புயல்கள், மீன்வரத்து குறைவு, விற்பனை சரிவு போன்ற காரணங்களால் திலிப் கோலி சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார். மார்ச் 2020 தொடங்கிய ஊரடங்கு நிலைமையை இன்னும் கடினமாக்கிவிட்டது.
“கடந்தாண்டு சந்தித்த பிரச்னை என்பது கடந்த காலங்களை ஒப்பிடும்போது குறைவில்லை,” என்கிறார் தெற்கு மும்பையின் கொலாபா பகுதி கோலிவாடாவிலிருந்து வந்துள்ள 50 வயது மீனவரான திலீப் குமார். “மீன் பிடிப்பதற்கும, மீனை உண்பதற்கும் மக்கள் தயாராக இருந்தனர், ஆனால் [2020 செப்டம்பர் வரை நீடித்த ஊரடங்கு காரணமாக] அவற்றை விற்கமுடியவில்லை. சந்தைகள் மூடப்பட்டதால் பிடித்த மீன்களை கடலில் கொட்டும் நிலை ஏற்பட்டது.”
மும்பையின் சாசூன் துறைமுகத்தில் திலீப் சுமார் 35 ஆண்டுகளாக வேலை செய்கிறார். அவருக்குச் சொந்தமாக மூன்று படகுகள் உள்ளன. 8-10 மீனவர்களை அவர் வேலைக்கு வைத்துள்ளார். “ஊரடங்கின்போது ரேஷன் பொருட்களை வைத்து சமாளித்துக் கொண்டோம். ஆனால் பல ஏழை கோலி மீனவர்களுக்கு உணவோ, பணமோ கிடைக்கவில்லை,” என்கிறார் அவர்.
மழைக் காலங்களில் மீனவர்கள் அதிகாலை 4 மணிக்கே வேலையை தொடங்கிவிடுவர். 40 நிமிடங்கள் என கடலை பலமுறை சுற்றி வருவர். அலையில் மாற்றம் ஏற்படும்போது சில மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் கடலுக்குத் திரும்புவர். “நாங்கள் அதிகாலை தொடங்கி மதியம் 2 அல்லது 3 மணிக்கு வேலையை முடிப்போம். நிலவின் மூலம் அலைகளை பற்றி நாங்கள் அறிகிறோம். அலையின் வேகம் குறைவாகவோ, உயரமாகவோ இருக்கும் போது நாங்கள் மீன்பிடிக்கச் செல்வதில்லை,” என்கிறார் திலீப்.
ராய்காட் மாவட்டம் தாலா தாலுக்காவில் 1040 மக்கள் தொகை கொண்ட (கணக்கெடுப்பு 2011) வஷி ஹவேலி கிராமத்திலிருந்து ரயில் அல்லது வாடகை வாகனங்களில் கிட்டதட்ட 150 கிலோமீட்டர் பயணம் செய்து அவரது படகில் மீன்பிடிக்க தெற்கு மும்பையின் சாசூன் துறைமுகத்திற்கு வருகின்றனர். அனைவரும் கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அவர்கள் வேலை செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடங்குவதற்கு முன்பு வரை இருக்கின்றனர். ஆண்டின் பிற மாதங்களில் மகாராஷ்டிராவின் ரத்னகிரி, ராய்காட் மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளுக்குப் பயணிக்கின்றனர். பிறருடைய படகுகளிலும் வேலை செய்து மாதம் ரூ.10,000 - 12,000 வரை அவர்கள் வருவாய் ஈட்டுகின்றனர்.























