ஜாம்நகர் மாவட்டத்தின் லால்பூர் தாலுகாவைச் சேர்ந்த சிங்காச்சி கிராமத்தை சேர்ந்த ஒரு ராபரி கிராமத்திலிருந்து நான் வருகிறேன். எழுத்து எனக்கு மிகவும் புதிது. கொரோனா காலத்தில்தான் எழுதத் தொடங்கினேன். மேய்ச்சல் சமூகங்களுக்காக இயங்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமூக ஒருங்கிணைப்பாளராக நான் பணிபுரிகிறேன். குஜராத்தி மொழியைப் பிரதானப் பாடமாகக் கொண்டு தொலைதூரக் கல்வியில் கலைப் பட்டப்படிப்பு படிக்கிறேன். கடந்த 9 மாதங்களாக என் சமூகத்தைச் சேர்ந்த மக்களிடம் கல்வி பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் உருவாக்கும் பணிகளைச் செய்து வருகிறேன். என் சமூகத்திலுள்ள பெண்களுக்கு கல்வியறிவு மிகவும் குறைவாக இருக்கிறது. கல்வியறிவு பெற்ற மிகச் சில பெண்களைத்தான் இங்கு பார்க்க முடியும்.
தொடக்கத்தில் சரண், பர்வாத், அகிர்கள் போன்ற பிற சமூகங்களுடன் சேர்ந்து செம்மறி வளர்ப்பு செய்யும் மேய்ச்சல் சமூகமாக நாங்கள் இருந்தோம். எங்களில் பலர் பாரம்பரியத் தொழிலைக் கைவிட்டு இப்போது நிறுவனங்களிலும் நிலங்களிலும் தினக்கூலித் தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். ஆலைகளில் பல பெண்கள் தொழிலாளர்களாகவும் நிலங்களில் பல பெண்கள் கூலிகளாகவும் வேலை பார்க்கின்றனர். இந்தப் பெண்களையும அவர்களின் பணியையும் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் என்னைப் போல் தனியாக பணிபுரிபவர்களுக்கு சமூக ஏற்பு கிடைப்பது கடினமாக இருக்கிறது.



