”பியூட்டி பார்லருக்கு போவதற்கான தேவை என்ன? சந்தைகளை சுற்றி பணம் செலவழிக்க ஒரு சாக்குதான் அது.”
தான் பியூட்டி பார்லருக்கு செல்வதில் கணவர் வீட்டார் சந்தேகம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார் மோனிகா குமாரி. நான்கு பேர் வசிக்கும் குடும்பம், கிழக்கு பிகாரின் ஜமுயிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கைர்மா கிராமத்தில் இருக்கிறது. அவர்களின் கருத்துகளை பொருட்படுத்தாமல் 25 வயது நிறைந்த அவர், புருவங்கள் வடிவப்படுத்தும் வேலையைச் செய்து கொள்கிறார். மேலுதட்டிலுள்ள முடிகளை அகற்றிக் கொள்கிறார். முகப்பொலிவுக்கான ஃபேஷியலும் செய்து கொள்கிறார். பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் அவரது கணவர் மூத்த தலைமுறையைப் போல் இல்லை. பார்லருக்கு வண்டியில் மனைவியைக் கூட்டி வந்து இறக்கிக் கூட விடுகிறார்.
மோனிகா மட்டுமின்றி ஜமுய் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் டவுன்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் இளம்பெண்களும் பெண்களும் கூட ஒப்பனைக்காக அருகே உள்ளே பார்லருக்கு செல்கின்றனர்.
“நான் பார்லருக்கு செல்லத் தொடங்கியபோது 10 பார்லர்கள்தான் இருந்தன. இப்போது ஆயிரம் இருக்குமென நினைக்கிறேன்,” என்கிறார் பிரமிளா ஷர்மா, ஜமுயியில் ஒப்பனை வணிகம் மலர்ந்த காலத்திலிருந்து தற்போதைய 15 ஆண்டு காலத்தை விவரித்து.
87,357 பேர் வசிக்கும் ஜமுய் டவுனின் பிரதானச் சாலையோரத்தில் விவாஹ் லேடிஸ் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார் பிரமிளா. இங்கிருக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் விவசாயத்தில் பணிபுரிகின்றனர்.
ஒரு சைக்கிள் கடை, முடி வெட்டும் கடை, தையற்கடை ஆகியவற்றுக்கு மத்தியில் பார்லர் இருக்கிறது. முடிவெட்டுதல், புருவம் திருத்துதல், மெகந்தி, வேக்சிங், ஃபேஷியல் மற்றும் ஒப்பனை என பார்லர் வழங்கும் எல்லாச் சேவைகளும் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இஸ்லாம்நகர் மற்றும் லஷ்மிபூர் கிராமங்களிலிருந்து வாடிக்கையாளர்களை கொண்டு வருகிறது.
அங்கிகா, மைதிலி, மககி போன்ற மொழிகள் தெரிவதால் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிகிறது என்கிறார் பிரமிளா.
பிகாரின் இந்த மூலையில் பியூட்டி பார்லர் நடத்துவது ஆணாதிக்கத்துடன் தொடர் மோதலை உருவாக்கவல்லது. “திருமணத்துக்கு முன் இங்கிருக்கும் பெண்கள் பெற்றோரின் விருப்பத்துக்கேற்ப வாழ்ந்தனர். திருமணத்துக்குப் பின் கணவரின் விருப்பத்துக்கேற்ப வாழ்ந்தனர்,” என்கிறார் பிரமிளா. எனவே அவரது பார்லரில் ஆண்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை. வெளியே இருக்கும் அறிவிப்பு ‘பெண்களுக்கு மட்டும்’ என தெளிவாக அறிவிக்கிறது. உள்ளே பணிபுரியும் அனைவரும் பெண்கள் என்பதால் பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது. குழந்தைகள் பற்றி பேசப்படுகிறது. சமையல் குறிப்புகள் பகிரப்படுகின்றன. திருமண சம்பந்தங்கள் விவாதிக்கப்படுகின்றன. மணச் சிக்கல்கள் பரிவுடன் கேட்கப்படுகின்றன. “பெண்கள் நினைப்பதை வீட்டில் சொல்ல முடியாது. ஆனால் இங்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்,” என்கிறார் அவர்.
வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவதற்கு முக்கியமான ஒரு அம்சம் காரணமாக இருக்கிறது. “நாங்கள் பார்லருக்கு செல்ல விரும்பினால், திரும்ப அதே பார்லருக்குதான் செல்வோம்,” என்கிறார் ப்ரியா குமாரி, பரிச்சயமான இடத்தின்பால் ஏற்படும் ஈர்ப்பை விளக்கி. மேலோட்டமாக பார்லரின் உரிமையாளரால் திட்டப்படுவதும் கூட பரிச்சயமான சூழலை வலுவாகதான் ஆக்குகிறது. “அவருக்கு எங்களின் வாழ்க்கை தெரியும். எங்களுடன் ஜோக்குகள் பகிர்ந்து கொள்வார்,” என்கிறார் கைர்மா கிராமத்தில் வசிக்கும் 22 வயது பெண்.
மகராஜ்கஞ்ச் பிரதானச் சாலையின் வணிக வளாகத்தின் தரைதளத்தில் பிரமிளாவின் பார்லர் இருக்கிறது. ஜன்னலற்ற இந்த சிறு அறைக்கு மாதம் அவர் 3,500 ரூபாய் வாடகை கொடுக்கிறார். பெரிய கண்ணாடிகள் மூன்று சுவர்களிலும் செருகி வைக்கப்பட்டிருக்கிறது. உண்டியல்கள், கரடி பொம்மைகள், சானிடரி நாப்கின் பாக்கெட்கள் மற்றும் பலவித ஒப்பனைப் பொருட்கள் கண்ணாடிகளின் மேலே இருக்கும் அலமாரிகளை நிரப்பியிருக்கின்றன. மேல் சுவரிலிருந்து பிளாஸ்டிக் பூக்கள் தொங்குகின்றன. ஒப்பனைப் படிப்புச் சான்றிதழ்கள் ஃப்ரேம் போடப்பட்டு சுவர்களில் மாட்டப்பட்டிருக்கின்றன.
முகப்பு வாசலை மறைத்திருக்கும் மஞ்சள் நிற திரைச்சீலை விலகி ஒருவர் உள்ளே வருகிறார். நன்றாக உடை உடுத்தியிருக்கும் அந்த 30 வயது பெண் இரவுணவுக்கு செல்லவிருக்கிறார். மேலுதட்டில் ஏதேனும் முடி இருந்தால் அகற்ற விரும்புகிறார். புருவத்தையும் திருத்த விரும்புகிறார். கடை மூடும் நேரமாக இருந்தாலும், ஒப்பனைத் தொழிலில் நேரத்தில் பிடிவாதமாக இருக்க முடியாது. இருந்தால் வாடிக்கையாளர்கள் கிளம்பி விடுவார்கள். அவர் அமர்ந்ததும் பிரமிளா நிகழ்வு குறித்து விசாரிக்கத் தொடங்கி நட்பாகி விடுகிறார். “எங்களின் வாடிக்கையாளரை நாங்கள் சிரிக்க வைப்போம். அவர் உள்ளார்ந்து ஒளிர்வார்,” என அவர் பிறகு சொல்கிறார்.
“ஒருநாளில் 25க்கும் மேல் பெண் வாடிக்கையாளர்கள் புருவம் திருத்த வருவதுண்டு. சில நாட்களில் ஐந்து பேர் கூட வர மாட்டார்கள்,” என ஒப்பனை வணிகத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மையைச் சுட்டிக் காட்டுகிறார் பிரமிளா. மணப்பெண் அலங்காரத்துக்கான வாய்ப்பு கிடைக்கும்போது அவரின் ஒருநாள் வருமானமே 5000 ரூபாய்க்கும் மேலே போகும். “ஆரம்பத்தில் பல மணப்பெண் வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். ஆனால் இப்போது அவர்களே (வீடியோக்கள்) பார்த்து அலங்காரம் செய்து கொள்கின்றனர்,” என்கிறார் அவர். சேவைகளை நோக்கி ஈர்க்க, பிரமிளா சலுகைகள் கொடுக்கிறார். இரு புருவங்களை திருத்தவும் மேலுதட்டு முடி அகற்றவும் சேர்த்து 30 ரூபாய்க்கு சேவை அளிக்கிறார்.
முதிய பெண்களை வரவழைப்பது இன்னும் சவால்தான். தன் அம்மாவை போன்ற வயது கொண்ட பெண்கள் வருவது மிக அரிதாகவே நேர்கிறது என்கிறார் அவர். “என் அம்மா புருவம் திருத்தியதில்லை. முடி கூட வெட்டியதில்லை. நம் கைகளுக்கு கீழ் இருக்கும் முடிகளை ஏன் அகற்ற வேண்டுமென அவருக்கு புரிவதில்லை. ‘இயற்கையாக இப்படிதான் இருக்கிறேன். கடவுள் என்னை இப்படிதான் உருவாக்கியிருக்கிறார். நான் ஏன் மாற வேண்டும்’ எனக் கேட்பார்.”
ஐந்து மணி ஆகிவிட்டது. ஒரு தாய், தன்னுடைய இரு பதின்வயது மகள்களுடன் உள்ளே வருகிறார். தபாஸ்ஸிம் மாலிக் பிரமிளாவுக்கு அருகே அமர்கிறார். அவரது மகள்கள் தங்களின் ஹிஜாபை கழற்றிவிட்டு, முடி வெட்டுவதற்கான நாற்காலிகளில் அமர்ந்தனர். ஓர் ஆரஞ்சு நிற மேஜையில் கத்தரிக்கோல், சீப்புகள், நூல், முகப்பூச்சு மற்றும் பிற பூச்சுகள் இருக்கின்றன.
“உங்களுக்கு மூன்று பெண்கள்தானே? ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதா?” எனக் கேட்கிறார் பிரமிளா தங்களின் வாடிக்கையாளர்களுடன் கொண்டிருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தியபடி.
“அவள் இப்போது படிக்கிறாள்,” என்கிறார் தபாஸ்ஸிம். “பள்ளி முடித்தபிறகு நாங்கள் அதைப் பற்றி யோசிப்போம்.”
தன்னுடைய சீட்டிலிருந்து பிரமிளா தலையசைக்கிறார். தபாஸ்ஸிமுடன் பேசிக் கொண்டே தன் பயிற்சியாளர்கள் துனி மற்றும் ராணி முடிவெட்டத் தயாராவதை கவனிக்கிறார். இருவரும் 12 வயது ஜாஸ்மினருகே வந்து 80 ரூபாய் விலைக்கான முடி திருத்தத்தை செய்யவிருந்தனர். “U வடிவத்தை முடிக்கும் வரை முடியிலிருந்து கத்திரிக்கோலை எடுக்காதீர்கள்,” என்கிறார் பிரமிளா. துனி தலையசைக்கிறார்.
ஒரு முடிவெட்டலை பயிற்சியாளர்கள் செய்வார்கள். இரண்டாவதை பிரமிளா செய்வார். அவர் கனமான உலோக கத்திரிக்கோலை இளம் உதவியாளரிடம் இருந்து வாங்கி, அவரின் முன்பே, குழந்தையின் முடியைக் குறைத்து, வெட்டி, வடிவமைத்து காட்டுவார்.
15 நிமிடங்களில் முடிவெட்டல் முடிந்துவிட்டது. ராணி குனிந்து சடைகளை எடுக்கிறார். அவற்றை ஒரு ரப்பர் பேண்ட் கொண்டு எச்சரிக்கையாக முடிகிறார். கொல்கத்தாவை சேர்ந்த விக் தயாரிப்பாளருக்கு அவை பிற்பாடு விற்கப்படும். ரயிலில் செல்ல அரைநாள் பிடிக்கும் தூரம்.
மகளும் தாயும் கிளம்புகையில், “அடுத்த வருடத்தில் மீண்டும் அவர்களை பார்க்கிறேன்,” எனக் கூறுகிறார் பிரமிளா. “வருடத்துக்கு ஒரு முறை, ஈத் விழாவுக்கு முன்பு அவர்கள் வருவார்கள்.” வாடிக்கையாளர்களை தெரிந்து வைத்துக் கொள்வதும் அவர்களின் ரசனையை நினைவில் கொள்வதும் அவர்களுடன் உரையாடுவதும்தான் பிரமிளாவின் வணிக ஈர்ப்புக்கான காரணங்கள்.
வெறும் மஸ்கராவும் ஒப்பனையும் மட்டுமல்ல இத்தொழில் அவருக்கு. அதிகாலை 4 மணிக்கு அவர் எழுந்துவிடுவார். வீட்டுவேலை முடித்து குழந்தைகள் பிரியாவையும் பிரியான்ஷுவையும் பள்ளிக்கு அனுப்பி வைப்பார். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன், பிரமிளா 10 லிட்டர் நீரை நிரப்பி பார்லருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் பார்லர் இருக்கும் வணிக வளாகத்தில் குடிநீர் கிடையாது. “குடிநீர் இன்றி எப்படி பார்லரை நடத்துவது?” என அவர் கேட்கிறார்.
விவாஹ் லேடிஸ் பியூட்டி பார்லர் காலை 10 மணிக்கு திறக்கப்படும். 11 மணி நேரங்கள் கழித்து மூடப்படும். பிரமிளா நோயுறும்போதும் வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போதும் மட்டும்தான் விடுமுறை. ஒவ்வொரு காலையும் 10 மணிக்கு முன்னமே அவர் வீட்டிலிருந்து கணவர் ராஜேஷுடன் கிளம்பி விடுவார். கடைக்கு செல்லும் வழியில் பார்லரில் கணவர் இறக்கி விடுவார். பார்லரிலிருந்து கடை ஒரு கிலோமீட்டர் தொலைவுதான். “என் கணவர் ஒரு ஓவியர்,” எனப் பெருமையுடன் சொல்கிறார் பிரமிளா. “பெயர்ப்பலகைகள் வரைவார். பாலங்களில் வரைவார். பளிங்குக் கற்களில் செதுக்குவார். திருமண நிகழ்வுகளில் பின்னணியை வடிவமைப்பார். இன்னும் பல செய்வார்,” என்கிறார் அவர்.
பிரமிளாவுக்கு தாமதமாகும் நாட்களில், தன் கடைக்கு வெளியே காத்திருந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பார் ராஜேஷ்.
“இந்த வணிகத்தில் ஞாயிற்றுக் கிழமைகள் இல்லை. வீட்டில் ஒப்பனை செய்ய வருபவர்களிடமும் நான் கட்டணம் வாங்குகிறேன்,” என்கிறார் பிரமிளா. பேரம் பேசும் வாடிக்கையாளர்கள் கடுமையாக கையாளப்படுவர். “வாடிக்கையாளர் கடுமையாக நடந்து கொண்டால், அவர்களுக்கான இடத்தை நாம் காட்ட வேண்டும்.”
விவாஹ் லேடிஸ் பியூட்டி பார்லரின் உரிமையாளர் மேற்கு வங்கத்தின் துர்காப்பூரில் வளர்ந்தவர். அங்குள்ள ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அவரது தந்தை பணிபுரிந்தார். தாய் எட்டு பேர் கொண்ட குடும்பத்தைப் பார்த்துக் கொண்டார். ஒவ்வொரு வருடமும் பிரமிளாவும் மூன்று சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் ஆகியோரும் ஜமுயில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு வந்து செல்வார்கள்.
2000மாம் வருடத்தில் 12ம் வகுப்பு முடித்ததும் பிரமிளா, ராஜேஷ் குமாரை மணந்து ஜமுய்க்கு வந்துவிட்டார். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின. கணவர் வேலைக்கு சென்று விடுவாரென்றும் குழந்தைகள் பள்ளிக்கு சென்று விடுவார்கள் என்றும் அவர் கூறுகிறார். தனியாக வீட்டில் இருப்பதில் விருப்பமற்ற அவர், பியூட்டி பார்லர் தொடங்கும் எண்ணத்தை யோசிக்கத் தொடங்கினார். அவரின் கணவர் அவருக்கு ஆதரவாக இருந்தது உதவியது. “வாடிக்கையாளர்கள் வருவார்கள். அவர்களிடம் ஜோக்கடித்து நான் பேசுவேன். தனியாக இருக்கும் அழுத்தம் போய்விடும்,” என அவர் விளக்குகிறார்.
2007ம் ஆண்டில் திறன்களை கற்க பிரமிளா விரும்பிய போது ஒப்பனைக் கலைக்கான படிப்புகள் அதிகமாக இருக்கவில்லை. ஆனால் பிரமிளா ஜமுய்யில் இரண்டு இடங்களை கண்டுபிடித்தார். அகார்ஷக் பார்லரில் ஆறு மாதப் பயிற்சிக்கான கட்டணமான 6,000 ரூபாயை அவரின் குடும்பம் கொடுத்தது. ஃப்ரெஷ் லுக் பார்லர் பயிற்சிக்கு 2000 ருபாய் கட்டணம்.
தொழில் தொடங்கி 15 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், வெவ்வேறு ஒப்பனை பொருள் நிறுவனங்கள் பிகார் முழுக்க நடத்தும் எல்லா பயிற்சிகளுக்கும் தொடர்ந்து செல்கிறார் பிரமிளா. மறுபக்கத்தில், “நான் 50 பெண்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். அவர்களில் பலர் சொந்தமாக பார்லரை தொடங்கி விட்டனர். சிலர் பக்கத்து கிராமங்களில் தொடங்கியிருக்கின்றனர்,” என்கிறார்.
நேர்காணலை நாம் முடித்துக் கொள்ளும் நேரத்தில் பிரமிளா ஷர்மா உதட்டுச் சாயம் பூசிக் கொள்கிறார். பிறகு கண் மை பென்சிலை எடுத்து கண்களில் பூசிக் கொள்கிறார். பிறகு பார்லரின் சோஃபாவில் அமர்கிறார்.
“நான் அழகு கிடையாது. ஆனால் நீங்கள் என் போட்டோவை எடுத்துக் கொள்ளலாம்,” என்கிறார் அவர்.
தமிழில் : ராஜசங்கீதன்