"எங்களைப் போன்ற பெண்கள் தங்களது வீடுகளையும் நிலத்தையும் விட்டுவிட்டு நகரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வரும்போது, அவர்கள் தங்களது பாதத்திற்கு கீழே உள்ள நிலத்தை இழக்கிறார்கள் என்று அர்த்தம்", என்று அருணா மன்னா கூறினார். கடந்த சில மாதங்களில் நாங்கள் சாப்பிட எதுவுமே இல்லாத நாட்களும் இருந்தன. மற்ற நாட்களில் நாங்கள் ஒரு வேளை உணவில் உயிர் வாழ்ந்தோம். இந்தச் சட்டங்களை இயற்றுவதற்கு இதுதானா நேரம்? எங்களை கொள்வதற்கு இந்த மகாமாரி (கோவிட் 19 பெருந்தொற்று) போதாதது போல!", என்று கூறினார்.
மத்திய கொல்கத்தாவில் உள்ள ஒரு போராட்டக் களமான எஸ்பிளனேடு Y சேனலில் 42 வயதான அருணா பேசினார், அங்கு ஜனவரி 9 முதல் 22 வரை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் அகில இந்திய கிஷான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் (AIKSCC) பதாகையின் கீழ் வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், கலாச்சார அமைப்புகள் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர் - 2020 செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதற்காக ஒன்று கூடி இருக்கின்றனர்.
ராஜுவகாக்கி கிராமத்தில் இருந்து வந்திருக்கும் அருணா சுமார் 1,500 பெண்களுடன் வந்திருந்தார், அவர்களில் பெரும்பாலானோர் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். ரயில்கள், பேருந்துகள் மற்றும் டெம்போகள் மூலம் ஜனவரி 18 ஆம் தேதி அவர்கள் கொல்கத்தா வந்தடைந்தனர், நாடு தழுவிய மகிலா கிசான் திவாஸைக் குறிக்கும் விதமாக அவர்கள் அவ்வாறு குழுமியிருந்தனர்- அது விவசாயப் பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் மேலும் அவர்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான நாள். 40க்கும் மேற்பட்ட பெண் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் ஏ கே எஸ் சி சி ஆகியவை இந்த நிகழ்வினை மேற்குவங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தன.
அவர்களது குரல்களை பதிவு செய்வதற்கு நீண்ட நேர பயணத்துக்கு பின் கொல்கத்தா வந்து சோர்வாக இருந்தாலும் பெண்களின் ஆத்திரம் இன்னமும் தெளிவாக அப்படியே தெரிகிறது. "அப்படியானால், எங்களுக்காக யார் போராடுவது? நீதிபதிகளா? நாங்கள் வேண்டுவது கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்!" வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விட்டு பெண்கள் மற்றும் வயதானவர்கள் வெளியேறும்படி 'வலியுறுத்தப்பட' வேண்டும் என்று இந்திய தலைமை நீதிபதி அண்மையில் கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக 38 வயதாகும் சுபர்ணா ஹல்தார் கூறுகிறார், அவர் ஷர்மஜீவி மகிலா சமிதியின் உறுப்பினர்.
கொல்கத்தாவின் போராட்ட களத்தில் ஜனவரி 18 அன்று காலை 11:30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற மகிலா கிசான் மஜ்ஜூர் விதான் சபா கூட்டத்தில் சுபர்ணா பேசினார். மகிலா கிசான் திவாஸின் ஒரு பகுதியாக விவசாயத்தில் பெண்களின் சிக்கலான நிலை, அவர்களின் உழைப்பு, நிலம் மற்றும் பிற உரிமைகளுக்கான அவர்களது நீண்ட கால போராட்டம் மற்றும் புதிய வேளாண் சட்டங்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்த அமர்வு கவனம் செலுத்தி பேசியது.











