், கோட்டா மற்றும் இருளர் பழங்குடிகளைப் போன்ற நீலகிரியின் பிற பழங்குடிகளைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும், சமூக மொழியியல் ஆய்வுக் கட்டுரைகளையும் வாசித்திருக்கிறார். அலு குரும்பர்களைப் பொறுத்தவரை, அவர்களது கலாச்சாரமும் உடைப் பண்பும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர மொழி குறித்த ஆய்வுகள் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார். பழமொழிகளையும், புதிர்களையும் ஆவணப்படுத்தத் தொடங்கிய அவர், இலக்கணத்துக்கும் நகர்ந்திருக்கிறார்.
மொழியியல் வல்லுநரான அவருக்கு, தனது மொழி அழிந்து வருவது கவலையளித்த அதே நேரத்தில், சரியான ஆவணப்படுத்தலும் முறையான இலக்கணமும் இல்லாவிட்டால் அவரது மொழி நிலைக்காது என்பதையும் உணர்ந்திருக்கிறார். “மொழியின் பகுதிகளை வகைப்படுத்த நினைத்த நான், இலக்கண விதிகளையும் அதற்கான வடிவத்தையும் மொழி அழிவதற்குள் வகைப்படுத்த நினைத்தேன்” என்று கூறுகிறார்.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011 பட்டியலிடும் எண்ணிக்கையின்படி, மொத்த குரும்பர் மக்கள்தொகை 6,823. அலு குரும்பர்களின் கணக்குப்படி 1,700 பேர் மட்டுமே உள்ளனர். (பிறர்: கடு குரும்பர், ஜெனு குரும்பர், பெட்ட குரும்பர் மற்றும் முள்ளு குரும்பர்). மைசூருவில் அமைந்திருக்கும் இந்திய மொழிகளின் மைய நிறுவனத்தின் கருத்துப்படி, 10,000க்கும் குறைவான மக்கள் பேசும் மொழி அழிவின் விளிம்பில் இருக்கும் மொழியாக கருதப்படுகிறது. குரும்பர் இனத்தின் எல்லா பிரிவுகளின் மொழியும் இந்த வகையின் கீழ் வருகிறது.
இந்த மொழி வடிவத்திற்கான குறியீட்டில் சவால்கள் இருந்ததால், தமிழ்மொழியைப் ’பயன்படுத்தி’ அதைச் செய்திருக்கிறார் விஸ்வா. பல ஒலிகளை மொழிபெயர்க்க முடியவில்லை. “எனது மொழியில் ’க்த்’ என்னும் வார்த்தையை மண்ணிலிருந்து செடியைப் பிடுங்கும் செயலைக் குறிப்பதற்காக பயன்படுத்துகிறோம். அது தமிழ் மொழி வடிவத்தில் அல்ல” என்று சுட்டிக்காட்டுகிறார் விஸ்வா.
ஏப்ரல் 2018ல், முனைவர் பட்டம் பெறலாம் என எதிர்பார்க்கிறார் விஸ்வா. அதற்குப் பிறகு பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இருக்கிறார். இதைச் சாதிக்கவிருக்கும் முதல் அலு குரும்பர் விஸ்வா. “இந்த இடத்திற்கு வர பல காலங்கள் ஆகியிருக்கின்றன” என்கிறார் விஸ்வா.
கல்விக்கு அடுத்ததாக அவர் சாதிக்கவிருக்கும் இன்னொன்று அவருடைய திருமணம். “எங்கள் சமூகத்தில் 20 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்ளவேண்டும். நான் முனைவர் பட்டம் பெற வேண்டுமென்பதால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தேன்” என்று சொன்ன விஸ்வாவிடம் எப்போது திருமணம் என்று கேட்டால், “இன்னொரு குடியிருப்புப் பகுதியில் அவரைச் சந்தித்தேன். சில மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது” என்கிறார் வெட்கத்துடன்.
கோத்தகிரியில் அமைந்திருக்கும் கீஸ்டோன் அறக்கட்டளையைச் சார்ந்த அலு குரும்பர் என்.செல்வி தனது நேரத்தையும், அறிவையும் பகிர்ந்துகொண்டதற்காக இக்கட்டுரை ஆசிரியர் அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்.
தமிழில்: குணவதி