அவர்கள் தாளத்துக்கு ஏற்றவாறு வேகமாக அசைந்தனர் - " ரே ரேலா ரே ரேலா ரே ரேலா ரே" - கோண்டு சமூகத்தினரிடையே பிரபலமாக இருக்கும் ரேலா பாடல்களைப் பாடியபடி முழங்கால் நீளத்திற்கு வெள்ளை புடவை மற்றும் பளிச்சிடும் தலை கிரீடம் அணிந்த இளம் பெண்கள் கைகளைக் கோர்த்தபடி ஒரு நேரத்தில் மூன்று பேர் ஒன்றாக அசைந்தனர்.
விரைவில், வெள்ளை நிற ஆடை மற்றும் வண்ணமயமான இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை அணிந்த இளைஞர்கள் குழு அவர்களுடன் சேர்ந்தது. அவர்கள் கால்களில் கட்டியிருந்த சலங்கை அவர்களது நடனத்திற்கு ஏற்றவாறு ஒருசேர இசைத்தது மேலும் ரேலா பாடல்களைப் பாடியபடி அவர்கள் கையில் வைத்திருந்த மந்திரி என்றழைக்கப்படும் சிறிய முரசினையும் இசைத்தனர். பெண்கள் தங்களது கைகளை கோர்த்து இளைஞர் குழுவினை சுற்றி ஒரு வளையம் அமைத்தனர். அவர்கள் அனைவரும் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்தனர்.
16 முதல் 30 வயது வரையிலான கோண்டு ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த 43 ஆண்கள் மற்றும் பெண்கள் கொண்ட குழு, சத்தீஸ்கரின் கொண்டகாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த கேஷ்கால் வட்டத்திலுள்ள பெத்மாமாரி கிராமத்தில் இருந்து வந்திருக்கின்றனர்.
மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ராய்ப்பூர் - ஜகதல்பூர் நெடுஞ்சாலைக்கு பஸ்தர் வட்டத்திற்கு அருகில் உள்ள இந்த இடத்தை அடைய அவர்கள் வேனில் 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்திருக்கின்றனர். சத்தீஸ்கரின் பலோதபஜார் - பத்தப்பாரா மாவட்டத்தைச் சேர்ந்த சோனாகான் பழங்குடி மன்னர் வீர் நாராயண சிங்கின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 10 முதல் 12ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கொண்டாடப்படும் வீர் மேளாவிற்கு மத்திய இந்தியாவின் ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த மற்ற நடன கலைஞர்களும்
குறிப்பாக சத்தீஸ்கரை சேர்ந்த நடன கலைஞர்களும் வந்து சேர்ந்திருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்த இம்மன்னர் 1857 டிசம்பர் மாதம் காலனித்துவ ஆட்சியாளர்களால் ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள ஜெய்ஸ்தம்பா சவுக்கில் சிறைபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட பின்னர் பிரிட்டிஷாரால் அவரது உடல் வெடித்துச் சிதற விடப்பட்டதாக உள்ளூர் குறிப்புகள் கூறுகின்றனர்.






