அவர் பேச ஆரம்பித்தது பாதியிலேயே  நிறுத்தினார். ஆழமாக சுவாசத்தை உள்ளிழுத்து மீண்டும் ஒரு முறை முயலுகிறார். அவரின் குரல் நடுங்குகிறது. தரையைப் பார்க்கிறார். தாடை ஆடியது. ஒரு வருடமாக தைரியமான போராட்டத்தை நடத்தி வருகிறார் அனிதா சிங். ஆனால் கணவரின் நினைவு அவருக்குள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. “சிறு சந்தோஷமான குடும்பமாக நாங்கள் இருந்தோம்,” என்கிறார் 33 வயது அனிதா. “என் கணவர்தான் எங்களின் நங்கூரம்.”

20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லகாவோட்டி கிராமத்து ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார் அனிதாவின் கணவரான 42 வயது ஜைகார்ன் சிங். ஏப்ரல் 2021-ல் தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. “இருமல், சளி மற்றும் காய்ச்சல் இருந்தது,” என்கிறார் அனிதா. “கோவிட் இரண்டாம் அலை முழு வீச்சில் இருந்தபோது கூட ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அந்த நாட்களில் ஒன்றில்தான அவருக்கு கோவிட் தொற்றியிருக்க வேண்டும்.”

ஏப்ரல் 20, 2021 அன்று ஜைகார்னுக்கு தொற்று உறுதியானது. மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது, நகரத்தின் எந்த மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கைக் கிடைக்கவில்லை. “பல மருத்துவமனைகளில் நான் மன்றாடினேன்.  அவர்கள் இல்லை என்றனர்,” என நினைவுகூர்கிறார் அனிதா. “அவரின் உடல்நிலை வேகமாக மோசமடையத் தொடங்கியதும் பல பேரை நாங்கள் தொடர்பு கொண்டோம். உதவி ஏதும் கிடைக்கவில்லை. அவரை வீட்டிலேயே பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.”

உள்ளூர் மருத்துவர் ஒருவர் காய்ச்சலுக்கும் இருமலுக்குமான சிகிச்சை அளித்தார். அனிதாவின் உறவினர்கள் எப்படியோ ஒரு ஆக்சிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்தனர். “அதை எப்படி பயன்படுத்துவது என எங்களுக்குத் தெரியவில்லை. நாங்களே வழி கண்டுபிடிக்க வேண்டியிருந்தது,” என்கிறார் அவர். “தொடர்ந்து மருத்துவமனை படுக்கைக்கும் அலைந்து கொண்டிருந்தோம்.”

இந்திய சுகாதார கட்டமைப்பு கிராமங்களிலும் சிறு டவுன்களிலும் நொறுங்கிக் கொண்டிருப்பதை தொற்று பட்டவர்த்தனமாகக் காட்டியது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.02 சதவிகிதம் (2015-16-ல்) மட்டுமே சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படும் நிலையில், மக்களுக்கு உதவ பெரிதாக அதில் எதுவும் இருக்கவில்லை. தேசிய சுகாதார நிலை 2017 -ன்படி, நாட்டு மக்கள்தொகையில் ஒவ்வொரு 10,189 பேருக்கு ஒரு அலபதி மருத்துவர்தான் இருக்கிறார். ஒவ்வொரு 90,343 மக்களுக்கு ஒரே ஒரு பொது மருத்துவமனைதான் இருக்கிறது.

PHOTO • Parth M.N.

புலாண்ட்ஷர் நகர வீட்டில் அனிதா சிங். 2021-ல் கணவர் இறந்ததிலிருந்து அவர் தைரியமானப் போராட்டத்தை நடத்தி வருகிறார்

கடந்த வருட ஜூலை மாதத்தில் ஆக்ஸ்ஃபாம் இந்தியாவில் பிரசுரிக்கப்பட்ட Inequality Report 2021: India’s Unequal Healthcare Story - படி, 2020ம் ஆண்டில் ஒவ்வொரு 10,000 பேருக்கும் 5 மருத்துவமனைப் படுக்கைகளும் 8.6 மருத்துவர்களும்தான் இருந்தனர். நாட்டு மக்கள்தொகையின் 70 சதவிகித மக்கள் வசிக்கும் கிராமப்புறத்தில், மருத்துவமனை படுக்கைகளின் மொத்தத்தில் 40 சதவிகிதம்தான் இருந்தன.

படுக்கைக்கான அனிதாவின் தேடல் ஜைகார்னின் மரணத்தில் முடிவுற்றது. ஏப்ரல் 26, 2021-ல் மூச்சுத் திணறி அவர் இறந்து போனார். இரண்டு நாட்கள் கழித்து தேர்தல் பணிக்காக அவர் செல்ல வேண்டியிருந்தது. தொற்று உச்சத்தில் இருந்த சமயம் என்றும் பாராமல் மாநில அரசு பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தும் மும்முரத்தில் இருந்தது.

பஞ்சாயத்து தேர்தல்களுக்கான (ஏப்ரல் 15-29, 2021) கட்டாயப் பணிக்குச் சென்ற பிறர் கடும் விலையைக் கொடுக்க நேர்ந்தது. மே மாதத்தின் நடுவே, குறைந்தபட்சம் 1,621 பள்ளி ஆசிரியர்கள் கோவிட் தொற்று அல்லது தொற்றைப் போன்ற அறிகுறிகளால் இறந்து போயினர்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டை மாநில அரசு அறிவித்தது. ஆனால் அனிதாவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஏனெனில் தேர்தல் பணிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ஜைகார்ன் இறந்துவிட்டார். “இது நியாயமில்லை,” என்றபடி அனிதா உடைந்து அழுகிறார். “அவர் நேர்மையான அரசுப் பணியாளராக இருந்தார். அதற்கு ஈடாக எங்களுக்குக் கிடைப்பது இதுதான். என்னுடைய குழந்தைகளை நான் எப்படி பார்த்துக் கொள்வது? அவர்களுக்கு எல்லா விஷயங்களையும் சரியாக செய்ய வேண்டுமென விரும்புகிறேன். ஆனால் பணமின்றி எதையும் செய்ய முடியாது.”

ஜைகார்ன் மாதம் 70,000 ரூபாய் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தார். குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர் அவர்தான். அவரின் மரணத்துக்குப் பிறகு, பரிவின் காரணமாக ஓர் ஆரம்பப் பள்ளியில் அனிதாவுக்கு வேலை கிடைத்தது. “என்னுடைய வருமானம் ரூ.20,000,” என்கிறார் அவர். அவரின் 7 வயது மகள் அஞ்சலி மற்றும் 10 வயது மகன் பாஸ்கர் ஆகியோர் ஜைகார்ன் மரணத்துக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லவில்லை. “குடும்பத்தை நடத்தவே நான் சிரமப்படுகிறேன்,” என்கிறார் அனிதா.

PHOTO • Parth M.N.

அனிதா வேலைக்கு போகிறார் எனினும் இறந்துபோன அவரது கணவரின் ஊதியத்தில் சிறிய பகுதியைத்தான் பெறுகிறார். 'குடும்பத்தை நடத்தவே நான் சிரமப்படுகிறேன்,' என்கிறார் அவர்

ஜனவரி 2022-ல் வெளியான ஆக்ஸ்ஃபோம் அறிக்கை யின்படி, இந்தியாவின் 84 சதவிகித குடும்பங்களின் வருமானம் தொற்று தொடங்கியதும் சரியத் தொடங்கிவிட்டது. மார்ச் 2021-ல் அமெரிக்காவின் ஆய்வு மையம் ஒன்று வெளியிட்ட ஆய்வின்படி இந்தியாவின் மத்தியதர வர்க்கம் 3 கோடியே 20 லட்சமாக 2020-ல் சுருங்கியிருக்கிறது. ஏழை மக்களின் (ஒரு நாளில் 150 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் கொண்டோர்) எண்ணிக்கை 7.5 கோடி அதிகரித்திருக்கிறது என்கிறது ஆய்வு.

மார்ச் 2020-ல் அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கினால் நேர்ந்த வேலையிழப்புகள், மோசமான சுகாதாரக் கட்டமைப்புடன் சேர்ந்ததில், நாட்டின் குடும்பங்கள் கொண்டிருந்த வாங்கும் சக்தி பெரும் சரிவைக் கண்டது. பொதுச் சுகாதார மையங்கள் கோவிட் நோயாளிகளால் நிரம்பி வழியந்ததால், கட்டுபடியாகாது எனத் தெரிந்தும் பலக் குடும்பங்கள் தனியார் மருத்துவத்தை நாடினர்.

ரேகா தேவியின் குடும்பம் அவற்றில் ஒன்று. ஏப்ரல் 2021-ல் கணவரின் சகோதரியான 24 வயது சரிதா வாரணாசியின் பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை. ரேகா அவரை அங்கிருந்து வெளியே கொண்டு வந்தார். “எங்களைச் சுற்றி அனைவரும் இறந்து கொண்டிருந்தனர்,” என்கிறார் 36 வயது ரேகா, தெந்துவா கிராமத்தின் அவரது குடிசைக்கு வெளியே அமர்ந்தபடி. “சரிதாவுக்கு கோவிட் இல்லை. ஆனால் அவரின் வயிற்று வலி தீரவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் எந்த மருத்துவமனையிலும் மருத்துவர்கள் அவரை கவனிக்கவில்லை. என்ன நடக்கிறது என தெரியாமல் அவர் வெறுமனே படுக்கையில் படுத்துக் கிடந்தார்.”

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன் ஒரு வாரமாக சரிதாவின் உடல்நலம் குன்றியிருந்தது. அவரின் கணவரான 26 வயது கவுதம் முதலில் அவரை, அவர்கள் வசிக்கும் சொன்பத்ரா டவுனின் ஒரு தனியார் மருத்துவமனைக்குதான் அழைத்துச் சென்றார். தெந்துவாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவு. “அந்த மருத்துவமனை ஒரு நாள் அனுமதிக்கே 12,000 ரூபாய் கட்டணம் விதித்தது. மேலதிக சிகிச்சைக்கு வேரு இடத்துக்குதான் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியது,” என்கிறார் ரேகா. “கவுதம் அதற்கு மறுத்துவிட்டார். எப்போது வேண்டுமானாலும் அவர் இறந்து போவார் என மருத்துவமனை கூறியது. எனவே பயந்து போய் அவரை என்னிடம் கூட்டி வந்தார். நாங்கள் உடனே பனாரஸ் மருத்துவமனைக்குச் சென்றோம்.”

PHOTO • Parth M.N.

கணவரின் சகோதரிக்கான மருத்துவச் செலவு அதிகமாக இருக்கும் என்பதை ரேகா தேவி எதிர்பார்க்கவில்லை. 'ஒரு லட்சம் ஆகிவிட்டது'

வாரணாசி மருத்துவமனை தெந்துவாவிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கவுதமும் ரேகாவும் 6,500 ரூபாய்க்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தினார்கள். பனாரஸ் மருத்துவமனையிலிருந்து சரிதாவை சகியா டவுனுக்குக் கொண்டு சென்றனர். அந்தப் பயணத்துக்கு 3,500 ரூபாய் செலவானது. “சாகியாவிலிருந்து ஒரு தனியார் மருத்துவமனை அவரை அனுமதித்து ஒரு வாரத்துக்கு சிகிச்சைக் கொடுத்தது. நோயிலிருந்து அவர் மீண்டார்,” என்கிறார் ரேகா. “ஆனால் அவரின் சிகிச்சை செலவு ஒரு லட்சம் ரூபாய் ஆகிவிட்டது.”

ரேகாவும் அவரது உறவினர்களும் உத்தரப்பிரதேசத்தின் பட்டியல் சாதியான ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். விவசாயக் கூலியாக பணிபுரியும் அவர் ஒரு நாளுக்கு 200 ரூபாய் ஊதியம் பெறுவார். கவுதம் கல்குவாரிகளில் பணிபுரிகிறார். நாட்கூலியாக 250 ரூபாய் பெறுகிறார். “ஊரடங்கு தொடங்கிய பிறகு அவருக்கு வேலை அரிதாகதான் கிடைத்தது,” என்கிறார் ரேகா. “பல மாதங்களுக்கு எங்களுக்கு வருமானமில்லை.” விதிமுறைகளுக்கு எதிராக ரகசியமாக கல்குவாரிகளில் பணிபுரியுமளவுக்கு சூழல் மோசமாக இருந்ததாகச் சொல்கிறார் அவர். “அரசும் தொண்டு நிறுவனங்களும் கொடுத்த இலவச உணவில்தான் நாங்கள் பிழைத்தோம். சரிதாவுக்கான சிகிச்சைச் செலவு அதிகமாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.”

இந்தியாவின் நோயாளிகளின் உரிமை என்ற தலைப்பில் நவம்பர் 2021-ல் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின்படி, கணக்கெடுப்பில் கலந்து கொண்ட உத்தரப்பிரதேசத்தின் 472 பேரில் 61.47 சதவிகிதம் பேருக்கு சிகிச்சைக்கான உத்தேசச் செலவு கொடுக்கப்படவில்லை. நாடு முழுக்கக் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 3,890 பேரில் 58 சதவிகித பேருக்கும் இதுவே நிலை. நோயாளிகளுக்கு எதிரான உரிமை மீறல் இது. தேசிய மனித உரிமை ஆணையம் வரையறுத்திருக்கும் நோயாளி உரிமைகளின் பட்டியல்படி , “ஒவ்வொரு சேவைக்குமான மருத்துவமனைக் கட்டணத்தை தெரிந்து கொள்ளும் உரிமை” நோயாளிக்கும் அவரின் உதவியாளர்களுக்கும் உண்டு.

சரிதாவின் மருத்துவச் செலவுகளுக்காக இரண்டு ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியையும் சில நகைகளையும் அடமானம் வைக்கும் நிலைக்கு ரேகா ஆளானார். “கடன்காரர் மாதத்துக்கு 10 சதவிகித வட்டி வாங்குகிறார்,” என்கிறார் அவர். “எனவே நாங்கள் வட்டியை மட்டும்தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். வாங்கிய கடன் பணம் அப்படியே இருக்கிறது. எப்போது கடனிலிருந்து மீள்வோம் எனத் தெரியவில்லை.”

PHOTO • Parth M.N.

தெந்துவா கிராமத்தில் விவசாய நிலத்தின் ரேகா. நிலத்தின் ஒரு பகுதியை மருத்துவக் கட்டணம் கட்டவென அடமானம் வைத்திருக்கிறார்

உத்தரப்பிரதேசத்தில் பல கிராமங்களில், தொற்று தோன்றிய முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரலிலிருந்து ஜுன் 2020 வரை) மக்களின் கடன் 83 சதவிகிதம் உயர்ந்தது. ஒன்பது மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல் இது. ஜூலை-செப்டம்பர் காலத்திலும் அக்டோபர்-டிசம்பர் 2020-லும் கடன் முறையே 87 சதவிகிதமும் 80 சதவிகிதமும் உயர்ந்திருக்கிறது.

65 வயது முஸ்தகீம் ஷேக்தான் பெரும் துரதிர்ஷ்டசாலி.

ஒரு ஏக்கர் நிலத்துக்கும் குறைவாக ஜலலபாத் கிராமத்தில் கொண்டிருக்கும் ஒரு சிறு விவாயியான முஸ்தகீம், மார்ச் 2020-ல் கோவிட் தொற்றுப் பரவத் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவரின் இடதுபக்கம் செயலிழந்துபோனது. நொண்டி நடக்கும் நிலைக்கு ஆளானார். “நடப்பதற்கு ஒரு குச்சி எனக்கு தேவைப்பட்டது. ஆனால் அதையும் இடது கையில் பிடிக்க முடியவில்லை,” என்கிறார் அவர்.

விவசாய நிலத்தில் வேலை பார்க்க முடியவில்லை. கூலி வேலையும் அவரால் யோசிக்க முடியாது. “1000 ரூபாய் முதியோர் ஓய்வூதியத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது,” என்கிறார் முஸ்தகீம். “என்னுடைய நிலையில் யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் அதை திருப்பி அடைக்க என்னால் வேலைக்கு செல்ல முடியாது என அவர்களுக்குத் தெரியும்.” வேறு எந்த நிதி ஆதாரமும் இல்லை. தேசிய சுகாதார நிலை 2020 -ன்படி, கிராமப்புற உத்தரப்பிரதேசத்தின் 99.5 சதவிகித மக்கள் எந்தவித மருத்துவக் காப்பீடும் காப்பும் இல்லாதிருக்கின்றனர்.

எனவே முஸ்தகீமின் 55 வயது மனைவி சைருன்னுக்கும் பக்கவாதம் வந்தபோது - மூளைப் பக்கவாதமாக இருக்கலாம் என நம்புகிறார் - சிகிச்சைக்கென அவரால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. “பக்கவாதம் தாக்கி அவர் கீழே விழுந்தார்.  முதுகெலும்பும் பாதிப்படைந்தது,” என்கிறார் அவர். ஏப்ரல் 2020-ல் அது நடந்தது. தொற்று அப்போதுதான் பரவத் தொடங்கியிருந்த நேரம். “ஆசாம்கரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றேன், ஆனால் அதை கோவிட் மையமாக மாற்றி விட்டனர்.”

PHOTO • Parth M.N.

தன் கிராமத்தில் முஸ்தகீம் ஷேக். பக்கவாதம் வந்த பிறகு, அரசு ஓய்வூதியத்தைதான் சார்ந்திருக்கிறார்

ஆசாம்கர் மருத்துவமனை 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. தனியார் வாகனத்தில் செல்ல 3,000 ரூபாய் அவருக்கு செலவானது. “காசிப்பூர் மருத்துமனையில் வசதியில்லாததால் நாங்கள் வாரணாசிக்கு செல்ல வேண்டியிருந்தது,” என்கிறார் அவர். “வாரணாசிக்கு செல்ல வேண்டுமெனில் அதிகம் பணம் தேவைப்படும். என்னிடம் இல்லை. தனியார் மருத்துவமனைகள் பற்றி என் நண்பர்களிடம் விசாரித்தேன். ஆனால் செலவு கட்டுபடியாகாது என உணர்ந்தேன்.”

சாய்ருனை மீண்டும் கிராமத்துக்குக் கொண்டு வந்து அங்கேயே சிகிச்சை கொடுப்பது என முடிவெடுத்தார் முஸ்தகீம். “அதுதான் சரியாக இருக்குமென அவரும் சொன்னார்,” என்கிறார் அவர். “உள்ளூர் மருத்துவர் அவருக்கு மருந்துகள் கொடுத்தார்.”

“அரசு மருத்துவரகளைக் காட்டிலும் அதிகம் உள்ளூர் மருத்துவப் பயிற்சியாளர்களைத்தான் மக்கள் சார்ந்திருக்கின்றனர். “மருத்துவப் பயிற்சியாளர்கள் எங்களை மரியாதையுடன் நடத்துவார்கள். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வார்கள்,” என்கிறார் முஸ்தகீம். “பிற மருத்துவர்கள் எங்களின் அருகே வரக் கூட தயங்கும்போது அவர்கள்தான் எங்களோடு எப்போதும் இருப்பவர்களாக இருக்கிறார்கள்.” ஆனால் மருத்துவப் பயிற்சியாளர்கள் போதுமான பயிற்சி பெற்றிராதவர்கள்.

பக்கவாதம் வந்து ஆறு மாதங்கள் கழித்து அக்டோபர் 2020-ல் சாய்ரூன் இறந்து போனார். முஸ்தகீமும் அவரின் இழப்பை ஏற்கும் கட்டத்தை அடைந்துவிட்டார். ”மருத்துவமனைகளில் இறந்தவர்கள் குழப்பங்களுக்கு நடுவே இறந்தனர்,” என்கிறார் அவர். “என் மனைவி நிம்மதியாக மரணமடைந்தார்.”

தாகூர் குடும்ப அறக்கட்டளையின் சுயாதீனப் பத்திரிகை மானியம் மூலம் பொதுச் சுகாதாரம் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய செய்திகளை பார்த் எம்.என். சேகரிக்கிறார். தாகூர் குடும்ப அறக்கட்டளை இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.

தமிழில் : ராஜசங்கீதன்

Parth M.N.

২০১৭ সালের পারি ফেলো পার্থ এম. এন. বর্তমানে স্বতন্ত্র সাংবাদিক হিসেবে ভারতের বিভিন্ন অনলাইন সংবাদ পোর্টালের জন্য প্রতিবেদন লেখেন। ক্রিকেট এবং ভ্রমণ - এই দুটো তাঁর খুব পছন্দের বিষয়।

Other stories by Parth M.N.
Translator : Rajasangeethan

রাজাসংগীতন চেন্নাইবাসী লেখক। এক প্রখ্যাত তামিল খবরের চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করেন।

Other stories by Rajasangeethan